திங்கள், 24 பிப்ரவரி, 2020

சிவாலயங்களின் இக்கால நிலை


- சித்தாந்த பண்டித பூஷணம் ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளை,
திருநெல்வேலி பேட்டை

     தமிழ்நாட்டின் பழைய சமயம் சித்தாந்த சைவம். அதன் விரிவையும் உயர்வையும் எடுத்துரைப்பன வடமொழியிலுள்ள வேதசிவாகமங்களும் தமிழிலுள்ள திருமுறை சித்தாந்த சாத்திரங்களுமாம்.  அந்நூல்களெல்லாம் எண்ணும் எழுத்தும் அறிந்தார்க்கே பயன்படும்.


 ஆயின் சாமானியருக்கும் சைவம் விளங்குவதெப்படி? அது நம் நாடெங்கும் அமைக்கப்பட்டிருக்கும் சிவாலயங்கள் மூலமாகவேயாம்.  பொருளைப் பிறர்க்குணர்த்த வழிகள் இரண்டுள.  அவை எழுத்தும் வடிவமும்.  வேதாகமாதி சாத்திரங்களில் எழுத்து மூலம் அறிவிக்கப்படும்  சைவ சமயம், சிவாலயங்களில் வடிவங்கள் மூலம் அறிவிக்கப்படுகிறது.

சிதம்பரம் நடராஜர் கோயில்
சைவநூற் பிரதிஷ்டையே சிவாலயங்களாகும்.  அவை முற்காலத்தில் தூய்மையும் அருள் விளக்கமும் பெற்றிருந்தன.  அதனால் சைவ நன்மக்கட்கு அவைகளிடத்தில் அன்பு மிகுந்தது.  அவற்றின் பாலுள்ள திரண்ட செல்வமே அதற்குச் சான்று பகரும்.

அச்சிவாலயங்கள் இப்போதிருக்கும் நிலையை நாம் சிறிது ஆராய வேண்டும்.  சைவ சிவாலயங்களெல்லாம் வேற்றுமத ஆலயங்களாக மாறின.  சைவ சமயிகள் தான் சிவாலயங்களைப் பரிபாலிக்க வேண்டுமென்ற நியமம் அதனாற் கெட்டது. அந்நிய சமயத்தினரும் அவற்றைப் பாதுகாக்க முன்வந்தனர். கோவிற் காவலர், கோவிற் பணப் பொறுப்பை மட்டில் மேற்கொண்டனர்.  அப்பொறுப்பும் உண்மையாமென்று சொல்ல முடியாது.

சைவ வளர்ச்சிக்கு விடப்பட்ட பொருட்கள் அச்சமயக் கேட்டுக்குச் செலவாகின்றன.  சிவாலயக் கிரியைகள் தாறுமாறாயின. சிவாகம விரோதக் கிரியைகளும் மலிந்தன.  விதிவிலக்கென்பது சுத்த சூனியமாயிற்று.  திருவிழா முதலிய சிறப்புக்கள் சிறாரின் பாவை விளையாட்டை ஒத்தன.  இடிந்தன போக எஞ்சி நின்ற கோவிற் பெருங் கட்டடங்களில் லெளகீகமே நிரம்புவதாயிற்று.  சைவசமயிகள் பழிக்கப்படுதற்குச் சிவாலயங்கள் ஏதுவாக்கப்பட்டன.

கோவிலுக்குள் நடக்கும் உலகப் பிரவிருத்திகளையெல்லாம் உடனே அப்புறப்படுத்தி அவ்விடங்களைச் சுத்தி செய்து, பழையபடி ஆன்மலாப முயற்சிகளை அங்குத் தொடங்க வேண்டும்.  அப்பொழுது தான் நம் பிறவிப் பயன் நமக்குக் கிட்டும்.

 ஆகவே நம் சைவாலய நிலயங்கள் விஷயமாய்ச் செய்ய வேண்டுவனவற்றை விரைந்து செய்து இம்மையிற் புகழையும் மறுமையிற் சிவபுண்ணியப் பெருஞ்செல்வத்தையும் நாம் பெறுவோமாக.

(இந்தக் கட்டுரை 11-6-1921 'திராவிடன்' இதழில் ஆசிரியர் ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளையவர்கள் எழுதியது)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Translate