திருநள்ளாற்றில் உள்ள சனி பகவான் சன்னிதி உண்மையில் அதுதானா என்ற சந்தேகம் எனக்கு உண்டு. ஒன்பான் கோள்களை வைத்து ஜோதிட வியாபாரம் செய்யும் போக்கு சமீப காலத்தில்தான் ஏற்பட்டது.
ஆனால், 1935லேயே சனி பெயர்ச்சியின் போது, திருநள்ளாற்றில் அதிகளவில் கூட்டம் குவிந்தது என்றும், இப்போது ஆடையை குளத்தில் அவிழ்த்துப் போட்டு விட்டு குளிப்பது போன்று அப்போது நல்லெண்ணெயைத் தலைக்கு தேய்த்துக் கொண்டு பல்லாயிரக்கணக்கானோர் நளதீர்த்தத்தில் குளித்துள்ளனர் என்றும் சி.கே.சுப்பிரமணிய முதலியார், கொங்கு மலர் மாத இதழில் தனிக் கட்டுரையே எழுதியுள்ளார்.
கொங்கு மலர் இதழில் ஒரு பகுதி |
நளதீர்த்தம் |
அப்போதே வெள்ளிக் காக வாகனத்தில் வீதியுலாவும் நடந்துள்ளது.
உண்மையில் அந்த சனி பகவான் யார்?
தமிழ் மரபு அறக்கட்டளை Tamil Heritage Foundation னின் இணையதளத்தில் தேடியபோது சிக்கியது நள்ளாற்றுத் தலபுராணம். நுாலாசிரியர் பெயர், காலம் எதுவும் இல்லை. ஆனால், நுாலின் பாயிரத்தில், நால்வர் துதிக்குப் பின் சனி துதி இடம் பெறுகிறது. அதில், நள்ளாற்றுக் கனக வச்ரத் திருவாசல் இடம் நின்ற மந்தன் என சனி குறிப்பிடப்படுகிறார்.
பெருவாச நளனொடுவந்(து) அவன்தீர்த்தம்
- - ஆடுதலால் பெற்ற பேற்றால்
ஒருவாவந்(து) எம்பெருமான் அருள்பெற்று
- - மிகவும்மனம் உவகைப் பூப்பக்
கருவாசல் புக்கார்போல் புகுந்து(ஒ)ளிரு(ம்)
- - நள்ளாற்று கனக வச்ரத்
திருவாசல் இட(ம்)நின்ற மந்தன்இரு
- - செந்தளிர்தாள் சிந்தை செய்வாம்
இதையடுத்து 4வது நளபதி சருக்கத்தில், நளன் கதையை முழுக்க கூறுகிறார் ஆசிரியர், அதில் 9வது விருத்தத்தில்,
(சனியின் புத்தியால் நளன் ஆடையை துணித்து பிரிதல்)
தூங்(கு)இருளினில் பாழிடத்தில் துகள் இலவன்
- - கண்டு இனான் தொடர்ந்த வெய்யோன்
ஆங்(கு) அவன் நெஞ்சத்(து) அடைய விழித்(து)
- - அணங்கை விடுத்து ஏகற்(கு) அமைந்து கையால்
பாங்கின்உறத் தடவலுமே வெங்கலி
- - வாளாய்க் கிடப்பப் பற்றி ஒற்றைப்
பூங்கனகத் துகில்ஈர்ந்து கண்நுழையாக்
- - கான்இருள்வாய்ப் போயான் அன்றே - 9
மனைவியைப் பிரிய வேண்டும் என்ற எண்ணம் வந்த உடனே, கலியே, அங்கு வாளாய்க் கிடப்ப அதை எடுத்து தன் மனையாளின் துகிலைக் கிழித்து விட்டு வெளியேறுகிறான் நளன் என்பது பாடலின் பொருள். இங்கு கலி எனக் குறிப்பிடப்படுவது தலைப்பில் சனி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கலியையே சனி என ஆசிரியர் கருதுகிறார் என்பதை, இதே சருக்கத்தில், 31வது பாடலில் வைத்துக் காட்டுகிறார். சோதனைக் காலம் முடிந்து குடும்பத்துடன் கூடி மகிழ்ந்திருந்த காலத்தில் கடந்த காலத்தில் நடந்த சம்பவங்கள் நளனின் மனதை வருத்திக் கொண்டிருந்தன என்பதை,
(ஊழின்வழி நடந்தமை நினையல்)
தீ(து)அணி சூதினில் சிந்தை செய்ததும்
காதலி வனத்(து)இரா விடுத்த கன்மமும்
மேதக அறப்பரி வினைசெய் கீழ்மையும்
ஏதவெம் சனிவிடா(து) இயைந்த தீமையும்
என்று சுட்டுகிறார் ஆசிரியர், இங்கு பாடலில் சனி என வருவதை நாம் கலி எனப் பொருள் கொள்ள முடியும். ஆக, சனியும் கலியும் ஒன்றுதான் என ஆசிரியர் கூறுகிறார்.
இந்த நுாலின் அடிப்படையில் பார்க்கும்போது, வாசலில் இருப்பவர் சனி தான் என உறுதியாகிறது. இந்த நுால் அச்சானதா எனத் தெரியவில்லை. இங்கு, Tamil Heritage Foundation னின் இணையதளத்தில் உள்ளது போலவே பாடல்களை மேற்கோள் காட்டியுள்ளேன்.
கீழ்க்கண்ட சுட்டிகளில் சென்றால், சில தலபுராணங்களின் பிடிஎப் படிவம் கிடைக்கும்
http://www.tamilheritage.org/uk/lontha/thiruna/thiruna.pdf
http://www.tamilheritage.org/uk/lontha/lonthain.html
(என் முகநுால் பக்கத்தில், 2019, அக்டோபர் 6 மற்றும் 7ம் தேதிகளில் எழுதியது)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக