- சித்தாந்த பண்டித பூஷணம் ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளை, திருநெல்வேலி பேட்டை
பரமசிவனார் சகல தேவர்களுக்கும் ராஜர். அவராலயம் அரசமாளிகை. அரசமாளிகையில் அரசன், அவன் மனைவிமார், மைந்தர், அருள்பெற்றுடையார், உத்தியோகஸ்தர், குற்றேவலாளர் முதலிய பலருமிருப்பர். அப்படியே சிவாலயத்திற் சிவராஜர், அவர் மனைவியராகிய பார்வதீ தேவியார், மைந்தராகிய விநாயகர், பைரவர், வீரபத்திரர், சுப்பிரமணியர், அருள்பெற்றுடையராகிய நாயன்மார், உத்தியோகஸ்தராகிய பிரம விஷ்ணுவாதியோர், குற்றேவலாளராகிய நவக்கிரகாதியன முதலியோரெல்லாங் கூடியிருப்பர்.
அரசமாளிகையில் அரசன் முதற் கீழானவர் வரை கூடியிருப்பதனாலேயே அவரெல்லார்க்கும் சம அந்தஸ்து உண்டென்று சொல்லிவிட முடியாது. அப்படியே சிவாலயத்திற் சிவபிரான் உள்படப் பல தேவர்கள் இருப்பதனாலே அவரெல்லாஞ் சமமாய் விடமாட்டார்.
பார்வதீதேவியாருக்குச் சொந்தக் கோயிலிருக்குமாயின் அது அவருடைய தனிக்கிருகமாகும். அப்படியே விநாயகராதி திருக்குமாரராலயங்களும், ஞானசம்பந்தராதி அருளாளராலயங்களும், பிரமவிஷ்ணுவாதி உத்தியோகஸ்தராலயங்களும், நவக்கிரகாதி குற்றேவலாளராலயங்களும் அவரவர்க்குத் தனியாய கிருகங்களென்க.
நெல்லையப்பர் கோயில் |
மலையாளத்தரசர், மைசூரரசர், ஐதராபாத்து நைஜாம் முதலியரெல்லாம் அரசரே. அவருந் தங்குடிகளிடமிருந்து வந்தனை வழிபாட்டைப் பெறுதற்குரியவர் தான். ஆயின் அவ்வந்தனை வழிபாட்டுக்கு அளவுண்டு. அந்த அளவுட்பட்டவற்றையே அவ்வரசர் அங்கீகரிக்கலாம். அவ்வளவின் மிக்குச் செலுத்தப்படுவதை அவர் தமக்கும் அரசராய ஆறாவது ஜார்ஜ் மன்னருக்கே சமர்ப்பிக்க வேண்டும். அந்த ஜார்ஜ் அரசருடைய ஆட்சிமுறைப் புத்தகத்தில் அது கண்டது.
6ம் ஜார்ஜ் மன்னர்- 1932ம் ஆண்டு முத்ல 1952ம் ஆண்டு வரை பிரிட்டனின் மன்னராக இருந்தவர் |
ஆனால் மலையாளத்து மகாராஜாவுக்கு ஒரு ராஜ்யம் உண்டு. அவ்விராஜ்யத்திலுள்ள குடிகளிற் பலர் தம் மகாராஜாவுக்கும் ராஜாவாக ஆறாம் ஜார்ஜ் என்பவர் உளர் என்பதையறியாமல் அம்மகாராஜாவையேராஜராஜனென எண்ணி அவ்வாறாஞ் ஜார்ஜ் மன்னருக்குச் செய்ய வேண்டிய மரியாதைகளை யெல்லாம் தம் மலையாளராஜாவுக்குச் செய்யலாம்.
அப்படியே பார்வதீ தேவியார் முதல் அவரிற் கீழிட்ட தெய்வங்களுக்கும் தனித்தனி மதங்களுண்டு. அவ்வம் மதத்தவர்கள் அவ்வத் தெய்வங்களின் குடிகள். அவர்கள் அத்தெய்வங்களுக்கெல்லாந் தெய்வமாகிய சிவபிரானுண்மையை அறியாமல் தம்தம் மததெய்வமே சகலதெய்வங்களுக்கும் மேலான தெய்வமென்றெண்ணி அச்சிவபிரானாருக்குச் செய்ய வேண்டிய வந்தனையாதியவற்றை அத்தெய்வத்துக்குச் செய்வர். மதத் துவேஷங்களுண்டாவதற்குக் காரணம் அதுவே.
எல்லா மதங்களிலுமுள்ளவர் தம்தம் மததெய்வத்தை வணங்கலாம். அவரிஷ்டம் ஒவ்வோரளவிற்குப் பூர்த்தியாவது சரதம். ஆனால் அவரெல்லாம் பரமசிவனாரின் முழுமுதன்மையை என்றும் மறத்தல் கூடாது. அம்முதன்மைக்கு விபரீதம் பேசுவது தப்பு. சைவ சமயத்தவர் அவ்வுண்மையையெப்போதும் பலவித உபாயங்களாலும் உலகிற்கு அறிவுறுத்திக் கொண்டிருக்க வேண்டும். உலகிற் சமயவொற்றுமையை யுண்டாக்குவதற்கு வழி அதுவே.
சிவன் கோயில்கள், உமை கோயில்கள், கணபதி கோயில்கள், பைரவர் கோயில்கள், வீரபத்திரர் கோயில்கள், முருகர் கோயில்கள், பெருமாள் கோயில்கள் முதலியவெல்லாம் சைவாலயங்கள் எனவே படும். அவையடங்கலும் சிவாகமோக்தமானவைகளே.
அவ்வாகமத்தின்படிச் சிவன் கோயில்களிற் சிவபிரானை முழுமுதற் கடவுளெனவும், விநாயகராதியோரை அவரவர் கோவில்களிற் சிவகுமாரரெனவும், பெருமாள் கோயில்களிற் பெருமாளைச் சிவதாசரெனவுமே பாவனை கொண்டு அதற்கேற்ற மந்திரங் கிரியைகளுடன் பிரதிஷ்டிக்கப்பட்டிருக்கும். சிவாலயங்களிற் சிவனோடு அத்தெய்வங்களுக்குள்ள சம்பந்தமே அவ்வாலயங்களுக்கு வெளியிலும் உண்டென்பதைச் சொல்லவும் வேண்டுமா?
சிவாலயங்களிற் பரிவார தேவதையாகப் பெருமாளிருப்பது பிரத்தியக்ஷம். அங்கு அப்பெருமாளைச் சிவனோடொத்தவரென்றாவது சிவனுக்கு மேலானவரென்றாவது பிரதிஷ்டித்துச் சிவாகமங்கள் இடங்கொடுத்திருக்குமா? மாட்டா. அந்த முறையிற்றானே பெருமாளுக்குரிய தனியாலயங்களிலும் அவர் பிரதிஷ்டிக்கப்பட்டிருக்க வேண்டும்? பெருமாள் கோயில்களுட் புராதனமானவையெல்லாம் அப்படிப்பட்டனவே.
நிலாத்திங்கள் துண்டப் பெருமாள், காஞ்சிபு ரம் ஏகாம்பரேஸ்வரர் கோயில் |
நெல்லை கோவிந்தர், நெல்லையப்பர் கோயில் |
சிதம்பரம் கோவிந்தராஜப் பெருமாள் |
அச்சைவர் அக்கோயில்களிலுள்ள அப்பெருமாளைச் சிவனடியாரென்று நினைத்துக் கொண்டு வணங்கினால் தப்பென்னையென்பர் சிலர். அவ்வணக்கமுறை மாயாவாதக் கொள்கையாகும். பார்வதீ தேவியார் முதலியோருடைய கோயில் வணக்கங்களையும் மேற்சொல்லியவாறே கொள்க. பார்வதீதேவியாரின் கோயில்களுட் சாக்தேய தந்திரப்படியும் கணபதி கோயில்களுட் காணாபத்திய தந்திரப்படியும் குமரன் கோயில்களுட் கெளமார தந்திரப்படியும் மாறின சிலவுண்டு. வடநாட்டில் அவை காணப்படும். அவையும் சிவபரத்துவ சம்மதத்தை யங்கீகரியாதனவாயின் அவற்றிற்போய் வணங்குவதும் சைவருக்கு உசிதமாகாது.
எல்லாஞ் சைவமாயிருந்த கோயில்களுட் சில பல அங்ஙனம் அசைவமாயின. சாக்தேயாதி மதங்களிலுள்ளவரெல்லாம் அக்கோயில்களைக் கொண்டனர். அவற்றைத் தம் சமயத்துக்குத் திருப்புந்திறன் சைவருக்கில்லாமற் போயிற்று. இப்போது சிவாலயங்களுக்குள்ளேயே அவ்வாபத்து வந்திருக்கிறது.
சில சிவாலயங்களிலுள்ள பெருமாள் விக்கிரகத்தைப் பாஞ்சராத்திர வைகானஸாநுசாரிகளாகிய வைஷ்ணவர் பூசிக்கத் தொடங்கி விட்டனர். அவ்விக்கிரகத்தின் நெற்றியில் நாமத்தையுங் கோபியையுமே பார்க்கலாம். விபூதியைப் பார்ப்பது துர்லபம். அவ்விக்கிரகத்தை வைணவமத ரீதியாகவே பூசிக்க வேண்டும், அவ்வுரிமையுந் தகுதியும் சைவருக்குக் கிடையா, அவை தமக்கே யுண்டு, வைஷ்ணவர்தானே விஷ்ணுவைப் பூசிக்க வேண்டும் என்பன அவர் தொடுக்கும் வழக்கு.
இன்னுஞ் சிலநாட் கழித்தால் அங்குள்ள பார்வதீ தேவியாரின் விக்கிரகத்தைப் பூசிக்கத் தமக்கே`உரிமையுண்டென்று சாக்தேய சமயிகள் வருவர். அங்குள்ள கணபதி விக்கிரகத்தைப் பூசிக்கத் தமக்கே உரிமையுண்டென்று பைரவ சமயத்தார் வருவர். பிரம விஷ்ணு ருத்ரர் என்னும் மும்மூர்த்திகளுள் ஒருவராய ருத்ரரை வணங்குமிடமே சிவாலயங்களென்பர் சில மடவோர். அவ்வுருத்திரரைப் பரதெய்வமென்பவர் பாசுபதமென்னுஞ் சமயிகளாவர். பாசுபத சமயம் சைவத்தின் வேறு. அவ்வாலயத்திலுள்ள சிவலிங்கத்தைப் பூசிக்கும் உரிமை தமக்கே யுண்டென்று அம்மடவோரைத் துணை சேர்த்துக் கொண்டு அப்பாசுபத சமயிகள் வருவர். அவரெல்லாம் அவ்வைஷ்ணவர் போல தம்தம் மதரீதியாகவே அப்பூசையாதிகளை நடத்தத் துணிவர். அம் மதரீதியாவது அந்தந்த மதத்துத் தெய்வமே பரதெய்வம்; சிவபிரான் அத்தெய்வங்களுக் கெல்லாந் தனித் தனி அடக்கம் என்பதே.
அரிட்டாபட்டி லகுலீசர் |
லகுலீசர் |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக