18-3-99
வியாழன்
இன்று சைவசித்தாந்த வகுப்பு நடைபெற்றது. சென்ற மாதத்தில், முக்கால் நாட்கள், அடியார்கள் அட்டசோதிலிங்கத் தலங்களுக்கு யாத்திரை சென்றதால், சென்ற மாத வகுப்பு, இம்மாதம், இன்று வைக்கப் பெற்றது.
இன்று வகுப்பு மிக அருமையாக நடைபெற்றது. ...நேற்று முதல் நாள் செவ்வாயன்று, மாத சிவராத்திரி அபிஷேகம் (இந்த மாதம் முதல் ஆரம்பிக்கப்பட்டது) (முந்திய அடைப்புக்குறிக்குள் இருப்பது, நாட்குறிப்பில் இருப்பது தான். அனேகமாக அது நெல்லையப்பர் கோயிலில் என, நினைக்கிறேன்) நடந்தது.
அதுபோழ்து வந்திருந்த அருளரசு என்பவர் எனக்கு அறிமுகமானார். அவருக்குச் சொந்த ஊர் சென்னை. இவருடைய தந்தையார் ஆடலரசு, மறைமலையடிகளின் அணுக்கத் தொண்டராம்.
ஆகையினால், அருளரசும் தமிழ்ப்பற்று மிகவும் கொண்டிருக்கின்றனர்; அதிலும் சமற்கிருதம் வேண்டாமென்று சொல்லப்புகும் அளவிற்கு.
இன்று அவரும் வகுப்பிற்கு வந்திருந்தார். நானும், அந்த அம்மாவும் (சித்தாந்த பண்டிதர் இராமநாத பிள்ளையின் பேத்தி சங்கரவடிவு) பேசிக் கொண்டிருந்தபொழுது அவரும் கலந்து கொண்டார்.
தனது தங்கியிருக்கும் முகவரியை எனக்குத் தந்து அதற்கு வாருங்கள் என அழைத்தார். இதற்கிடையே உணவருந்துவதற்கு அழைப்பு வந்து விட, சென்று விட்டோம்.
பின் வகுப்பு முடிந்த உடன், சிறிதுநேரம், எல்லோருடனும் பேசிக் கொண்டிருந்து விட்டு, நான், சம்பந்தமையா, அருளரசு, ஜெய்சங்கர் எனும் பெரியவர் இன்னும் இரண்டு பேர் எல்லாம் ஒன்றாக கிளம்பினோம்.
வகுப்பு நடப்பது ஜவுளிக் கடை மகமைச் சங்கத்தில் (அப்பர் தெரு, மேலரத வீதி, திருநெல்வேலி) மாடியில். கீழிறங்கி வரும்பொழுது, நேரே உள்ள அறையில் தான், சண்முகவேல் ஐயா தங்கியிருப்பர்.
அவ்விடத்துக்கு வந்து அவரும் நான் உட்பட மற்றையோரும் நின்று சிறிதுநேரம் பேசிக் கொண்டிருந்தோம். பேச்சு திசைமாறி, ஜெய்சங்கர் என்பவர், மீண்டும் தமிழ்-சமற்கிருதம் பற்றிக் கொண்டு வந்து விட்டார்.
சம்பந்தமையா அதற்கு விளக்கம் கொடுக்க ஆரம்பித்தனர்.
அதன் சுருக்கம் இது:
ஸ்வாமியே வேதத்தையும் ஆகமத்தையும் அருளிச் செய்தனர் எனப் படித்து விட்டு, வேதத்தை இகழ்வதனால், என்ன பயன்? அது சமற்கிருதப் பாடையில் (ஐயையோ! பாஷைங்க அது....) இருக்கிறது என்பதனாலா?
உண்மையில் அது பாடையே அல்ல. அது மந்திரம். ஒலி. High powered soun waves. thatsall. அதை பாடையாகப் பிரித்து மொழித்வேஷம் கொள்வானேன்?
சம்பந்தப் பெருமான் தான் நமக்கு குரு. அவர் 'வேதமோதி வெண்ணுால் பூண்டு வெள்ளை எருதேறிப் பூதஞ்சூழப் பொலிய வருவார்' எனப் பாடியுள்ளனரே!
அப்படியெனில், அவர் பொய் சொல்கிறாரா? ஞானசம்பந்தரை மறுக்கிறவன் சைவனோ? அல்லன்.
இங்ஙனம், அவர்கள் சிறிது கடுமையுடனே தான் கூறினர். அநேகமாக இது அருளரசு ஐயாவுக்காகத் தான் என்பது எனக்குப் புரிந்து விட்டது. ஆயினும் அதை வெளிக் காட்டிக் கொள்ளவில்லை.
அருளரசு ஐயாவின் முகத்தில் ஈயாடவில்லை. சிறிதுநேரம் பேச்சை மாற்றிவிட்டுப் பின்பு சம்பந்தமையாவிடமும் சண்முகவேல் ஐயாவிடமும் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டோம்.
நானும் அருளரசும் அவரது இல்லத்திற்குச் சென்றோம். அது, கரியமாணிக்கப் பெருமாள் சந்நிதித் தெருவில் அமைந்திருந்தது.
....பின்பு அவரது வீட்டினுள் சென்று அமர்ந்து பேச ஆரம்பித்தோம். சம்பந்தமையாவின் தாக்கத்தினால் ஏற்பட்ட வேதனையும் சோகமும் இவரது பேச்சில் வெளிவந்தன. பின்பு இவரது குரு இராமநாத பிள்ளையைப் பற்றி பேச்சு திரும்பியது.
அதன் சாராம்சம்:
இராமநாத பிள்ளை சென்னைக்குச் சென்றிருந்தபொழுது, ஆடலரசின் வீட்டிற்கு அருகில், தங்கியிருந்தனர். அதுபோழ்து, ஆடலரசுவுக்கும், இராமநாத பிள்ளைக்கும் நட்புறவு ஏற்பட்டது.
ஆடலரசு பிள்ளையவர்களை மறைமலையடிகளிடம் நட்புகொள வைத்தனர். அக்காலத்தில், அருளரசு, இவர் பால்ஈர்ப்புக் கொண்டு, இவரிடமே தீக்கை பெற்றுக் கொண்டு, சின்னாள் பாடமும் கற்றனர்.
எனினும், துரதிட்டவசமாய், பிள்ளை, சின்னாட்களில் இறந்தனர். நிற்க.
மறைமலையடிகளாரிடம் அவரது மகன்கள் ஈர்ப்புக் கொள்ளாமையால், மறைமலையடிகள், will committee ஒன்று நியமித்து, அதன் மூலம் தான் தனது புத்தகங்களை வெளியிட வேண்டுமென விதித்து அதற்கு, ஆடலரசுவை செயலராகவும், நியமித்தனர்.
எனினும், பிற்காலத்தில், ஆடலரசு மேல், தாமரை வ.சுப்பையா பிள்ளை வழக்குப் போட்டு, அவ்வதிகாரத்தை அவர் பெற்றுக் கொண்டனர்.
ஆடலரசு நடுத்தர வர்க்கத்தினர் ஆதலால், அவரால் பிள்ளைக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. சுப்பையா பிள்ளை, சிறிது கஞ்சத்தனமும், ...... உடையவர் என்பது அருளரசு பேசிய பேச்சினால் தெரியவந்தது. நிற்க.
வேதம் என்பது, வடமொழி ரிக் ஆதியன எனவும், மறை என்பது தமிழில் உள்ள அறம், பொருள், இன்பம், வீடு எனவும் இருக்கின்றன என்பது தமிழ் வெறியர் வாதம்.
இக்கட்சியை சேர்ந்தவர் அருளரசு. இதற்கு ஆதாரமாகத் திருத்தாண்டகம் ஒன்றையும் மேற்கோள் காட்டினர், தமது குரு சொற்படி.
அத்திருத்தாண்டகம், திருநாகேச்சரத்தில் அருளிச் செய்யப் பெற்றது. அதனில், இரண்டாவது பாடல், 'உரித்தானை மதவேழம்' என, ஆரம்பிக்கிறது.
அதில், 'அரித்தானை ஆலதன் கீழ் இருந்து நால்வர்க்கு அறம்பொருள் வீடின்பம் ஆறங்கம் வேதம் தெரித்தானை' என வருகிறது.
இதைத்தான் தமது கருத்திற்கு அரணாக இராமநாதபிள்ளை மேற்கோள் காட்டியுள்ளனர். நிற்க.
பின்பு, பேச்சு திசைமாறி, சிவஞானபோதத்திற்கு வந்தது. அருளரசு, போதம் தமிழ் முதனுால் என்றார். நான் சிவஞான முனிவர் கூறியுள்ள கருத்தைக் கூறினேன்.
அவர் உடனே போதநுாலை எடுத்து முதற்சூத்திரத்தைக் காட்டி 'இதுதான் தமிழ்' என்றும், அதற்குக் கீழ் உள்ள வார்த்திகத்தை 'இது இடைச் செருகல்' என்றும் கூறினார்.....
பின்பு அவரது சென்னை முகவரிக்கு வரும்படி என்னைக் கேட்டுக் கொண்டார். பின்பு அவரிடம் விடைபெற்றுக் கொண்டு பேட்டை வந்து சேர்ந்தேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக