செவ்வாய், 4 பிப்ரவரி, 2020

பழனி நவபாஷாண மூலவர் சிலை - நடந்தது என்ன?


கோடானுகோடி தமிழர்களால்,  குலதெய்வமாகப் போற்றப்படுகிறார் பழனி தண்டாயுதபாணி சுவாமி. சிங்கப்பூர், மலேசியா,  இலங்கை, ஐரோப்பா, அமெரிக்கா என உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் ஆண்டுதோறும் பழனிக்கு வந்து செல்கின்றனர். தங்கள் பக்தியின் வெளிப்பாடாக கோயிலுக்கு வாரி வாரிக் கொடுக்கின்றனர். தங்கம், வெள்ளியில் ஆபரணங்கள், பொருட்கள் செய்து கொடுத்துள்ளனர்.

2018 ஜனவரி மாதம் தைப்பூசத்தை ஒட்டி மட்டும் 12 நாட்களில் இரண்டு கோடியே 48 லட்சம் ரூபாய் வசூலாகியுள்ளது. பணம் தவிர தங்கம், வெள்ளிப் பொருட்களும் காணிக்கையாக செலுத்தப்பட்டுள்ளன. ஆண்டுக்கு  12 கோடி ரூபாய்க்கும் மேல் வருமானம் வந்தாலும், இவ்வளவு வந்தது; இவ்வளவு பணம் இதற்காக செலவழித்தோம் என அறநிலையத் துறை சார்பிலும் கோயில் நிர்வாகம் சார்பிலும் அறிக்கை வெளியிடப்படுவதில்லை.




இவ்வளவு கோடிகோடியாக கொட்டும் பழனி மலைக் கோயிலின் மூல தெய்வமான முருகனோ, ஆண்டிக் கோலத்தில் தான் காட்சியளிக்கிறார். வலது கையில் தண்டத்துடன், இடது கையை தொடையில் வைத்தபடி, இடுப்பில் ஒரேஒரு கோவணத்துடன், அருள் கனியும் பார்வை, தலைநிறைய சுருள்முடி என பார்ப்பவரை உருக வைக்கும் கோலத்தில் நிற்கிறார் தண்டாயுதபாணி சுவாமி. இவரது உயரம் 3 அடி மூன்றரை அங்குலம் மட்டும் தான். பீடம் இரண்டடி சேர்த்து மொத்தம் 5 அடிக்கு சற்று அதிகமான உயரத்துடன் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார் தண்டாயுதபாணி.



பொதுயுகம் 1623ம் ஆண்டு முதல் 1659ம் ஆண்டு வரை மதுரையை ஆண்ட திருமலை நாயக்கர் காலத்தில் அவரது தளவாயாக இருந்த ராமப்பையன், பழனி மலைக் கோயிலுக்கு வருகிறார். அப்போது இங்கு போகர் ஆதீனத்தைச் சேர்ந்த புலிப்பாணி பாத்திர உடையார் தான் அர்ச்சகராகவும் உரிமையாளராகவும் இருந்துள்ளார். அவர் கையால் விபூதி, தீர்த்தம் வாங்கக் கூடாது என நினைத்த ராமப்பையன், கொங்கு நாட்டில் இருந்து சரஸ்வதி அய்யன், தம்பா அய்யன் உள்ளிட்ட ஐந்து பிராமணர்களை வரவழைத்து பழனியில் குடியமர்த்தி, அவர்களிடம் கோயில் பூஜை உரிமைகளை மாற்றிக் கொடுத்தார். புலிப்பாணி பாத்திர உடையாருக்கு கோயிலில் சில உரிமைகள் கொடுக்கப்பட்டன.  தினசரி மூலவரைத் தொட்டு வழிபடும் உரிமை அவரிடம் இருந்து ராமப்பையனால் பறிக்கப்பட்டது என்பது வரலாறு. இதற்கான செப்புப் பட்டயம், பழனி போகர் ஆதீனத்தில் இன்றும் உள்ளது. அந்த பட்டயத்தில் பழனி மலை முருகன், தெண்டாயுதக் கடவுள் எனக் குறிப்பிடப்படுகிறார். இந்த சம்பவம் தான் பழனி மலைக் கோயிலில் பிரச்னைகளின் தொடக்கப் புள்ளியாக அமைகிறது.




பழனி முருகன் சிலை, நவபாஷாணத்தால் ஆனது என்பதே, இந்த சம்பவத்திற்குப் பின் தான் வெளியுலகிற்குத் தெரியவந்தது என்கிறார், கோயிலின் பரம்பரை உரிமையாளரும் போகர் ஆதீனத்தின் தற்போதைய மடாதிபதியுமான சிவானந்த புலிப்பாணி பாத்திர உடையார்.

நவபாஷாண சிலை என்பதால், அதன் அபிஷேக தீர்த்தம், நோய் தீர்க்கும் தன்மை கொண்டதாக விளங்குகிறது. அந்த தீர்த்தம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. குறிப்பாக மூன்று பிரசாதங்கள் பழனியில் முக்கியமானவை என்கிறார் புலிப்பாணியார்.

பழனி முருகனின் சிலையில் சில விசேஷ அம்சங்கள் உள்ளன. நவபாஷாணத்தில் பாதரசம் கணிசமான அளவில் சேர்க்கப்பட்டுள்ளதால், அந்த சிலையின் வெப்ப நிலை சராசரிக்கும் அதிகமாகவே இருக்கும். அதனாலேயே கருவறையைச் சுற்றி வெளிப்புறத்தில், எப்போதும் நீர் தேங்கி நிற்கும் விதத்தில் நீராழிப் பத்தி அமைக்கப்பட்டுள்ளது.  மேலும், முருகனைக் குளிர்விக்க 6 கால அபிஷேகங்கள் செய்யப்பட்டு வந்தன. 1940ம் ஆண்டுக்கு முன்பு வரை, ஒரு ஆண்டில், தைப்பூசம், பங்குனி உத்திரம் ஆகிய இரு நாட்களில் மட்டும், பழனி முருகனுக்கு ஆயிரக்கணக்கான அபிஷேகங்கள், குறிப்பாக பாலபிஷேகம் நடந்துள்ளன. இந்த எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கத் தொடங்கியது.  பணம் செலுத்தினால் எத்தனை அபிஷேகம் வேண்டுமானாலும் செய்யலாம் என்ற அறநிலையத் துறையின் வருமானம் ஈட்டும் திட்டம் அமலுக்கு வந்ததும், ஒரே நாளில் ஆயிரக்கணக்கான வீதம், ஆண்டுக்கு இரண்டரை லட்சத்திற்கும் அதிகமான எண்ணிக்கையில் அபிஷேகங்கள் நடந்துள்ளன.

1936ம் ஆண்டில் இருந்து சிலை சேதம் தொடர்பான சர்ச்சைகள் தொடங்குகின்றன. 1980கள் வரை தொடர்ந்த இந்த சர்ச்சைகள் வெளியுலகிற்குத் தெரியவில்லை. 1973ம் ஆண்டு அப்போதைய அறநிலையத் துறை நிர்வாகி அர்ஜுனன் என்பவர், முதன்முதலாக சிலை பாதுகாப்பு நடவடிக்கையாக தங்க கவசம் சார்த்துவதை நிறுத்த உத்தரவிடுகிறார். அந்தத் தடை இன்று வரை அமலில் உள்ளது.

1980க்குப் பிறகு, கருமுத்து தியாகராச செட்டியாரின் இரண்டாவது மனைவி ராதா தியாகராஜன், கோயிலின் தக்காராகப் பொறுப்பேற்றார். அவர் தான் சிலை சேதம் குறித்து  அரசுக்கு தெரிவித்தவர் என்றும், அபிஷேகங்களைக் குறைத்து, உபய அபிஷேகங்களை உற்சவருக்கு மாற்றியவர் என்றும் கூறுகிறார் இவர்.

அறநிலையத் துறை பணியிடை நீக்க அறிக்கை..
அதேநேரம், சிலையில் அவ்வப்போது சேதம் ஏற்படுவதும், அப்போது பூஜை முறையில் இருந்த அர்ச்சகரை பணியிடை நீக்கம் செய்வதும் பின்பு சேர்த்துக் கொள்வதுமாகத் தான் அறநிலையத் துறையின் நடவடிக்கைகள் இருந்தன. சிலை சேதம் குறித்து அறநிலையத் துறை கவலை கொண்டதாகத் தெரியவில்லை. 1983ம் ஆண்டு, சிலையின் காதுக்கும் தோளுக்கும் இடைப்பட்ட பகுதி சேதம் அடைந்ததை ஏன் தெரிவிக்கவில்லை என்று கூறி ஜெகன்னாத குருக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.



1984ம் ஆண்டு ஜூ.வி.பத்திரிகை செய்திகள்...

1984ம் ஆண்டு, தைப்பூசத்தை ஒட்டி மூலவர் சிலைக்கு அபிஷேகங்கள் நிறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியானதை அடுத்து, பழனியில் கொந்தளிப்பு உருவானது. அன்றைய நாளிதழ்கள், மாத இதழ்களில் இதுகுறித்து விரிவான செய்திகள் வெளியாகின. அப்போது கோயிலில் இருந்த கண்ணன் என்ற அர்ச்சகர், சிலையில் சேதம் அடைந்த பகுதிகள் குறித்து பட்டியலே கொடுத்தார். இவை ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இதை அடிப்படையாக வைத்து புதிய சிலை வைக்க கூடாது என கிருபானந்த வாரியார் எச்சரிக்கை விடுத்தார். இதையடுத்து பிரச்னை விஸ்வரூபம் எடுத்தது.

அப்போது முதல்வராக இருந்த எம்ஜிஆர் அரசில் அறநிலையத் துறை அமைச்சராக இருந்த ஆர்,எம்.வீரப்பன், ஓய்வுபெற்ற நீதிபதி சதாசிவம் தலைமையில் ஒரு விசாரணைக் குழுவை அமைத்தார். அந்தக் குழுவில், போகர் ஆதீனகர்த்தர் உட்பட 36 பேர் இடம் பெற்றனர். ஓராண்டிற்கும் மேல் நடந்த விசாரணையின் அடிப்படையில், 1985ம் ஆண்டின் இறுதியில், அறநிலையத் துறை அமைச்சரிடம் ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இன்று வரை இந்த அறிக்கையோ இதன் சாராம்சங்களோ அரசால் வெளியிடப்படாத நிலையில், நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு இந்த ஆய்வறிக்கையின் சில பகுதிகள் கிடைத்துள்ளன.



சதாசிவம் குழுவின் அறிக்கையின் சில பக்கங்கள்


சதாசிவம் அறிக்கையில், நவபாஷாண சிலை சேதம், அதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சில முக்கியமான தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

சதாசிவம் அறிக்கையில் சொல்லப்பட்டது என்ன?


  • மூலவர் சிலையில் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக, 1945ம் ஆண்டு முதல் அர்ச்சகர்களால் மூலம் தெரிவிக்கப்பட்டது
  • அதையடுத்து தங்கக் கவசம், கனமான ஆடைகள் சார்த்துவது நிறுத்தப்பட்டன.  அபிஷேக அலங்காரங்கள் குறைக்கப்பட்டன 
  • அதேநேரம் மூலவருக்கு 6 கால அபிஷேகங்கள், உற்சவருக்கு உபய அபிஷேகங்கள் என்ற 1984ம் ஆண்டு திட்டம் தொடர வேண்டும்
  • காஞ்சி சங்கராச்சாரியார் சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆலோசனைப்படி மாதம் ஒருமுறை அல்லது 3 மாதங்களுக்கு ஒருமுறை, அமாவாசை, கிருத்திகை, சஷ்டி போன்ற தினங்களில் சிலையின் அளவு எடுக்கப்பட்டு தேய்மானம் ஏற்படுகிறதா என ஆய்வு செய்ய வேண்டும்
  • தேய்மானம் அதிகரித்தால், 6 கால அபிஷேகங்களைக் குறைக்கலாம் அல்லது முற்றிலும் நிறுத்தலாம்
  • கலப்படமில்லாத அபிஷேகப் பொருட்கள் பயன்படுத்தப்பட வேண்டும். நல்ல கோசாலை வேண்டும்
  • அபிஷேகம் முடிந்தபின், சிலை மீது துணியை ஒற்றி ஈரத்தை எடுக்க வேண்டும். துடைக்கக் கூடாது


இவ்வாறு கூறிய சதாசிவம் குழு, சில பரிந்துரைகளையும் முன்வைத்தது.

சதாசிவம் குழுவின் பரிந்துரைகள்


  • உபய அபிஷேகங்களுக்கு என தனியாக ஒரு அபிஷேகமூர்த்தி சிலை தேவை இல்லை
  • பாதம் முதல் கழுத்து வரை தங்கக் கவசம் செய்து, நீர் புகாத வகையில், தங்கத்தால் இறுகப் பூட்டி விடலாம்
  • ஏ.ஏ.கிருஷ்ணாராவ் என்பவர் சக்திதாஸ் சுவாமிகள் மூலம் நவபாஷாணத்தால் ஒரு சிலை செய்து தருவதாகக் கூறியுள்ளார். அது கிடைத்தால், எங்கு பிரதிஷ்டை செய்வது என்பதை கோயில் நிர்வாகம் ஆலோசிக்கலாம்

சதாசிவம் அறிக்கையின்படி, மற்ற நடவடிக்கைகள் தொடர்ந்தாலும், 3 மாதங்களுக்கு ஒருமுறை தேய்மானம் பற்றிய அளவெடுக்கும் நடவடிக்கை தொடரவில்லை என குற்றம்சாட்டுகிறார், புலிப்பாணியார்

சிலை சேதம் அடைந்திருந்ததை 1987ம் ஆண்டில் தானே நேரில் போய்ப் பார்த்ததாக கூறுகிறார், அப்போதைய அறநிலையத் துறை அமைச்சராக இருந்த வி.வி.சுவாமிநாதன்

தமிழக அரசின் கனிமவளத் துறையின் அப்போதைய தலைவராக இருந்த சரவணன் என்பவர் சதாசிவம் குழுவில் இடம் பெற்றிருந்தார். அவர் 1998ம் ஆண்டு மலேசியாவில் நடந்த முருகக் கடவுள் பற்றிய அனைத்துலக மாநாட்டில், ஒரு ஆய்வேட்டை சமர்ப்பித்தார். அதில், சதாசிவம் குழு சார்பில் நடந்த ஆய்வுகளை பட்டியலிட்டுள்ளார்.

சரவணனின் ஆய்வேட்டில் குறிப்பிடப்பட்டிருந்தது என்ன?

  • சிலையை ஆய்வுசெய்தபோது முகத்தை தவிர பிற உறுப்புகள் கடும் சேதமடைந்திருந்தது தெரியவந்தது.
  • சிலையின் மார்பில் இரவில் சார்த்தி அதிகாலையில் களையப்படும் சந்தனம், அமெரிக்க கருவி மூலம்   ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது
  • பெர்க்கின் எல்மார் 707 என்ற அந்தக் கருவியின் ஆய்வு முடிவில், சந்தனம் முற்றிலும் மருத்துவ குணம் கொண்டதாக மாறியது தெரியவந்தது
  • பலமுறை ஆய்வு செய்த பின்னும் அதே முடிவையே கருவி காட்டியதால் ஆய்வுக் குழு திகைத்துப் போனது
  • நவீன விஞ்ஞானக் கருவிகளால் முருகன் சிலையை அளக்க முடியாது என்ற முடிவுக்கு குழு வந்தது


சிலையில் ஏற்பட்ட சேதங்களுக்கு, அபிஷேகங்கள் மட்டும் காரணமல்ல; அர்ச்சகர்களின் பொறுப்பற்ற தன்மையும்தான் காரணம் என குற்றம்சாட்டும் அங்கமுத்து அதற்கு உதாரணமாக இரண்டு சம்பவங்களை எடுத்துக்காட்டுகிறார்.

1987ம் ஆண்டிற்குப் பிறகு,  பழனி மலைக் கோயிலில் பெரிய அளவில் சர்ச்சைகள் எழவில்லை. 2002ம் ஆண்டு, காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரரின் அறிவிப்பால் மீண்டும் சர்ச்சைகள் கிளம்பத் தொடங்கின. பழனி நவபாஷாண சிலை சேதம் அடைந்திருப்பதாகவும் அதற்குப் பதிலாக, 100 கிலோ தங்கத்தால் ஆன முருகன் சிலையை, காஞ்சி சங்கர மடமே செய்து கொடுக்கும் எனவும் 2002 ஜூலை மாதம் ஜெயேந்திரர் அறிவித்தார். அவரது அறிவிப்பை அடுத்து,  தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்தது.  ஆதீனகர்த்தர்கள் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்தனர்.

இதற்கிடையே, 2002ம் ஆண்டு அக்டோபர் 28ம் தேதி, அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவின் ஆஸ்தான ஜோதிடரான உன்னி கிருஷ்ண பணிக்கரை வரவழைத்து, பழனி கோயிலில் அஷ்டமங்கலப் பிரஸ்னம் பார்க்கப்பட்டது. அதுகுறித்து பரபரப்பான தகவல்கள் நாளிதழ்களில் வெளியாகின. பிரஸ்னத்தில், தங்கச் சிலை செய்யக் கூடாது மீறி செய்தால் கடுமையான விளைவுகள் ஏற்படும் என பணிக்கர் எச்சரித்ததாக  செய்திகள் வெளியாகின. அது உண்மை தான் என, நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார் உன்னி கிருஷ்ண பணிக்கர்.

அதே பிரஸ்னத்தில், நவபாஷாண சிலைக்கு நேர் கீழே போகரின் சமாதி இருப்பதாகவும் அதன் அருகில் உள்ள குகையில், இப்போதுள்ள சிலை போல், 9 நவபாஷாண சிலைகள் இருப்பதாகவும், ஆழ்ந்த பக்தி, எளிமை, துாய்மை இவற்றால் மட்டுமே அந்த சிலைகள் வெளியுலகிற்குத் தெரியவரும் எனவும் பரபரப்பான தகவல்களை உன்னிகிருஷ்ண பணிக்கர் தெரிவித்திருந்தார். அதற்கு, முதற்கட்ட நடவடிக்கையாக, பூஜை வழிபாடுகளை சீர் செய்ய வேண்டும்; துாய்மையற்ற பொருட்கள் அபிஷேகத்திற்குப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும்; நகரை துாய்மைப்படுத்த வேண்டும் என்ற ஆலோசனைகளையும் தெரிவித்திருந்தார்.

நவம்பர் மாதம் தமிழக அரசின் சார்பில், ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், பழனி மூலவர் சிலை மீது மெல்லிய தங்க கவசம் அணிவிக்கப்படும், புதிய உற்சவர் சிலை செய்யப்படும், பழனி நகரம் துாய்மைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. 2003ம் ஆண்டு, நவபாஷாண சிலையை புதுப்பிப்பது குறித்து, வடபழனி சித்தர் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.  புதிய சிலை எதுவும் நிறுவும் எண்ணம் இல்லை என அறநிலையத் துறை பதிலளித்தது. அதேநேரம், மாற்றுப் பொருட்கள் மூலமே நவபாஷாண சிலை சேதத்தை சரி செய்ய முடியும் என வடபழனி சித்தர் தெரிவித்ததால் மனு  தள்ளுபடி செய்யப்பட்டது.

1984ம் ஆண்டு சதாசிவம் அறிக்கையில் தங்க கவசம் மூலம் மூலவரைப் பாதுகாக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதேநேரம் ஏற்கனவே ஒரு தங்க கவசம் உள்ள நிலையில் வேறொரு கவசம் செய்வது குறித்து, அரசு சார்பில் பல்வேறு மட்டங்களில் தீவிரமாக ஆலோசனைகள் பெறப்பட்டன. 2003ம் ஆண்டு ஈரோடு மாவட்ட உதவி மருத்துவ அலுவலராக இருந்த சித்த மருத்துவர் முத்துக்கிருஷ்ணனிடமும் அரசு அதிகாரிகள் ஆலோசனை கேட்டனர். என்ன நடந்தது என்பதை அவரே கூறுகிறார்.

 பல்வேறு ஆலோசனைகளுக்குப் பிறகு, தங்க கவசம் செய்வது கைவிடப்பட்ட நிலையில், புதிய உற்சவர் சிலை செய்யும் முயற்சியில், அறநிலையத் துறை தீவிரமாக இறங்கியது. 1985ம் ஆண்டு சதாசிவம் அறிக்கையில் நிராகரிக்கப்பட்ட காஞ்சி சங்கராச்சாரியாரின் ஆலோசனை 2003ம் ஆண்டு செயல்படுத்தப்பட்டது. 2003ம் ஆண்டு மார்ச் 3ம் தேதி பழனி நவபாஷாண மூலவர் சிலையை அளந்தார் அறநிலையத் துறையின் தலைமை ஸ்தபதி முத்தையா. அப்போது அவருடன் கோயில் துணை ஆணையரும் இருந்தார். மூல விக்ரகம் பின்னப்பட்டால், அதே அளவில் புதிய விக்ரகம் செய்யலாம் என சாஸ்திரத்தில் சொல்லியுள்ளதாக ஆலோசனை தெரிவித்தார் முத்தையா. அதன்படி, பஞ்சலோகத்தில், 3 அடி உயரம் இரண்டரை அங்குல உயரத்தில் அதாவது, நவபாஷாண மூலவர் சிலையை விட ஒரு அங்குலமே உயரம் குறைந்த புதிய அபிஷேகமூர்த்தி சிலை, முத்தையாவிற்கு சொந்தமான கேளம்பாக்கத்தில் உள்ள ஸ்வர்ணம் சிற்பக் கலைக்கூடத்தில் தயாரானது.

புதிய சிலை
2004ம் ஆண்டு ஜனவரி 25ம் தேதி நள்ளிரவில், பழனி மலைக் கோயிலில் திடீரென பரபரப்பு தொற்றிக் கொண்டது. தகவல் அறிந்த செய்தியாளர்கள் கோவிலில் குவிந்தனர். விஞ்ச் மூலம் பெரிய பெட்டி ஒன்று மலை மேல் ஏற்றப்பட்டது. 26ம் தேதி அதிகாலை 2 மணியளவில் கருவறையில், தகதகவென மின்னிய பஞ்சலோக அபிஷேகமூர்த்தி சிலை ஒன்று நிறுவப்பட்டது. கருவறைக்கு வெளியில் இருந்து பார்த்தால் மூலவரின் முகம் மட்டும் தெரியும் உயரத்தில் அந்த சிலை நிறுவப்பட்டது. அன்று அதிகாலை 5 மணி முதல்,  அல்லுார் விஸ்வநாத சிவாச்சாரியார் தலைமையில், பல சிவாச்சாரியார்கள் சேர்ந்து சிறப்பு யாகங்கள், வழிபாடுகளைச் செய்தனர். கருவறையில் புதிய சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட தகவல் பரவியதும் பழனியே போர்க்கோலம் பூண்டது. பக்தர்கள் என்ன நடக்கிறது என தெரியாமல் குழம்பனர்.  பல்வேறு அமைப்புகள் போராட்டங்களில் இறங்கின. மறுநாள், காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் பழனி மலைக் கோயிலுக்கு வந்து வழிபட்டுச் சென்றார். அதையடுத்து ஜெயேந்திரர் தான் புதிய சிலையை நிறுவியுள்ளார் என தகவல்கள் பரவின. கருணாநிதி முதல் வைகோ வரை அனைத்து அரசியல் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர். ஆனால் அரசு அசைந்து கொடுக்கவில்லை.

சிலை வைக்கப்பட்ட 28 நாட்களிலேயே முற்றிலும் கருத்து விட்டது. இதற்கிடையே, 2004 ஏப்ரல் 20ம் தேதி நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், தமிழகத்தின் 39 தொகுதிகளிலும் ஆளும் அதிமுக தோற்றது. பழனியில் மூலவர் சிலையை மறைத்து, புதிய சிலையை நிறுவியதால்தான், இந்த தோல்வி என ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இதையடுத்து மே மாதம் 31ம் தேதி, மீண்டும் உன்னி கிருஷ்ண பணிக்கர் தலைமையில், பழனியில் தேவ பிரஸ்னம் பார்க்கப்பட்டது. இந்த விவகாரத்தால், ஜெயலலிதா பெரும் நெருக்கடிக்கு ஆளாகியிருந்தார் என்கிறார் பணிக்கர்.

அந்த நேரத்தில் சிலை கடுமையான சேதத்திற்கு ஆளாகியிருந்ததாக, தன்னிடம் தெரிவிக்கப்பட்டதாகக் கூறுகிறார் பணிக்கர்.

புதிய சிலையை வைத்த நேரம் சரியில்லை; மூலவர் உயரத்திற்கு வைத்திருக்க கூடாது; புதிய சிலையின் அளவுகள் மாறுபடுகின்றன; தவறான முறையில் சடங்குகள் நடந்துள்ளன;  இந்த சிலையால், கோயில் அர்ச்சகர் முதல் ஸ்தபதி வரை அனைவருக்கும் பாதிப்பு ஏற்படும்;  உடனடியாக சிலையை அகற்றி பரிகாரம் பண்ண வேண்டும் என்றும் பிரஸ்னத்தில் தெரியவந்தது.

பிரஸ்னத்திற்குப் பின், பணிக்கர் மற்றும் கோயில் அதிகாரிகள் அடங்கிய குழு, காஞ்சிபுரத்திற்கு சென்று ஜெயேந்திரரை சந்தித்து பிரஸ்ன முடிவுகள் குறித்து விளக்கியது. அதன்பின்பே சிலை அகற்றத்தை ஜெயேந்திரர் ஏற்றுக் கொண்டார் என்கிறார் பணிக்கர்.

எனினும் பிரஸ்னம் மூலம் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைள் குறித்து கூறியும் எதுவும் நடக்கவில்லை என குற்றம்சாட்டுகிறார் பணிக்கர்.

பணிக்கர் குறித்துக் கொடுத்தபடி, ஜூன் 6ம் தேதி சிலை அகற்றத்திற்கான சடங்குகள் தொடங்கின. அன்றே கோயில் துணை ஆணையர் கே.கே.ராஜா பணியிட மாற்றம் செய்யப்பட்டார். 7ம் தேதி அதிகாலை முதல் அல்லுார் விஸ்வநாத சிவாச்சாரியார் தலைமையில் சடங்குகள் செய்யப்பட்டு, புதிய அபிஷேகமூர்த்தி சிலை அகற்றப்பட்டு, இருட்டறையில் வைக்கப்பட்டது. அதன்பின்பே பழனியில் போராட்டங்கள் அடங்கின. மீண்டும் 2005ம் ஆண்டில், சபாரத்தினம் சிவாச்சாரியார், செல்வநாதன் ஸ்தபதி ஆகியோர் தலைமையில், ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு உன்னி கிருஷ்ண பணிக்கர் ஆலோசனைப்படி, நவபாஷாண மருந்து செய்து, அதை மூலவர் சிலையில் சேதமடைந்த இடங்களில் பொருத்தி, சிலையைப் பலப்படுத்தியது. ஆனால் இன்றைய நிலையில், அந்த ஒட்டப்பட்ட மருந்து  முற்றிலும் போய்விட்டது என்கின்றனர் கோயிலோடு நெருங்கிய தொடர்புடையவர்கள். இதுபோன்ற ஒட்டுவேலை நவபாஷாண சிலையில் செய்வதற்கு சாத்தியமில்லை என்கிறார் மருத்துவர் முத்துக்கிருஷ்ணன்

2006ம் ஆண்டு பழனி மலைக் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. புதிய அபிஷேக மூர்த்தி சிலை செய்ததில் முறைகேடு நடந்ததாகக் கூறி 14 ஆண்டுகள் கழித்து கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி, , பழனிக் கோயில் முன்னாள் இணை ஆணையர் கே.கே.ராஜா, அறநிலையத் துறை தலைமை ஸ்தபதி முத்தையா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.

பழனி மலைக் கோயில் நவபாஷாண சிலை விவகாரத்தில் நிறைய சந்தேகங்கள் எழுகின்றன

பழனி மலைக் கோயில் மூலவர் சிலை நவபாஷாணத்தால் ஆனதா என்பது குறித்து அரசுத் தரப்பில் ஆய்வுகள் நடத்தப்பட்டனவா?

அளவற்ற அபிஷேகங்கள், அலங்காரங்களால் சிலை சேதம் அடைந்ததாக கூறப்படும் நிலையில் சேதத்திற்கு காரணமானவர்கள் மீது என்ன விதமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன?

மிகவும் கனமான தங்க கவசம் சார்த்தப்பட்டதால் தான் சேதம் ஏற்பட்டது என்ற நிலையில், ஏற்கனவே ஒரு தங்க கவசம் உள்ள நிலையில் 2002ம் ஆண்டு மீண்டும் தங்க கவசம் செய்யப்படும் என அரசு அறிவித்தது ஏன்?

1945ம் ஆண்டு முதல் இதுவரை நடந்த ஆய்வுகள், ஆய்வறிக்கைகள் எதையும் வெளியிடாமல் அரசு மவுனம் சாதிப்பது ஏன்?

சிலையின் உண்மை நிலையை வெளியிட்டு உலகம் முழுவதிலும் உள்ள கோடிக்கணக்கான பக்தர்கள் மத்தியில் நிலவும் குழப்பத்தை நீக்க அரசுக்கு தடையாக இருப்பது எது?

2004ம் ஆண்டு வடபழனி சித்தர், மாற்றுப் பொருட்கள் மூலம் நவபாஷாண சிலையை புதுப்பிக்கத் தான் தயார் என்று சொன்னபோது அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. 2005ம் ஆண்டு, வேறொரு குழுவினர் யாருடைய அனுமதியின் பேரில் அதே புதுப்பித்தல் பணியை செய்தனர்?

அதிகாரபூர்வ சித்த மருத்துவ குழு அமைத்து, நவபாஷாண சிலை தயாரிப்பது குறித்து அரசு ஏன் ஆய்வு செய்யவில்லை?

பழனி மலைக் கோயில், சி்த்தர்கள் வழிபாட்டின்படி அமைக்கப்பட்டது என மீண்டும் மீண்டும் போகர் ஆதீனகர்த்தர்கள் வலியறுத்தி வரும் நிலையில், அந்தக் கோயிலை வழக்கமான ஆகம வழிபாட்டிற்கு மாற்றியமைக்கும் போக்குகளை அறநிலையத் துறை ஏன் செய்கிறது?

இவ்வளவு சர்ச்சைகளுக்குப் பின்பும் பழனி மலைக் கோயிலின் வரலாற்றையும், நவபாஷாண சிலை உருவாக்கத்தையும் குறித்து அறிவியல்பூர்வமான ஆய்வுகளை அரசு மேற்கொள்ளாதது ஏன்?

 நவபாஷாண சிலையை அகற்றும் நோக்கம் நீண்ட காலமாக இருந்து வருவதாக குற்றம்சாட்டுகிறார், முன்னாள் அமைச்சர் வி.வி.சுவாமிநாதன்

 இவ்வளவு சர்ச்சைகளைத் தாண்டி,  பழனி நவபாஷாண தண்டாயுதபாணி சிலை இதுவரை நன்றாகவே உள்ளது. எனில் உண்மையில் நடப்பது தான் என்ன? அரசு விளக்குமா?

(இந்த கட்டுரை, சில மாற்றங்களுடன் 'நவபாஷாண சில ரகசியம்' என்ற தலைப்பில், 2019, ஆகஸ்ட் 4ம் தேதி, நியூஸ் 18 தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.

நிகழ்ச்சியைக் காண நவபாஷாண சிலையின் ரகசியம் என்ற சுட்டியைச் சொடுக்கலாம்)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Translate