நித்யானந்தாவின் தனி நாடு அறிவிப்பு, அவரது சீடர்கள் மட்டுமின்றி நாடு முழுவதும் பேசு பொருளாகியுள்ளது. நித்யானந்தா ஏன் தனிநாடு அமைத்தார்? அதற்கான முயற்சிகளை எப்போது முதல் மேற்கொண்டார்? இந்தியாவில் அவருக்கு என்ன பிரச்னை?
மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு, இந்திய தத்துவ மரபில் எதிர்மறை ரீதியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியவர் தத்துவ ஞானியாக அறியப்பட்ட ஓஷோ. அவருக்கு அடுத்து தற்போது எதிர்மறையான விமர்சனங்களால் உலகளவில் புகழ்பெற்றவராக உருவாகியிருக்கிறார் நித்யானந்தா.
நித்யானந்தாவும் ஓஷோவும் |
கைலாசா நாட்டின் சிறப்புகள்
உலகம் முழுவதிலும் உள்ள, கைவிடப்பட்ட இந்துக்களால் உருவாக்கப்பட்டதுதான் எல்லைகளற்ற கைலாசா நாடு என்ற அறிவிப்புடன் தொடங்குகிறது கைலாசா டாட் ஓஆர்ஜி இணையதளம் https://bit.ly/36dXHjJ
கைலாசா நாட்டிற்கான அனைத்து அதிகாரபூர்வ நடவடிக்கைகளையும் இந்த இணையதளத்தின் மூலம் தான் தற்போது நடத்தி வருகிறார் நித்யானந்தா
நித்யானந்தா தலைமை வகிக்கும் இந்து ஆதிசைவ சிறுபான்மைச் சமூகம் என்ற குழுவினரால் கைலாசா என்ற இயக்கம் அமெரிக்காவில் தொடங்கப்பட்டது என விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது
சாதி, மத, இன, தேச வேறுபாடுகளற்ற, இந்து மதத்தை பின்பற்றுவோருக்கானது கைலாசா நாடு என்ற முழக்கமும் இணயைதளத்தில் இடம் பெற்றுள்ளது
அத்வைதம் என்ற தத்துவத்தில் இருந்து முளைத்த அன்பு, மனிதாபிமானம் ஆகியவற்றின் அடிப்படையில் அனைவருக்குமான ஞான வாழ்க்கையை வழங்குவதுதான் கைலாசா நாட்டின் நோக்கம் குறிக்கோள் என்கிறார் நித்யானந்தா
அந்த நோக்கத்தை நிறைவேற்ற, கோயில், வேதங்கள், ஆகமங்கள் ஆகியவற்றை மையமாகக் கொண்ட, அவற்றைச் சார்ந்த வாழ்க்கை முறையே கைலாசா நாட்டில் பின்பற்றப்படும்
குடிமக்கள் அனைவருக்கும் இலவச கல்வி, இலவச உணவு, இலவச மருத்துவம் ஆகியவை வழங்கப்படும்
மேலும், கடந்த ஐந்தாயிரம் ஆண்டுகளாக, இந்து ஆதிசைவ சிறுபான்மைச் சமூகம் உலகளவி்ல் எதிர்கொண்டு வரும், இதுவரை வெளியில் சொல்லப்படாத துன்புறுத்தல்களை சர்வதேச சமூகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்வதும் கைலாசா நாட்டின் முக்கிய கடமையாக இருக்கும்
இப்படி, ஆரவாரமான விஷன், மிஷன் அறிவிப்புகளோடு தொடங்கியுள்ள கைலாசா நாட்டிற்கு என தனி அரசாங்கமும் அமைத்துள்ளார் நி்த்யானந்தா
ஒரு நாட்டின் தலைமை அலுவலகமாக பிரதமர் அலுவலகம் தான் அடையாளம் காணப்படும். அதுபோல, கைலாசா நாட்டின் தலைமை அலுவலகமாக நித்யானந்தாவின் அலுவலகம் விளங்கும்
அதையடு்த்து உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் ராணுவத் துறை, கருவூலம், வணிகம், வீட்டு வசதி, மனிதவளம், கல்வி, ஞானம் பெற்ற குடிமைச் சமூகம், தொழில்நுட்பம், நலவாழ்வு ஆகிய துறைகள் கைலாசா அரசில் இயங்கும்
இந்தத் துறைகளி்ல் இணைந்து சேவை செய்ய விரும்புவோர் அதற்கு விண்ணப்பிக்கும் வகையில் விண்ணப்பப் படிவங்களும் அந்தத் துறையின் பக்கங்களில் இணைக்கப்பட்டுள்ளன
கைலாசா நாட்டின் தற்போதைய மக்கள் தொகை 10 கோடி ஆதி சைவர்கள் என்றும், உலகளவில் இந்து மதத்தைப் பின்பற்றும் 200 கோடி மக்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது
கைலாசா நாட்டின் முதன்மை மொழியாக ஆங்கிலமும், இரண்டாவது மொழியாக சமஸ்கிருதமும், மூன்றாவது மொழியாக தமிழும் இருக்கும்
இந்து புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள இந்தியாவில் பழங்காலத்தில் இருந்த அங்கம், வங்கம், கலிங்கம் உள்ளிட்ட 56 தேசங்களைச் சேர்ந்த மக்கள் தான், அதாவது இன்றைய இந்தியாவின் மக்கள் தான் கைலாசா நாட்டின் இனக்குழுக்களாக இருப்பார்கள்
25 தலைகள், 50 கைகளோடு கூடிய பரமசிவம், அவரது மடியில் அமர்ந்துள்ள பராசக்தி, இவர்களின் கீழ் அமர்ந்துள்ள நித்யானந்தா, அருகில் நந்தி இந்தப் படங்கள் பொறிக்கப்பட்ட அடர் காவி நிறத்திலான கொடிதான் கைலாசா நாட்டின் கொடியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவே அந்த நாட்டின் சின்னமாகவும் வைக்கப்பட்டுள்ளது
கார் முதல் கோவில்கள் வரை யார் யார் இந்தக் கொடியை ஏற்றி வணங்குகிறார்களோ அவர்கள் கைலாசா நாட்டின் துாதுவர்களாக கருதப்படுவார்கள் என்றும் நித்யானந்தா கூறியுள்ளார்
நாடு என்றால் அதற்கு பொருளாதாரம் தேவை அல்லவா? இந்துக்களிடம் இருந்து வசூலிக்கப்படும் நிதியைக் கொண்டு, வன்முறையல்லாத வணிக முறைகளில் முதலீடு செய்யப்படும் என்றும் அந்த முதலீட்டில் இருந்து வரும் லாபம் அனைத்தும் மீண்டும் இந்துக்களுக்கே வழங்கப்படும் என்றும் பொருளாதாரக் கொள்கையை நித்யானந்தா அறிவித்துள்ளார்
கைலாசா நாட்டில் வசிக்க விரும்புவோருக்கு மஞ்சள் மற்றும் அடர் காவி நிறங்களில் இரண்டு தனித்தனி பாஸ்போர்ட்டுகளை வழங்கவும் நித்யானந்தா திட்டமிட்டுள்ளார்
இந்த பாஸ்போர்ட்டுகள் கைலாசா உள்ளிட்ட புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள 14 உலகங்களுக்கும் சென்று வருவதற்கான ஆவணமாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்
யாருடைய வாரிசு நித்யானந்தா?
தனிநாடு தனிக் கொடி தனிச் சின்னம், தனி பாஸ்போர்ட், அனைத்து சேவைகளும் இலவசம் என கைலாசா நாட்டின் விவரங்களைக் கேட்க கேட்க இது காமெடியா அல்லது உண்மைதானா என சந்தேகப்படும் அளவிற்கு தகவல்களை வெளியிட்டுள்ள நித்யானந்தா, தன்னைப் பற்றி விரிவான சர்ச்சைக்குரிய முன்னுரை ஒன்றையும் அதில் வெளியிட்டுள்ளார்
திருவண்ணாமலையி்ல் பிறந்த தன்னை ஞானிகள் பலர் அவதாரமாக ஏற்றுக் கொண்டதாக தெரிவித்துள்ளார் நித்யானந்தா
அடுத்ததாக, தற்போது நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ள மதுரை, காஞ்சிபுரம் ஆதீனங்களின் அடுத்த ஆதீனகர்த்தர் தான்தான் எனவும் அறிவித்துக் கொண்டிருக்கிறார்
மேலும், சேலம் ஆத்மானந்தாவின் நிர்வாகத்தில் இருந்த நாகை, திருவாரூர், தஞ்சை அத்வைத மடங்களின் அடுத்த மடாதிபதியும் தான்தான் என்று கூறியுள்ளார்
காஷ்மீர் மற்றும் காஞ்சிபுரத்தில் சர்வக்ஞ பீடம் இருந்ததாகவும் அவற்றில் ஆதிசங்கரர் அமர்ந்தார் என்றும் அவரது வாழ்க்கை வரலாற்று நுால்கள் பேசுகின்றன
ஆனால், திருவண்ணாமலை, பாக்யநகரம், காசி சர்வக்ஞ பீடங்களில் தான் அமர்த்தப்பட்டதாக நித்யானந்தா கூறியுள்ளார்
2004ம் ஆண்டு, புட்டபர்த்தி சாய்பாபா தனக்கு தங்க கிரீடமும் தங்க பாதுகைகளும் அளித்து தனது அவதாரமாக ஏற்றுக் கொண்டார் என்றும் புதிய தகவல்களைத் தெரிவித்துள்ளார்
இவை எல்லாவற்றையும் விஞ்சும் வகையில், ஒரிசா மாநிலத்தில் கஞ்சம் மாவட்டத்தில் இருந்த சூர்யவம்சத்தைச் சேர்ந்த சுரங்கி என்ற ஜமீன் பரம்பரையின் அடுத்த அரசராக 2004ம் ஆண்டு முடிசூட்டப்பட்டதாகவும் நித்யானந்தா பெருமிதமாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த சுரங்கி ஜமீன் பரம்பரையைச் சேர்ந்தவர் மஞ்சுளா ஷெராப். இவர் குஜராத் அஹமதாபாத் நகரில் டெல்லி பப்ளிக் ஸ்கூல் என்ற பள்ளியை நடத்தி வருகிறார். இந்தப் பள்ளியில் தான் நித்யானந்தாவின் சர்வக்ஞ யோகினி பீடம் என்ற ஆசிரமம் அமைந்திருந்தது
மஞ்சுளா ஷெராப் |
இப்படி தன்னைத் தானே பல மடங்களின் மடாதிபதியாக அறிவித்துக் கொண்டுள்ள நித்யானந்தா, தற்போது ஏன் கைலாசா நாட்டை உருவாக்குவதாக அறிவித்தார்?
1990கள் வரை சாதாரண ராஜசேகரனாக இருந்தவர், 2000ங்களில் சுவாமி நித்யானந்தாவாக உருவெடுத்தார்; அவரது உபதேசங்கள் ஆயிரக்கணக்கான பக்கங்கள் கொண்ட நுால்களாக வெளி வர ஆரம்பித்தன
நாகர்கோவில், நெல்லை, மதுரை போன்ற சிறிய நகரங்களில், அவரது கண்கள் மட்டும் அச்சிடப்பட்ட படங்கள் ஒவ்வொரு மின்கம்பத்திலும் தொங்க விடப்பட்டு பக்தர்களை ஈர்க்கத் தொடங்கின
பிரபல மாத இதழ்களில் சுவாமி நித்யானந்தாவின் பெயரில் எழுத்தாளர்கள் கட்டுரைத் தொடர்களை எழுதிக் குவித்தார்கள்; இந்தத் திட்டமிட்ட தொடர் பிரசாரங்களின் விளைவாக நித்யானந்தாவின் புகழ் மக்களிடம் பரவத் தொடங்கியது
பல ஊர்களில் நித்யானந்த தியானபீடம் தொடங்கப்ப்டடு அவரது படம் பொறிக்கப்பட்ட டாலர்கள் முதல் படங்கள் வரை விற்பனை செய்யப்பட்டன
