திங்கள், 3 பிப்ரவரி, 2020

தரணி போற்றும் தஞ்சைப் பெரிய கோவில்


தமிழர்களின் அடையாளம்; தமிழ் கட்டிடக் கலையின் பெருமிதம்; பிரமாண்டத்தின் வெற்றி; பேரரசன் ராஜராஜனின் தனிப் பெரும் சின்னம் எனப் போற்றப் பெறுகிறது தஞ்சைப் பெருவுடையார் கோவில். உலக அதிசயங்களின் ஒன்றான இந்தக் கோவில் ஐ.நா.வின் பாரம்பரியச் சின்னங்களைப் பாதுகாக்கும் யுனெஸ்கோவின் அரிய கலைச் சின்னங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது பொருத்தமானதுதான்.



ஆயிரம் ஆண்டுகளைக் கடந்து கம்பீரமாக நிற்கும் இந்தக் கோவிலின் பின்னணியில் தமிழ் நிலத்தின் வரலாறு, பண்பாடு, சமூக மாற்றங்கள் பொதிந்து கிடக்கின்றன. தமிழகத்தின் முதுபெரும் சாட்சியமாக பெருவுடையார் கோவில் திகழ்கிறது.

வரலாற்றை வெளிப்படுத்திய ஆங்கிலேயர்

ஆங்கிலேயேர் முதல் இன்றைய வரலாற்று ஆய்வாளர்கள் வரை அனைவரையும் திகைக்க வைத்துள்ளது. சாதாரண மக்கள், பார்த்த உடனே வாய் பிளக்க வைக்கிறது; பணிவுடன் கைகூப்பச் செய்கிறது; இதை அறிவியல் என்பதா? ஆன்மீகம் என்பதா? அதிமனிதம் என்பதா?




19ம் நுாற்றாண்டு வரை தஞ்சைக் கோவிலை பூதங்கள் கட்டியதாகவும் காடுவெட்டிச் சோழன் என்ற மன்னன் கட்டியதாகவும் தான் மக்கள் மத்தியில் கதைகள் நிலவிக் கொண்டிருந்தன.  1886ம் ஆண்டு அப்போதைய பிரிட்டிஷ் அரசாங்கம் முதன் முதலாக நியமித்த ஹூல்ஷ் என்ற கல்வெட்டாய்வாளர் பெரிய கோவிலின் கல்வெட்டுகளைப் படியெடுத்த போது, அதில் கிடைத்த வாசகங்களே ராஜராஜனை பொதுமக்களுக்கு அடையாளம் காட்டின.

“பாண்டிய குலாசனி வளநாட்டுத் தஞ்சாவூர்க் கூற்றத்துத்

தஞ்சாவூர் நாம் எடுப்பிச்ச திருக்கற்றளி ஸ்ரீராஜராஜீஸ்வரம்”

என்ற கல்வெட்டுத் தொடர்தான், பெரிய கோவிலின் வரலாற்றை வெளிக் கொணர்ந்தது. இந்த வாசகங்கள், 1882ம் ஆண்டு அப்போதைய கல்வெட்டு ஆய்வாளர் வெங்கையாவால் பதிப்பிக்கப் பெற்ற தென்னிந்தியக் கல்வெட்டுகள் என்னும் நுாலின் 2ம் தொகுதியில் இடம் பெற்றுள்ளன.

பேரரசன் ராஜராஜன்

பொதுயுகம் 850ம் ஆண்டில் உறையூரை ஆண்டு கொண்டிருந்த சிற்றரசன் விஜயாலயன் தொடங்கி வைத்த பிற்காலச் சோழர் பரம்பரையில், அவனுக்குப்பின் 150 ஆண்டுகள் கழித்து அரியணை ஏறியவன் தான் அருண்மொழி தேவன் என்னும் ராஜராஜ சோழன்.

இரண்டாம் பராந்தகன் என்ற சுந்தர சோழனின் 2ம் மகனான ராஜராஜ சோழன், பொதுயுகம் 985ம் ஆண்டு மணிமுடி சூட்டிக் கொண்டான். அப்போது தான் ராஜராஜன் என்ற பட்டப் பெயரையும் புனைந்து கொண்டான்.

