19ம் நுாற்றாண்டின் இறுதியில் பிறந்து 20ம் நுாற்றாண்டின் பிற்பாதியில் மறைந்தவர் சித்தாந்த பண்டித பூஷணம் ஈசுரமூர்த்திப் பிள்ளை. அவர் காலத்தில் தான் இந்த நாட்டில் விடுதலைப் போரும் மொழிப் போரும் சமயப் போரும் நடந்தன. மூன்று போர்களையும் உன்னிப்பாக கவனித்தவர் பிள்ளை.
இவற்றில் சைவத்தில் மொழிரீதியிலான கிளர்ச்சி எழுந்து பெரும் மாற்றங்கள் நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில் மரபுச் சைவத்தின் பால் நின்று தனது கருத்துக்களை ஆணித்தரமாக தர்க்க ரீதியில் எடுத்துரைத்தார் இவர். அதற்காகவே தனது வாழ்நாளை ஒப்படைத்தார்.
மொழிப் போர் குறித்து பெரிய அளவில் தனது படைப்புகளில் இவர் பதிவு செய்யவில்லை. ஆனால் 1939ம் ஆண்டு பொதுமொழி என்ற தலைப்பில் இவர் வெளியிட்ட நுால், இன்றளவும் சைவர்களுக்கு ஓர் வழிகாட்டியாய் விளங்குகிறது. இந்தியாவின் பொதுமொழியாக சமஸ்கிருதமே இருக்க வேண்டும் என்பது இவரது வாதம். அதற்கான தன் தரப்பு நியாயங்களை ஒரு வழக்கறிஞரின் வாதத் திறமையுடன் தனது நுாலில் முன்வைத்துள்ளார்.
விடுதலைப் போர் குறித்து தனி நுாலாக இவர் எதுவும் எழுதவில்லை. ஆனால் நாட்டின் விடுதலை குறித்துப் பெரிதும் கவலைப்பட்டுள்ளார். அந்நியராட்சியில் இருந்து நாடு விடுதலையாக வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தார் என்பதை இவரது பிற எழுத்துக்களில் இருந்து அறிய முடிகிறது.
உத்தரமேரூரில் அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்த போது, பலவான்குடியில் இருந்து ராமசாமிச் செட்டியாரை ஆசிரியாகக் கொண்டு வெளிவந்த சிவநேசன் மாத இதழின் 1938 ஏப்ரல் வெளியீட்டில் ‘பாரத தேசக்கொடி’ என்ற தலைப்பில் ஒரு சிறிய கட்டுரை எழுதினார்.
அதில், இந்தியாவின் மிக முக்கிய மதங்களாக சைவம், வைணவம், கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகிய நான்கும் இருக்கின்றன என்றும், அவற்றின் அடையாளங்களான காளை, கருடன், சிலுவை, பிறை மற்றும் நட்சத்திரம் இவை நான்கும் கொண்டதாக தேசியக் கொடி உருவாக வேண்டும் என்றும் தனது கருத்தை வெளியிட்டிருந்தார். மேலும் எக்காரணம் கொண்டும் எந்த ஒரு கட்சியின் கொடியும் தேசியக் கொடியாகிவிடக் கூடாது என்றும் வலியுறுத்தியிருந்தார்.
இந்து என்ற பெயரை ஏற்காத ஈசுரமூர்த்திப் பிள்ளை, சனாதன தர்மத்தின் பிரிவுகளாக சைவத்தையும், வைணவத்தையும் கொண்டார். இந்து என்ற பெயர் ஆரிய, பிரம்ம சமாஜங்களையும், பிரமஞான சபை போன்ற அமைப்புகளையும் தொன்மையான மதப் பிரிவுகளான சைவ, வைணவத்தையும் ஒன்றாக்கி குழப்பும் ஒரு அர்த்தமற்ற பெயர் என்பது இவரது கருத்து. அந்த நிலைப்பாட்டில் அவர் இறுதிவரை உறுதியாக இருந்தார்.
மேற்கண்ட நான்கு மதங்களும் இந்த நாட்டில் இருக்கின்றன; அவற்றின் சின்னங்களும் கொடியில் இருக்க வேண்டும்; அப்படி இருந்தால் இந்த தேசத்திற்கு செய்யும் மரியாதை அந்த மதங்களுக்கு செய்யும் மரியாதையுமாகும் என்பது இவரது விளக்கம்.
1931ம் ஆண்டில் காங்கிரஸ் அறிவித்த மூவர்ணக் கொடிக்கு அக்கட்சி அளித்த விளக்கம் இவருக்குத் திருப்தி அளிக்கவில்லை என்பதை ‘பாரத தேசக்கொடி’ கட்டுரை காட்டுகிறது.
இந்து என்ற பெயரை ஏற்காத அதேநேரத்தில் இவர் தேசியவாதியாகவும் இருந்தார். இந்த நாட்டின் உயிர்மூச்சு சைவம் தான் என்பதில் உறுதியாக இருந்தார். இந்துஸ்தான் என்ற வார்த்தைக்குப் பதிலாக சைவஸ்தான் என்பதையே இவர் பயன்படுத்தினார்.
விடுதலைக்குப் பிறகு இவர் எழுதி வெளியிட்ட நுால்களின் இறுதியில் JAIHINDH என்ற சொல்லை அச்சிட்டார்.
காந்தியை இவர் தனது உள்ளத்தில் மதித்திருக்க கூடும்; ஆனால் மதசீர்திருத்தங்களில் காந்தி ஈடுபட்டது இவருக்கு பிடிக்கவில்லை என்பது தெரிகிறது. ஆலய பிரவேசம் உள்ளிட்ட சீர்திருத்தங்களில் இவர் மரபுச் சைவர்களின் கருத்தையே கொண்டிருந்தார் என்பது அப்போது இவர் எழுதி வெளியிட்ட கட்டுரைகள் மூலம் தெரிகிறது
ஆனால் தனது இறுதிமூச்சு வரை திக, திமுகவை கடுமையாக எதிர்த்து வந்தார். அண்ணாதுரையின் எழுத்துக்களை எதிர்த்து இருநுால்களை எழுதியிருக்கிறார். விரைவில் அவற்றை வெளியிட திட்டமிட்டுள்ளேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக