(2008ம் ஆண்டு என, நினைக்கிறேன். என் நண்பன் மாசானம், சென்னைக்கு அலுவல் விஷயமாக வந்திருந்தான். நான் அப்போது விஜயபாரதத்தில் பணியாற்றி வந்தேன்.
வந்தவனை நேரில் சந்தித்துப் பேசினேன். அப்போது வடபழனியில் உள்ள தனது உறவினரைப் பார்க்க செல்வதாகவும், அந்த வீட்டில் உள்ள ஒரு பெரியவர், வ.உ.சி.யை நேரில் பார்த்தவர் என்றும் கூறினான்.
எனக்கு ஆவல் மிகுதியாயிற்று. நானும் அவனுடன் வடபழனி சென்றேன். அந்தப் பெரியவரிடம் பேசினேன்.
அவரது மிகச் சிறுவயதில், அவரது வீட்டருகில் தான், வ.உ.சி. வசித்தார் என்றும், விளையாடுவதற்காக அவரது வீட்டிற்கு இவர் செல்வார் என்றும் சொன்னார். ஒருவகையில், இவர் அவருக்கு உறவினர் என்று கூறியதாவும் நினைவு.
வ.உ.சி. தமது மனைவி மீனாட்சி அம்மாள் உடன் |
(படங்கள் உதவி: Expressions of Life வலைப்பூ நடத்தும் நாராயணன் வெங்கிட்டுவுக்கு, வ.உ.சி. யின் பேரனான சிதம்பரம் தந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். நன்றி)
அப்போது, வ.உ.சி. கட்டிலில் படுத்திருப்பார் என்றும், குழந்தைகளை அழைத்துப் பேசுவார் என்றும் கூறினார்.
அதற்குள், நாங்கள் இருவரும் புறப்பட வேண்டியதாயிற்று. எனினும் அந்தப் பெரியவரிடம் இன்னும் பேச வேண்டும் என, நினைத்துக் கொண்டேன்.
அவரது மகன், வெளிநாட்டுக்குச் சென்று விட்டதால், அவர் முதியோர் இல்லத்தில் சேர்க்கப்பட்டார் என, பிற்பாடு கேள்விப்பட்டேன். அதுவும் சென்னையில் தான்.
அவர் சிறந்த தேசபக்தராக இருந்ததோடு, சைவராகவும் திகழ்ந்தார். அவரது சிவஞானபோத உரையில், வைதீக சைவர்களுக்கு கருத்து வேறுபாடு உண்டு. எனினும், அவர் காலத்தோடு ஒட்ட ஒழுகித் தான் சைவத்தையும் அணுகியிருக்கிறார்.
திருநெல்வேலியில் அக்காலத்தில் புகழ்பெற்று விளங்கிய சுந்தர ஓதுவா மூர்த்திகளிடம், அவர் அளவிடற்கரிய அன்பு வைத்திருந்தார் என்பதை, இரா.இராஜசேகரன் தமது, சொற்றமிழ் சூடுவார் நுாலில் 72,73ம் பக்கங்களில் பதிவு செய்துள்ளார்.
நிற்க. வ.உ.சி., சச்சிதாநந்தம் என்ற தலைப்பில் எழுதிய கட்டுரை, துாத்துக்குடி சைவ சித்தாந்த சபையின், 50வது ஆண்டு பொன்விழா நினைவு மலராக, 1933ல் சென்னை ராயப்பேட்டை சாது அச்சுக் கூடத்தில் பதிப்பிக்கப்பட்டு வெளியான, சித்தாந்தப் பொன்மலர் என்ற நுாலில்,117ம் பக்கம் இடம் பெற்றுள்ளது.
அதை, இணையத்தில் தேடினேன். கிடைக்காமையால், இங்கு பதிவிடுகிறேன்.
இன்று, (18-11-13) வ.உ.சி நினைவு தினம்)
-----------------------------
சில உபநிடதங்களும் ஆகமங்களும் கடவுளுக்கு இலக்கணம் கூறுமிடத்து ``சச்சிதாநந்தம்'' என்று கூறுகின்றன.
இவ்வுபநிடத ஆசிரியர்களும் ஆகம ஆசிரியர்களும் சுருதி, யுக்தி, அநுபவம் நிறைந்தவர்களென்றே நாம் கொள்ளுதல் தகுதி.
அவ்வாறு நாம் கொள்ளின் அவர்கள் கடவுளுக்குக் கூறியுள்ள சத், சித், ஆனந்தம் என்னும் இலக்கணங்கள் மனிதர்கள் சுருதி,யுக்தி, அநுபவங்களாற் கடவுளுக்குக் கூறக்கூடிய சகல இலக்கணங்களையும் உட்கொண்டும், மனிதர் சுருதி, யுக்தி, அநுபவங்களால் மறுக்கக் கூடிய எவ்வித இலக்கணத்தையும் உட்கொள்ளாதும் நிற்க வேண்டும்.
நான்கு மகாவேதவாக்கியங்களில் ஒன்று, ``பிரஹ்மம் பிரஜ்ஞானம்'' என்கின்றது. `பிரஹ்மம்' கடவுள் எனவும், `பிரஜ்ஞானம்' அறிவு எனவும் பொருள்படும்.
இம்மகாவாக்கியம் தோன்றியதற்கு நீண்ட காலத்திற்குப் பின்னரே கடவுளுக்குச் ``சச்சிதாநந்தம்'' என்னும் இலக்கணம் கூறப்பட்டிருத்தல் வேண்டும்.
வேதங்கள் `பிரஹ்மம்' என்பது அறிவு, அஃதாவது சித்து, என்று கூறி நிற்கவும், அதற்குப் பின்னர்த் தோன்றிய உபநிடதம் முதலியவை சத், ஆனந்தம் என்பவற்றை முறையே `சித்' என்பதற்கு முன்னும் பின்னும் சேர்த்துக் கூறியதற்குக் காரணம் `சித்' என்னும் பதம் கடவுளது பூரண இலக்கணங்களையும் விளக்கத் தக்கதாயில்லை என்று அவ்வுபநிடதம் முதலியவற்றின் ஆசிரியர்கள் கருதியதே என்று நாம் கொள்ளுதல் மிகையாகாது.
உபநிடத ஆகம உரையாசிரியர்களுள் பலர் `சத்' என்பதற்கு நித்தியம் எனவும், `சித்' என்பதற்கு அறிவு எனவும், `ஆனந்தம்' என்பதற்குச் சுகம் எனவும் பொருளுரைத்திருக்கின்றனர். இவர் உரைத்த பொருள்களே சரியான பொருள்களென்று இவருக்குப் பிற்பட்ட பலரும் கொண்டனர்.
ஆயினும், இவரில் ஒரு சிலர் ``அகண்ட பரிபூரணம்'' என்பதைச் `சச்சிதாநந்தம்' என்பதன் முன்னர்ச் சேர்த்துக் கடவுளை ``அகண்ட பரிபூரண சச்சிதாநந்தம்' என்று கூறினர்.
சத், சித், ஆனந்தம் என்பன கடவுளது முழு இலக்கணத்தையும் விளக்கி நிற்கவில்லையென்று இவர் கருதியதே அவற்றின் முன்னர் அகண்ட பரிபூரணம் என்பதைச் சேர்த்ததற்குக் காரணமாயிருத்தல் வேண்டும்.
இவ்வான்றோர் ``சச்சிதாநந்தம்'' என்பதற்குக் கொண்ட பொருள் ``நித்தியத் தன்மையும் சுகத் தன்மையும் பொருந்திய அறிவு'' என்பதே.
இப்பொருளைக் கொள்ளும் எவரும் ``சச்சிதாநந்தம்'' என்பது ``சர்வ வியாபகம்'' என்னும் கடவுளிலக்கணத்தைக் கொண்டு நிற்கவில்லை யென்று கருதாதிரார்.
இவ்விலக்கணக் குறைவை நிவர்த்திக்கவே ``அகண்ட பரிபூரண'' என்பது ``சச்சிதாநந்தம்'' என்பதற்கு முன்னர்ச் சேர்க்கப்பட்டதென் றறிக.
ஆன்றோரிற் சிலர் நித்ய வஸ்து (என்றுமுள்ளது) வியாபக வஸ்தாக (எங்குமுள்ளதாக)வே யிருக்குமென்று விவகரித்துச் `சச்சிதாநந்தம்' என்பது கடவுளது சர்வ வியாபக இலக்கணத்தையும் விளக்கி நிற்கிறதென்று கூறுகின்றனர்.
`என்றுமுள்ளது' `எங்குமுள்ளது' என்று விவகரித்தல் பிழை. நித்தியத்திற்கும் வியாபகத்திற்கும் எவ்வித சம்பந்தமுமில்லை யாகலான்.
உதாரணமாக, வாயுவை எடுத்துக் கொள்வோம். அது நித்தியப் பொருளென்பது வெள்ளிடை மலை. அஃதில்லாமல் உலகம் இல்லையாகலான்.
அவ்வாறே, வாயு சர்வ வியாபகப் பொருளன்றென்பதும் வெள்ளிடை மலை. அது வைரம் முதலிய கடினப் பொருள்களுள் இல்லையாகலின்.
உலகப் பொருள்களிலிருந்து எடுத்துக் காட்டப்படும் உதாரணங்களெல்லாம் ``உலகம் மித்தை'' என்னும் கொள்கையாலும், ``சத் என்பது நித்தியப் பொருளைக் குறிப்பதன்றிச் `சர்வ வியாபகப் பொருளைக் குறிக்க மாட்டா'தென்பது ``நித்தியமாயுள்ள பிரஹ்மம் சர்வ வியாபகப் பொருளாயு மிருக்கின்றது'' என்னும் உண்மையாலும் மறுக்கப்பட்டுப் போனதாகக் கூறுகின்றனர் சிலர்.
மேற்சொல்லிய உதாரணமும் பத அர்த்தமும் மேற்சொல்லிய கொள்கையாலும் உண்மையாலும் மறுக்கப்பட்டுப் போனதாகக் கருதுகின்ற மக்களை நோக்கி இவ்வியாஸம் எழுதப்படவில்லையென்று அவர்கள் அறிவார்களாக.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக