செவ்வாய், 4 ஏப்ரல், 2023

சுயமரியாதை இயக்கச் சூறாவளியும் பிரான்ஸ் தமிழச்சியும்

கடந்த இரு மாதங்களாக பிரான்ஸ் தமிழச்சி என்பவர், திராவிடர் விடுதலைக் கழக அமைப்பின் மீதும் அவ்வமைப்பு சார்ந்த நபர்கள் மீதும் பாலியல் குற்றச்சாட்டுகளை பகிரங்கமாக சுமத்தி வருகிறார்.

முக்கிய நபர்கள் மீதான அவரது குற்றச்சாட்டு குறித்து பிரதான காட்சி மற்றும் அச்சு ஊடகங்கள் கண்டுகொள்ளவில்லை.
காட்சி ஊடகங்களில் இந்த விவாதம் இடம்பெறாததை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. அந்தளவுக்கு குறிப்பிட்ட தரப்பின் செல்வாக்கு அங்கு வேலை செய்கிறது அல்லது அந்த தரப்பின் கோபத்திற்கு ஆளாக வேண்டாம் என்ற அச்சம் காட்சி ஊடகங்களை பீடித்திருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.
திரு. ஈ.வெ.ரா. சமூக விழுமியங்களை உடைக்க வந்தவராக தன்னை அறிவித்துக் கொண்டவர். எனவே குடும்பம் உள்ளிட்ட சமூக அமைப்புகள் குறித்த அவரது கருத்துகள் பேரதிர்ச்சியை ஏற்படுத்துபவையே.
அதோடு நின்றிருந்தால் பரவாயில்லை. அந்த கருத்துகளை சிலர் பின்பற்றத் தொடங்கும்போது சமூகத்தில் ஏற்படும் குழப்பங்கள் நீண்டகால விளைவுகளையும் ஏற்படுத்துகின்றன.
அப்படி ஒரு விளைவால், தான் பாதிக்கப்பட்டதாக பிரான்ஸ் தமிழச்சி குற்றம்சாட்டி வருகிறார். ஈ.வெ.ரா. பெயரால் அவரது கொள்கைகளின் பெயரால் பெண்கள் சிலர் பாலியல் சுரண்டலுக்கு உட்படுத்தப்படுவதாக பேசி வருகிறார்.
உண்மையில் ஈ.வெ.ரா.வின் பெண் விடுதலை குறித்த கருத்துகளை சிலர் தங்களின் பாலியல் சுரண்டலுக்குப் பயன்படுத்திக் கொள்கின்றனர் என்றும் அவர் கூறிவருகிறார்.
கௌதம புத்தரின் போதனைகளை அவரது சீடர்கள் சரியாகப் புரிந்து கொள்ளாததாலேயே மாத்யமிகம், யோகாசாரம் உள்ளிட்ட பல பிரிவுகள் பௌத்தத்தில் தோன்றின என்பது வரலாறு.
தெளிவாக சொன்ன புத்தருக்கே அந்நிலைமை எனில் கணந்தோறும் மனநிலை மாறும் சாதாரண மானிடரின் கருத்துகள் எவ்வளவு திரிவுபடுத்தப்படும் என்பதில் சந்தேகம் எழ வேண்டியதில்லை.
அதனால்தான் 'எப்பொருள் யார்யார் வாய்' என்ற குறள் எழுந்தது.
1930களில் சுயமரியாதை இயக்கத்தால் தமிழகம் கலக்கமுற்றிருந்த வேளையில், சித்தாந்த பண்டித பூஷணம் ஆ. ஈசுரமூர்த்திப் பிள்ளையவர்கள் அவ்வியக்கத்தை நோக்கி 1603 கேள்விகள் எழுப்பி, 'சுயமரியாதை இயக்கச் சூறாவளி' என்ற நூலை எழுதி 1946ல் வெளியிட்டார்.
முழுவதும் தர்க்கத்தை அடிப்படையாகக் கொண்ட அந்தக் கேள்விகளை இன்றைய நிலையில் புரிந்து கொள்வது கடினமே.
ஆ.ஈ. அவர்களின் தர்க்கத் திறனுக்கு இந்நூலே சான்று.
பிரான்ஸ் தமிழச்சி விவகாரத்தை ஒட்டி அதில் உள்ள இரண்டே இரண்டு கேள்விகளை இங்கே படமாக இணைத்துள்ளேன். விரைவில் இந்நூல் ஆ.ஈ. அவர்களின் படைப்புகள் என்ற தொகுதியில் இடம்பெறும்.

சுயமரியாதை இயக்கச் சூறாவளி நுாலில் இருந்து ஒரு பகுதி

இந்நூலுக்கு அவ்வியக்கத்தவர் இதுவரை மறுப்பு வெளியிடவில்லை என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

(ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளை படைப்புலகம் என்ற முகநுால் பக்கத்தில், 2022, மார்ச் 7ம் தேதி எழுதியது )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Translate