இந்தப் பின்னணியில் தான், ஓஷோ அமெரிக்காவில் அமைத்த ரஜனீஷ்புரம் என்ற பிரமாண்ட நகரைப் போல, வாடிகனைப் போலத் தானும் தனிநாடு அமைக்க வேண்டும்; அதன் தலைவராக தான் இருக்க வேண்டும் என நித்யானந்தா மனதில் திட்டங்கள் தோன்ற ஆரம்பித்தன என்கின்றனர் அவரது நெருங்கிய வட்டத்தில் இருந்தவர்கள்
இதுகுறித்து தனது நெருங்கிய ஆதாவாளர்களிடையே அவ்வப்போது பேசி வந்த நித்யானந்தா, அதை ஒரு நோக்கமாக வடிவமைத்ததோடு மட்டுமின்றி அந்த நோக்கத்தை அடைய செயல்திட்டங்களையும் நிறைவேற்றத் தொடங்கினார்
அந்த செயல்திட்டங்களின் ஒரு பகுதியாகத் தான் பிடதி ஆசிரமம் அமைக்கப்பட்டு அதில் சீடர்களும் சேர்க்கப்பட்ட சம்பவங்கள் நடந்ததாகக் கூறப்படுகிறது
கடந்த 2010ம் ஆண்டு நித்யானந்தா தொடர்பாக சர்ச்சைக்குரிய வீடியோ வெளியானதும், நித்யானந்தாவின் திட்டங்கள் தவிடுபொடியாகின
மேலும், நித்யானந்தாவின் முன்னாள் சிஷ்யை ஒருவர், அவர் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்ந்தார்
இந்த வழக்கில், 2010, 2012ம் ஆண்டுகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டாலும் நித்யானந்தா ஆண்மை பரிசோதனைக்கு வரவில்லை
2014ம் ஆண்டு உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து அவர் ஆண்மைப் பரிசோதனைக்கு ஒத்துழைத்தார்; அந்த ஆண்டே அவர் மீது 3வது முறையாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது
எனினும் மீண்டும் சட்ட நடவடிக்கைகளில் பெரும் தொய்வு நிலவியது; பல்வேறு காரணங்களால் விசாரணை தொடங்கப்படவில்லை
இதற்கிடையே, பாலியல் வழக்குகளில் சிக்கிய ஆசாராம் பாபு, ராம்ரகீம் போன்ற வட இந்தியாவின் பிரபல சாமியார்கள் கைது செய்யப்பட்டனர்
இதைப் போன்ற நிலை தனக்கும் வரலாம் என நித்யானந்தா எண்ணியிருக்க கூடும்
அதேநேரம் 2018ம் ஆண்டு ஜூன் 5ம் தேதி நித்யானந்தா மீதான பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணை பெங்களூரு நீதிமன்றத்தில் தொடங்கியது
இந்த வழக்கின் முக்கிய கட்டமாக, காலாவதியான அவரது பாஸ்போர்ட்டை புதுப்பிக்க நீதிமன்றம் தடை விதித்திருந்தது; அதனால் அவரது பாஸ்போர்ட்டும் புதுப்பிக்கப்படவில்லை
இந்த நிலையில்தான் விசாரணை தொடங்கியது முதல் இன்று வரை நித்யானந்தா எங்கே உள்ளார் என்ன செய்கிறார் என யாருக்கும் தெரியவில்லை
ஆரம்பத்தில் சில மாதங்கள் வெளியுலகோடு எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொண்டிராத நித்யானந்தா,. கடந்த சில மாதங்களாக பேஸ்புக்கில் தனது பக்கத்தில் தினசரி சத்சங்கம் என்ற பெயரில் வீடியோ வெளியிட்டு வருகிறார்
ஏற்கனவே தனிநாடு கனவில் இருந்தவர், இந்த முறை அதை செயல்படுத்த தீவிரமாகக் களமிறங்கினார்
தனது நெருங்கிய சிஷ்யையாக இருந்த சாரா லாண்ட்ரியிடம் பேஸ்புக் மெசஞ்சர் மூலம் அவர் உரையாடிய போது இதுகுறித்து தகவல் பகிர்ந்ததாக சாரா லாண்ட்ரி தனது பேஸ்புக் பக்கத்தில் வீடியோவில் தெரிவித்துள்ளார். இதை சாரா லாண்ட்ரியும் தனது வீடியோவில் காண்பித்துள்ளார்.
தனது தனிநாட்டை அங்கீகரிக்க கோரி, அமெரிக்காவில் உள்ள தனியார் சட்ட நிறுவனம் மூலம் ஐக்கிய நாடுகள் சபையை அணுகியுள்ளார் நித்யானந்தா
இதுகுறித்து ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையத்திற்கு நித்யானந்தா மின்னஞ்சலில் 46 பக்க ஆவணம் மற்றும் 742 பக்க ஆவணம் என இரண்டு ஆவணங்களை அனுப்பியுள்ளார்
அதில், தான் சார்ந்த இந்து ஆதிசைவ சிறுபான்மைச் சமூகம் இந்தியாவில் பல ஆண்டுகளாக மத்திய, மாநில அரசுகளாலும், இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ அமைப்புகளாலும் துன்புறுத்தப்படுவதாக பகீர் குற்றச்சாட்டை கூறியுள்ளார்
இந்தியாவில் தன்னை நடத்தை ரீதியாக தொடர்ந்து அவமானப்படுத்தி வருவதாகவும் இதுகுறித்து ஐ.நா. கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த ஆவணத்தில் குறிப்பிட்டுள்ளார்
இதற்கிடையே தென் அமெரிக்க நாடான ஈக்வடார் அருகே அவர் ஒரு தீவை விலைக்கு வாங்கியிருப்பதாகவும் விரைவில் அதை தனிநாடாக அறிவிக்க உள்ளதாகவும் செய்திகள் பரவின
ஆனால் ஈக்வடார் அரசு அதை மறுத்து, ஒரு அறிக்கை வெளியிட்டது. நித்யானந்தா தங்கள் நாட்டில் இல்லை எனவும் இந்த விவகாரத்தில் தங்களை இழுக்க வேண்டாம் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.
ஈக்வடார் நாட்டின் விளக்கம் |
தொடர்ந்து நித்யானந்தா ஈக்வடார் நாட்டிற்கு எப்போது வந்தார்... ஏன் வெளியேற்றப்பட்டார் என்ற புதிய விளக்கத்தை இங்கிலாந்துக்கான ஈக்வடார் தூதர் ஜெய்ம் மர்ச்சன் ரோமெரோ, கார்டியன் இதழில் தெரிவித்திருந்தார்.
https://www.theguardian.com/world/2019/dec/09/in-ecuador-no-one-can-act-outside-the-law
நித்யானந்தா கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை 5-ம் தேதி முதல் முதலாக ஈக்வடார் நாட்டிற்கு சுற்றுலா விசாவில் சென்றார். ஈக்வடார் நாட்டில் உள்ள குயாக்கூல் என்ற துறைமுக நகருக்கு சென்ற அவர் அங்கேயே தங்கினார். அங்கிருந்து சர்வதேச பாதுகாப்பு கேட்டும், ஈக்வடார் நாட்டின் அகதியாக ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அந்நாட்டு அரசிடம் அனுமதி கேட்டு விண்ணப்பித்தார்.
இதையடுத்து, ஈக்வடாரில் தற்காலிகமாக தங்குவதற்காக 2018 ஆம் ஆண்டு அக்டோபர் 19 ஆம் தேதி அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால், சர்வதேச பாதுகாப்பு வேண்டியதையும் அகதியாக கருத வேண்டும் என்ற விண்ணப்பத்தையும் பரிசீலித்த ஈக்வடார் அரசு், நித்யானந்தாவுக்கு அனுமதி வழங்க மறுத்து விட்டது.
இந்நிலையில், ஈக்வடார் அரசு தனக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கோரி, அந்நாட்டு உயர்நீதி மன்றத்தையும் அணுகினார் நித்யானந்தா. நெருக்கடியை உணர்ந்த ஈக்வடார் அரசு 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நித்யானந்தாவை தனது நாட்டில் இருந்து வெளியேற்றியது. கிட்டத்தட்ட 10 மாதங்கள் ஈக்வடாரில் அவர் தங்கியிருந்தது இந்த தகவலால் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஈக்வடாரில் இருந்து வெளியேறும் முன், தான் அடுத்து ஹைதி தீவுக்கு செல்லப் போவதாக நித்யானந்தா தகவல் தெரிவித்தார் என ஈக்வடார் தூதர் கூறியுள்ளார்.
இந்த விர்ச்சுவல் இந்து நாடு அல்லது கைலாசா நாடு பற்றிய அறிவிப்பு அவரது சீடர்களிடையே நிலவும் குழப்பங்களை மட்டுப்படுத்தவும், இந்தியாவில் உள்ள அவரது தியானபீடத்திற்கு சொந்தமான நிறுவனங்களின் நிர்வாகங்கள் குலையாமல் பார்த்துக் கொள்ளவும் பயன்படுத்தப்படும் உத்தி என்றே தெரிகிறது
ஒருவேளை, நித்யானந்தா இந்தியாவுக்கு நிரந்தமாக திரும்ப முடியாமல் போனால், அப்போது அவர் தான் வாங்கிய தீவை தனி நாடாக அறிவித்து ஓஷோ போல தனி அரசாங்கம் நடத்தும் முயற்சியில் இறங்கலாம் என்றும் அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக