வெள்ளி, 30 ஆகஸ்ட், 2019

மரபுச் சைவம் × தமிழ்ச் சைவம்


கா.சு.பிள்ளை, மறைமலையடிகள் தொடங்கி இன்று சத்தியவேல் முருகன் வரை தமிழ்ச் சைவம் தனியாக கால்கொண்டு வளர்ந்துள்ளது. இருதரப்பையும் ஆவணப்படுத்த வேண்டும் என்பது என் விருப்பம். ஏன்? 

கடந்த 150 ஆண்டுகளுக்கு முன்பு சைவத்தில் புதிய பிரிவு தோன்றியது. முதலில் வடமொழியை ஓரளவு ஏற்றுக்கொண்ட அந்தப் பிரிவு சின்னாட்களிலேயே வடமொழியை முற்றிலுமாக ஒதுக்கியது. திருமுறைகளே போதுமானது என்றது. தமிழ் திட்டமிட்டு அழிக்கப்படுவதாக ஒப்பாரி வைத்தது.
மறைமலையடிகள்

கா.சு.பிள்ளை
இதன் அடிப்படை பிராமணர் மீதான வெறுப்பு. அவர்கள் அதிகாரத்தில் வகித்த பங்கு மீதான மனக்கசப்பு. இந்தப் பிரிவு உருவானதற்கு தெரிந்தோ தெரியாமலோ பிராமணர்களும் கணிசமான பங்களிப்பு செய்துள்ளனர்.
இப்பிரிவிற்கு வித்திட்டவர் மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை. அவருக்கு கருத்தளித்தவர் கால்டுவெல் என்கின்றனர். பிரிட்டிஷாரின் பிரித்தாளும் சூழ்ச்சி என்றும் கூறுகின்றனர்.
மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை
இந்தப் பிரிவு தமிழகத்தில் அதிகாரத்தில் இருந்த வேளாளர்கள், அவர்களுக்கு அடுத்த படிநிலையில் இருந்தவர்கள் அரசியல் ரீதியாக அணிதிரள கருத்தளவில் வித்திட்டது.
விளைவாக திருவிடர் கழகம், ஜஸ்டிஸ் கட்சி, திராவிடர் கழகம், திமுக, அதிமுக என தமிழக அரசியல் வரலாறே தலைகீழானது.
சமயமோ தமிழ் மொழி வெறியில் சிக்கி பக்தியை இழந்தது. பல்கால் ஓதி உணர வேண்டிய திருமுறைகளை இன்று சடங்குகளுக்குப் பயன்படுத்திப் பொருளீட்டும் நிலைக்கு வந்து நிற்கிறது. பிராமணர்களை சடங்குகளுக்காக பழித்த இவர்கள் 100 ஆண்டுகளில் அதே புள்ளியில் வந்து நிற்கின்றனர்.

உங்கள் சிவன் யார் என்று கேட்டால் இமயத்திலிருந்த தமிழன் என்று பதிலளிக்கும் நிலையில் உள்ளனர் தமிழ்ச் சைவர்கள். சித்தாந்த சாத்திரங்களுக்கு மூலம் வடமொழிதானே என்று கேட்டால் அதை எழுதியதும் தமிழன்தான் என்பார்கள். ஆனால் கடந்த 100 ஆண்டுகளில் இவர்களும் ஆகமங்களை தமிழாக்கவில்லை.
ஒட்டுமொத்தத்தில் குழப்பமே மிஞ்சியது. பிராமண வெறுப்பின் உச்சமாக 'வாழ்க அந்தணர்' கூட பாட வேண்டாம் என்கிறார் சைவ சித்தாந்தப் பெருமன்றத் தலைவர் நல்லூர் சரவணன்.
நல்லுார் சரவணன்
இந்த நிலையில் மரபுச் சைவர்கள் மற்றும் தமிழ்ச் சைவர்களின் எதிர்வினைகளை ஆவணப்படுத்துவதன் மூலம் சமூகத்தின் மீதான இதன் தாக்கங்களை அறிய முடியும் என நம்புகிறேன். இருதரப்பும் செய்தது என்ன செய்யத் தவறியது என்ன என்பதை அறிய முடியுமா என முயல்கிறேன்.
இருதரப்பிற்குமான கருத்துப் போர் ஒரு நுாற்றாண்டையும் கடந்து நடந்து வரும் நிலையில், இருதரப்பிலும் வெளிவந்த மறுப்பு நுால்கள், விளக்க நுால்கள் இதுவரை தொகுக்கப்படவில்லை. 
கடந்த 100 ஆண்டுகளில் தமிழ்ச் சைவத்தை எதிர்த்து எத்தனை நூல்களை மரபுச் சைவர்கள் வெளியிட்டுள்ளனர்?. எனக்குத் தெரிந்து சிலவற்றை இங்கே பட்டியலிடுகிறேன். 
1. அச்சுவேலி குமாரசாமிக் குருக்கள் இயற்றிய வேதாகம நிரூபணம் - 2 பகுதிகள்
2. மா.சாம்பசிவ பிள்ளை எழுதிய திருநான்மறை விளக்க ஆராய்ச்சி


3. ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளை எழுதிய நாடும் நவீனரும்
4. ஆ.ஈ. எழுதிய சைவாலயங்களில் சமஸ்கிருத மந்திரங்களே வேண்டும்
5. வித்வான் ச.ரத்நவேலன் தொகுத்த தமிழ்ச் சிவஞான போதம் மொழிபெயர்ப்பே
6. அதே தலைப்பில் தூத்துக்குடி ராமச்சங்குப் பாண்டியன் எழுதிய நூல்
இப்போதைக்கு இவைதான் என் நினைவில் உள்ளன. கடந்த 100 ஆண்டுகளில் மரபுச் சைவர்கள் வெளியிட்ட நூல்கள் மேலும் பல இருக்கும். அவற்றையும் தொகுக்க வேண்டும். 
இந்தத் தொகுப்பின் மூலம் சைவம் கடந்து வந்த பாதையை வரலாற்று ரீதியில் உணர முடியும். கருத்து வளத்தை மேலும் செழுமைப்படுத்த முடியும். ஆக்கப்பூர்வமான விவாதங்களை அதிகப்படுத்த முடியும். அதன் மூலம் சமூக மாற்றத்திற்கும் வித்திட முடியும் என நம்புகிறேன். 

2 கருத்துகள்:

  1. மரபுச் சைவம் என்றால் என்ன - தமிழ்ச் சைவம் என்றால் என்ன? இரண்டுக்கும் இடையே மொழி மட்டும் தான் பிரச்சினையா?

    பதிலளிநீக்கு
  2. விரைவில் இதற்கான பதில் அளிக்க முயல்கிறேன்.நன்றி.

    பதிலளிநீக்கு

Translate