வெள்ளி, 30 ஆகஸ்ட், 2019

இந்துவும் சைவமும்

இந்தியாவைப் பொறுத்தமட்டில் அரசியல் ரீதியில் ஒன்றுபடுவதற்கு மட்டுமே இந்து என்ற சொல்லை பயன்படுத்த வேண்டும் என்ற ஓர்மை விரைவில் வர வேண்டும். அது பெரிய அளவில் பலனளிக்கும்.

ஆனால் சமய ரீதியில் இந்து என்ற சொல் குழப்பத்தையும் மயக்கத்தையும் ஏற்படுத்தும் என்பதே மரபுச் சைவர் மற்றும் தமிழ்ச் சைவர் இருதரப்பாரின் நிலைப்பாடு. இந்து என்ற சொல்லை வடவரின் ஆதிக்க திணிப்பாகவே இருதரப்பினரும் பார்த்தனர்.
இந்த பதிவில் இவர் சுட்டியிருப்பது போல பல தரப்பினரும் தங்களை இந்து எனக் கூறிக் கொள்வதால் ஆதிக்க வல்லார்கள் கருத்தே நிலைபெறும்; சனாதன தர்மத்தில் உள்ள பன்மைத்துவம் பாதிக்கப்படும் என்பார் சித்தாந்த பண்டித பூஷணம் ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளை. அதுதான் நடந்தது.

ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளை

தமிழ்ச் சைவரில் மறைமலையடிகள், கா.சு.பிள்ளை போன்றோர் பார்ப்பன மேலாதிக்கத்தின் குறியீடாக இந்து என்ற அடையாளத்தைப் பார்த்தனர். அதிலும் உண்மை உள்ளது.

மறைமலையடிகள்

கா.சு.பிள்ளை

உட்பிரிவுகளுக்குள் ஆரோக்கியமான வாக்குவாதம் நடந்தால் கூட நாமே ஏன் அடித்துக் கொள்ள வேண்டும் என்ற அரைவேக்காட்டுத்தனமான புரிதலே இல்லாத பஞ்சாயத்துகள்தான் இன்றுவரை நடக்கின்றன.
மொத்தத்தில் மதத்தைப் பற்றிய புரிதல் இல்லாத ஆங்கிலேய கல்வியின் தாக்கம் பெற்ற ஸ்மார்த்த பிராமணர்களின் கையில் இந்து என்ற சொல் சிக்கி இன்று கலவைசாதத்தை உருவாக்கியதுதான் மிச்சம்.
இதன் மறுபக்கமாக அரசியல் ரீதியில் இந்துக்களை ஒன்றிணைக்க வந்த ஆர்எஸ்எஸ்எஸ் போன்ற இந்துத்துவ அமைப்புகளை மதத்தை புனருத்தாரணம் செய்ய வந்த அமைப்புகளாக கருதி மத அமைப்புகளின் நிர்வாகத்திலும் அவர்களின் தலையீட்டை அனுமதிக்க வேண்டிய சூழல் இந்தியாவிலும் இலங்கையிலும் உருவானது.
இந்தியாவில் ஏற்கனவே குழம்பிப் போய் கிடப்பதால் அவர்கள் நடவடிக்கைகளின் பாதிப்பு உணரப்படவில்லை. ஆனால் இலங்கையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை இந்தப் பதிவு உணர்த்துகிறது.
இந்துத்துவ அமைப்புகளுக்கும் சமய அறிவுக்கும் எள் முனையளவும் தொடர்பில்லை என்பதை உணர வேண்டும். தத்துவக் கல்வி பரப்பப்பட வேண்டும். அரசியல் அமைப்புகள் மத அமைப்புகளிலோ நிர்வாகத்திலோ தலையிடுவதை தடுக்க வேண்டும்; அவர்களும் தங்கள் எல்லையறிந்து குட்டையைக் குழப்புவதை நிறுத்த வேண்டும். இல்லையெனில் இந்துமதம் ஒரே நூல் ஒரே கடவுள் கோட்பாட்டை நோக்கி வலுக்கட்டாயமாக தள்ளப்படும் சூழல் உருவாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Translate