11. பகவன் எனும் சொல்லாட்சி:
மகர வார்கடல் வந்தண வும்மணற் கானல்வாய்ப்
புகலி ஞானசம் பந்தன் எழில்மிகு பூந்தராய்ப்
பகவ னாரைப் பரவுசொல் மாலைபத் தும்வல்லார்
அகல்வர் தீவினை நல்வினை யோடுடன் ஆவரே
(2ம் திருமுறை - திருப்பூந்தராய் - இந்தளம் - 11வது பாடல்)
நகுவான் மதியோ டரவும் புனலும்
தகுவார் சடையின் முடியாய் தளவம்
நகுவார் பொழில்நா கேச்சர நகருள்
பகவா எனவல் வினைபற் றறுமே
(2 ம் திருமுறை - திருநாகேச்சரம் - இந்தளம் - 4வது பாடல்)
12. வீடும் ஞானமும் வேண்டுமேல் செய்ய வேண்டுவன:
வீடும் ஞானமும் வேண்டுதிரேல் விரதங்களால்
வாடி ஞானமென் ஆவதும் எந்தை வலஞ்சுழி
நாடி ஞானசம் பந்தன செந்தமிழ் கொண்டிசை
பாடும் ஞானம்வல் லாரடி சேர்வது ஞானமே
(2 ம் திருமுறை - திருவலஞ்சுழி - இந்தளம் - 11வது பாடல்)
13. சாவகர் எனும் சொல்லாட்சி:
மாப தம்அறி யாதவர் சாவகர் சாக்கியர்
ஏப தம்பட நின்றிறு மாந்துழல் வார்கள்தாம்
ஆப தம்அறி வீருளி ராகில் அனேகதங்
காப தம்மமர்ந் தான்கழல் சேர்தல் கருமமே
(2 ம் திருமுறை - திருஅனேகதங்காவதம் - இந்தளம் - 10வது பாடல்)
சாவாயும் வாதுசெய் சாவகர் சாக்கியர்
மேவாத சொல்லவை கேட்டுவெ குளேன்மின்
பூவாய கொன்றையி னானைப் புனற்காழிக்
கோவாய கொள்கையி னானடி கூறுமே
(2ம் திருமுறை - சீகாழி - இந்தளம் - 10வது பாடல்)
14. பலியினால் பெருமான் கொள்ளும் மூன்று:
சடையானைத் தலைகையேந் திப்பலி தருவார்தம்
கடையேபோய் மூன்றுங்கொண் டான்கலிக் கச்சியுள்
புடையேபொன் மலருங்கம் பைக்கரை யேகம்பம்
உடையானை அல்லதுள் காதென துள்ளமே
(2ம் திருமுறை - திருக்கச்சியேகம்பம் - இந்தளம் - 5வது பாடல்)
15. பெருமானுடைய பெயர்கள் எண்ணிக்கை:
சீருடை யாரடி யார்கள் சேடரொப் பார்சடை சேரும்
நீருடை யார்பொடிப் பூசும் நினைப்புடை யார்விரி கொன்றைத்
தாருடை யார்விடை யூர்வார் தலைவரைந் நுாற்றுப்பத் தாய
பேருடை யார்பெரு மானார் பெரும்புலி யூர்பிரி யாரே
(2ம் திருமுறை - திருப்பெரும்புலியூர் - காந்தாரம் - 9வது பாடல்)
16. அல்லாத சாதிகளும் அருநெறிக்கே செல்ல அருளும் பிரான்:
வில்லார் வரையாக மாநாகம் நாணாக வேடங்கொண்டு
புல்லார் புரமூன் றெரித்தார்க் கிடம்போலும் புலியும் மானும்
அல்லாத சாதிகளும் அங்கழல்மேற் கைகூப்ப அடியார் கூடிச்
செல்லா அருநெறிக்கே செல்ல அருள்புரியுந் திருநணாவே
(2ம் திருமுறை - திருநணா - காந்தாரம் - 6வது பாடல்)
17.வாமதேவர் எனும் சொல்லாட்சி:
சாம வேதமோர் கீதம் ஓதியத் தசமுகன் பரவும்
நாம தேயம துடையார் நன்குணர்ந் தடிகளென் றேத்தக்
காம தேவனை வேவக் கனலெரி கொளுவிய கண்ணார்
வாம தேவர்தண் புகலுார் வர்த்தமா னீச்சரத் தாரே
(2ம் திருமுறை - திருப்புகலுார் வர்த்தமானீச்சரம் - பியந்தைக் காந்தாரம் - 8வது பாடல்)
18. தம்மைப் போலத் தம்மடியார்க்கும் இன்பம் அளிப்பவர்:
கோல மாகரி உரித்தவர் அரவொடும ஏனக்கொம் பிளஆமை
சாலப் பூண்டுதண் மதியது சூடிய சங்கர னார்தம்மைப்
போலத் தம்மடி யார்க்குமின் பளிப்பவர் பொருகடல் விடமுண்ட
நீலத் தார்மிடற் றண்ணலார் சிரபுரந் தொழவினை நில்லாவே
(2ம் திருமுறை - திருச்சிரபுரம் - நட்டராகம் - 2 வது பாடல்)
ஒப்பிடுக:
தன்னிலைமை மன்னுயிர்கள் சாரத் தரும் சத்தி
பின்னமிலான் எங்கள் பிரான் - திருவருட்பயன்
19. யக்ஞாதிபதியும் (எஜமான்) பெருமானே எனல்:
பாரும் நீரொடு பல்கதிர் இரவியும் பனிமதி ஆகாசம்
ஓரும் வாயுவும் ஒண்கனல் வேள்வியில் தலைவனு மாய்நின்றார்
சேருஞ் சந்தனம் அகிலொடு வந்திழி செழும்புனற் கோட்டாறு
வாருந் தண்புனல் சூழ்சிர புரந்தொழும் அடியவர் வருந்தாரே
(2ம் திருமுறை - திருச்சிரபுரம் - நட்டராகம் - 5வது பாடல்)
20. சொக்கம் ஆடியவர்; நமச்சிவாய நாமம்:
திக்கமர் நான்முகன் மாலண்டம் மண்டலந் தேடிட
மிக்கமர் தீத்திர ளாயவர் வீழிமி ழலையார்
சொக்கம தாடியும் பாடியும் பாரிடஞ் சூழ்தரும்
நக்கர்தந் நாமம்ந மச்சிவா யவ்வென்பார் நல்லரே
(3ம் திருமுறை - திருவீழிமிழலை - காந்தார பஞ்சமம் - 9வது பாடல்)
21. காளியை ஏவியவன் காளகண்டனே எனல்:
வல்லைவரு காளியைவ குத்துவலி யாகிமிக தாரகனைநீ
கொல்லென விடுத்தருள் புரிந்தசிவன் மேவுமலை கூறிவினவில்
பல்பல இருங்கனி பருங்கிமிக உண்டவை நெருங்கியினமாய்க்
கல்லதிர நின்றுகரு மந்திவிளை யாடுகா ளத்திமலையே
(3ம் திருமுறை - திருக்காளத்தி - சாதாரி- 3வது பாடல்)
22. இப்படியன் இந்நிறத்தன் என அறிதல் அரிது எனல்:
இன்னவுரு இன்னநிறம் என்றறிவ தேல்அரிது நீதிபலவும்
தன்னவுரு வாமெனமி குத்ததவன் நீதியொடு தானமர்விடம்
முன்னைவினை போம்வகை யினால்முழு துணர்ந்துமுயல் கின்ற முனிவர்
மன்னஇரு போதுமருவித் தொழுது சேரும்வயல் வைகாவிலே
(3ம் திருமுறை - திருவைகாவூர் - சாதாரி - 4வது பாடல்)
ஒப்பிடுக:
இப்படியன் இந்நிறத்தன் இவ்வண் ணத்தன்
இவன் இறைவன் என்றெழுதிக் காட்டொணாதே - அப்பர் தேவாரம்
23. புரூரவஸ் பெருமானை வணங்கினன் எனல்:
பாதியோர் மாதர் மாலுமோர் பாகர் பங்கயத் தயனுமோர் பாலர்
ஆதியாய் நடுவாய் அந்தமாய் நின்ற அடிகளார் அமரர்கட் கமரர்
போதுசேர் சென்னிப் புரூரவாப் பணிசெய் பூசுரர் பூமகன் அனைய
வேதியர் வேதத் தொலிமிகு வீழி மிழலையான் எனவினை கெடுமே
(3ம் திருமுறை - திருவீழிமிழலை - புறநீர்மை - 6வது பாடல்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக