வெள்ளி, 17 ஜூலை, 2009

பெரியபுராணம் – சில சிந்தனைகள்


பேராசிரியர் பாலறாவாயன் ஜூலை மாதம் வெளிநாடு செல்வதால் ஜூலை மாதத்திற்கான சொற்பொழிவினை ஜூன் கடைசியில் திருவான்மியூர் மருந்தீசர் கோயிலில் ஏற்பாடு செய்திருந்தனர். ஜுன் 29, 30 ஆகிய தேதிகளில் இது நடந்தது. நான் குறிப்பெடுத்து வைத்திருந்ததில் 30 ஆம் தேதிக்குரிய குறிப்புகள் மட்டும் கிடைத்தன. 29 ஆம் தேதிக்குரிய குறிப்புகள் கிடைக்கும்போது இங்கே தருகிறேன். இனி....


30-06-09

சைவத்தில் குரு,லிங்க,சங்கம வழிபாடு சிறப்பாகக் கூறப்படும். அதிலும் சங்கம வழிபாட்டிற்கு மிகச் சிறப்பு உண்டு. பட்டினத்தடிகள் ‘நல்லார் இணக்கமும் நின்பூசை நேசமும் ஞானமுமே,அல்லாது வேறு நிலையுளதோ?’ என்றருளிச் செய்தார்.

அடியாரோடு இருந்தால் தான் பூசையில் நேசம் வரும். பூசையினால் ஞானம் உண்டாகும். எனவே சங்கம வழிபாடாகிய அடியார் கூட்டுறவே ஞானத்திற்கு ஆதாரம்.

மணிவாசகரும் ‘உன் அடியார் நடுவுள் இருக்கும் அருளைப் புரியாய்” என்றே அருளிச் செய்தார்.

இவ்வழியே வந்த சேக்கிழாரும் அடியார்களின் வரலாற்றினை கூறுவதற்கு மிக ஆசையுடையவராக தன்னைக் காண்பிக்கிறார்.

பெரியபுராண அவையடக்கத்தில்,

அளவிலாத பெருமையர் ஆகிய
அளவிலா அடியார் புகழ் கூறுகேன்
அளவுகூட உரைப்பரிது ஆயினும்
அளவில் ஆசை துரப்ப அறைகுவேன்

என்றே அருளிச் செய்கிறார்.

பொதுவாக தமிழ் இலக்கியத்தில் உள்ள புராணங்களில் வரலாற்றினை நாம் எதிர்பார்க்க இயலாது. ஆனால் பெரியபுராணம் முழுக்க முழுக்க வரலாற்றினையே அடிப்படையாகக் கொண்டது.

பிற புராணங்கள் விண்ணிலிருந்து மண்ணுக்கு வந்தவர்களைப் பற்றிக் கூறும். ஆனால் பெரியபுராணம் மண்ணிலிருந்து விண்ணுக்குச் சென்றவர்களைப் பற்றிக் கூறுகிறது.

புலவரை ஆற்றுப்படுத்துவது புலவராற்றுப்படை. முருகனிடத்து ஆற்றுப்படுத்துவது முருகாற்றுப்படை. அதுபோல இறைவனிடத்து அடியார்களை ஆற்றுப்படுத்துவது பெரியபுராணம்.

சேக்கிழார் வரலாற்று உணர்வு மிக்கவர். சோழப்பேரரசின் முதலமைச்சரல்லவா அவர்..!

காப்பியம் செய்பவர்கள் அதில் தம் கற்பனையைக் கலக்கலாம். கற்பனைக் கதாபாத்திரங்களை உருவாக்கி அவர்கள் மூலம் தம் கருத்தை கூறலாம்.

ஆனால் தாமியற்றிய பெரியபுராணத்தில் இம்மியளவு கூட கற்பனையை புகுத்தவில்லை, தெய்வச் சேக்கிழார் சுவாமிகள். அங்ஙனம் கற்பனைக் கதாபாத்திரங்களை அவர் படைத்துக் கொண்டாலும் பாதகமில்லை. ஆனாலும் அவர் அவ்வாறு செய்யவில்லை. வரலாற்று உணர்வோடுதான் இயற்றியுள்ளார். இதற்குப் பல உதாரணங்களைக் காட்டலாம்.

ஞானசம்பந்தர் சிவனருள் பெற்ற வயதினைக் கூறுகிறார்.

