செவ்வாய், 3 மார்ச், 2020

காரைக்காலம்மையாரின் முற்பிறவி நீலியா?


சோழர் காலச் செப்புப் படிமங்கள் என்ற தலைப்பில் ஐ.ஜோப் தாமஸ் என்பவர் எழுதி காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்ட மொழிபெயர்ப்பு நுாலில் இருந்து ஒரு கட்டுரை இன்று (17-10-2019), இந்துதமிழ் திசை நாளிதழின் ஆனந்த ஜோதி இணைப்பிதழில் வெளியாகியுள்ளது. காரைக்காலம்மையாரின் செப்புப் படிவங்கள் பற்றிய கட்டுரை அது. இந்தக் கட்டுரையில் சில பிழைகள் உள்ளன.



1. அம்மையை நீங்கிய கணவன் பரமதத்தன், பாண்டிய நாட்டில் ஓர் நகரத்தில் வசித்தான் என்பது பெரியபுராணம். அந்த நகரத்திற்கு அவன் கப்பலில் சென்றதால் அது குலசேகரன் பட்டணமாக இருக்கலாம் என்பது உரை எழுதிய சிவக்கவிமணியின் ஊகம். ஆனால் இந்தக் கட்டுரையில், நுாலாசிரியர் பரமதத்தன் சென்று சேர்ந்த நகரம் மதுரை என்றே குறிப்பிடுகிறார்.

2. அம்மையார் முந்தைய பிறவியில் நீலி என்னும் பேயுருக் கொண்ட தெய்வமாக பிறந்திருந்த போது, சிவன் அவளை மணந்திருந்தார் என ஆசிரியர் எழுதியிருப்பது அபத்தத்தின் உச்சம். நீலி கதையின் அடிப்படையைக் கூட இவர் படித்திருக்கவில்லை எனத் தெரிகிறது. நீலி, உமையன்னை, காரைக்காலம்மை மூவரையும் குழப்பிக் கொண்டிருக்கிறார் என்பது மட்டும் தெளிவு

3. அம்மையார் தெய்வீக அம்சங்கள் உடையவர் என்பதால் அவருடன் தாம்பத்திய உறவு கொள்ள முடியவில்லை என்றும் அதனாலேயே அவரை விட்டு விலகினேன் என்றும் (பரமதத்தன்) கூறினார் - இது ஆசிரியரின் வரிகள், சேக்கிழாரோ, 'மனைஅறத்தின் பண்பு வழாமையில் பயில்வார்' எனக் குறிப்பிட்டு,

கணவன் தான் வணங்கக்
கண்ட காமர் பூங்கொடியனாரும்
அணைவுறும் சுற்றத்தார் பால்
அச்ச மோடு ஒதுங்கி நிற்ப
உணர்வுறு கிளைஞர் வெள்கி உன்
திரு மனைவி தன்னை
மணம் மலி தாரினாய் நீ
வணங்குவது என் கொல் என்றார்

மற்றவர் தம்மை நோக்கி மானுடம்
இவர் தாம் அல்லர்
நற் பெரும் தெய்வம் ஆதல்
நான் அறிந்து அகன்ற பின்பு
பெற்ற இம் மகவு தன்னைப்
பேர் இட்டேன் ஆதலாலே
பொற்பதம் பணிந்தேன் நீரும்
போற்றுதல் செய்மின் என்றான்

என்று மிகத் தெளிவாக பரமதத்தன் சொற்களைக் கூறுகிறார். ஆய்வாளர் சொற்களோ வேறு மாதிரி இருக்கின்றன.

ஆய்வுகள் அந்தந்த மண்ணில் இருந்தே, மண் சார்ந்த சிந்தனைச் செழுமைகளுடன் வர வேண்டும் என்பதற்கு இந்த கட்டுரை உதாரணம். ஆசிரியர், நெல்லை மாவட்டம் நாசரேத்தில் பிறந்து தற்போது அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் உள்ள பல்கலை ஒன்றில் பணியாற்றுகிறார் என்று வேறொரு குறிப்பு கூறுகிறது. ஆனால் அந்த பல்கலையின் இணையதளத்தில் அந்த மாதிரியான தகவல் இல்லை.

ஆங்கிலத்தில் அவர் எப்படி எழுதினாரோ, மொழிபெயர்ப்பிலாவது தவறுகள் திருத்தப்பட்டிருக்கலாம்.

(இந்தப் பதிவு, 17-10-2019 அன்று எனது முகநுால் பக்கத்தில் காரைக்காலம்மையாரின் முற்பிறவி நீலியா? என்ற தலைப்பில் எழுதப்பட்டது) 

1 கருத்து:

Translate