மத்திய அரசு வகுத்துள்ள புதிய கல்விக் கொள்கையில் இந்திக்கு சிறப்பிடம் ஒதுக்கப்பட்டிருப்பது தமிழகத்தில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. 1937 1952 என இரண்டு முறை காங்கிரஸ் அரசு தமிழகத்தில் ஆட்சியில் இருந்தபோது இந்தியை திணிக்க முற்பட்டு தோல்வி கண்டது.
1937 ஆம் ஆண்டு முதல் இந்தியை கட்டாய கல்வி திட்டத்தில் கொண்டு வருவதற்காக அப்போதைய முதல்வர் ராஜாஜி கடும் முயற்சிகளை மேற்கொண்டிருந்தார்.
1938 - 39 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் சென்னை மாகாணத்தில் மொத்தம் 125 உயர்நிலைப்பள்ளிகளில் ஒன்று முதல் மூன்று படிவங்கள் வரை அதாவது ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை இந்தி கட்டாய பாடமொழியாக பயிற்றுவிக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானது.
இதற்கு நீதிக்கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. சுயமரியாதை இயக்கத்தினர் ஆங்காங்கே போராட்டங்களில் ஈடுபட்டனர்.
அதேநேரம் அன்று சைவ உலகத்திலிருந்த மிகப்பெரிய அறிஞர்களும் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டனர். சைவர்கள் நடத்திவந்த சிவநேசன் உள்ளிட்ட பத்திரிகைகளில் இந்தி திணிப்பு குறித்த கட்டுரைகள் அதிக அளவில் வெளியிடப்பட்டன.
இந்த சூழ்நிலையில் தான் 1939ஆம் ஆண்டு ஈசுரமூர்த்தி பிள்ளை 'பொது மொழி' என்ற தலைப்பில் சிவநேசனில் ஒரு தொடர் கட்டுரையை எழுதினார் . அந்த கட்டுரையை சிவநேசன் பத்திராதிபர் ராமசாமி செட்டியார் தனது திட்டக்குடி சிவநேசன் அச்சகத்தில் 'பொது மொழி' என்ற தலைப்பில் தனி நூலாக அச்சிட்டு வெளியிட்டார்.
பிள்ளையின் சமகாலத்தில் வாழ்ந்த சைவ அறிஞர்கள் இந்தி திணிப்பை எதிர்த்தனர். ஆனால் ஆங்கிலம் இந்தியாவின் பொது மொழியாக இருக்கலாம் என்று வழிமொழிந்தனர்.
ஈசுரமூர்த்தி பிள்ளை ஒரோ வகை அதை ஒத்துக்கொண்டாலும் அதற்கு மாற்றாக மற்றொரு ஏற்பாட்டையும் இந்த நூல் மூலம் அவர் முன்வைத்தார். அதுதான் சமஸ்கிருதத்தை இந்தியாவின் பொதுமொழியாக ஆக்குவது. தமிழகத்தில் வேறு எவரும் சமஸ்கிருதத்தை பொது மொழியாக ஆக்கலாம் என்று எழுதியதாக தெரியவில்லை.
இந்த நூலில் இந்தியை திணிப்பதற்காக காங்கிரஸ் தலைவர்கள் மேற்கொண்ட பவ்வேறு நடவடிக்கைகளை சுட்டுகிறார் பிள்ளை. இந்தியா இந்துஸ்தானியா என்ற போராட்டம் வந்தபோது இந்தியை காங்கிரஸ் தலைவர்கள் தூக்கி பிடித்ததை சுட்டிக்காட்டுகிறார்.
இந்தி உருது ஹிந்துஸ்தானி என்ற மூன்று மொழிகளுக்கும் இடையிலான ஒற்றுமை வேற்றுமைகள் குறித்து காங்கிரஸ் தலைவர்களிடையே நிலவிய கருத்து வேறுபாடுகளையும் முரண்பாடுகளையும் அப்போதைய நாளிதழ்களில் வெளிவந்த செய்தி ஆதாரங்களுடன் தொகுத்துள்ளார்.
ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளை |
இந்துக்களையும் இஸ்லாமியர்களையும் ஒற்றுமைப்படுத்துவது இந்தி என்று கூறப்பட்டாலும் இஸ்லாமியர்கள் அதைவிட உருதுவையே விரும்புவார்கள் என்று தக்க ஆதாரங்களுடன் காட்டுகிறார். உருது மொழியில் இஸ்லாமியர்களின் சமய நூல்கள் பல இருப்பதால் அவர்கள் உருதுவையே விரும்புவார்கள் என்கிறார்.
அதேநேரம் இந்தியாவின் ஒரு பகுதியில் சில கோடி மக்களால் பேசப்படும் இந்திமொழி ஏன் இந்தியா முழுவதும் பொது மொழி ஆக்கப்படவேண்டும் என்ற கேள்வியை முன்வைக்கிறார்.
1939இல் ஆங்கிலம் இந்தியா முழுவதும் அரசாண்டது போல் 'இந்தி இப்போதைக்கு இருக்கட்டும் என்று சொல்வார்கள் ; ஆனால் பின்னாளில் அதுவே அரசமொழியாக ஆகி விடும் ஆபத்து இருக்கிறது' என்று சுட்டிக் காட்டுகிறார். 'இம்மாகாண மொழிகள் ஆங்கிலத்தால் ஒளி இழப்பது போல் இந்தியாலும் ஒளி இழக்கவே செய்யும்' என அடித்துக் கூறுகிறார்.
ஆங்கிலம் எப்படி இந்தியாவில் படிப்படியாக நுழைந்ததோ அது போல இந்தியும் படிப்படியாக தமிழகத்தில் நுழைக்கப்படும் என்று அவர் சுட்டிக் காட்டுகிறார்.
அன்றைய கல்வி மந்திரி ஸி.ஜே.வார்க்கி என்பவர் அளித்த பேட்டியில் ' தமிழக மக்கள் வட இந்தியர்களுடன் பேசுவதற்கும் நாட்டின் பிற பாகங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் அமைச்சர்கள் மத்திய அரசோடு இணைந்து பணியாற்றவும் இந்துஸ்தானி வசதியாக இருக்கும் ' என்று குறிப்பிட்டது ஹிந்து பத்திரிக்கையில் வெளியானது.
இதை சுட்டிக்காட்டும் பிள்ளை, 'இது சென்னை மாகாண மக்களை ஏமாற்றும் வேலை' என்றார்.
ஆரம்பத்தில் ஆங்கில அரசை இந்தியாவில் ஆங்கிலத்தில் நடத்துவதற்காக குமாஸ்தாக்கள் தேவைப்பட்டனர். அந்த குமாஸ்தாக்களுக்கு குறைந்த சம்பளம். அந்த சம்பளத்துக்கு இங்கிலாந்திலிருந்து யாரும் வர மாட்டார்கள் . பரத கண்டத்து மக்களுக்கு கொஞ்சம் ஆங்கில மொழியறிவு கொடுத்து விட்டால் அவர்களில் அந்த குமாஸ்தாக்கள் கிடைத்து விடுவார்கள் என்ற நோக்கத்தில் இந்தியர்களுக்கு ஆங்கிலம் கற்பிக்க தொடங்கினர். ஆனால் இப்போது நாட்டில் ஆங்கில மொழி எல்லா மொழிகளுக்கும் அரசாக மிளிர தொடங்கி விட்டது.