”சிரபுரத்துச் சிறுவருக்கு மூவாண்டில் உலகுய்ய நிகழ்ந்ததனை மொழிகின்றேன்” என்பது அவர் வாக்கு.

ஞானம் பெற்றவரை அவர் தந்தையார் தம் தோளின் மேல் வைத்துக் கொண்டு சென்றார் என்பதனை, “தாதையார் சிவபாத இருதயர்தாம் தெய்வ ஞானக் கன்றினை முன் புக்கெடுத்து பியலின் மேல் கொண்டு களி கூர்ந்து செல்ல” என்பார் சேக்கிழார். இதிலிருந்தே நாம் ஞானசம்பந்தரின் வயதினை கணித்துவிடலாம்.

திருக்கோலக்கா தரிசனத்தின் போது ஞானசம்பந்தர் நடந்து வந்தார், அதைக் கண்ட சிவபாத இருதயர் ‘குழந்தை பாதம் நோகுமே?’ என்று தம் தோளின் மேல் வைத்துக் கொண்டார் என்று

“செங்கமல மலர்க்கரத்துத் திருத்தாளத்துடன் நடந்து செல்லும்போது
தங்கள் குலத் தாதையார் தரியாது தோளின்மேல் தரித்துக் கொள்ள
அங்கவர்தம் தோளின்மிசை எழுந்தருளி

என்று கூறுகிறார் சேக்கிழார்.

தந்தையின் பியலின் (பிடரி/தோள்) மீதிருந்து ஞானசம்பந்தர் பாடிய காந்தாரப் பண் ‘பியந்தைக் காந்தாரம்’ என்பர்.

ஆக, பிள்ளையார் ஞானம் பெற்ற வயதினை மிகச் சரியாகக் குறிப்பிடுகிறார்.

இங்ஙனம் வயதைச் சொல்லியவர் சம்பந்தரின் இயற்பெயரைச் சொல்லவில்லை. அவர் மனைவியின் பெயரைச் சொல்லவில்லை. ‘நம்பாண்டார் நம்பி பெறும் காதலி’ என்றுதான் கூறுகிறார்.

தடுத்தாட்கொண்ட புராணத்தில் சுந்தரருக்கு நடக்க இருந்த முதல் திருமணத்தில் மணமகள் பெயரை ‘சடங்கவி பேதை’ என்றே குறிப்பிடுகிறார்.
இதை ஆய்வாளர்கள் காப்பிய உத்தி என்கிறார்கள். ஆனால் தனக்கு நன்றாக உறுதியாகத் தெரிந்த விஷயம் பற்றி மட்டுமே சேக்கிழார் தெளிவாகக் கூறுகிறார். அவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லாததை அப்படியே கூறிவிடுகிறார். தம் கற்பனையை அங்கே புகுத்த முற்படவில்லை.

அதேபோல மங்கையரக்கரசியாரின் தந்தை ‘மணிமுடிச் சோழன்’ என்கிறார்கள் ஆய்வாளர்கள். ஞானசம்பந்தரின் ‘மங்கையர்க்கரசி’ பதிகத்தில் ’மன்னெலாம் நிகழ மன்னனாய் மன்னும் மணிமுடிச் சோழன்’ என்று வருவதை ஆதாரமாய் அவர்கள் கொள்கிறார்கள்.

ஆனால் சேக்கிழார் மங்கையர்க்கரசியாரைப் பற்றிக் கூறும்போது அவர் தந்தையார் பெயரைக் குறிப்பிடவில்லை.

சரியான வரலாற்றுக் குறிப்புடன் தெளிவாக பெரியபுராணம் இருக்கவேண்டும் என்று அவர் மனதில் உறுதியுடன் இருந்திருக்க வேண்டும். அதனால் தான் தனக்குத் தெரியாதவற்றை அவர் கற்பனையாகவேனும் கூறுவதில்லை.

எனவே அவர் கூறுவதெல்லாம் வரலாறுதான் என்பதில் ஐயமில்லை.

பல்லவர் காலச் சமூகத்தில் லஞ்சம் இருந்தது என்பதை சேக்கிழார் நுணுக்கமாகக் குறிப்பிடுகிறார் என்பார் அறிஞர் மா.இராசமாணிக்கனார்.

அப்பரடிகள் சமணத்திலிருந்து சைவத்திற்கு மாறிவிட்டார் என்பதறிந்த சமணர்கள் அவரைப் பற்றி அரசனிடம் திரித்துக் கூறுகின்றனர். அதைக் கேட்டு வெகுண்டெழுந்த மன்னவனும்

“அருள்கொண்ட உணர்வின்றி நெறிகோடி அறிவென்று
மருள்கொண்ட மன்னவனும் மந்திரிகள் தமைநோக்கித்
தெருள்கொண்டோர் இவர்சொன்ன தீயோனைச் செறுவதற்குப்
பொருள்கொண்டு விடாது என்பால் கொடுவாரும் எனப்புகன்றான்”

என்று கூறுவதாக சேக்கிழார் காட்டுகிறார்.

இப்பாடலில் ஈற்றடியில் வரும் ‘பொருள் கொண்டு விடாது என்பால் கொடுவாரும் ‘ என்னும் அடி அப்பரடிகள் கால சமூகத்தில் புரையோடிப் போயிருந்த லஞ்சத்தைக் காட்டுகிறது.

இதற்கு உறுதி சேர்ப்பதாக ஒரு செய்தி மத்தவிலாசப் பிரகசனத்தில் உள்ளது.

காபாலினி சொல்கிறாள்: “ பௌத்த துறவிகள் ஒழுக்கம் உடையவர்களாக இல்லை. இவர்கள் மீது வழக்கு போட்டால் பொன் பொருள்களை நீதிபதிக்கு அள்ளிக் கொடுத்து அவரை விலைக்கு வாங்கி விடுவர்”

இதுவே சேக்கிழாரின் கூற்றுக்குத் தக்க ஆதாரமாய் அமைகிறது. சமுதாயத்தின் இழிநிலையைக் கூட பதிவு செய்துள்ளார் சேக்கிழார்.

ராஜராஜன் தான் கட்டிய பெரிய கோயிலில் நாயன்மார் திருமேனிகளைச் செய்து அத்திருமேனிகளின் கீழேயே அவ்வந்நாயன்மார் திருப்பெயரைப் பொறித்துள்ளான். அதில் மெய்ப்பொருள் நாயனார் திருமேனி பீடத்தில் ‘தத்தா நமரே காண் என்ற மிலாடுடையார்’ என்று குறிப்பிடுகிறான்.

இதன் மூலம் நாயன்மார் வரலாறு பெரியபுராணம் தோன்றுவதற்கு முன்னமே மக்களிடம் வழக்கில் இருந்தது என்பதை நாம் உணரலாம்.

’தத்தா நமரே காண்’ என்ற வார்த்தை சேக்கிழாரைக் கவர்ந்துள்ளது. அதனை,

“மறைத்தவன் புகுந்த போதே மனம் அங்கு வைத்த தத்தன்
இறைப்பொழுதின் கண் கூடி வாளினால் எறியல் உற்றான்
நிறைத்த செங்குருதி சோர வீழ்கின்றார் நீண்ட கையால்
தறைப்படும் அளவில் ’தத்தா! நமர்” எனத் தடுத்து வீழ்ந்தார்”

என்று வைக்கின்றார் சேக்கிழார்.

அதேபோல பரஞ்சோதியார் புலிகேசியை வென்று கொணர்ந்த பொருட்களை,

“மன்னவர்க்குத் தண்டுபோய் வடபுலத்து வாதாவித்
தொன்னகரம் துகளாகத் துளைநெடுங்கை வரையுகைத்துப்
பன்மணியும் நிதிக்குவையும் பகட்டினமும் பரித்தொகையும்
இன்னன எண்ணில கவர்ந்தே
இகலரசன் முன் கொணர்ந்தார்”

என்று பட்டியலிடும் சேக்கிழார், வாதாபியிலிருந்து கணபதியைக் கொண்டு வந்ததாகக் கூறவில்லை.

பரஞ்சோதியார் காலத்திற்கு முன்பே கணபதி வழிபாடு தமிழகத்தில் தொடங்கியிருக்கக் கூடும். அதனை நம் ஆசார்யர்களும் ஏற்றுக் கொண்டு பாடியுள்ளனர். அவர்கள் காலத்திற்குப் பின்பு அவ்வழிபாடு இங்கு நிலை கொண்டுவிட்டது.

சேக்கிழார் பல இடங்களில் அடியார்களின் சாதியைச் சுட்டுகிறார். ஏன்..? ஈசன் அடியார் எவராயினும் அவரிடையே சாதிபேதம் இல்லை என்பதை வலியுறுத்தவே அவ்விதம் சுட்டிக்காட்டுகிறார்.

இளையான்குடி மாறனார் புராணத்தில் இளையான்குடி எங்கிருக்கிறது என்று கூறவில்லை.

மாறனாருக்கும் அவர்தம் மனைவியாருக்கும் இறைவன் காட்சியளித்ததைக் கூறும்போது,

“மாலயற்கு அரிய நாதன் வடிவொரு சோதியாகச்
சாலவே மயங்குவார்க்குச் சங்கரன் தான் மகிழ்ந்தே
ஏலவார் குழலாள் தன்னோடு இடப வாகனனாய்த் தோன்றிச்
சீலமார் பூசை செய்த திருத்தொண்டர் தம்மை நோக்கி”

என்பார்.

இங்கே அம்மையை ‘ஏலவார் குழலாள்’ என்று சுட்டுகிறார். இது கொண்டு அந்த இளையான்குடி தொண்டை மண்டலத்தில் இருக்கலாம் எனும் எண்ணம் எழுகிறது. ஆய்வாளர்கள் இதுவரை அப்படிச் சொல்லவில்லை. எனினும் இது குறித்து ஆய்வு செய்யலாம்.

ஏன் அவ்விதம் அம்மையை ‘ஏலவார் குழலாள்’ என்றார்?

மாறனாரின் மனைவியார் தம் கணவர் தந்த விதை நெல்லையும் கீரையையும் விதவிதமாக சமைத்தார் என்பதை,

”மனைவியார் கொழுநர் தந்த மனமகிழ் கறிகள் ஆய்ந்து
புனலிடைக் கழுவித் தக்க புனித பாத்திரத்துக் கைம்மை
வினையினால் வேறு வேறு கறியமுதாக்கிப் பண்டை
நினைவினால் குறையை நொந்து திருவமுது அமைத்து
நின்று”

என்பார்.

அப்படி சமைத்து தயாராக்கிய போது அம்மையார், தம் கணவர் முன்பு பெரும் செல்வராக இருந்த போது அடியார்களுக்கு ‘உண்டி நாலு விதத்தில் ஆறு சுவைத் திறத்தினில் ஒப்பிலா, அண்டர் நாயகர் தொண்டர் இச்சையில் அமுது செய்ய’ அளித்த நிலையையும் இன்றுள்ள நிலையையும் ஒப்பிட்டுப் பார்த்து மனம் நொந்தார் என்பதனை, ‘பண்டை நினைவினால் குறையை நொந்து’ என்று குறிப்பிடுகிறார் சேக்கிழார்.

காஞ்சியில் அம்மை இறைவன் அளித்த இருநாழி நெல் கொண்டு அறம் வளர்த்தாள் எனத் தலபுராணம் கூறும்.

”அம்மை உலகம் யாவைக்கும் இருநாழி நெல் கொண்டு அறம் வளர்த்து உணவு அளிக்கும் போது நீர் ஏன் பிச்சை எடுக்கிறீர்?” என்று சுந்தரரும் தம்முடைய ஓணகாந்தன் தளி திருப்பதிகத்தில் “காரிரும் பொழில் கச்சிமூதூர் காமக் கோட்டம் உண்டாக நீர்போய், ஊரிடும் பிச்சை கொள்வதென்னே ஓணகாந்தன் தளியுளீரே” என்று நிந்தாஸ்துதியாகப் பாடியுள்ளார்.

மாறனாரின் மனைவியார் செயலும் அம்மையின் செயலும் தம்முள் ஒத்திருந்ததை உணர்ந்த சேக்கிழார் ‘ஏலவார் குழலாள் தன்னோடு’ என்று கோடிக் காட்டுகிறார்.

பெரியபுராணத்தில் அமங்கலமான சொற்களே கிடையாது.

முத்த நாதன் மெய்ப்பொருள் நாயனாரைக் கொல்லுமிடத்து, ‘தான் முன் நினைந்த அப்பரிசே செய்ய’ என்பார்.

அதிசூரன் ஏனாதிநாத நாயனாரோடு போரிட்டு வஞ்சனையால் அவரைக் கொன்றபோது, ’முன்நின்ற பாதகனும் தன்கருத்தே முற்றுவித்தான்’ என்பார்.

அப்பூதியடிகளின் மகன் மூத்த திருநாவுக்கரசு வாழையிலை அரியச் சென்றபோது அரவு தீண்டி உயிரிழக்கிறான். தம் வீட்டிற்கு எழுந்தருளிய அப்பரடிகளின் திருவமுதிற்குத் தடையாகுமே என்று கருதிய அப்பூதி தம்பதியினர் அவனை ஓர் பாயில் சுருட்டி மறைத்து வைத்து விடுகின்றனர். பின் அப்பரடிகள் திருவமுதுக்குத் தயாரானபோது மூத்த திருநாவுக்கரசு எங்கே எனக் கேட்க அவன் இறந்தான் என்று கூறாது,’ இப்போது இங்கு அவன் உதவான்’ என்றார் அப்பூதியடிகள் என்பார் சேக்கிழார்.

பின்பு அப்பரடிகளின் வற்புறுத்தலின் பேரில் அப்பூதியடிகள் தம் ‘மைந்தர்க்கு உற்றது பகர்ந்தார்’ என்பார்.

சேக்கிழார்க்கு சிக்கல் தந்த இடங்களும் உண்டு.

அடியார்களோடு சிவபிரான் பேசியதாக வரும் இடங்களில் எல்லாம் முன்னுணர்வோடு தான் வார்த்தைகளை அடுக்கியிருக்கிறார்.

தடுத்தாட்கொண்ட புராணத்தில் ஈசன் பேசியதாக சேக்கிழார் கூறுபவை அனைத்தும் இறைவனுக்குப் பொருந்தியதாகவே இருக்கக் காண்கிறோம்.

சுந்தரரின் கல்யாணத்தில் இறைவன் வயோதிகக் கோலம் கொண்டு தடுத்தாட்கொள்ள வருகின்றான். இருவரிடையே இருக்கும் வழக்கினை முடித்த பின்பு மணம் செய்து கொள்ளலாம் எனக் கூறி நாவலூரன் தம்மடிமை என்று கூறுகின்றான்.

இதைக் கேட்ட அனைவரும் அந்தணன் அந்தணனுக்கு அடிமையாவது உண்டோ என்று கூறிச் சிரித்தனர். சுந்தரர் “நன்றால் மறையோன் மொழி” என நக்கலாகச் சிரிக்கிறார்.

உடனே கிழவேதியருக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்து விடுகிறது. சுந்தரரைப் பார்த்து “ இக்காரியத்தை இன்று நீ சிரித்தது என் ஏடா” என்கிறார்.

வேதியரின் கோபத்தைக் கண்ட சுந்தரர் சிரிப்பை நிறுத்திவிடுகிறார்,

“மாசிலா மரபில் வந்த வள்ளல் வேதியனை நோக்கி,
நேசம்முன் கிடந்த சிந்தை நெகிழ்ச்சியால் சிரிப்பு நீங்கி”

என்கிறார் சேக்கிழார்.

பின்பு சுந்தரர் இறைவனை நோக்கி,

“ஆசில் அந்தணர்கள் வேறோர் அந்தணர்க்கு அடிமை ஆதல்
பேச இன்று உன்னைக் கேட்டோம் பித்தனோ மறையோய்”

எனக் கடிந்து கொள்கிறார்.

உடனே வேதியர் “பித்தனும் ஆகப் பின்னும் பேயனும் ஆக” என்கிறார்.

இந்த வார்த்தை அப்படியே இறைவனுக்குப் பொருந்துவதாக இருக்கிறது.

“என்னை யார் என்று உனக்குத் தெரியவில்லை.”

“நீ இன்று, எத்தனை சொன்னால் யாதும் மற்றவற்றால் நாணேன்
அத்தனைக்கு என்னை ஒன்றும் அறிந்திலை”

“பேச்சு தேவையில்லை. எனக்குப் பணி செய்யப் புறப்படு”

“ஆகில் நின்று, வித்தகம் பேச வேண்டாம் பணிசெய வேண்டும்”

என்கிறார் சேக்கிழார்.

இதுதான் சைவர்களுக்கு சேக்கிழார் தரும் ‘மெசேஜ்’. “பேச்சினால் ஆவதென் பேதைகாள்” என்பார் ஞான சம்பந்தர். இன்று நம்மிடம் பேச்சுத்தான் அதிகம். செயலில் ஒன்றும் இல்லை.

இங்கு இறைவன் கூறுவதெல்லாம் அவன் இயல்புக்குப் பொருத்தமாகவே உள்ளதைக் காணலாம்.

சுந்தரர் ஓலையைக் கிழித்த பிறகு வேதியர் முறையிடுகிறார். பக்கத்திலுள்ளவர்கள் இருவரையும் விலக்கி வேதியரின் ஊர் எது என்று கேட்க, “ எனக்கு பக்கத்து ஊர்தான், வெண்ணெய் நல்லூர். அது கிடக்கட்டும். இவன் ஓலையை கிழித்ததிலிருந்தே எனக்கு அடிமை என்பதை நிரூபித்து விட்டான், பார்த்தீர்களா..!” என்று பிடி விடாமல் வாதிட்டார்.

சுந்தரர் இவரின் விடாப்பிடியைக் கண்டு “பழைய மன்றாடி போலும் இவன்” என்கிறார்.

இறைவன் உண்மையிலேயே பழைய மன்றாடிதானே...?

சித்தவடமடத்தில் சுந்தரர் படுத்திருந்தபோது இறைவன் வழக்கம் போல் கிழவேதியராக வந்து சுந்தரரின் தலைமீது தன் திருவடி படும்படி படுத்துக் கொள்கிறான். சுந்தரர் வேறு பக்கம் படுத்தபோதும் இறைவன் விடவில்லை. சுந்தரர் அவரை நோக்கி,
” அருமறையோய் உன்னடி என் சென்னியில் வைத்தனை” என்கிறார்.

வேதியரான சிவபிரான் “ திசையறியா வகை செய்தது என்னுடைய மூப்புக் காண்” என்கிறார்.

மணிவாசகர் “பழையோன் காண்க” என்பார்.

திருஞானசம்பந்தர் திருவவதாரம் செய்ததைக் கூறும் போது, “தாவில் சராசரங்கள் எல்லாம் சிவம் பெருக்கும் பிள்ளையார் திருவவதாரம் செய்தார்” என்பார் சேக்கிழார்.

ஞான சம்பந்தர் இந்த உலகம் முழுதையும் சிவமாகவே கண்டவர். அப்பரடிகள் “எல்லாம் சிவன் என்ன நின்றாய் போற்றி”
என்பார்.

இந்த உலகம் உயிர் உள்ளவை, உயிரற்றவை என இரு கூறாக உள்ளது.

உயிரற்றவையில் ஆற்றல் எனும் சக்தி உள்ளது. அச்சக்தியை அவற்றிடமிருந்து பிரிக்க முடியாது. குணத்தை குணியிடமிருந்து பிரிக்க முடியுமா? அப்படிப் பிரித்தால் குணி அழிந்து விடும்.

இதைத்தான் இலிங்க வடிவம் உணர்த்துவதாக சித்தியார்,

சத்தியும் சிவமும் ஆய தன்மை இவ்வுலகம் எல்லாம்
ஒத்து ஒவ்வா ஆணும் பெண்ணும் உணர் குணகுணியும் ஆகி
வைத்தனன் அவளால் வந்த ஆக்கம் இவ்வாழ்க்கை எல்லாம்
இத்தையும் அறியார் பீட லிங்கத்தின் இயல்பும் ஓரார்

என்று தெளிவாக எடுத்துரைக்கின்றது.

ஆக, சராசரங்கள் எல்லாம் சிவவடிவம். சம்பந்தர் வாழ்வில் நடந்த ஆண்பனை பெண்பனையாதல், எலும்பு பெண்ணாதல், ஏடு ஆற்றில் எதிர் செல்லல், நெருப்பில் ஏடு வேகாதிருத்தல் இவற்றையும் சேக்கிழார் வாக்கையும் ஒப்பு நோக்கினால் உண்மை விளங்கும்.

சம்பந்தரின் வாழ்வியலை நன்கு உள்வாங்கியதால் தான் சேக்கிழாரால் “தாவில் சராசரங்கள் எல்லாம் சிவம் பெருக்கும் பிள்ளையார்” என்று கூற முடிந்தது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Translate