5 & 6 இரு மாயை
மேல் கன்மம் கூறியவிடத்து மாயைப் புணர்ச்சி எனக் குறிப்பிட்டது சுத்தமாயா, அசுத்தமாயா காரியங்களையாம். அவை தனு, கரணம், புவனம், போகம் என நால்வகையாய் வரும். மாயை என ஒன்றாகக் கூறியிருப்ப, இரண்டாகக் கூறுவது பொருந்துமோ எனின்
"சுத்தமு மசுத்தமு மெனப் படுங் கொடுமாயை' (அமுதா. பிள்ளை. - 98)
என்று சுவாமிகளே காட்டுவது கொண்டு சுத்தம் அசுத்தம் என இரு மாயைகள் உண்டு என்பதும் பெற்றாம். அம்மாயை முப்பத்தாறு தத்துவங்களாயும் 96 தாத்துவிகங்களாயும் உயிரைப் பொருந்தும்.
"ஆறாறு தத்துவக் கூட்டம்' (திருவே. ஆ.களிப்பு. - 6)
ஒன்பது மொன்பது மொன்றும் மற்றை - 19
ஒன்பது முப்பது மொன்பது மொன்றும் - 49
ஒன்பது மொன்பது மொன்றும் பின்னும் - 19
ஒன்பது மானவைக் கப்புறத் தாராம் - 9
--------
96
(திருவே. ஆ.களி. - 9)
என முப்பத்தாறு தத்துவக் கூட்டங்களையும், தொண்ணாற்றாறு தாத்துவிகங்களையும் அமைத்தமையைக் காணலாம்.
ஆத்மதத்துவம் 24, வித்யா தத்துவம் 7, சிவதத்துவம் 5 ஆக முப்பத்தாறு தத்துவங்களாம்.
புறநிலைக் கருவிகள் 60 கூட்டி, 96 தாத்துவிகங்கள் கூறப்பட்டமை காண்க.
இம்மாயையே உலகிற்கு முதற்காரணம். உலகிற்கு இறைவனே முதற்காரணமாக மாட்டானோ எனின் ஆகமாட்டான். இறைவன் சித்து. மாயை அறிவற்ற சடம். அறிவற்ற சடமாகிய உலகம் சிவமாகிய அறிவுடைப் பொருளை முதற்காரணமாகக் கொண்டு காரியப்படாது. இனி மாயை ஒன்றே உலகைத் தோற்றுத்துக் கொள்ளும், சிவம் வேண்டா எனின் மாயை சடம் ஆகையால் இவ்வுலகாய்த் தானே காரியப்படாது. ஆகலான் சிவம் வேண்டும் என்க. மாயையும் சிவம்போல் அநாதி. எனவே சிவம் மாயையைக் காரியப்படுத்தி உலகை ஆக்குவான்.
ஆணவம் உயிருக்கு அநாதி பந்தம். ஆகலின் அது சகச மலமாயிற்று. கன்மமாயைகள் அநாதியே சிவன் வசத்திருப்பன. அவன் அவற்றை ஆணவ நிவிர்த்தியின் பொருட்டு அவ்வுயிர்களிடம் சேர்ப்பிக்கிறான். அச்சேர்ப்பித்தல் தான் இடையில் நிகழ்வது. அதுபற்றி அவை ஆகந்துக மலமெனப்படும். அவன் முதலில் உயிருக்குக் கருணையினால் சூக்கும உடலைச் சேர்ப்பிக்கிறான். அச்சூக்கும உடல் காரணமாக இருவினை வரும். அதனால் துõல உடல் வரும். பின்னர் இருவினையும் துõலவுடலும், விதையும் மரமும் போல் மாறி மாறி வரும். அதனால், மரணம், பிறப்பு என்னும் நோய் உயிரைப் பற்றும். கன்மப் புசிப்பால் ஆணவமலப் பிடிப்பு நெகிழும். அஞ்ஞான்று நல்வினை தீவினை என்னுமிரண்டனையும் உயிர் சமமாய்க் காணும். அப்பொழுது திருவருள் மேலீட்டால் மலநீக்கம் உண்டாய்ப் பரமுத்தியைச் சிவம் தந்தருளும். இவ்வுண்மையை மாதவச் சிவஞான சுவாமிகள் அமுதாம்பிகை பிள்ளைத் தமிழில்
"சுத்தமு மசுத்தமு மெனப்படுங் கொடுமாயை
துõணாக விருளாணவம்
தொடுத்தநெடு விட்டமாக் கருமப் பெரும்பகுதி
துõக்கிய வடங்களாக
வைத்தமா யேயமே பலகையா முடிவிலா
வான்புவன கோடி முற்றும்
மகிழ்ந்தாடு வெளியாக வாருயிர்க் குழவிகளை
மரணம் பிறப்பென்னு நோய்
மொய்த்தமணி யூசல்வைத் தாட்டிக் கடைத்தலை
முடங்கா தெடுத்த ணைத்து
முதுக்குறை வளளித்துமேற் பரமுத்தி வீடுய்த்து
மூவாத வானந்தமாம்
புத்தமிழ் தருத்திமெய்த் தாயாய் வளர்ப்பவள்
பொன்னுõச லாடியருளே (அமுதா. - 98)
என்ற திருப்பாடலில் இவ்வுண்மைச் சித்தாந்தங்கள் அற்புதக் கவிநயந்தோன்றக் கூறப்பட்டிருக்கும் மாட்சியை எண்ணி எம்மால் வணங்கவே முடிகின்றது.
நிறைவாக ஒன்று. மும்மலச் சிமிழ்ப்பால் பிணிக்கப்பட்ட சகலவர்க்கத்து உயிர்களுக்கும் சிவம் ஆசாரியத் திருமேனி கொண்டே அருள் செய்யும் என்ற உண்மையைத் தமது சிற்றிலக்கியங்களில் அமைக்கத் தவறவில்லை மாதவச் சிவஞான யோகிகள்.
"ஆட்கொளக் , குருவு மாயினாய் போற்றி' ( கலை - 96)
"சைவத்தில் வந்து சரியாதி மூன்று
தடையின்றி முற்று பருவ
மைவைத்த தீய மலபாக நோக்கி
வினையொப் புறுத்தி வழியான்
மெய்வைத்த ஞான குருவாகி வந்து
கதியுய்க்க வல்ல விமலன்
செய்தற் றுடுத்த கலைசைக்குண் மேவு
சிவனாகு மெய்ம்மை யிதுவே' (கலை - 67)
என்று அவ்வுண்மையை அமைத்துக் காட்டிய அழகு போற்றத் தக்கது.
வற்றாக் கருணைத் திருநோக்குநின் முகமண்டலமுஞ்
சற்றே முகிழ்த்த குறுமூரலுந் தடமார்பழகும்
பொற்றாளுஞ் சின்முத்திரையு நெஞ்சூடு பொறித்து வைப்பாய்
செற்றார் புரஞ்செற்ற தேவே பஞ்சாக்கர தேசிகனே (பஞ்.மாலை - 6)
எனத் தம் குருமுதல்வரைப் புரஞ்செற்ற தேவெனத் துதித்தமைத்துக் காட்டியிருப்பதும் மேலுண்மையை வலியுறுத்தும்.
மாதவச் சிவஞான யோகிகள் அருளிய சிற்றிலக்கியங்களில் அமைத்துக் காட்டிய தத்துவக் கொள்கைகள் பலவுள. ஆனால் அடிப்படைக் கொள்கைகள் மட்டுமே ஈண்டு எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. இவை பற்றி எழும் தடைவிடைகளும் ஸ்ரீமத் சுவாமிகளால் சிற்றிலக்கியங்களில் ஆண்டாண்டுக் கூறப்பட்டுள்ளன. அவை யாவும் நல்லறிஞர்களால் எடுத்து விளக்கப்படின் தத்துவவுலகு பெரும்பயன் எய்தும். அப்பணியைத் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்கள் செய்ய வேண்டும் என்பது அடியேனது பணிவான விண்ணப்பம். இத்தத்துவக் கொள்கைகளோடு இயைபுடையனவும் மாதவச் சிவஞான சுவாமிகளால் அவர்தம் சிற்றிலக்கியங்களில் கூறப்பட்டுள்ளன. விரியும் என்றஞ்சி அவை இங்கு விடப்பட்டுள்ளன. அறிஞர் உலகு என் பணியை ஏற்க இறைஞ்சுகின்றேன்.
(முற்றியது)
தமிழ்முறையில் புதுமனை புகுவிழா நடத்தவிரும்புகிறேன். சற்குருநாத ஓதுவாரின் கைபேசி எண் கிடைக்குமா? நடராசன்
பதிலளிநீக்குஇது குறித்து அவரிடம் கேட்டபோது, அவருக்கு தமிழ் வழி சடங்குகள் பற்றி எதுவும் தெரியாது என்று கூறிவிட்டார்.
நீக்கு