செவ்வாய், 25 பிப்ரவரி, 2020

சிவாலயங்களும் சைவசமயமும்


- சித்தாந்த  பண்டித  பூஷணம்  ஆ.ஈசுரமூர்த்திப்  பிள்ளை,
திருநெல்வேலி  பேட்டை

 சிவாலயங்களைத்  தத்தமக்குச்  சொந்தமாக்க  விரும்பும்  எவரும்  "ஆலயங்களெல்லாம்  ஒரு மொழியின்   நிலயமல்லவே; ஒரு  சாதியின்  நிலயமல்லவே, ஒரு  சமயத்தின் நிலயமல்லவா?அச்சமயத்தை  நாம்  தழுவுகின்றோமா? அங்ஙனமாயினன்றோ  ஆலயங்களில்   நமக்கு   உரிமை யெய்துதல்   கூடும்?"   என்று இன்னோரன்னவற்றை யெல்லாம் நெஞ்சறியத் தமக்குள் விவகரித்துப் பார்த்தல் வேண்டும்.


அங்ஙனமின்றி ஆலயங்கள் தமிழர்க்கே யுரியனவென்றும்,  வடமொழியாளர்க்கே  யுரியனவென்றும்  (வடமொழி  இந்தியர்க்கெல்லாம்  பொதுமொழி.  அஃது  ஒரு  வகுப்பினர்  மொழியன்று. எனினும்  ஒரு சிலர் அது தமக்குரிய மொழியென்று  சொல்லவும், மற்றும் ஒரு சிலர் அஃது உண்மையென்று மயங்கலும் உண்மையின், இவ்வாறு கூறப்பட்டது) பிராமணர்க்கேயுரியன
வென்றும், திராவிடர்க்கே  யுரியனவென்றும் கூறி ஒரு சாதியார்   அல்லது  ஒரு மொழியார் வழக்கிடுதல் சிறிதும்  முறையன்று.


சாதிப்பெயர் மொழிப் பெயர்களெல்லாம் ஆலயங்களுக்கு   உண்மையில் உரியரல்லாதாரினும் போய்ப் பற்றி அவருள் நாத்திகர் முதற் பலசமயத்தாரையும் அகப்படுத்தி நிற்றலான் வரம்புட்படாத வார்த்தைகளாகும். ஆதலின் அவ்வார்த்தைகளைப் போர்த்துக் கொண்டு ஆலயங்களைச் சுவீகரிக்க எண்ணுவது தமிழர் முதலிய யாவர்க்குந் தகாது. இந்துமதம்
என்னும் பெயரும்  சைவ சமயமல்லாத பிறசமயங்களையும்  போய்ப் பற்றி முன்னையவை போல வரம்புட்படாததேயாகும்.  ஆகையால் இந்து மதப் போர்வையும் சிவாலயவுரிமையை  உள்ளபடி தருதலில்லை.

பின்னை, சிவாலயங்கள் யாருக்குத் தான் உரியனவோவெனின், அவை ஒரு சமயச் செல்வமாகலின் அச்சமயிகட்கே  உரியன.  அச்சமயிகளே வைதிக சைவர். அவருக்கே  ஆகமியர்
என்றொரு பெயரும் உண்டு. வடமொழிக்கணுள்ள இருக்காதி நான்கு வேதங்களையும் காமிகாதி இருபத்தெட்டுச் சிவாகமங்களையும் தமிழின்கணுள்ள பன்னிரு திருமுறைகளையும் பதினான்கு சித்தாந்த சாத்திரங்களையும், சிவஞான  பாஷ்யத்தையும் பரமப் பிரமாணமெனவே ஆன்றோராசாரம் பற்றி விசுவசித்தொழுகும் நன்மக்களே அவ்வைதிக சைவர். இவ்வரம்பிற் கலங்காது உறைத்து நிற்கும் எவரும் வைதிக சைவரென  அழைக்கப்பட்டு ஆலயங்களுக்கு உரிமையெய்துவர்.

இவ்விசுவாசத்தை யிகந்து திரிவோர் எவரேனுமாக அவர்க்கும் ஆலயங்கட்கும் ஒட்டு எட்டுணையுமில்லை. சமய நிலயம் சமயத்துக்குத் தானே யுரியது; சாதிக்கேது?  மொழிக்கேது? ஆகையால் சிவாலயங்களைச் சுவீகரிப்பதற்கு முன்
சைவசமயத்தைச் சுவீகரித்து அதன் வரம்பில் மேற்கூறியாங்கு  நின்று கொள்வதே நியாயமாம்.

நமது நாட்டுச் சிவாலயங்கள் சிவாகமத்தின் வழி  நிருமிக்கப்பட்டவை. அங்குப் பூசை விழா முதலிய அனைத்தையும்    அவ்வாகம விதி வழாது நடைபெறுத்தும் அதிகாரம் முற்கூறியபடி    ஆகமநூலைப் பதிவாக்கென விசுவசித்தொழுகும்    சைவ சமயிகளுக்குத் தான் உண்டு. அவரும் அவைகளை ஆகம விதியின் வழி நடைபெறுத்த மட்டும் அதிகாரம் பெற்றுள்ளார். ஆகம நூலின் வைத்த முறை ஆலயங்களை நடாத்துதற்கே முற்காலத்துச் சைவப் பெரியார் அவைகளின் வசத்தில் அளவிறந்த பொருட்செல்வத்தை வைத்துப் போயினார்.

ஆகையால் தமதறியாமையானும் பிறர் தூண்டுதலாலும் உந்தப்பட்டு ஆகம விதிகளை எதிர்த்துப் பழையன கழிதல்  புதியன புகுதல் முதலிய எவ்வித மாறுதல்களையும் ஆலயங்களிற்
கொண்டு வரச்  சைவர்க்குத் தானும் அதிகாரம் இல்லை.

புதுமைகள் புத்திக்குப் பொருந்துவனபோலத் தோன்றினும் ஆகம விரோதமாயின் ஆலயங்களின் நுழைதல் கூடா. மாமூல் மாமூல்  என்று வரும் வழக்கங்கள் ஆகம விதிக்கு அவிரோதமாயிருந்தால் மட்டும் அங்கீகரிக்கப்படும். விரோதமாயின் அவைகளை
யொழித்தன்றி உண்ணுதல் உறங்குதல் முதலிய எவையும்  ஆகமியர்க்கடா. விதிகளும் அதிகாரிகளும் இல்லாத புறம்போக்கு நிலயங்களிற்றான் இட்டமும் மாமூலும்  நட்டமாடலாம்.
ஆலயங்களுக்கு விதிநூல் ஆகமம்;  அதிகாரி ஆகமியர்.

சிவாலயங்களின் வசத்திலுள்ள பொருட் செல்வத்திற் பெரும்பகுதி  முற்காலத்துச் சைவப் பெரியாரது  உடைமையே. பிறசமயத்தவரும்  பொருள் விட்டிருப்பதாகச் சில பல சரித்திரங்கள் காணப்படுகின்றன. அவை யுண்மையாயின் அவர் கொடுத்த  பொருளெல்லாம் மிகச் சிறு பகுதியே. அப்பிற சமயத்தாரும் தாம்  செய்த பொருளுபகாரமே காரணமாகச் சிவாலயங்கள் தமது இட்டப்படி அல்லது தமது சமயக்கோளின்படி நடைபெறுதல் வேண்டுமென்று விரும்பியுமிருப்பாரா? ஒருக்காலும் மாட்டார். தற்கால ஆங்கிலேய அரசினரே இதற்குச் சான்று. ஒருக்கால் விரும்பியிருப்பாரேயாமாயின் அக்காலத்துச்  சைவப் பெருமக்கள் அப்பொருளுபகாரத்தை ஏற்றிருக்கவே மாட்டார்கள்.

ஆகையால் பொருளுபகரித்தோர் எத்தகையாராயினும் அவரெல்லாம் சிவாலயங்கள் சைவ சமய விதிநூலாகிய சிவாகம விதியின் வழி மிக்க சிறப்பாக நடைபெறுதல் வேண்டுமென்னும் நல்லெண்ணமுடையவரே. அந்நன்னோக்கத்தை மறந்தோ பிறிது காரணத்தாலோ  "சிவாலயங்களுக்குத் தமிழர் பொருளுபகரித்தார்;  வடமொழியார் பொருளுபகரித்தார்" என்று பொதுப்படக்  கூறிக்கொண்டு சைவ சமயிகளல்லாத பிறசமயத்தார் சைவ சமய நிலயங்களை அபகரிக்க எண்ணுவதும் அங்குத் தமது  இட்டத்துக்கும் தமது சமயக்கோளுக்கும் இணங்கத் திருத்தங்கள் செய்ய முனைப்பதும் அநீதி, அநீதி.

நிற்க; தற்காலத்தில் சிவாலயங்கள் சிறிது சீர்கேடடைந்திருப்பது உண்மையே. சீர்கேடென்பதெல்லாம் ஆலயங்களில் ஆகம விதிக்கு  மாறுபட்டு நடக்குங் காரியங்களேயாம். ஆகையால் ஆகமம் வல்ல சைவ பண்டிதர்களே ஆலய காரியங்களை ஆகம விதிகளோடு ஒத்திட்டுப் பார்த்து விரோதமானவைகளை யொழிக்கவும்  பிறழ்ந்தவைகளை யொழுங்குபடுத்தவும் வல்லராவார். இவர் செய்வதே திருத்தமாகும். இச்சீர்திருத்தத்தை அரசியல்வாதிகள்  செய்யமாட்டுவார்களா? மொழிப்போர் செய்வோர்  செய்யமாட்டுவார்களா? இவர்களின் கவனமும் நடுநிலையும்  தத்தமது கொள்கையில் சாய்ந்து கிடக்கும். அன்றியும் தத்தமது கொள்கை மாய்ந்து போகாமல் நிலையுதற் பொருட்டு இவர்கள் தமது அரசியல் சிறு தெய்வத்துக்கும் மொழிச் சிறு தெய்வத்துக்கும்  சாதிச் சிறு தெய்வத்துக்கும் வைதிக சைவம் என்ற காமதேனுவைப்  பலி இடவும் ஒருப்படுவர். அன்றியும் இவர்கள் கூட்டத்தில் எல்லாம் பல சமயத்தாரும் கூடிக்குலாவுவர். இத்தகைய கந்தர்கூளக் கூட்டத்தார் கூடிச் சிவாலயங்களைத் திருத்துவது என்பது அபத்தமே. அதனால் இக்காலத்தில் விரும்பப்படும் சீர்திருத்தங்களைச் சிவாகமம் வல்ல சைவ பண்டிதர்களிடம் கலந்து விஷயங்களை நன்கு உணர்ந்து சிவாகமங்களோடு மாறுபடாதவற்றைச் செய்ய  வேண்டுவது இன்றியமையாததே.

ஆலயங்களில் எத்தகைய சீர்த்திருத்தஞ் செய்வதற்கும்  உண்மையிலுரியார் வைதிக சைவரேயாதலின் இவ்வைதிக  சைவர்கள் வேறு பல துறைகளிலிறங்கிப் பலபடப் பிரிந்து
எப்படி யுழைக்கிலும் ஆலய காரியங்களோடு சம்பந்திக்கும் போது  வைதிக சைவ ராஜாங்க கெளரவமாகிய இடபக்கொடியின் கீழ்  ஒன்று சேர்ந்து கொள்ளுதல் வேண்டும். இவர்களே ஆகமத்தின் ஆட்சி ஆலயங்களில் கெட்டொழியாதவாறு  அவைகளைச் சீர்பெற நடாத்தல் வேண்டும். அன்று தான் இவர்கள்  ஆண்மையுடையராவர்.


(இந்தக்  கட்டுரை  1927ல்  "சமய  ஞானம்"  பத்திரிகையில்  வெளியிடப்பட்டது)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Translate