பரத கண்டம் ஒரு நாடல்ல; இது ஒரு கண்டம். இதில் பல நாடுகள், பல மொழிகள் , பல சமயங்கள் , பல சாதிகள் பல சமூகங்கள் இருக்கின்றன . இந்த நிலையில் இதற்கு ஒரு பொது மொழி சாத்தியமா ? அப்படி அமைந்தால் இந்த நாட்டின் சமய மொழி ஆகிய சமஸ்கிருதமே பொது மொழியாக அமைய வேண்டும். ஒரு மொழியை இன்னொரு திறத்தாரிடம் சுமத்த வேண்டாம். இது தான் பொது மொழி என்று புதுமொழியை உண்டாக்க வேண்டாம். அவரவர் சொந்த மொழியை அவரவர் கற்று மகிழட்டும். சமஸ்கிருதத்தை இந்துக்களுக்கும் உருதுவை இஸ்லாமியர்களுக்கும் கட்டாயமாக்கலாம். மற்ற மொழிகளை விருப்பப்பாடமாக அமைப்பதே சரியான திட்டம்' என்று சுட்டிக்காட்டுகிறார்.
சமஸ்கிருதத்தைப் பற்றி சொல்ல வரும்போது பார்ப்பனர்கள் அதைத்தமது மொழி என்று கொண்டாடுவதை கிண்டலடிக்கிறார். ஒரு காலத்தில் அது பார்ப்பனர்களுக்கு சொந்தமாக இருந்தாலும் கூட பிற்காலத்தில் அது சான்றோர் அனைவருக்கும் சொந்தம் ஆகிவிட்டது என்று சுட்டிக்காட்டும் பிள்ளை, பார்ப்பனர் அஃது அறிந்து அடங்குவது உத்தமம் என்று வலியுறுத்துகிறார்.
இஸ்லாமியர்களின் சமய நூல்கள் அனைத்தும் உருதுவில் இருப்பதுபோல இந்துக்களின் சமய நூல்கள் அனைத்தும் சமஸ்கிருதத்தில் இருப்பதால் இந்துக்களுக்கு பொதுவான மொழியாக சமஸ்கிருதம் அமைய வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.
ஆனால் அன்றைய (1939 ஆம் ஆண்டு) தமிழர்கள் சமஸ்கிருதத்தை புறக்கணிக்க தொடங்கியதை கண்டிக்கிறார். தமிழர்கள் தமது சமய நூல்களில் உள்ள உண்மைகளை தெரிந்து கொள்வதற்காகவாவது சமஸ்கிருதத்தை ஆர்வத்தோடு கற்றுக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிடும் பிள்ளை பார்ப்பனர்கள் மற்ற தமிழர்களுக்கு சமஸ்கிருதத்தை கற்பிப்பார்கள் என்று நினைக்க வேண்டாம் என்று கூறிவிட்டு அவர்கள் அவ்வளவு கருணை உடையவர்கள் அல்லர் என வேதனை தெரிவிக்கிறார். பிள்ளை வடமொழி பயின்றவர் என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
' தமிழர் எந்த அளவிற்கு சமஸ்கிருதம் பயிலாத மட்டிகளாக இருக்கின்றனரோ அந்த அளவிற்கு பார்ப்பனரே நலம் பெறுவர்; தீங்கு தமிழருக்கே யாம்' என எச்சரிக்கை விடுக்கிறார் பிள்ளை.
அவர் இவ்வாறு எழுதி 100 ஆண்டுகள் ஆகப்போகிறது. கடந்த நூறு ஆண்டுகளில் தமிழர்கள் சமஸ்கிருதத்தையும் இழந்துவிட்டார்கள் ஆங்கிலத்தையும் இழந்துவிட்டார்கள் தமிழையும் இழந்துவிட்டார்கள். இப்பொழுது எந்த மொழி பேசுகிறோம், எழுதுகிறோம் என்று தெரியாமல் தள்ளாடுகிறார்கள்.
ஈசுரமூர்த்தி பிள்ளையின் இந்த சிறிய நூல் மொத்தம் 22 பக்கங்கள் மட்டுமே கொண்டது. இப்பொழுது இது அச்சானால் மிகப் பொருத்தமாக இருக்கும்.
தமிழ் டிஜிட்டல் லைப்ரரியில் இந்நூல் கிடைக்கிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக