புதன், 20 நவம்பர், 2013

திருஞானசம்பந்தர் தேவாரம் - சில குறிப்புகள் - 1


(நான், எனது சொந்த ஊரில் இருந்த போது, பெரும்பான்மையும் வேலைநேரங்களில், வேலை போக, ஓய்ந்திருக்கும் நேரங்களில், தேவாரம் முதலிய நுால்களை படிப்பது வழக்கம்.

அப்போது குறிப்புகளும் எடுப்பேன். தினசரி பாராயணத்திற்கு ஏற்ற நுால் தேவாரம். ஒவ்வொரு முறை ஓதும் போதும், அது ஒவ்வொரு  விதமான பொருளைக் கொடுக்கும்.



அவ்விதம், திருஞான சம்பந்தர் தேவாரத்தை படித்த போது, அங்கங்கே தென்பட்ட, சொல்நயங்கள், வித்தியாசமான சொல்லாட்சிகள், சமணரைப் பற்றிய சொல்லாட்சிகள் ஆகியவற்றை நான் குறித்து வைத்திருந்தேன்.

இதுபோன்ற பணிகளை, இந்த நுாற்றாண்டின் துவக்கத்தில், சைவ சித்தாந்த மகா சமாஜத்தின் தலைவராக இருந்த ம.பாலசுப்பிரமணிய முதலியார், தமது, தேவார பதிப்பு நுால்களிலேயே செய்து விட்டார்.

அவரைப் பின் தொடர்ந்து, தணிகைமணியும் செய்துள்ளார்.

எனினும், தேவாரம் போன்ற நுால்களில், எடுக்க எடுக்க குறையாத, இலக்கிய, பக்தி நலங்கள் இருக்கின்றன. ஒவ்வொருவர் பார்வையிலும் அவை ஒவ்வொரு விதமாக தென்படும்.

அந்த வகையில், எனது குறிப்புகளை நான் இங்கு பதிவிடுகிறேன். இவை 11/11/2000 முதல், 27/11/2000 வரை எடுத்தவை.

ஒவ்வொரு பாடல்களிலும், வித்தியாசமான சொல்லாட்சிகளை தடித்த (போல்டு) எழுத்தில் காட்டியுள்ளேன். விளக்கம் தேவைப்படும் இடத்தில் அதையும் கொடுத்துள்ளேன்)
------------------------------------------

1. பிராந்தர் எனும் சொல்லாட்சி:

குண்டு முற்றிக் கூறை இன்றியே
பிண்டம் உண்ணும் பிராந்தர் சொற்கொளேல்
வண்டு பாட மலரார் திருப்புன்கூர்
கண்டு தொழுமின் கபாலி வேடமே

 ('முந்தி நின்ற' பதிகத்தின் பத்தாவது பாடல்)

பிராந்தி என்ற சொல்லுக்கு மயக்கம் என்பது பொருள். பிராந்தர் - மயங்கிய அறிவுடையவர்

2. ஒருதோழம் எனும் சொல்லாட்சி: 

உண்ணற்கரிய நஞ்சையுண் டொருதோழந்தேவர்
விண்ணிற்பொலிய அமுதமளித்த விடைசேர்கொடியண்ணல்
பண்ணிற்சிறைவண் டறைபூஞ்சோலைப் புறவம்பதியாக
எண்ணிற்சிறந்த இமையோரேத்த உமையோடிருந்தானே

(1ம் திருமுறை - திருப்புறவம் - தக்கேசி - 7வது பாடல்)

திருவெம்பாவையில், ஒருதோழந்தொண்டருளன் என்ற சொல்லில், ஒருதோழம் என்பது தற்போது ஒருதோழன் என, அச்சில் வந்துகொண்டிருக்கிறது. அது ஒருதோழம் என்று தான் இருக்க வேண்டும் என, கருதுகிறேன். ஞானசம்பந்தர் வாக்கும் அதை உறுதிப்படுத்துகிறது.

ஒருதோழம் - எண்ணிக்கை

3. அந்தமில் ஞானசம்பந்தன்:

வடிகொள்வாவிச் செங்கழுநீரிற் கொங்காடிக்
கடிகொள்தொன்றல் முன்றினில் வைகுங்  கலிக்காழி
அடிகள்தம்மை அந்தமில்ஞான சம்பந்தன்
படிகொள்பாடல் வல்லவர்தம்மேற் பழிபோமே

(1ம் திருமுறை - சீகாழி - குறிஞ்சி - 11 வது பாடல்)

ஞானசம்பந்தர், தமக்கு  அழிவில்லை என்பதை அந்தமில் என்ற சொல்லால் குறிக்கிறார். உண்மைதானே!

4. நீட்டல் விகாரம்:

தேயநின்றான் திரிபுரம்கங்கை சடைமேலே
பாயநின்றான் பலர்புகழ்ந்தேத் உலகெல்லாம்
சாயநின்றான் வன்சமண்குண்டர் சாக்கீயர்
காயநின்றான் காதல்செய் கோயில் கழுக்குன்றே

(1ம் திருமுறை - திருக்கழுக்குன்றம் - குறிஞ்சி -10வது பாடல்)

பாடல் வீணையர் பலபல சரிதையர் எருதுகைத் தருநட்டம்
ஆடல் பேணுவர் அமரர்கள் வேண்டநஞ் சுண்டிருள் கண்டத்தர்
ஈடமாவது இருங்கடற் கரையினில் எழில்திகழ் மாதோட்டம்
கேடி லாதகே தீச்சரந் தொழுதெழக் கெடுமிடர் வினைதானே

(2ம் திருமுறை - திருக்கேதீச்சரம் - நட்டராகம் - 2வது பாடல்)

5. வலித்தல் விகாரம்

குலமலர் மேவினானும் மிகுமாய னாலும் எதிர்கூடி நேடி நினைவுற்
றிலபல எய்தொணாமை எரியாய் உயர்ந்த பெரியான் இலங்கு சடையன்
சிலபல தொண்டர் நின்று பெருமைக்கள்  பேச அருமைத் திகழ்ந்த பொழிலின்
நலமலர் சிந்தவாச மணநாறு வீதி நறையூரின் நம்பன் அவனே

(2ம் திருமுறை - திருநறையூர் சித்தீச்சரம் - பியந்தைக் காந்தாரம் - 9வது பாடல்)

6. சமணர் ஞானம் இத்தகைமைத்து என்றல்:

வெந்துவர்  மேனியினார் விரிகோவணம் நீத்தார் சொல்லும்
அந்தர ஞானமெல்லாம் அவையோர் பொருளென்னேல்
வந்தெதி ரும்புரமூன் றெரித்தான் உறைகோயில் வாய்ந்த
புந்தியி னார்பயிலும் புகலிப்  பதிதானே

(1ம் திருமுறை  - திருப்புகலி - வியாழக் குறிஞ்சி - 10வது பாடல்)

செந்துவர் ஆடையினார் உடைவிட்டு தின்றுழல்வார் சொன்ன
இந்திர ஞாலம்ஒழிந் தின்புற வேண்டுதிரேல்
அந்தர மூவெயிலும் அரணம் எரியூட்டி ஆரூர்த்
தந்திர மாவுடையான் அவன்எந் தலைமையனே

(1ம் திருமுறை - திருவாரூர் - வியாழக்குறிஞ்சி - 10வது பாடல்)

7. தமது பாடல் இத்தன்மைத்து  என கூறல்:

கறையிலங்கு மலர்க்குவளை கண்காட்ட கடிபொழிலின்
நறையிலங்கு வயற்காழித் தமிழ்ஞான சம்பந்தன்
சிறையிலங்கு புனற்படப்பைச் செங்காட்டங் குடிசேர்த்தும்
மறையிலங்கு தமிழ்வல்லார் வானுலத் திருப்பாரே

(1ம் திருமுறை - திருச்செங்காட்டங்குடி - பழந்தக்கராகம் - 11 வது பாடல்)

8. பெளத்தர் பழக்கவழக்கம்:

காலையில் உண்பவரும் சமண் கையரும் கட்டுரைவிட்டன்று
ஆலவிடம் நுகர்ந்தான் அவன்றன்அடி யேபரவி
மாலையில் வண்டினங்கள் மதுவுண் டிசைமுரல வாய்த்த
பாலையாழ்ப் பாட்டுகந்தான் உறைகோயில் பாதாளே

(1ம் திருமுறை - திருப்பாதாளீச்சரம் - வியாழக்குறிஞ்சி -10வது பாடல்)

9. பேய்த்தேர் எனும் சொல்லாட்சி:

சடங்கொண்ட சாத்திரத்தார் சாக்கியர் சமண்குண்டர்
மடங்கொண்ட விரும்பியராய் மயங்கியோர் பேய்த்தேர்ப்பின்
குடங்கொண்டு நீர்க்குச்செல்வார் போதுமின் குஞ்சரத்தின்
படங்கொண்ட போர்வையினான் பருப்பதம் பரவுதுமே

(1 ம்திருமுறை - திருப்பருப்பதம் - வியாழக்குறிஞ்சி - 10வது பாடல்)

ஒப்பிடுக: பேய்த்தேர் முகக்குறும் பேதை குணம் ஆகாமே - திருவாசகம்

பேய்த்தேர் - கானல் நீர்

10. பெருமானது தன்மையைக் கூறல்:

கலையுடை விரிதுகில் கமழ்குழல் அகில்புகை
மலையுடை மடமகள் தனையிடம் உடையோன்
விலையுடை அணிகலன் இலனென மழுவினோடு
இலையுடை படையவன் இடம்இடை மருதே

(1ம் திருமுறை - திருவிடைமருதுார் - வியாழக்குறிஞ்சி - 6வது பாடல்) 

1 கருத்து:

  1. நல்ல சொல் ஆராய்ச்சி.

    இறுதி பாடல் திருவிடை மருதூர் இறைவன் குறித்த பாடல்
    பிரமிக்க வைக்கும் எதுகை மோனை.

    சுப்பு தாத்தா.
    www.vazhvuneri.blogspot.com
    www.subbuthatha.blogspot.com

    பதிலளிநீக்கு

Translate