தமிழக அரசியல் வரலாற்றில், ஒடிசா தொடங்கி இலங்கை வரையும், மேல் கடற்கரை தொடங்கி கீழ்க் கடற்கரை வரையிலும் ஒரே குடையின் கீழ் கொண்டு வந்த இரண்டாம் பேரரசனாகத் திகழ்ந்தவன்.

பெரிய கோயிலை ஏன் கட்டினான்?

ராஜராஜன் காலத்தில் தமிழகத்தில், காஞ்சிபுரம் கயிலாசநாதர் கோவில், திருப்புனவாசல் விருத்தபுரீஸ்வரர் கோவில், திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவில் ஆகிய கோவில்கள் உத்தமஜாதி விமானங்களுடன் அதாவது, ஆகமங்கள் மற்றும் சிற்ப நுால்களில் சொல்லிய அனைத்து இலக்கணங்களுடன் கூடிய விமானங்களாக அமைந்திருந்தன

அவற்றைப் பார்த்த ராஜராஜனுக்கு அவற்றை விட பிரமாண்டமாக ஒரு கோவிலை உருவாக்கி ஈசனுக்குப் படைக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகி இருக்க வேண்டும் என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள்

ராஜராஜனின் 19ம் ஆட்சியாண்டான பொதுயுகம் 1003ல் தொடங்கி அவனது 25வது ஆட்சியாண்டான 1009ல் இந்தக் கோவில் கட்டும் பணி நடந்து முடிந்துள்ளது. அதாவது மொத்தம் ஆறே ஆண்டுகளில் இந்த பிரமாண்டமான கோவிலை ராஜராஜன் கட்டி முடித்தான்

கோயில் அமைப்பு

தமிழகத்தின் விந்தைக்குரிய கட்டுமானங்களில் ஒன்றான தஞ்சைப் பெருவுடையார் கோவில் கட்டப்பட்டதைப் பற்றி இன்றும் பல கதைகள் உலவுகின்றன. சாரப் பள்ளம் என்ற ஊரில் இருந்து ஒரே நேர்க்கோடாக கோவில் உள்ள இடத்திற்கு மண்மேடமைத்து ஒற்றைக் கல்லாலான விமானத்தின் மீதுள்ள பிரமரந்திரக் கல்லை ஏற்றினான் ராஜராஜன் என்பது வரை கட்டுக் கதைகளுக்கு அளவே இல்லை. ஆனால் உண்மையில் நடந்தது வேறு.

மகுடாகமம் என்ற ஆகமம் சுட்டியுள்ள விதிகளின்படி, இந்தக் கோவில் கட்டப்பட்டுள்ளது. தஞ்சைக்குத் தென் மேற்கே புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குன்னாண்டார் கோவில் பகுதியில் இருந்த குன்றுகளில் இருந்தே கோவில் கட்டுமானத்திற்கான கற்கள் வெட்டப்பட்டுள்ளன என்கிறார் வரலாற்று ஆய்வாளர் குடவாயில் பாலசுப்பிரமணியன்.

மொத்தம் 30.18 மீட்டர் சதுர அளவுடைய உயர்ந்த மேடையின் மீது, 216 அடி உயரத்தில் ஸ்ரீவிமானம் எனப்படும் கருவறையும் அதன் மீதான விமானமும் சேர்ந்த கட்டுமானம் அமைந்துள்ளது. விமானத்தின் கூடு பிரமிட் வடிவில் சதுரமாகத் தொடங்கி மேலே வட்டமாக முடிகிறது. விமானத்தின் உச்சியில் பல துண்டுகளால் ஆன பிரமரந்திரக் கல்லும் அதன்  மீது, 12 அடி உயர கலசமும் அமைக்கப்பட்டுள்ளன.



விமானத்தின் உள்ளே, 13 அடி உயரத்தில் தஞ்சைப் பெருவுடையார் பிரமாண்டமான லிங்க வடிவில் அமைக்கப்பட்டுள்ளார்.  55 அடி சுற்றளவுள்ள வட்ட பீடமும், 6 அடி நீளமுள்ள கோமுகமும் லிங்க மூர்த்திக்கு அணி செய்கின்றன. கருவறையைச் சுற்றி சாந்தாரம் எனப்படும் உட்பிராகாரம் உள்ளது. இதுவே முதல் பிராகாரமாகக் கருதப்படுகிறது.

கருவறையை அடுத்து அர்த்தமண்டபம், மகா மண்டபம், முக மண்டபம் ஆகியவை அமைந்துள்ளன. முக மண்டபத்திற்கு எதிரே, பலிபீடம், கொடிமரம், ரிஷபக் கொட்டில் எனப்படும் பிரமாண்டமான ஒரே கல்லில் அமைந்த நந்தி மண்டபம் ஆகியவை உள்ளன.

கோவிலின் சுற்றாலயத்தில், விநாயகர், முருகன், சண்டீசர் சந்நிதிகளும், வடக்கு நோக்கி பெரிய நாயகி அம்மையின் கோவிலும் அமைந்துள்ளன. இவை தவிர எண்திசைக் காவலர்கள் உள்ளிட்ட தெய்வங்களுக்கு என மொத்தம் 36 பரிவார ஆலயங்கள் காணப்படுகின்றன

கோவிலின் கோட்டைச் சுவரை ஒட்டி, திருச்சுற்று மாளிகை நான்குபுறமும் அமைக்கப்பட்டுள்ளது. ராஜராஜன் காலத்தில் இரண்டு அடுக்குகளாக அமைக்கப்பட்ட திருச்சுற்று மாளிகை, தற்போது தரைத் தளத்தோடு மட்டும் காணப்படுகிறது

ராஜராஜன் காலம் வரை கோவில் வாசல்களில் ராஜகோபுரங்களை பிரமாண்டமாகக் கட்டும் மரபு ஏற்படவில்லை. ராஜராஜன் தான் முதன் முதலாக பெரிய கோவிலின் வாசலில், ஐந்து நிலைகளோடு கூடிய கேரளாந்தகன் வாயில் என்ற ராஜகோபுரத்தை அமைத்தான். உள் மதிலில் இரண்டாம் ராஜகோபுரமாக, 3 நிலைகளோடு ராஜராஜன் திருவாயில் எனப்படும் கோபுரத்தையும் அமைத்தான்.

தற்போது கோவிலைச் சுற்றிக் காணப்படும் அகழி, இரண்டு கோட்டை சுவர்கள் மற்றும் கொத்தளங்கள் ஆகியவை தஞ்சை நாயக்க மன்னர்களின் காலத்தில் அமைக்கப்பட்டவை என்கிறார் வரலாற்று ஆய்வாளர் குடவாயில் பாலசுப்பிரமணியன்.

ராஜராஜன் இந்தக் கோவிலைக் கட்டும்போது கருவறை விமானம், அதனோடு கூடிய மண்டபம், பிராகாரத்தில் சண்டீசர் ஆலயம் ஆகியவை மட்டுமே அமைக்கப்பட்டன. பொதுயுகம் 13ம் நுாற்றாண்டில், பெயர் தெரியாத ஒரு பாண்டிய மன்னனால் உலகு முழுதுடைய நாச்சியார் என்ற பெயரில், பெரிய நாயகி அம்மன் சந்நிதியும், தஞ்சை நாயக்க மன்னர் வம்சத்தை தோற்றுவித்த செவ்வப்ப நாயக்கரால் சுப்பிரமணியர் சந்நிதியும் கட்டப்பட்டன.



அதே செவ்வப்ப நாயக்கர் காலத்தை அடுத்து, பிரமாண்டமாக ஒரே கல்லில் வடிக்கப்பட்ட நந்தியும் அதன் மீதான மண்டபமும் கட்டப்பட்டுள்ளன. 18ம் நுாற்றாண்டில் பிராகாரத்தில் உள்ள விநாயகர் ஆலயத்தை சரபோஜி மன்னர் கட்டுவித்தார். பொதுயுகம் 750ம் ஆண்டு இரண்டாம் நந்திவர்மனால் கட்டப்பட்ட நந்திபுரம் என்ற நகரம் அழியவே அங்கிருந்த ஆயிரத் தளியில் இருந்த 108 லிங்கங்கள் பராமரிப்பு இன்றி கிடந்தன. அவற்றை எடுத்து வந்து திருமாளிகைப் பத்தியில் நிலை நிறுத்தியவரும் சரபோஜி மன்னர் தான் என்று கூறுகிறது 19ம் நுாற்றாண்டைச் சேர்ந்த மராட்டிய மோடி ஆவணம்.

பெரிய கோயிலின் தத்துவம்

இறைவன், தட்சிணாமூர்த்தி, நடராஜர் எனப்படும் உருவங்களாகவும், அறிவுப் பெருவெளி எனப்படும் அருவமாகவும், உருவம், அருவம் என அறிய முடியாமல் அருவுருவ நிலையில் உள்ள லிங்க வடிவத்தின் மூலமாகவும் மூன்று விதங்களில் உயிர்களுக்கு அருள் செய்வான் என்பது சைவ சித்தாந்தம்.

இந்த மூன்று நிலைகளில் அறிவுப் பெருவெளி எனப்படும் சிதாகாச வழிபாட்டையே மகுடாகமம் விதந்து ஓதுகிறது. அதையே தாண்டவேஸ்வரர் வழிபாடு என்கிறது, சிதம்பரத்தில் உள்ள நடராசப் பெருமான் இந்த மூன்று நிலையிலும் உயிர்களுக்கு அருள்கிறான் என்பதைக் குறிப்பிட வரும் இடத்தில், அவர் சிற்பர வியோமமாக அதாவது அறிவுப்பெருவெளியாக நின்று அருள்கிறார் என பெரியபுராணத்தில் குறிப்பிடுவார் சேக்கிழார்.

இந்த சிதாகாச வழிபாட்டையே பெரிய கோவிலின் கருவறையில் ராஜராஜன் அமைத்துள்ளான் என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள். பெரிய கோவிலின் கருவறையில் லிங்கத்தின் மேற்பகுதியில், உச்சி வரை உட்கூடாக அதாவது வெற்றிடமாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த வெற்றிடமே அறிவுப் பெருவெளி. இதையே ஆடல்வல்லானாகப் பார்த்தான் ராஜராஜன். ஆக ஒரே இடத்தில் 3 வடிவங்களில் இறைவனை தரிசிக்க வழி செய்தான்.

கருவறையில் உள்ள லிங்கத்தை வழக்கம் போல் உடையார், நாயனார் என்று மட்டும் குறிப்பிடாமல், “ஸ்ரீராஜராஜதேவர் எழுந்தருள்வித்த தட்சிண மேரு விடங்கர்” என்றும் “தட்சிண மேரு விடங்கரான ஆடல்வல்லார்” என்றும் கல்வெட்டுகளில் குறிப்பிட்டுள்ளான் ராஜராஜன்.

இதை உறுதிப்படுத்தும் விதத்தில் முதல் பிராகாரமான சாந்தாரச் சுற்றில், ஆடல்வல்லானின் இயக்கத்தை அடையாளப்படுத்துவதற்காக நடனத்தின் 108 கரணச் சிற்பங்களை வடிக்கத் தொடங்கி அவற்றில் 81 சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன, சாந்தாரச் சுற்றில் 2ம் தளத்தில் உள்ள சிறிய கருவறை போன்ற இடத்தில் ஆடல்வல்லான் திருமேனி இடம் பெற்றிருக்கலாம் எனக் கருதுகின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள்.

ஓவியக் கலைக்கூடம்

கட்டுமானத்திலேயே இப்படி பல நுட்பங்களைக் கொண்டுள்ள பெரிய கோவில் விமானத்தில், சாந்தாரச் சுற்றில் இரண்டு தளங்களில் ஓவியக் கலைக்கூடமே அமைந்துள்ளது, ராஜராஜன் காலத்தில் வரையப்பட்ட முழுமையான சுந்தரர் வரலாறு, தில்லைப் பெருங்கோவிலில் ராஜராஜனும் அவனது தேவியரும் வழிபடும் காட்சிகள், ராஜராஜன், கருவூர்த் தேவர் எனக் கருதப்பட்டு இன்று வரை விவாதத்திற்குள்ளாகி வரும் சனகாதி முனிகள் நால்வர் ஓவியம், திரிபுராந்தகர் ஓவியம், ராஜராஜேச்சரத்து பரமசுவாமி முன்பு ராஜராஜனும் அவரது தேவியர் மற்றும் குடும்பத்தவர்கள் அமர்ந்து வழிபடும் ஓவியம் என எண்ணற்ற ஓவியங்கள் இடம் பெற்றுள்ளன.

சாந்தாரச் சுற்றில் ராஜராஜன் காலத்தில் வரையப்பட்ட ஓவியங்கள் மீதே நாயக்கர் காலத்தில் பல ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன,அங்கிருக்கும் ஓவியங்களில் இதுவரை மூன்றில் ஒரு பங்கே வெளியுலகிற்குத் தெரியவந்துள்ளன

கட்டுமானம், ஓவியம் மட்டுமின்றி சிற்பக் கலையிலும் பெரிய கோவிலுக்கு தனிச்சிறப்புகள் உண்டு. இறைவனின் ஐந்து வடிவங்கள் ஆகமங்களில் குறிப்பிடப்பட்டுள்ள தெய்வங்கள் என சிற்பங்களின் கலைக் களஞ்சியமாகத் திகழ்கிறது பெரிய கோவில்.

அதேபோல் ஆடல்வல்லான் உள்ளிட்ட செப்புத் திருமேனிகளும் சோழர் கால படிமக் கலைக்கு எடுத்துக் காட்டாக கோவிலில் உள்ளன.

விமானம் எப்படிக் கட்டப்பட்டது?

பெரிய கோவில் என்ற உடனே இவ்வளவு பெரிய லிங்கத்தை எப்படி கோவிலுக்குள் அமைத்தான் ராஜராஜன் என்ற கேள்வி வரும், மொத்தம் 216 அடி உயரமுடைய இந்த விமானத்தின் கட்டுமானம் எவ்வாறு அமைக்கப்பட்டது என்பதற்கான ஆவணங்கள் எதுவும் கிடைக்கவில்லை. கோவிலின் தளத்தில் லிங்கத்தை முதலில் அமைத்து அதன்பின்பே விமானம் கட்டப்பட்டுள்ளது என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள். அதேநேரம், எகிப்து நாட்டில் பிரமிடுகள் கட்டப்பட்டது போல், சுருள் போன்ற சாய்வு தளம் அமைத்து கட்டியிருக்கலாம் என்றும் கருதுகின்றனர்.




விமானம் உயர உயரே அதே உயரத்திற்கு மண்மேடு அமைத்து விமானம் கட்டப்பட்டிருக்கலாம் என்றும் கட்டுமானம் நிறைவுற்ற பின்பு  மண்மேட்டை அகற்றுதல் எளிது என்றும் கூறுகின்றனர். சமீப காலம் வரை, கோவிலுக்குத் தென்புறம் ஒன்றரை கிலோமீட்டர் துாரத்திற்கு நீண்ட மண்மேடு இருந்ததாகவும் இந்த மண்மேடு விமானத்தைச் சுற்றி சுருள் வடிவில் அமைக்கப்பட்ட மண்ணாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

முதல் கல்வெட்டே வடமொழிதான்

ஆடல்வல்லான் என்ற சொல்லை அதிகளவில் பயன்படுத்திய ராஜராஜனின் முதல் கல்வெட்டு, சண்டீசர் கோவிலுக்கு எதிரே கோவிலின் அதிஷ்டானத்து பட்டிகையில் இடம் பெற்றுள்ளது. சமஸ்கிருதத்தில், அனுஷ்டுப் யாப்பில் எழுதப்பட்டுள்ள அந்தக் கல்வெட்டில்,

ஏதத் விஸ்வ ந்ருபஸ்ரேணி மெளலி மாலோப லாளிதம்

சாசனம் ராஜராஜஸ்ய ராஜகேசரி வர்மன:

என்று முதல் சுலோகம் தொடங்குகிறது. அதையடுத்து ராஜராஜனின் புகழ் பெற்ற மெய்க்கீர்த்தியான திருமகள் போல பெருநிலச் செல்வியும் என்ற தமிழ்க் கல்வெட்டு தொடங்குகிறது. மெய்க்கீர்த்தி என்ற மரபைத் தொடங்கி வைத்தவனும் ராஜராஜன் தான்.

கோவிலைக் கட்டுவித்து அதற்கு ராஜராஜன் கொடுத்த பொன்னும் மணியுமான கொடைகளைக் கணக்கிட்டால் இன்றைய பணமதிப்பிற்கு மில்லியன், பில்லியனைத் தாண்டும் என்கின்றனர் வரலாற்று நிபணர்கள். இவ்வளவு பெரிய விமானம் முழுமையும் அவன் பொன்னால் கவசமிட்டான் என்ற கல்வெட்டு ஒன்றே அவன் அளித்த கொடையின் பிரமாண்டத்தையும் காட்டி நிற்கிறது.

ஆயிரக்கணக்கில் பணியாளர்கள்

கோவிலில் தினசரி இறைவன் முன்பு ஆடல் மூலம் வழிபாடு செய்ய, 477 ஆடல் மகளிர், 12 நட்டுவனார்கள், கானம் பாடுபவர்கள் 5 பேர், புல்லாங்குழல் இசைக்க மூவனர், தமிழ் பாட மூவர், ஆரியம் பாடுவார் மூவர், என 700க்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்கள் நியமிக்கப்பட்டனர்

கோவில் நிர்வாகத்திற்கு 190 பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். 118 ஊர்களில் இருந்து தேர்வு செய்யப்பட்ட காவலர்கள் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர். தில்லையில் மறைந்திருந்த திருமுறைகளை மீட்ட ராஜராஜனுக்கு சிவபாதசேகரன், திருமுறை கண்ட சோழன் என்ற பட்டப் பெயர்களும் உண்டு.

திருமுறைகள் மேல் ஈடுபாடு கொண்டிருந்தமையால், தேவாரம் பாட மட்டும் 48 பேரும், உடுக்கை வாசிக்க ஒருவரும், கொட்டி மத்தளம் வாசிக்க ஒருவரும் ராஜராஜனால் நியமிக்கப்பட்டனர். திருஞானசம்பந்தன், திருநாவுக்கரையன், ஆரூரன், எடுத்தபாதம், சிவக்கொழுந்து, காபாலிகவாலி, பெண்ணோர் பாகன் என இந்த 50 பேரின் இயற்பெயர்களும் சைவ சமயத்தோடு தொடர்புடையனவாக குறிப்பிடப்பட்டுள்ளன. அதேநேரம் தேவாரம் ஓத வேண்டும் என்றால் ஆகமப்படி சிவதீட்சை பெற வேண்டும் என்ற அடிப்படையில் இவர்கள் சிவதீட்சை பெற்றனர் என்பதையும் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்களின் தீட்சைப் பெயர்களாக ஞானசிவன், பூர்வசிவன், தர்மசிவன். சதாசிவன். அகோரசிவன், யோகசிவன் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன

காலமாற்றங்களில் ஏற்றம்

சோழர் காலத்திற்குப் பிறகு நாயக்க மன்னர்கள் காலத்திலும், அதன்பின் மராட்டிய மன்னர்கள் காலத்திலும் பெரிய கோவில் பல்வேறு ஏற்றங்களையும் மாற்றங்களையும் பெற்று மேம்பட்டுள்ளது. இரண்டு காலகட்டங்களைச் சேர்ந்த ஓவியங்கள், செப்புத்திருமேனிகள் இன்றளவும் கோவிலில் உள்ளன.

19ம் நுாற்றாண்டு வரை பெரிய கோவிலில் 5 தேர்கள் ஓடியதற்கான ஆவணங்கள் உள்ளன. 1818ம் ஆண்டில், நடந்த தேரோட்டத்தில் தேர் இழுப்பதற்காக 27 ஆயிரத்து 394 நபர்கள் வந்துள்ளனர் என்கிறது மோடி ஆவணம் குறிப்பிடுகிறது. அதன்பின் பராமரிப்பின்றி தேர்கள் பழுதுற்றன. கடந்த 2015ம் ஆண்டு ஏப்ரல் மாதம் புதிய தேர் செய்யப்பட்டு தற்போது ஆண்டுதோறும் தேரோட்டம் நடந்து வருகிறது.

மாமன்னன் ராஜராஜ சோழனால் இறைவனுக்குப் பேரன்போடு கட்டப் பெற்ற பெரிய கோவில், இன்று 7 நிர்வாகங்களின் கீழ் இயங்கி வருகிறது,. அரண்மனை தேவஸ்தானம், இந்து சமய அறநிலையத் துறை, மத்திய தொல்லியல் துறை, மாநில தொல்லியல் துறை, பொதுப்பணித் துறை, தேசிய நினைவுச் சின்னங்கள் ஆணையம், யுனெஸ்கோ ஆகிய 7 அமைப்புகள் ஆலயத்தை இன்று நிர்வகித்து வருகின்றன. குறிப்பாக மத்திய தொல்லியல் துறை நேரடியாக கோவிலை நிர்வகித்து வருவதால் அதன் பழமை மாறாமல் காக்கப்பட்டு வருகிறது.

தொடரும் கற்பனைக் கதைகள்

தஞ்சைப் பெரிய கோவில் என்றாலே கற்பனைக் கதைகளுக்கும் பஞ்சமில்லை. நிழல் விழாத கோபுரம், சாரப்பள்ளத்தில் இருந்து மண்ணால் சாரம் அமைக்கப்பட்டது, அந்தக் கல்லை அழகி என்ற கிழவி கொடுத்த கதை, வளரும் நந்தி, விமானத்தில் உள்ள தொப்பி அணிந்த ஐரோப்பியர் உருவம், கருவூர்த் தேவர் தனது தாம்பூலத்தை உமிழ்ந்து பெருவுடையாருக்கு அட்டபந்தன மருந்து சாத்தியது என கடந்த காலங்களில் பல கட்டுக் கதைகள் உலவின.

இன்று அவற்றின் தொடர்ச்சியாக, கோள்களின் கதிர்வீச்சுகள் கோவிலின் மையத்தில் குவியுமாறு கட்டப்பட்டுள்ளது. மாமன்னன் ராஜராஜ சோழனின் தமிழ்ப் பற்றை விளக்கும் வகையில் லிங்கம் 12 அடி, இடைவெளி 18 அடி, சிவலிங்கத்திற்கும் நந்திக்கும் இடைவெளி 247 அடி, கோவில் ஒரு மலையை படிப்படியாக செதுக்கி உருவாக்கப்பட்டது என பல்வேறு கட்டுக் கதைகள் இந்த டிஜிட்டல் யுகத்திலும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன.

தந்தையைத் தொடர்ந்து, மகன் ராஜேந்திர சோழன் கங்கை கொண்ட சோழபுரத்தில் மாபெரும் கோவில் ஒன்றைக் கட்டினான், கம்பீரத்தில் தஞ்சைப் பெரிய கோவில் ஆண் தன்மையையும், கங்கை கொண்ட சோழபுரம் பெண் தன்மையையும் கொண்டிருப்பதாகக் கூறுகின்றனர் வரலாற்று நிபுணர்கள்.

விஜயாலயச் சோழனின் பிற்கால சோழர் பரம்பரை முடிந்து, கீழைச் சளுக்கிய சோழ பரம்பரை தொடங்கி அதில் வந்த 3ம் குலோத்துங்கன் கட்டிய திருபுவனம் கம்பகரேசுவரர் ஆலயமும் தஞ்சைப் பெரிய கோவில் பாணியிலேயே உத்தம விமானத்துடன் அமைந்தது.  ஆக இவற்றை சேர்த்து தற்போது தமிழகத்தில் 6 உத்தம  விமானங்கள் கொண்ட ஆலயங்கள் உள்ளன.

கடந்த 2010ம் ஆண்டு  தஞ்சைப் பெரிய கோவிலின் ஆயிரமாவது ஆண்டுப் பெருவிழா வெகு கோலாகலத்துடன் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது,. கோவிலில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஆயிரம் நடனக் கலைஞர்கள் பங்கேற்ற பரதநாட்டிய நிகழ்ச்சியும் இடம் பெற்றது.

இனி எப்போதும் இப்படி அமையப் போவதில்லை என்று கனகம்பீரத்துடன் திகழும் தஞ்சைப் பெரிய கோவில், தமிழர்களின் தனித்த அடையாளம் என்பதில் ஐயமில்லை. இன்னும் பல ஆயிரம் ஆண்டுகளைக் கடந்து வாழும்; காலத்தை வென்ற காவியமாகத் திகழும்.

(இந்தக் கட்டுரை நியூயஸ் 18 தொலைக்காட்சியின் 'கதையல்ல வரலாறு' நிகழ்ச்சிக்காக எழுதி, 03-02-2020 அன்று ஒளிபரப்பானது. இங்கு எடிட் செய்யப்படாத முழுவடிவம் இடம் பெற்றுள்ளது.

அந்த நிகழ்ச்சியின் இணைப்பைப் பெற தஞ்சைப் பெரிய கோவில் வரலாறு என்ற சுட்டியை சொடுக்கவும்)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Translate