-வி.சிதம்பர
ராமலிங்கம் பிள்ளை
போகமார்த்த
பூண்முலையாள் தன்னோடும் பொன்னகலம்
பாகமார்த்த
பைங்கண்வெள் ளேற்றண்ணல் பரமேட்டி
ஆகமார்த்த
தோலுடையன் கோவண ஆடையின்மேல்
நாகமார்த்த
நம்பெருமான் மேயது நள்ளாறே
இந்தத்
திருப்பாட்டின் பொருளை நாம் தெரிவதற்கு முன்னர் ஒரு சிறிது திருநள்ளாற்றைப்
பற்றியும் இந்தப் பதிகத்தின் வரலாற்றைப் பற்றியும் தெரிந்து கொள்வது நலம்.
திருநள்ளாறென்பது
சோழநாட்டில் காவிரியின் தென்கரையில் உள்ள சிவஸ்தலங்களி்ல் ஒன்று. நளன் பூசித்த
காரணத்தால் இந்த ஸ்தலம் நள்ளாறென்னும் பெயர் பெற்றது என்பர். சுவாமியின் திருமேனி
தருப்பைக் கொழுந்து போன்ற அடையாளங்கள் உள்ளது. இங்கே சுவாமியின் திருநாமம்
தருப்பாரண்யேசுவரர். தேவியார் திருநாமம் போகமார்த்த பூண்முலையாள். இந்தத்
திருநாமத்தையே திருஞானசம்பந்த மூர்த்திகள் முதலாகக் கொண்டு இத்திருப்பதிகத்தைத்
தொடங்குகின்றார்கள்.
இந்த ஸ்தலம்
முசுகுந்த சக்கரவர்த்தி பிரதிஷ்டை செய்த சப்த விடங்க ஸ்தலங்களில் நக விடங்கர்
எழுந்தருளியிருக்கும் ஸ்தலம். இது பேரளம் காரைக்கால் இருப்புப் பாதையில் உள்ள
நள்ளாற்று ஸ்டேஷனிலிருந்து தெற்கே அரை மைல் துாரத்தில் உள்ளது.
இந்த ஸ்தல
சம்பந்தமாகத் திருஞானசம்பந்தமூர்த்தி சுவாமிகள் நான்கு திருப்பதிங்களும்,
திருநாவுக்கரசு சுவாமிகள் இரண்டு திருப்பதிகங்களும் சுந்தரமூர்த்தி சுவாமிகள் ஒரு
திருப்பதிகமும் பாடியருளி இருக்கின்றார்கள்.
இப்பொழுது நான்
இங்கே விளக்கம் செய்யப் புகுவது திருஞானசம்பந்த சுவாமிகள் பாடியருளிய நான்கு
திருப்பதிகங்களுள் ஒன்றான ‘போகமார்த்த பூண்முலையாள்’ என்னும் திருப்பதிகத்தின்
முதலாவது திருப்பாட்டு. இந்தத் திருப்பதிகம் திருஞானசம்பந்த மூர்த்தி சுவாமிகள்
திவ்விய சரித்திரத்தோடு விசேஷ சம்பந்தமுள்ள பதிகமாகும்.
பாண்டிய நாட்டின்
ராஜதானியாகிய மதுரைமா நகரிலே ஆயிரத்து முந்நுாறு வருஷங்களுக்கு முன் ஜைந சமயம்
பரவியிருந்தது. கோப்பெருந் தேவியாராகிய மங்கையர்க்கரசி அம்மையாரும்
மந்திரியாராகிய குலச்சிறை நாயனாரும் தவிர மற்ற அனைவரும் ஜைநராயினர்.
அவ்விரு பெருமக்களும்
பாண்டிய நாட்டிலே சைவ சமய விளக்கம் குன்றியிருப்பது பற்றி மனம் வருந்தித்
திருஞானசம்பந்த மூர்த்தி சுவாமிகளை மதுரைக்கு வரவழைத்தார்கள்.
ஜைநர்களுக்கும்
சுவாமிகளுக்கும் மதுரையிலே மூன்று வாதங்கள் நிகழ்ந்தன; அவற்றுள் இரண்டாவதாக ஜைந
சமய நுால்களையும் சைவ நுால்களையும் நெருப்பிலிட வேண்டும். எவ்வேடு வேவாமல்
இருந்ததோ அவ்வேட்டின் சமயமே மெய்ச்சமயம் என்ற வாதம் தொடங்கிற்று.
திருஞானசம்பந்த
மூர்த்தி சுவாமிகள் நெருப்பின் சமீபத்தில் எழுந்தருளி வந்து தேவாரத் திருமுறையை
ஸ்தோத்திரஞ் செய்து, ‘எங்கள் சிவபெருமானே பரம்பொருள்’ என்று சொல்லி வணங்கி ஏடு
கட்டியிருந்த கயிற்றினை அவிழ்த்து அத்திருமுறையில் தமது திருக்கரத்தால் கயிறு
சாத்தினார்கள். அப்படிச் சாத்திய காலத்தில் மேலே சொல்லி ‘போகமார்த்த
பூண்முலையாள்’ என்னும் திருநள்ளாற்றுப் பதிகம் வந்து நேர்ந்தது.
ஞானசம்பந்த
சுவாமிகள் சிவபெருமானை வணங்கி, அந்த ஏட்டைத் திருமுறையினின்றும் கழற்றித் தமது
திருக்கரத்தில் வைத்துக் கொண்டு, பரமசிவனே மெய்ப்பொருள் என்பதை அனைவருக்கும்
அறிவுறுத்தும் பொருட்டு, ‘எரியிடிலிவை பழுதிலை மெய்ம்மையே’ என்னும் ஈற்றினையுடைய
‘தளிரிள வளரொளி’ என்னும் திருப்பதிகத்தை பாடியருளி, அந்த ராஜ சபையில் உள்ளோர்
எல்லாரும் காணும்படி நெருப்பிலே இட்டார்கள். ஜைநர்களும் தங்கள் சமய சாஸ்திரங்களை
நெருப்பில் இட்டார்கள்.
குறித்த நாழிகை
கழித்துப் பார்க்குங் காலத்தில் ஜைநர்களிட்ட ஏடு சாம்பலாய்ப் போகத்
திருஞானசம்பந்த மூர்த்தி சுவாமிகளிட்ட திருவேடு பச்சையாய் விளங்கிற்று என்பதாதலால்
இப்பதிகம் ‘பச்சைப் பதிிகம்’ என்று பெயர் கூறப்படும். இது பதிகத்தின் வரலாறு.
இனித் திருப்பாட்டின் பொருளைத் தெரிவோம்.
முதலில்
திருப்பாட்டின் பதப்பொருளை அறிவோம். இதன் பொருள் –
போகம் ஆர்த்த – ஆன்மாக்களுக்குப் போகங்களை
ஊட்டுகின்ற
பூண்முலையாள்
தன்னோடும் – ஆபரணங்கள் அணிந்த ஸ்தனங்களையுடைய உமாதேவியாராடும்
பொன் அகலம் –
பொன் நிறமாக விளங்கும் தமது சரீரத்திலே
பாகம் ஆர்த்த –
இடப்புறத்துப் பாதி சரீரத்தில் பொருத்திய
பைங்கண்
வெள்ளேற்று அண்ணல் – பசிய நிறம் பொருந்திய கண்களையுடைய வெண்மையான இடப வாகனத்தில்
ஏறிச் செலுத்தும் தலைவரும்
பரமேட்டி – மேலான
நிலையில் இருப்பவரும்
ஆகம் ஆர்த்த
தோலுடையன் – திருமேனியிலே தரித்த தோலாடையை உடையவரும்
கோவண ஆடையின்
மேல் நாகம் ஆர்த்த நம்பெருமான் – கோவணமாகிய ஆடையின் மேல் பாம்பினைக் கட்டியவருமான
சிவபெருமான்
மேயது நள்ளாறே –
எழுந்தருளியிருக்கும் ஸ்தலம் திருநள்ளாறு என்பதாம்.
இனித்
திருப்பாட்டிற் கூறப்படும் விஷயங்களைத் தெரிவோம். முதலில் உமாதேவியார் யார் என்று
தெரிவோம். உமாதேவியார் சிவபெருமானின்றும் நீங்காத அபின்னா சக்தியாவர். வானத்திலே
சூரியன் தன்னளவில் பேரொளிப் பிழம்பாய் விளங்கியும், நமது கண்ணொளியோடு கலந்து
உலகப் பொருள்களை நாம் காணுமாறு உபகரித்தும் நிற்கின்றானல்லவா? அதுபோலச்
சிவபரம்பொருளும் ஒன்றினும் தோய்வின்றித் தானே சுயம் பிரகாசமாய் நிற்கும்
தன்மையில் சிவமென்றும், அப்பரம்பொருள் ஆன்மாக்களுக்கு உபகரித்து அவ்வுயிர்களின்
வழி நிற்குந்தன்யைிற் சத்தியென்றும் கூறப்படும். ஆகவே, உமாதேவியார் சிவபெருமானை
விட்டு எக்காலத்தும் நீங்கியிருப்பவர் அல்லர். பரமசிவனது இவ்விதத் திருமேனி அர்த்தநாரீச
வடிவமென்றும் உமையொருபாக மூர்த்தி என்றும் ஞான நுால்கள் கூறுகின்றன.
ஸ்ரீமாணிக்கவாசக
சுவாமிகள் இத்திருவடிவத்தை –
தோலுந் துகிலுங்
குழையுஞ் சுருள்தோடும்
பால்வெள்ளை
நீறும் பசுஞ்சாந்தும் பைங்கிளியும்
சூலமும் தொக்க
வளையும் உடைத்தொன்மைக்
கோலமே நோக்கிக்
குளிர்ந்துாதாய் கோத்தும்பீ
என்று
போற்றுகின்றார்கள்.
இதனுள்
தொன்மைகே் காலம் என்றருளியிருப்பது கவனிக்கற்பாலது. யஜுர் வேதத்து வாஜசநீய
சம்ஹிதையில் இவ்வடிவமானது, ‘அஹோ ராத்ரே பார்ச் வே’ (பகலும் இரவும் பக்கங்கள்)
என்று போற்றப்படுகின்றது. மெய்யெல்லாம் வெண்ணீறு சண்ணித்த சிவபிரானது திருமேனி பகலாகவும் உமாதேவியாரது
கரிய திருமேனி இரவாகவும் இம்மந்திரம் வர்ணிக்கின்றது.
திருஞானசம்பந்தப்
பெருமான் ‘பகலும் இரவுஞ் சேர்பண்பினார்’ என்றும் ‘இரவொடு பகலதாம் எம்மான்’
என்றும் அருளுகின்றார்கள். இனி இவ்வாறு சிவபிரானது அபின்னா சக்தியாக விளங்கும்
உமாதேவியாரைப் ‘போகமார்த்த பூண்முலையாள்’ என்றருளியது யாது பற்றி என்று
தெரிவோம்.
கந்தபுராணத்தில்
உமாதேவியாரது ஸ்தனம் ‘பரமபோத நீரதாய்’ என்று குறிக்கப்பட்டது. பரம், அபரம்
என்னும் இருவகை ஞானங்களுமே உலக மாதாவாகிய உமாதேவியாருக்கு ஸ்தனங்கள் என்னும் உண்மை
விளங்கும். ஆகவே போகமார்த்த பூண்முலையாள்
என்பது ஆன்மாக்களுக்கு அபர ஞானம் பர ஞானம்
என்னும் இருவகை ஞானங்களையும் ஊட்டி உபகரிக்கும் திருவருட் சத்தி என்பது
பெறப்பட்டது.
இனிச்
சிவபெருமானது திருமேனியைப் ‘பொன்னகலம்’ என்று திருஞான சம்பந்த மூர்த்திக் கூறியருள்கின்றார்கள்.
சிவபெருமானுக்குப் பல வடிவங்கள் உள என்று ஞான நுால்கள் கூறுகின்றன. ‘ஸ்திரே பிர்
அங்கை: புரு ரூப உக்கிர:’ என்றருளிற்று இருக்குவேதம். தமிழ் வேதமும்
‘எண்ணுருவநேகர் போலும்’ என்று அருளுகின்றது.
அப்படியிருப்பினும்
பொன்மேனி நமது கண்ணையும் கருத்தையும் ஒருசேரக் கவருதொன்று என்பதை நாம்
அனுபவத்தில் அறிகின்றோமன்றோ? ஆகவே நமது சிவபெருமானுக்கு அவ்விதப் பொன்மேனி
உண்டென்று வேதம் கூறுகின்றது.
‘யச்சுக்ர இவ
ஸூர்யோ ஹிரண்யமிவ ரோசதே’ என்று இருக்கு வேதமும் ‘நமோ ஹிரண்ய பாஹவே ஹிரண்யவர்ணாய
ஹிரண்ய ரூபாய ஹிரண்ய பதயே அம்பிகா பதயே உமாபதயே பசுபதயே நமோந்நம’ என்று தைத்திரீய
ஆரண்யகமும் புகழ்கின்றன. திருமுறைகளோ,
‘பொன்போல மிளிர்வதோர் மேனியினீர்’ என்றும் ‘பொன்னார் மேனியேனே’ என்றும்
‘பொன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மேனி’ என்றும் இவ்வடிவத்தைப் பலபடப்
பாராட்டுகின்றன.
இனிச்
சிவபெருமானைப் ‘பைங்கண் வெள்ளேற்று அண்ணல்’ என்று திருஞான சம்பந்தப் பெருமான்
இத்திருப்பாட்டில் குறிக்கின்றார்கள்.
சிவபெருமான்
முப்புரங்களை ஜயிக்கப் பிரயாணம் தொடங்கிய காலத்து விஷ்ணுமூர்த்தி இடபமாய்த்
தாங்கிய வரலாறு இலிங்க புராணத்து விரிவாகக் கூறப்பட்டது. இனி இடபம் என்பது
வடமொழியில் ‘வ்ருஷபம்’ என்று கூறப்படும். ‘வ்ருஷ ஸேசநே: வர்ஷணாத் ஸர்வ காமாநாம்
வ்ருஷப: தர்மரூபதயா ஸர்வகாம ப்ரதத்வாத் ருஷவ்ருஷாப்யாம்கித். இத்யெளனாதிகோ அபச்
ப்ரத்யய:’ என்பது சிவதத்துவ ரகசியத்திற் கூறப்பட்டது. ஆகவே தர்மம் தான்
பரமசிவனுக்கு இடபம் என்னும் உண்மையை நாம் அறிகிறோம். சர்வ காருணிய ரூபியாகிய
சிவபெருமான் தர்மரூபமாகிய இடபத்தை வாகனமாகக் கொண்டருள்வது பொருத்தமானதேயாகும்.
இனிப் ‘பரமேட்டி’
என்பதன் பொருளைத் தெரிவோம். ‘பரநேந திஷ்டத்தி பரமேஷ்டி’ என்று குல்லுக பட்டர்
பரமேட்டி என்ற சொல்லின் பொருளை விரிக்கின்றார். இதன் பொருள் மிக மேலான நிலையில்
இருப்பதால் பரமேட்டி எனப்படுகின்றார் என்பதாம்.
‘யதோ வாசோ
நிவர்த்தந்தே அப்ராப்ய மநஸ்ஸஹ’ என்று வடமொழி வேதமும், ‘வாக்கு மனங்கழிய நின்ற
மறையோனே’ என்று தமிழ் வேதமும், ‘பாசஞானத்தாலும் பசுஞானத்தாலும் பார்ப்பரிய
பரம்பரன்’ என்று சித்தாந்த சாஸ்திரமும் சிவபெருமானது மகோந்நத நிலையை
வெளியிடுகின்றன.
இவ்வித மகோந்நத
நிலையில் உள்ள சிவபெருமான், ஆன்மாக்களாகிய நமக்கு உபகாரம் செய்யும் பொருட்டுத்
தர்ம ரூபமாயுள்ள இடபவாகனத்தில் ஏறியருளிக் கண்ணையும் கருத்தையும் ஒருங்கு கவரும்
பொற்றிருமேனியுடையராய், நமக்குப் போகமூட்டும் பொருட்டு பரஞானம் அபரஞானம்
என்னும் இரண்டு ஞானங்களையுமே ஸ்தனங்களாக உடைய திருவருட்சத்தியாராகிய உமாதேவியாரின்
நீக்கமின்றி நின்றருளுகின்றான் என்று திருஞானசம்பந்தப் பெருமான் நமக்கு அருளிச்
செய்வது நம்மைப் பரவசப்படுத்துகின்றது அன்றோ!
இனி
எம்பெருமானைத் திருஞானசம்பந்த சுவாமிகள் ‘ஆகம் ஆர்த்த தோலுடையான்’
என்கின்றார்கள். மனத்தை வசீகரிக்கும் பொற்றிருமேனியிலே பூண்முலையாளபை்
பாகங்கொண்ட பெருமானுக்குத் தோலாடையணிதல் தக்கதா? மகோந்நத நிலையிலிருக்கும்
அப்பெருமானுக்கு இழையாயிரம் பெறும் பொன்னாடையன்றோ தக்கது? அப்படியிருக்கவும்
நமது சிவபெருமான் ஏன் அதனை விடுத்துத் தோலாடை அணிகின்றார்?
வேதம்
சிவபெருமானை ‘விச்சாதிகோ ருத்ரோ மகர்ஷி:’ என்று கூறி மகிழ்கின்றது. இதன் பொருள்
சிவபெருமான் உலகியலுக்கு அப்பாற்பட்டவர் என்பதாம். மேலும் சிவபெருமானுக்குச்
‘சம்பு’ என்னும் திருநாமம் இருப்பதால் அவர் அளவிடப்படாத ஆனந்த வடிவினர் என்பது
பெறப்படும்.
பிரபஞ்ச மயக்கத்திற்கு உட்பட்ட நம் போன்றவர்கள்தாம் நல்ல வஸ்திரம்
பூமாலை சந்தனம் ஆபரணம் என்பனவற்றால் ஆனந்தம் அடைவார்கள். தன்னியல்பிலே ஆனந்த
ரூபியாயிருக்கின்றன பரமசிவனுக்கு பிராபஞ்சிகளாகிய நம்மைப் போல நல்ல ஆடை
முதலியவற்றால் மகிழ்ச்சியுண்டாதல் இல்லை என்பதை விளக்கும்பொருட்டே விசுவாதிகராகிய
சிவபெருமான் உலகியல் கடந்து நின்று தோலாடை புனைதல் எலும்பு மாலையணிதல்
முதலியவற்றை மேற்கொண்டிருக்கின்றார். இவ்வுண்மை பாகவதத்தில் காசிப வசனத்தால்
வெளியிடப்பட்டது.
ஆகவே, ‘ஆகமார்த்த தோலுடையன்’ என்பது சிவபெருமானது விசுவாதிகத்
தன்மையாகிய உலகியல் கடந்த நிலையையும் இயல்பாகவே ஆனந்த ரூபியாயிருக்குந் தன்மையையும்
விளக்குகின்றது.
இனிக் ‘கோவண
ஆடை’ என்பதன் உண்மையைத் தெரிவோம்.
ஸ்ரீமாணிக்கவாசக சுவாமிகள்,
என்னப்பன்
எம்பிரான் எல்லார்க்குந் தானீசன்
துன்னம்பெய்
கோவணமாக் கொள்ளுமது என்னேடி
மன்னுகலை
துன்னுபொருள் மறைநான்கே வான்சரடாய்த்
தன்னையே
கோவணமாச் சாத்தினன் காண் சாழலோ
என்று அருளிச்
செய்வதால், வேதங்கள் நான்கனையும் சரடாகக் கொண்டு அவ்வேதங்களையே கோவணமாகச்
சிவபெருமான் தரித்தருளினார் என்பது விளங்குகின்றது. வேதங்கள் நான்கானபடியால் வேதக்
கோவணந் தரித்த சிவபெருமானைத் திருஞான சம்பந்தப் பெருமானார், ‘நால்விரற் கோவண ஆடையர்’
என்று குறிக்கின்றார்கள். மறை நாலொடு ஐந்தென்று நிலைநிற்பது பாரதமாகலின்
திருஞானசம்பந்தப் பெருமானார், ‘ஐவிரற் கோவண ஆடையர்’ என்றும் புகழுகின்றார்கள். ‘மறையே
நமது கோவணமாம்’ என்று சிவபெருமான் அருளியதாக வரும் புராணமும் இதனை
வலியுறுத்துகின்றது. சிவபெருமான் ஞான ரூபியாதலால், அப்பெருமானுக்கு ஆன்மாக்களின்
அறிவை விளக்கும் வேதம் ஆடையாயிருப்பது உசிதமேயாகின்றது.
இனி அந்தக் கோவண
ஆடையின்மேல் நாகமார்த்த விஷயத்தைத் தெரிவோம். தாருகவனத்து இருடிகள் செய்த ஆபிசார
வேள்வியினின்றும் சிவபிரானை எதிர்த்து நாகம் வர, சிவபெருமான் அதனைத்
தரித்தருளினார் என்பது புராண வரலாறு.
‘ருத்திஸ்யாத்
நாக ரூபம் து’ என்று கூறுகின்றதென சிவாக்கிர யோகி தேசிகர் சிவஞான சித்தி உரையிற்
கூறியருளுகின்றனர். அவ்வுரையிற்றானே ருத்தி என்பது சுத்தமாயை என்றும்
கூறுகின்றனர். தொகை நுாலாகிய வேதம் ‘மாயாம் து ப்ரக்ருதிம் வித்யாத்’ என்ற அளவில்
மாயை உலகிற்கு முதற்காரணம் என்று கூறிச் செல்ல, அவ்வேதப் பொருளை விளக்க எழுந்த
வகை நுாலாகிய சிவாகமம், மாயை ஒன்றாயினும் ஆணவ மலத்தோடும் கர்மத்தோடும் விரவாத
ஊர்த்துவ பாகம் சுத்த மாயை என்றும், ஆணவமலத்தோடும் கர்மத்தோடும் விரவிய
அதோபாகம் அசுத்த மாயை என்றும் வகைப்படுத்துக் கூறுகின்றது. இந்தச் சுத்த மாயையிலே
தான் சித்தாந்த சைவத் தெய்வமாகிய பரமசிவன் நேராகத் தொழில் செய்கின்றார்.
சிவபெருமான் தமது அதிட்டானமாகிய சுத்த மாயையைக் கட்டியிருப்பது அவர் அதனைத்
தொழில்படுத்தும் பரமபதி என்னும் உண்மையைக் குறிப்பதாகும்.
இதுகாறும்
கூறியவாற்றால், உயிர்களுக்கு அபரஞானமென்னும் நுாலறிவையும் பரஞானமென்னும்
சுவாநுபூதிகத்தையும் அவ்வுயிர்கள் மீது கொண்ட கருணையால் உபகரித்து நின்றருளும்
சிவபிராட்டியைக் கண்ணையும் கருத்தையும் கவரும் பொன்போன்ற தமது திருமேனியின்
இடப்பாகத்திற் கொண்டவராய்த், தர்மரூபமாகிய இடபவாகனாரூடராய் மகோந்நத நிலையில் விளங்குபவராம்,
உலகியலைக் கடந்து நிற்கும் விசுவாதிகராய், உயிர்களுக்கு ஞானத்தை அளிக்கும்
வேதத்தைக் கோவண ஆடையாய்த் தரித்தவராய்ச், சுத்த மாயையை நேரிற்றொழிற்படுத்தும்
பரம சுத்த மூர்த்தியாய் விளங்கும் திருநள்ளாற்றெம் பெருமானே எமது கடவுள் என்பது
பெறப்பட்டது.
வெறியேர்
பொழிற்சண் பையர் வேந்தர்மெய்ப் பாசுரத்தின்
குறியே றியவெல்
லையறிந்துகும் பிட்டே னல்லேன்
சிறியே னறிவுக்
கவர்தந்திருப் பாதந்தந்த
நெறியே சிறிதியா
னறிநீர்மைகும் பிட்டே னன்பால்
என்று
ஸ்ரீசேக்கிழார் சுவாமிகளே திருஞானசம்பந்தப் பெருமான் திருவாக்குக்கு உரைகூற அஞ்சுவதானால்,
திருப்பாட்டின் பொருளைக் கூறுவதற்கு ஒன்றுக்கும் பற்றாத யான் தக்கவனல்லேன்.
நம: பார்வதீ பதயே
ஹர ஹர மகாதேவா...
----------------------------------------------------------
(இந்தக் கட்டுரை,
திருச்சிராப்பள்ளி அகில இந்திய வானொலிக்காக ஆசிரியரால் எழுதப்பட்டது. 1941ம்
ஆண்டு, ஜனவரி 17, பிப்ரவரி 8, மார்ச் 1 மற்றும் மார்ச் 22 ஆகிய தேதிகளில்
ஒலிபரப்பு செய்யப்பட்டது. அன்றைய சூழலில் வானொலியில் ஒலிபரப்பப்பட்டவை எழுத்து
வடிவத்தில் வெளியிட தடை இருந்தது போலும். இதுகுறித்து வானொலி நிர்வாகத்திற்கு
ஆசிரியர் அனுப்பிய கடிதத்திற்கு பதில் அனுப்பிய அப்போதைய இயக்குநர், இதுகுறித்து
அரசு இன்னும் முடிவெடுக்காததால், எழுத்து வடிவத்தில் வெளியிட தான் அனுமதிக்க
முடியாது எனத் தெரிவித்துள்ளார். 1941ம் ஆண்டில் வி.சி அவர்கள்
திருவாவடுதுறைக்கு இடம் பெயர்ந்து விட்டார் என்பதை கடிதத்தின் முகவரி சுட்டிக்
காட்டுகின்றது. கடிதத்தின் படம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது)
வி.சிதம்பர ராமலிங்கம் பிள்ளைக்கு திருச்சி வானொலி நிலைய இயக்குநர் அனுப்பிய கடிதம் |
கட்டுரைக்கான தலைப்பு நான் அளித்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக