வெள்ளி, 13 ஆகஸ்ட், 2021

தில்லை எஸ்.கார்த்திகேய சிவம் மீதான தாக்குதல்கள் - ஒரு விவாதம்

தில்லை எஸ். கார்த்திகேய சிவாச்சாரியார், தமிழ் அர்ச்சனை குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டி தொடர்பாக, ஈ.வெ.ரா. ஆதரவாளர்கள் வரம்புகள் மீறி மீம்களை பேஸ்புக்கில் வெளியிட்டனர்.  இந்துக் கோயில்களில் நடப்பதைப் பற்றி அவர்களுக்கு என்ன கவலை? ஏன் சைவர்கள் அல்லது இந்துக்கள் யாரும் இதைக் கண்டிக்கவில்லை? இதுகுறித்த சிறிய ஆய்வே இந்தக் கட்டுரை. 

1.      தில்லையாரின் பேட்டி வெளியானது, ஈ.வெ.ரா. ஆதரவாளர்களுக்கு அல்வா சாப்பிட்டதுபோல்  ஆகி விட்டது. உடனடியாக அவர் ஆரிய வந்தேறி என்றும் தமிழை வெறுப்பவர் என்றும் மீம்களைத் தயாரித்துப் புயல் வேகத்தில் பரப்பி விட்டனர். பதிவுகளையும் இட்டனர். கொலை மிரட்டல்  ஒன்றுதான் பாக்கி; மற்றபடி எல்லா மிரட்டல்களும் விடுத்தாகி விட்டது

(இணைப்பு: https://www.youtube.com/watch?v=cZt_-_pMPQI )

தில்லை எஸ். கார்த்திகேய சிவம்

2.      இது அவர்களுக்குப் புதிதல்ல; பிராமண சமூகத்தையே அழித்தொழிக்க வேண்டும் என ஈ.வெ.ரா. வெளிப்படையாக தமிழ்ச் சமூகத்திற்கு அழைப்பு விடுத்தவர். எனவே அழித்தொழிப்பதில், அவர்களுக்கு இன்னமும் ஆசை இருப்பதில் ஆச்சரியமில்லை.

3.      இப்பொழுதே இப்படி என்றால், ஈ.வெ.ரா. உயிரோடு இருந்த காலங்களில் பல கிராமங்களில், அவரது ஆதரவாளர்கள் பிராமணர்களின் பூணுால், குடுமிகளை அறுத்தெறிந்ததாகக் கூறப்பட்ட சம்பவங்கள் எல்லாம் நிச்சயம் நடந்திருக்கும்; அவற்றில் மிகைப்படுத்தல் இருந்திருக்காது என்பதை உணர முடிகிறது

4.      தில்லையார் என்ன தொனியில் தனது கருத்தை சொல்ல வந்தார் என்பதை யாரும் கவனிக்கவுமில்லை; கவனிக்க விரும்பவுமில்லை

5.      மறுநாளே தில்லையார் தனது பக்கத்தில், தான் சொல்ல வந்த கருத்தென்ன, தனியார் தொலைக்காட்சியில் வெளிவந்ததென்ன என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார். முதல்நாள் பொங்கியவர்கள் மறுநாள் அந்த விளக்கம் குறித்து பேசத் தயாராக இல்லை; அவர்களின் நேர்மை அதற்கு இடங்கொடுக்கவில்லை என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது

(இணைப்பு: https://m.facebook.com/story.php?story_fbid=2873649556281930&id=100009107423631  )

6.      தி.க.வினரைப் பின்பற்றி சைவர்களில் சிலரும் தங்கள் தமிழ்ப் பற்றைக் காட்டிக் கொள்ள சில்லறைகளை சிதற விட்டார்கள்

7.      சைவ சமயத்தைச் சேர்ந்த ஒரு மத குருக்களுக்கு பேஸ்புக் போன்ற பொதுவெளியில் பகிரங்க மிரட்டல்கள் விடுக்கப்பட்டபோது, வைதீக சைவத்தைக் காக்கப் போவதாகக் கூறிக் கொள்ளும் எந்த சைவரும் பதிலளிக்கவில்லை. பாராமுகமாக இருந்து கொண்டனர்

8. தமிழகத்தில் ஒரு மாவட்டத்திற்கு குறைந்தது 5 திருவாசக முற்றோதல் குழுவினர், 5 உழவாரப் பணிக் குழுவினர் இருப்பார்கள். தற்போதுள்ள 38 மாவட்டங்களுக்கு 380 அமைப்புகளாவது குறைந்தபட்சம் இருக்க வேண்டும். 300 என்றே வைத்துக் கொள்ளலாம். அவற்றில் கணிசமான அமைப்புகளுக்கு பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் பக்கங்கள் இருக்கின்றன. ஆனால் அவையும் தில்லையாருக்கு வெளிப்படையாக விடுக்கப்பட்ட மிரட்டல்கள், கிண்டல்கள் குறித்து விளக்கமோ மறுப்போ கண்டனமோ விடுக்கவில்லை. இது மிகுந்த கவலையளிக்கக் கூடியது. இப்படி மற்ற மதங்களில் நடக்குமா என்பதை கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாது

9. இந்து தமிழர் கட்சியின் ராம. ரவிக்குமார் மட்டும் தில்லையார் மீதான தாக்குதல்களுக்குக் கண்டனம் தெரிவித்தார். மற்ற இந்து அமைப்புகளுக்கு இது ஒரு சம்பவமாகவே தெரியவில்லை. இவ்வளவுக்கும் ஆதிசைவர்கள் மிக மிகச் சிறுபான்மையினர் தான்.

(இணைப்பு: https://m.facebook.com/story.php?story_fbid=3001891573432636&id=100008354683191 )

 10.  தமிழகத்தில் கருத்து சுதந்திரம் என்பது பெயரளவுக்குத்தான் இருக்கிறது. கட்சியினர் ஒருவருக்கொருவர் அவதுாறாகப் பேசுவதும் அதை அவர்கள் சட்ட ரீதியாக எதிர்கொள்வதும், பல்வேறு நிபந்தனைகளின் அடிப்படையில், அந்தரங்க தொடர்புகள் ரீதியில், அவற்றுக்கிடையிலான லாப நட்டங்கள் அடிப்படையில் நிகழ்வது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது

11.  ஆனால், இந்து மதத்தைச் சேர்ந்த நபர், இந்து சமய அறநிலையத் துறை சட்டத்தை மீறி, அரசே தனது மதம் தொடர்பான சடங்குகளில் நேரடியாகத் தலையிட்டு இதைச் செய், இதைச் செய்யாதே என்று கூறுவது வேலை தொடர்பான பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கி அதன் மூலம் மன உளைச்சலைத் தருகிறது எனத் தனது வேதனையை வெளிப்படுத்தினால், வசவுகளும் மிரட்டல்களும் குவிகின்றன. இதில் எங்கே கருத்து சுதந்திரத்தைத் தேடுவது?


இந்த விவகாரத்தை நாம் விரிவாக ஆய்வு செய்ய வேண்டியுள்ளது.


முதலில் ஆதிசைவ சமூகத்தைப் பற்றி…

இனியாவது ஆதிசைவ சிவாச்சாரியார்கள் சமூகம், நல்ல தலைமையை அல்லது தலைமைப் பண்புள்ளவர்களைக் கொண்ட குழுவை ஏற்படுத்தி அதன் கீழ் ஒன்று திரண்டு தங்கள் உரிமைகளுக்காக சட்டப்பூர்வமான வழிகளை நாட வேண்டும். உங்களுக்கு ஆதரவாக இனி யாரும் வரப்போவதில்லை. முக்கண் எம்பிரான் அருள் மட்டுமே துணை நிற்கும்.

கடந்த நுாற்றாண்டில் சைவ சமயத்தை, சைவர்களில் ஒரு சிலர் சிதைக்கத் தொடங்கிய போதே, ஆதிசைவர்கள் எச்சரிக்கை அடையவில்லை. அதன் விளைவாக, பொதுமக்கள் மத்தியில் கடந்த 100 ஆண்டுகளாக, பிராமணர்கள் வேறு, ஆதிசைவர்கள் வேறு என்ற வேறுபாடு விளக்கப்படவில்லை; பதிவு செய்யப்படவில்லை. அதன் தொடர்ச்சியாகவே, திராவிடர் கழகத்தினர் மேற்கொண்ட பொய்ப் பிரசாரத்தால், பிராமணர்களைப் போலவே, ஆதிசைவர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். அந்த பாதிப்பு இன்று வரை தொடர்கிறது.

ஆனால் அப்போதும் மற்ற சமூகத்தினரைப் பார்த்து அமைப்பாக ஒருங்கிணைய வேண்டியதைப் பற்றி அவர்கள் சிந்தித்ததாகத் தெரியவில்லை. அதையும் தாண்டி, சிலர் சிந்தனையில் அந்த எண்ணம் உதித்து முதலில் பத்திரிகைகள் வழியாக ஒருங்கிணைக்கலாம் என முயன்றனர்.

பேரூர் கே.பி. சுப்பிரமணிய சிவாச்சாரியார், சிவாகம வித்யா என்ற பத்திரிகையையும் சங்கரன்கோயிலில், என்.சுப்பிரமணிய சிவாச்சாரியார், சிவஞான பேரிகை என்ற பத்திரிகையையும், புதுச்சேரி பிரெஞ்சு இந்திய ஆய்வு நிறுவனத்தில்  ஆகம ஓலைச் சுவடிகளை சேகரித்து ஆய்வு செய்து வந்த சம்பந்த குருக்கள், சைவ ஆலயம் என்ற பெயரிலான பத்திரிகையையும் தொடங்கினர். ஆனால் வழக்கம்போல், அவற்றிற்கும் ஆதிசைவர்களும், சைவ உலகமும் சில ஆண்டுகள் மட்டுமே ஆதரவளித்தனர். அத்தோடு அவை முடங்கி விட்டன.

சிவாகம வித்யா இதழ் முகப்பு


சிவஞான பேரிகை - மாதிரி இதழ்

இன்றைய நிலையில், சமூக வலைதளங்கள் மூலம் உலகமே சுருங்கி விட்ட நிலையிலும், ஆதிசைவ சமூகத்தை ஒருங்கிணைப்பதில் நிறைய சவால்களை அச்சமூகத்தைச் சேர்ந்த இளந்தலைமுறையினர் எதிர்கொள்கின்றனர்.

கடந்த காலத்தில் நடந்த பிரிவினை வாதங்களின் விளைவே சமகாலத்தில் தாம் எதிர்கொள்ளும் பிரச்னைகள் என்பதை உணர்ந்து கொள்ள இயலாத அளவிற்கு, ஆதிசைவ சமூகம் ஆழ்ந்த துாக்கத்தில் இருக்கிறது.

தில்லையாருக்கு பேஸ்புக்கில் விடுக்கப்பட்ட மிரட்டல்களைப் பார்க்கும்போது, இனி ஆதிசைவ சமூகத்திற்கு சைவர்களோ, சைவத் திருமடங்களோ முழுமையான பாதுகாப்பளிக்க மாட்டார்கள் என்பது துலக்கமாகத்  தெரிகிறது.  

அதனால் இனியாவது அமைப்பாக திரண்டு, தங்கள் உரிமைகளைத் தாங்களே காத்துக் கொள்வதற்கு ஆதிசைவ சமூகம் முழுமூச்சாகத் தயாராக வேண்டும்.

இனி சைவ சமயத்தினரைப் பற்றி..


20ம் நுாற்றாண்டின் தொடக்கத்தில், திராவிடக் கருத்தியலுக்கு ஆதரவாக, மறைமலையடிகள், கா.சு.பிள்ளை போன்ற தமிழ்ச் சைவர்கள் சிலர், பாரத தேசம் எங்கணும் பரந்து விரிந்துள்ள சைவ சமயத்தை, மொழியின் அடிப்படையில் குறுக்கி, சைவ சித்தாந்தமே தமிழனின் கண்டுபிடிப்பு, வடமொழி வேதாகமங்கள் தமிழில் இருந்தன; கடல்கோளுக்கு முன்பாக அவை வடமொழியில் எழுதப்பட்டன; பின்னர் கடல்கோளில் அடித்துச் செல்லப்பட்டன என்பன போன்ற ஆதாரமில்லாத பொய்களை அள்ளி விட்டனர்.

அந்தப் பொய்களை நம்பி அவர்கள் பின்னால் சென்ற சைவ வேளாளர்கள், வேத ஆகமங்களில் தங்கள் நம்பிக்கையை இழந்தனர்; சைவ சமயக் கிரியைகளில் தங்கள் பிடிப்பை இழந்தனர். சடங்குகள் உயிருக்கு உறுதி செய்யா; ஞானமே தேவை என்ற போலிப் பிரசாரத்திற்கு இரையாகினர்.

போலிச் சைவர்களின் அடுத்த இலக்கு, சைவ சமய குருமார்கள். ஆதிசைவர்கள், வேளாளர்களில் ஒரு பிரிவினரே என கூசாமல்  புளுகினர். ஆதாரங்கள் தராமல், தாங்கள் கூறுவதே வேதம் என்ற ரீதியில் இந்தப் பொய்கள் அடுக்கடுக்காகப் பரப்பப்பட்டன. செந்தமிழ்ச் செல்வி, ஞானசாகரம் போன்ற பத்திரிகைகள் மூலம் இந்தப் புளுகுகள்  சைவர்கள் மத்தியில் கொண்டு செல்லப்பட்டன.

வேதாகமங்களில் நம்பிக்கையிழந்த சைவ வேளாளர்கள், அவற்றில் இருந்த தங்கள் பயிற்சிகளை 1940ம் ஆண்டுகளில் தொடங்கி முற்றிலுமாகக் கைவிட்டனர். அதனால், எளிதில் திராவிடர் கழகத்தின் பொய்ப் பிரசாரங்களுக்கு இரையானார்கள். அதன் தொடர்ச்சியாக, அதுவரை ஆதிசைவ சமூகத்தைப் புரந்து வந்த அறச் செயலையும் கைவிட்டனர்.

வேதாகமங்களைப் பற்றியும் சைவ சமயத்தைப் பற்றியும் அதிகம் அறிந்திராத, சைவ சித்தாந்த சாத்திரங்களை படித்திராத கொங்கு நாட்டு மக்களை, இந்தப் போலிச் சைவர்களின் பிரிவினை வாதம் தாக்கவில்லை. அதனால், சமீப காலம் வரை தங்கள் குல குருக்களான ஆதிசைவ சிவாச்சாரியார்களை அவர்கள் போற்றி வந்தனர். 1980கள் முதல் அங்கு அதற்கும் சிக்கல் வந்தது.

சைவத் திருமடங்களின் நிலைமையோ மிகப் பரிதாபம். திராவிடக் கருத்தியலால் நாட்டில் ஏற்பட்ட மாற்றங்களை அறிந்து கொள்ள முடியாமல், பழைய பழக்க வழக்கங்களில் மூழ்கிக் கிடந்தனர்; கிடக்கின்றனர். சைவ வேளாளர் சமூகங்களும், தங்கள் குரு மடங்களிடம் இருந்து விலகி விட்டன; திருமடங்களும் சமூகங்களிடம் இருந்து விலகி விட்டன. இரண்டும் இரண்டைப் பற்றியும் கவலைப்படவில்லை.

ஆக, ஒரு மதத்திற்கு அடிப்படையான புனித நுால்களின் பேரில் சந்தேகம், அந்த மதத்தின் குருக்கள் சமூகத்தைப் புறக்கணிப்பதன் மூலம் அவர்களை அழித்தொழித்தல் ஆகியவை, சைவ சமயத்தில் செம்மையாக நடந்தேறின.

அதன் பின்னர் மிச்சமிருப்பது, சைவ சமயத்தின் ஆதாரக்களங்களான திருக்கோயில்கள். போலிச் சைவர்களின் தொடர்ப் பொய்ப் பிரசாரத்தால்,  பெருங் குழப்பத்தில் ஆழ்ந்த சைவ சமூகம், அந்தக் கோயில்கள் கொஞ்சம் கொஞ்சமாக அரசு வசம்  சிக்கியதைக் கூட எதிர்த்துக் கேள்வி கேட்கத் திராணியற்ற சமூகமாக மாறிவிட்டிருந்தது.

கோயில்கள் அரசு வசம் முழுமையாக சென்றது, காங்கிரசின் கடைசி காலத்தில். அதன் தொடர்ச்சியாக வந்த திமுக அரசு, கோயில்களைத் தனது கொள்கைகளைப் பரப்பும் கூடாரமாக மாற்ற விரும்பியது.

 1971ம்  ஆண்டு, இந்து மத சான்றோர்களைக் கலந்து ஆலோசிக்காமல், திடீரென சட்டசபையில் அப்போதைய இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் எம்.கண்ணப்பன், தமிழ் அர்ச்சனையை அறிவித்ததாகட்டும், 1974ம் ஆண்டு, தமிழ் அர்ச்சனை மட்டுமே நடத்தப்படும் என தன்னிச்சையாக உத்தரவிட்டதாகட்டும், 1998ம் ஆண்டு, தமிழ் அர்ச்சனையை எதிர்த்தால் மரண அடி கொடுக்கப்படும் என அப்போதைய இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் தமிழ்க்குடிமகன் வெளிப்படையான மிரட்டல் விடுத்ததாகட்டும், இவையெல்லாம் திமுக அரசின் கோயில்கள் தொடர்பான அணுகுமுறை எந்த தளத்தில் இருந்தது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுவனவாக இருந்தன.


இதற்கு ஏதுவாக, குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனத்தில் அப்போது இருந்த அருணாசல தேசிகர் என்ற குன்றக்குடி அடிகளாரைத் தனது முகமாகப் பயன்படுத்தி திமுக கொண்டது.

அவரும், தாம் வடமொழிக்கு எதிரானவர் அல்லர் என்றும், ஆனால் தமிழில் வழிபட தடை செய்யக் கூடாது என்றும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

1960களில் உருப்படியாகப் பணியாற்றிய இந்து சமய அறநிலையத் துறை, 1970, 80களில், கட்சிக் காரர்களின் கூடாரமாக மாறியது. அறங்காவலர்கள் என்ற பெயரில், கட்சியினரைத் திருப்திப்படுத்துவதற்காக கோயில்களில் அவர்களுக்குப் பொறுப்புகள் வழங்கப்பட்டன. திமுக தொடங்கி வைத்த இந்த அவலத்தை அதிமுக செம்மையாக அரங்கேற்றியது.

பக்தர்கள் கோயில்களில் தங்கள் உரிமைகளை அனுபவிக்க கூடப் பல தடைகள் உருவாக்கப்பட்டன. அதன் விளைவாக, பொதுமக்கள் மத்தியில், நமது கோயில் அல்ல; அரசுக் கோயில் என்ற எண்ணம்  பசுமரத்தாணியாக ஆழப் பதிய வைக்கப்பட்டது.

அதனால் கோயில்களின் சொத்துக்கள், கட்சியினருக்குத் தடையின்றி தாரை வார்க்கப்பட்டன. சென்னையில் பல கோயில்களின் சொத்துக்கள் விழுங்கப்பட்டது அப்போதுதான். அரசே தன் பங்கிற்கு பல கோயில்களின் நிலங்களில் அரசு அலுவலகங்களை எவ்வித எதிர்ப்புமின்றி உருவாக்கியது. பல நிலங்கள், அந்நிய மதத்தினர்க்கும் சத்தமின்றி கொடுக்கப்பட்டன. இப்படிப் பல கோயில்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழியத் தொடங்கின. இந்த அழிவு, 2000ம் ஆண்டு வரை நீடித்தது எனலாம்.

இப்படி சொத்துக்களை இழந்து, ஒரு வேளை பூஜைக்கு கூட வழியின்றி அழிந்து போன திருக்கோயில்களில் கூட, ஆதிசைவ சிவாச்சாரியார்கள் எவ்வித பிரதிபலனுமின்றி வழிபாடு ஆற்றி வந்தனர் என்பதை சைவர்கள் உணர்ந்து கொள்ளவே இல்லை; ஆதிசைவர்களின் தியாகப் பணி அவர்களின் உள்ளத்தைத்  தைக்கவே இல்லை என்பதுதான் இந்த அவலத்தின் உச்சகட்டம்.

இப்படி சைவ சமயத்தின் புனித நுால்கள், மத குருக்கள், திருக்கோயில்கள் என, ஆயிரம் ஆண்டுகளாக உருவாக்கி வைக்கப்பட்டிருந்த உறுதியான கட்டமைப்பு, ஒவ்வொன்றாக குறிவைத்துத் தாக்கப்பட்டு, 1940கள் தொடங்கி, ஐம்பதே ஆண்டுகளில் முற்றிலும் சிதைக்கப்பட்டது.

இதற்குள் சைவ சமூகத்தில், வைதீக சைவத்தை ஏற்றுப் போற்றுவோர் எண்ணிக்கையில் குறைந்தும், தங்கள் உரிமைக் குரலைக் கூட உரத்துச் சொல்ல முடியாத அளவிற்கு வலுக் குன்றியும், அமைப்பாக ஒருங்கிணைய முடியாமல் செயலிழந்தும் ஒடுங்கி விட்டனர்.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னான சமூக மாற்றங்களையும், திராவிடக் கருத்தியலால் ஏற்பட்ட சமூக பாதிப்புகளையும் உள்வாங்கிப் புரிந்து கொள்ள முடியாத அவர்களும், இந்த மாற்றங்களுக்கு ஒரு வகையில் தாங்களும் ஒரு காரணம் என்பதை உணராமல், தமிழ்ச் சைவர்களை ஏசுவதையே 1940ம் ஆண்டு முதல் தொழிலாகக் கொண்டு வருகின்றனர்.

அவர்களில் வித்தியாசமாக சிந்தித்தவர்தான், சித்தாந்த பண்டித பூஷணம், திருநெல்வேலிப் பேட்டை ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளை என்ற நுண்ணுர்வு மிக்க சைவப் பேரறிஞர். இவர், 1930கள் தொடங்கி, சைவ சமயம்  எதிர்கொண்ட சமகால சவால்கள் குறித்த தனது கவலைகளை கட்டுரைகளாக பல்வேறு மாத இதழ்களில் வெளியிட்டு வந்தார். எக்காரணம் கொண்டும், சைவர்கள் தங்களின் புனித நுால்களான வேதாகமங்கள், ஆதாரக் களங்களான திருக்கோயில்கள் ஆகியவற்றை விட்டுக் கொடுத்து விடக் கூடாது என்பதே அவரது வலியுறுத்தலாக இருந்து வந்தது. சிவாலயங்களை விட்டுக் கொடுத்து விட்டால் சைவர்கள் விரைவில் அழி்த்தொழிக்கப்படுவார்கள் என்று எச்சரிக்கை விடுத்தார். தமிழ்ச் சைவர்களின் நோக்கம், சைவத்தைக் காப்பதன்று என்றும் மொழியைக் காப்பது மட்டுமே என்றும் இனம் காட்டினார். சைவர்கள் அல்லாதோரை சிவாலய சீர்திருத்தங்களில் அனுமதிக்கத் தொடங்கினால் எதிர்காலத்தில் அது சிவாலயங்களையே உருமாற்றுவதில் முடியும் என எச்சரித்தார். அவரது கட்டுரைகளில் பெரும்பாலன, சிவாலயங்களையும் அதன் கிரியைகளையும் காப்பதைப் பற்றியே பேசின. தமிழ்ச் சைவர்களால், சைவ சமயத்திற்கு எதிர்காலத்தில் ஏற்படும் ஆபத்தை முன்னுணர்ந்து கூறிய ஒரே சைவ அறிஞர் அவர் மட்டுமே. அவரது கவலைகள் இன்று நிஜமாகி விட்டன.

ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளை

தமிழ்ச் சைவர்களின் நிலைமை வேறாக இருந்தது. மறைமலையடிகளிடம் தீட்சை பெற்ற ஆடலரசு, சைவ சித்தாந்த நுாற்பதிப்புக் கழகத்தின் அறிஞர் ப.ராமநாத பிள்ளை போன்ற சைவப் பெரியார்கள், திருமுறைகளை வாழ்வியல் சடங்குகளுக்குப் பயன்படுத்துவதில் தீவிர கவனம் செலுத்தலாயினர். அவர்களும் அவர்களிடம் பயின்ற மாணாக்கர்களும் தமிழ் வழிபாட்டு முறைகளுக்கான சிறு சிறு நுால்களைப் படைத்தளித்து அச்சிட்டு பரப்பி வந்தனர். அதன் விளைவாக, தமிழகம் முழுவதும், தமிழ்ச் சைவத்திற்கு ஆதரவு ஏற்பட்டது. மொழி என்பது மனிதனின் உணர்வோடு ஒன்றியது ஆதலின் இந்த ஆதரவு எளிதில் ஏற்பட்டது என்பது சொல்லாமல் விளங்கும்.

இப்படி சைவ உலகம் இரண்டு பட்டுக் கிடக்க, முத்து சு. மாணிக்கவாசக முதலியார் (பின்னர் தொண்டை மண்டல ஆதீனகர்த்தர்), அருணை வடிவேலு முதலியார், க.வச்சிரவேல் முதலியார், சைவப் பேரறிஞர் திருச்சிற்றம்பலம் மு. அருணாசலம், அ.ச.ஞானசம்பந்தன் உள்ளிட்ட சைவ அறிஞர்கள், பாம்புக்கு வாலையும், மீனுக்குத் தலையையும் காட்டும் விலாங்கு மீனைப் போல வைதீக சைவ மேடைகளில் வைதீகர்கள் போலவும், தமிழ்ச் சைவ  மேடைகளில் அவர்களைப் போலவும் காட்டிக் கொள்ளத் தொடங்கினர்.

இன்னொரு பக்கம், ந.ரா. முருகவேள், ஆதி முருகவேள், ந.ரா. சென்னியப்பனார் போன்ற தமிழ்ச் சைவ அறிஞர்கள், தமிழ்ச் சைவத்தை இதழ்கள், திருமடங்கள், அமைப்புகள் மூலம் பரப்பத் தொடங்கினர்.

ஆதி முருகவேள் என்ற சைவப் பெரியவர், வைதீக சைவ மரபைப் பின்பற்றக் கூடிய திருவாவடுதுறை ஆதீனத்தின் 23 வது ஆதீனகர்த்தரை, ஸ்ரீலஸ்ரீ என்ற பட்டத்தை, சீர் வளர் சீர் என மாற்ற வைத்தார் என்றால் அவரது செல்வாக்கை என்னென்பது? 23வது ஆதீனகர்த்தர் கடைசி வரை வைதீக சைவ மரபா, தமிழ்ச் சைவ மரபா  எதைக் கடைப்பிடிப்பது என குழப்பத்திலேயே இருந்தார் என்பார்கள். ஆனால் அத்தகைய நிலைமை தருமையாதீனத்தில் ஏற்படவில்லை. 26வது ஆதீனகர்த்தர், வைதீக சைவமே சைவம் என இறுதி வரை உறுதியாக எழுதியும் பேசியும் வந்தார்.

இது ஒருபுறம் இருக்க, 1980கள் தொடங்கி, தமிழகத்தில் திருவாசக முற்றோதல் என்பது தனிநபர்களிடம் தொடங்கி, பேரியக்கமாக விரியத் தொடங்கியது. அதன் விளைவாக சைவம், 20ம் நுாற்றாண்டில் இரண்டாம் முறையாகப் புத்தெழுச்சியை அடைந்தது. அதையொட்டியே உழவாரப் பணிக் குழுக்களும் உருவாகி கோயில்களை மீட்கும் பெரும் அறச் செயல்களில் ஈடுபடத் தொடங்கின.

அதே காலகட்டத்தில்தான், பேரூர் ஆதீனகர்த்தர், சிரவை கெளமார ஆதீனகர்த்தர் ஆகியோர் கொங்கு மண்டலத்தில், தமிழ்ச் சைவ நெறியை வேகமாகப் பரப்பத் தொடங்கினர். அதன் விளைவாக, இன்று தமிழ்ச் சைவ நெறி அதிகளவில் கடைப்பிடிக்கப்படும் நாடாக கொங்கு மண்டலம் மாறி விட்டது.

இப்படி வைதீக சைவம் என்ற ஒரே குடைக்குள் இருந்த சைவ சமயத்தை, தமிழ்ச் சைவம், வைதீக சைவம், திருமுறைச் சைவம், நவீன சைவம் என பல சைவப் பிரிவுகளாகக் கூறுபோட்டு விட்டனர். அதேநேரம் , திருமடங்களின் சில செயல்பாடுகள், சைவ அமைப்புகளின் பணிகளால் வேளாளர்கள் என்ற சாதியைத் தாண்டி, சைவம் மற்ற சாதியினரிடமும் அதிகளவில் பரவத் தொடங்கியது என்பதை நாம் மறுக்க முடியாது.

இப்படி சைவ சமயத்தைக் கூறுபோட்டதன் விளைவாக இன்று சிவாலயங்களுக்கு அரசு மற்றும் அந்நியர்களிடம் இருந்து நெருக்கடி வந்தால், அங்கு பணியாற்றும் அர்ச்சகர்களுக்குப் பணி ரீதியாக நெருக்கடி வந்தால், தட்டிக் கேட்கவும் ஆதரவு தெரிவிக்கவும் யாருமில்லை. ஆயிரத்திற்கும் மேற்பட்ட சைவ அமைப்புகள் இருந்தும் யாரும் தட்டிக் கேட்கத் துணிவதுமில்லை.  

இந்த அவலம் வந்து விடும் என்பது தெரிந்தோ தெரியாமலோ அன்றே சிந்தித்த  சைவர் சிலர் இணைந்து, 1905ல் தொடங்கியதுதான் சென்னை சைவ சித்தாந்த மகா சமாஜம். வடமாநிலங்களில் உள்ள அமைப்புகளுடன் தொடர்பு கொள்வதற்கு ஏதுவாக சமாஜம் என்ற பெயர் வைக்கப்பட்டது.

அப்போது தமிழகத்தில் ஏற்கனவே இருந்த பல சைவ அமைப்புகளை சமாஜத்தின் கீழ் கொண்டு வர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அனைத்து சைவ அமைப்புகளும் சமாஜ நிர்வாகத்தைக் கடிதம் மூலம் தொடர்பு கொண்டு தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது. எனினும் அந்த நடவடிக்கை தோல்வியைத் தழுவியது.

மேலும் மறைமலையடிகளின் ஆதரவாளர்கள், சமாஜத்தில், தமிழ், வடமொழி என பிரிவினையை உருவாக்கியதால், பெரும் குழப்பமே மிஞ்சியது. இறுதியில், சமாஜத்தின் அதிகாரபூர்வ பத்திரிகையான சித்தாந்தம் இதழ், தமிழ்ச் சைவ சார்புடையதாக மாற்றப்பட்டது. 1980களில், சமாஜம் என்ற பெயர் பெருமன்றம் என மாற்றப்பட்டதுடன் அந்த அமைப்பின் செல்வாக்கு முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

சைவ அமைப்புகளை ஒரு குடையின் கீழ் கொண்டு வரும் முயற்சி ஆரம்பத்திலேயே முடிந்து விட்ட நிலையில் அதுகுறித்துப் பின்னர் எந்த சைவப் பெரியோரும் சிந்தித்ததாகத் தெரியவில்லை.

1940களில், சிவராஜ்யம் என்ற பெயரில், ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளை எழுதிய ஒரு நுாலில், சைவ அமைப்புகளை ஒருங்கிணைப்பதன் அவசியம் குறித்து விரிவாகப் பேசியுள்ளார். சைவ அமைப்புகள் மட்டுமின்றி சைவ ஆதீனங்களும் ஓரமைப்பாகத் திரண்டு செயலாற்ற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சைவ அமைப்புகள் ஒரே அமைப்பாகத் திரண்டு, அகில பாரத வைதீக சைவ சம்மேளனம் என்ற பெயரில் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். எனினும் அவரது கனவும் இதுவரை சாத்தியப்படவில்லை.

இன்றைய நிலையில், சைவ சமயத்திற்கு வெளியில் இருந்து பல்வேறு அச்சுறுத்தல்கள், நெருக்கடிகள் தொடர்ந்து உருவாகிக் கொண்டே இருப்பதால், சைவ அமைப்புகள் – அவை வைதீக சைவ சார்பு, தமிழ்ச் சார்பு, சித்தர் சார்பு  என எத்தனை சார்பு அமைப்புகளாக இருந்தாலும் சரி – முதலில் தமிழக அளவில் ஒன்று திரண்டு மத்திய அமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும்.

இந்த மத்திய அமைப்பின் பிரதிநிதிகள் தான் அரசிடம் தங்கள் கோரிக்கைகளை எடுத்துக் கூற வேண்டும். கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டால் மாநிலம் தழுவிய போராட்டங்கள் மக்களை தங்கள் பக்கம் ஈர்க்கும் அளவுக்கு நடக்க வேண்டும். இன்னொரு பக்கம் சட்டரீதியாகத் தங்களைத் தற்காத்துக் கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க இந்த ஒருங்கிணைப்பு பெரிய அளவில் உதவும் என்பது சொல்லத் தெரிய வேண்டியதில்லை.

அமைப்பாகத் திரள்வதைத் தவிர, இனி சைவ சமயத்தைக் காப்பதற்கு எந்த வழியும் இருப்பது போல் தெரியவில்லை. சைவர்கள் தங்களுக்குள் நிலவும் கருத்து வேறுபாடுகளை மறந்து, சிவாலயங்களையும், ஆதிசைவர்களையும் காக்கும் நடவடிக்கைகளில் உடனடியாக இறங்க வேண்டும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Translate