விடிந்தால் மாதவ சிவஞான சுவாமிகள் குருபூஜை. சித்திரை ஆயில்யம். இதுவே திருநெல்வேலியில் இருந்திருந்தால், சிவநெறிக் கழகம் சார்பில் ஏதேனும் வழிபாட்டில் கலந்து கொண்டிருக்கலாம். பொருள் தேடும் போதே அருளையும் தேடுவது சாலச் சிரமம் தான்.
எனது ஆசிரியர் ரத்நவேலனின் ஆசிரியர் பேட்டை ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளை. அவரது ஆசிரியர் திருவாவடுதுறை ஆதீன தலைமை வித்வானாக இருந்த சிதம்பர ராமலிங்கம் பிள்ளை. இவர் திருநெல்வேலி இந்து கல்லூரியில் பேராசிரியராக இருந்தவர்.
எனது ஆசிரியர் ரத்நவேலன் |
சிதம்பர ராமலிங்கம் பிள்ளை, சிவஞான சுவாமிகளிடம் பாடம் கேட்ட பரம்பரையில் வந்தவர் என, பிறர் கூற கேட்டிருக்கிறேன். அவரைப் பற்றிய விவரங்களை சேகரித்து கொண்டிருக்கிறேன்.
திருநெல்வேலியை பொருத்தமட்டில், சிவஞான சுவாமிகள் மீது பெரும் பக்தி கொண்ட சைவர்கள் இருக்கிறார்கள் என்றால், அதற்கு சிதம்பர ராமலிங்கம் பிள்ளை, ஈசுரமூர்த்திப் பிள்ளை, ரத்நவேலன் ஆகியோர் முக்கிய காரண கர்த்தாக்கள் என கூறலாம்.
இவர்களில் பின்னிருவர், நெல்லையப்பர் கோவிலில், தொடர்ந்து பல ஆண்டுகளாக, சைவ சித்தாந்த நூல்களை பாடம் சொல்லியிருக்கின்றனர்.
எனது ஆசிரியரின் இறுதிக் காலத்தில், சிவஞான சித்தியாரின் முதல் சில செய்யுட்களின் இருவர் உரை பாடம் சொல்லக் கேட்டோம். அத்தோடு பாடம் நின்று போனது.
எனது நண்பரும், ரத்நவேலனின் இளைய மகனுமான சிவஞானம், இன்று மாலை சென்னையில் இருந்து புறப்பட்டு சங்கரன் கோவிலுக்கு சென்று விட்டார்.
இன்று அங்கு சிவஞான சுவாமிகள் குருபூஜையில் அவர் தான் பிரதான சொற்பொழிவாளர். தலைப்பு, சோமேசர் முதுமொழி வெண்பா. "மைக் வேண்டாம் என்று சொல்லப் போகிறேன்; இரண்டே இரண்டு செய்யுட்கள் தான் பேசப் போகிறேன்' என்று என்னிடம் சொன்னார்.
பணி முடிந்து வந்த பின்பு, இந்த நினைவுகள் வந்தன. சில நாட்களுக்கு முன்பு எடுத்து வைத்த புத்தகங்களில், எனது வலைப்பூவில் பதிவிடுவதற்காக, எனது ஆசிரியரின் ஒரு சிறிய நூலை எடுத்து வைத்திருந்தேன்.
ரத்நவேலன்,பிற சைவ சித்தாந்த ஆசிரியர்களை போல, பெரிய பெரிய நூல்களையோ, ஆய்வு பேருரைகளையோ எழுதி செல்லவில்லை தான்.
விரல் விட்டு எண்ணக் கூடிய சில நூல்களையே அவர் எழுதியிருக்கிறார்.
நூல்கள் எழுதுவதில் அவர் பேராவல் கொண்டிருந்ததாக நான் பார்க்கவில்லை. இருப்பினும், அடியார்களின் வற்புறுத்தலுக்காக, அவர் சில நூல்களை எழுதினார்.
நான் இப்போது தேடி எடுத்த நூல், சென்னை பல்கலைக்கழகத்தின், தத்துவத்தில் சிறப்பாய்வுக்கான ராதாகிருஷ்ணன் கழகத்தின் கீழ், 198687ம் ஆண்டில் வெளியான சிறிய நூல்.
ரத்நவேலன் எழுதி சென்னை பல்கலையால் வெளியிடப்பட்ட நூல் |
அதை பதிவிட இது சிறந்த வாய்ப்பு என்பதால், இங்கு பகுதி பகுதியாக பதிவிடுகிறேன்.
அந்த வெளியீட்டில் எப்படி இருக்கிறதோ அப்படியே இதில் தந்திருக்கிறேன். எதையும் மாற்றவில்லை. அதனால் பெரும் பெரும் பத்திகளாகவும், எழுத்துக்கள் சேர்ந்தும் இருக்கும். வாசிக்கும் போது சற்று சிரமமாகத் தான் இருக்கும். மன்னிக்க வேண்டுகிறேன்.
************************
கல்லா னிழன்மலை
வில்லா ரருளிய
பொல்லா ரிணைமலர்
நல்லார் புனைவரே
வேதப் பொருளுணர்ந்தேம் மேவு சிவாகமத்தின்
தீதில் பொருளுந் தெளிந்துய்ந்தேம் ஏதுகுறை
தெற்றிசூழ் சிங்கைச் சிவஞான மாமுனிவன்
பொற்றா மரையடிக்கீழ் புக்கு
தோற்றுவாய்
சென்ற 18ம் நூற்றாண்டில் செந்தமிழ் நாட்டில் வாழ்ந்த தலை சிறந்த தத்துவஞானி மாதவச் சிவஞான யோகிகள். அவர்கள் திருவாவடுதுறையில் ஞானாசிரியராக விளங்கிய பேரூர் வேலப்ப தேசிகமூர்த்திகளிடத்துச் சைவசந்நியாசமும் சிவஞான உபதேசமும் பெற்றவர்கள்; தமிழ்மொழியிலுள்ள சிவஞானபோத சூத்திர வார்த்திகங்கட்கு மஹாபாடியம் என்னும் பேருரை ஆக்கி உபகரித்தவர்கள்; தமிழ்மொழியிலும் வடமொழியிலும் தன்னேரிலாப் புலமையுடையவர்கள்; இலக்கண, தருக்க, கருவி நூற் புலமையில் மேலோங்கி அக் கருவி நூல்களும் ஆக்கித் தந்தவர்கள்; உரையாசிரியர்களில் வேந்திலா வேந்தராய் நின்றவர்கள். இவையேயன்றித் தமிழ் மொழியில் சிற்றிலக்கியங்கள் பலவும் ஆக்கி உபகரித்தவர்கள்.
மாதவச் சிவஞானயோகிகள் ஆக்கிய சிற்றிலக்கிய நூல்கள்: அந்தாதிகள் 5, பிள்ளைத் தமிழ்நூல்கள் 2, பதிகங்கள் 2, மாலை 1, ஆனந்தக்களிப்பு 1, திருநாமக் கோவை 1, நீதிநூல் 1, மொழிபெயர்ப்பு நூல்கள் 2 ஆகப் பதினைந்தாம்.
அவற்றுள் குளத்தூர்ப் பதிற்றுப்பத்தந்தாதி, இளசைப் பதிற்றுப்பத்தாந்தாதி, கலைசைப் பதிற்றுப் பத்தந்தாதி, திருவேகம்பரந்தாதி, திருமுல்லைவாயிலந்தாதி என்னும் ஐந்தும் அந்தாதி நூல்களாம்.
செங்கழுநீர் விநாயகர் பிள்ளைத் தமிழ், அமுதாம்பிகை பிள்ளைத் தமிழ் ஆகிய இரண்டும் பிள்ளைத் தமிழ் நூல்களாம்.
கச்சி ஆனந்த ருத்திரேசர் பதிகம், செப்பறைப் பதி அகிலாண்டேசுவரி பதிகம் ஆகிய இரண்டும் பதிகங்களாம்.
திருவேகம்பர் ஆனந்தக் களிப்பு, பஞ்சாக்கர தேசிகர் மாலை, திருத்தொண்டர் திருநாமக்கோவை, சோமேசர் முதுமொழி வெண்பா ஆகிய நான்கும் அவ்வவ்வகைகளில் ஒவ்வொன்றாம்.
"சிவதத்துவ விவேகம்', அப்பைய தீக்கிதர் ஆக்கிய "சிகரிணி மாலை' என்ற வடமொழி நூலின் மொழிபெயர்ப்பு.
ஆசிரியர் அரதத்தர் வடமொழியில் செய்த "பஞ்சரத்ந மாலிகா' என்ற நூலின் மொழிபெயர்ப்பே "சுலோக பஞ்சகம்'.
மேலே குறிப்பிட்ட பதினைந்து நூல்களில் இறுதியில் கூறப்பட்ட இரண்டு மொழிபெயர்ப்பு நூல்களும் அவ்வம் மூல நூலாசிரியர் கருத்தின் வழியே மொழிபெயர்க்கப்பட்டதாகலின் அவ்விரண்டும் விடப்பட்டு, எஞ்சிய பதின்மூன்று நூல்களுக்கும் மூல ஆசிரியர் ஸ்ரீமத் சிவஞான சுவாமிகளே ஆகலான் அப்பதின்மூன்று நூல்கள் மட்டுமே ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
இனி அந்தாதி, பிள்ளைத்தமிழ், பதிகம், மாலை, ஆனந்தக் களிப்பு முதலியவற்றின் அமைப்பு, இலக்கணம், இலக்கியப் பாங்கு பற்றிய விவரங்கள் முதலியவும் ஈண்டு எடுத்துக் கொள்ளப்படவில்லை. ஏனெனில், அவை விரிந்து தலைப்பு வழிநின்று கூறப்பட வேண்டியன குறைந்துவிடுமென்ற அச்சமே.
பெரும்பாலும் சிற்றிலக்கியங்கள் பாட்டுடைத் தலைவரின் பெருமை கூறவே எழுந்தன. அதனுடன் தலமான்மியம், அகப்புறச் செய்திகள், பழைய வரலாறுகள் முதலியவும் சிற்றலக்கியங்களில் கூறப்படும். பாட்டுடைத் தலைவர்பால் அன்புமிகுதற்பொருட்டமைந்த போற்றிகளும் மிகுந்து வரும். அவையெல்லாம் பெரும்பயன் தருவனவே. ஆயினும், இக்கட்டுரையில் சுவாமிகள் தாமாக்கிய சிற்றிலக்கியங்களில் அமைக்கும் தத்துவக் கொள்கைகள் மட்டுமே வேண்டுமளவில் எடுத்துக் கொள்ளப்பட்டன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக