செவ்வாய், 23 ஏப்ரல், 2013

சிற்றிலக்கியங்களில் சிவஞான முனிவர் அமைக்கும் தத்துவக் கொள்கை - ச.ரத்நவேலன் (பகுதி - 4)


1. ஆ. சொரூப நிலை

பதியின் சொரூபநிலை என்பது பதியின்  சிறப்பியல்பு  என்று பொருள்படும். "சிறப்பியல்பு எனினும் தன்னியல்பு எனினும் ஒக்கும்' என்பர் சிவஞான முனிவரர். 12.



சிறப்பியல்பு என்பது அநுபவஅறிவாற் காணப்படுவது. அளவையானும் இலக்கணத்தானும் காண  முடியாதது. சாதனத்தாலும் பயன்முகத்தாலுமே காண முடிவது. ஆயினும் அவனது சொரூபநிலை பற்றிச் சிவப்பிரகாசம் 13வது திருவிருத்தம் "பதிப்பொருளாயுள்ளது பசு, பாசம் ஆகிய  இரண்டிலும் மேலானது; அவ்வொன்று உயிர் அறிவு (பசு ஞானம்) உலக அறிவு (பாச ஞானம்)களுக்குப் புலப்படக் கூடிய அருவாகிய காரணநிலையும், உருவாகிய  காரிய நிலையும் அல்லாதது...; சத்துவ முதலிய குணங்களும் எவ்வகைத் தேகங்களும் இல்லாதது; அழுக்கற்றது; ஒப்பற்றது; முக்காலமுங் கடந்தது; எண்ணிறந்த உயிர்களின் அறிவுக்கு அறிவாகிச் சலனம் அற்றது; வரையறையற்றது; ஆனந்த வடிவமானது; வேதாகம வழக்கொடு  மாறுபட்டால் அடையப்படாதது; வேதாகம வழக்கின் வழி ஒழுகினால் அடையப்படும் இலட்சியமாய்த் திகழ்வது; அணுவவாகி அதேநேரத்தில் மகத்(பெரியதாகி)தாகி எங்கும் விளங்குவது' என்று கூறியுள்ளது.
இச்சொரூப நிலையைச் சிற்றிலக்கியங்களில் வைத்து விளக்குவது அரிய காரியம். மாதவச் சிவஞான யோகிகள் அவ்வரிய காரியத்தையும் எளிமையாக அருளியுள்ளார்.

"பற்றிக்கிடந்த பசுபாசப் பரப்பைக் கடந்த பரவெளியின்
முற்றிக்கிடந்த சிவானந்த முழுத்தேன் நுகர்வார்க்கக விளக்காம்' (இளசை 30)

"பொன்றி டாப்பர மானந்த வெள்ளமாய்ப் போக்கொடு வரவின்றி
யென்று மோரியல் பாகிய பராபரம்' (இளசை 77)

"உறைவானை யெவ்விடத்து முயிர்க்குயிரா யங்கங்கே
நிறைவானை யசைவின்றி நிற்பானை யேனோர்க்கு
மறைவானை....' (இளசை 12)

என்ற திருவாக்குகளுள் அப்பிரானின் சொரூபநிலை விளக்கப்பட்டது கண்டின்புறத்தக்கது. இனி, அச்சிவபரம்பொருள் மேற்கொண்ட தடத்தநிலையே திருமேனிகள். அச்சிவபிரானின் வேறாகாத உமாதேவியர், விநாயகர் ஆகிய  திருமேனிகளில் கூட அப்பிரானின் சொரூபநிலையைக் காட்டும் அழகு பெரிதும் கொண்டாடத் தக்கது. அமுதாம்பிகை பிள்ளைத் தமிழ் விநாயக வணக்கத்தில்,

"மணிகொண்ட கோடொரு மருங்குண்மை யால்பெண்மை
வடிவென்று மஃதின்மையோர்
மருங்குண்மையா லாண்மை வடிவென்று மீதுகீழ்
மாறிய திருக்காட்சியாய்
அணிகொண்ட வுயர்திணைய தென்றுமஃறிணையென்றும்
யார்க்கும் கிளக்கவரிதாம்
ஐங்கரச் சிந்துரத்தின் கழற்செஞ் சரணம்
அஞ்சலித்துத் துதிப்பாம்'

என்று கூறுவதனால் அவ்வுண்மை வெளிப்படும். "விநாயகரது யானைத்  திருமுகத்தில் ஒருபக்கம் கொம்பில்லை. அதனால் அது பெண்யானை வடிவோ? மற்றொரு  பக்கத்தில் கொம்புள்ளது. அதனால் அது ஆண்யானை வடிவோ? தலை யானைத் தலையாயுள்ளது. அதனால் விநாயகர் அஃறிணையோ, யானைத் தலைக்கு கீழுள்ள திருமேனி தேவ, பூத உடம்பாக இருப்பதால் உயர்திணையோ? என யாராலும் சொல்ல முடியாத திருமேனி  வைபவமுடைய ஐந்து கைகளையுடைய யானை முகக்கடவுளை வணங்கித் துதிப்போம்' என்று புலப்படும் பொருளுண்மையால் "பரம்பொருள் ஆண் பெண் உயர்திணை அஃறிணை என  அறிய முடியாத இயல்பினது' என்னும் அதன் சொரூப நிலை கூறப்பட்டுள்ளது.


குறிப்புகள்

12. சிவஞான போதமும்  பாடியமும், கழகப்பதிப்பு, ப.11

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Translate