1. அ.ஏகன்
மாதவச் சிவஞான யோகிகள் ஆக்கிய 13 சிற்றிலக்கியங்களுக்கும் பாட்டுடைத் தலைவராவார் சிவபிரான், உமாதேவியார், விநாயகப் பெருமானார், நமச்சிவாய மூர்த்திகள் என்னும் நால்வருமேயாவார்.
அந்தாதிகள் ஐந்து, கச்சிப்பதிகம், ஆனந்தக் களிப்பு, முதுமொழி வெண்பா ஆகிய நூல்களுக்குப் பாட்டுடைத் தலைவர் சிவபிரானே. உமாதேவியார் அமுதாம்பிகை பிள்ளைத் தமிழ், செப்பறைப் பதிகம் ஆகிய இரண்டற்கும் தலைவர். செங்கழுநீர் விநாயகர் பிள்ளைத் தமிழ்க்கு விநாயகப் பெருமானும், பஞ்சாக்கர தேசிகர் மாலைக்கு நமச்சிவாய மூர்த்திகளும் பாட்டுடைத் தலைவர்களாவர். இந்நால்வர் தலைவர்களையன்றி, "திருத்தொண்டர் திருநாமக்கோவை'யில் "உண்மை நாயன்மார்களை' மாதவச் சிவஞான சுவாமிகள் தலைவர்களாகப் போற்றி வணங்கினார். பிற எவரையும் யோகிகள் பாடவில்லை. இப்பதின்மூன்று நூல்களில் திருவருட்பயன் கூறும் ஆறு பொருள்கள் பற்றிய தத்துவங்களை அறிந்து கொள்ள முற்படுவோம்.
யாதானும் ஒரு பொருளைப் பேச முற்படுவோன், முதலில் அப்பொருளின் இருப்பை நிருணயம் செய்து கொள்ள வேண்டும். உலகம் தோன்றிய நாள் முதல் இன்றுவரை, ஏன் நாளையும் கூடக் கடவுளள் இல்லை என்போர் உளராவார். ஆனால் விநயமுடையோர் - அறியும் ஆர்வம் மிக்குடையோர் -கடவுள் ஒருவர் வேண்டும் எனத் தம் கூர்த்த மதியால் கண்டுகொண்டு பொருளுண்மை நிறுவிப் பின்னர் அதன் சிறப்பியல்பைத் தெளிய அறிவர். மாதவச் சிவஞானயோகிகள் திருக்குறளை ஒரு வரலாறு சொல்லி விளக்கமுற்பட்டு அந்நூலில் அதிகாரத்திற்கு ஒரு குறள் தேர்ந்தெடுத்தனர். குறளைப் பின்னிரண்டு அடிகளில் கூறி முன்னிரண்டடிகளால் அக்குறட்பொருள் விளங்க வரலாறு ஒன்று கூறினர். ஆனால், சில குறட்பாக்களுக்கு வரலாறு கூறாது பொருள் விளக்கம் கூறியமைந்தார். தாமருளிய சோமேசர் முதுமொழி வெண்பா நூலின் முதற்பாடலில் அவ்வாறு கூறினார்.
சீர்கொளிறை யொன்றுண்டத் தெய்வநீ யென்றொப்பால்
சோர்விலடை யாற்றெளிந்தோஞ் சோமேசா - ஓரில்
அகர முதல வெழுத்தெல்லா மாதி
பகவன் முதற்றே யுலகு
என்பது அம் முதற்பாட்டு. இப்பாடலில் இரண்டு கோள் நிறுவப்பட்டன. சீர்கொள் இறை ஒன்றுண்டு, அவ்விறை சிவபிரானே என்பன அவ்விரண்டாகும்.
சீர்கொள் இறைவன் ஒருவன் வேண்டும். ஏனெனில் உலகு அவனை முதலாக உடையது. உலகினைக் கூர்ந்து நோக்கின் அது செயப்படுபொருள் என்பது விளங்கும். உலகு உறுப்பு உறுப்புக்களாய்ப் பிரிக்கப்படுந்தகையது; சுட்டி உணரப்படுவது; பலவாய், சடமாய் உள்ளது. ஆகையால் இஃது ஒரு காரியப் பொருள். காரியப் பொருளாயின் அதற்கு முன் ஒரு காரணம் அவசியம் வேண்டப்படும். உலகமாகிய காரியத்திற்கு முதற் காரணம் ஒன்றும், அது காரியப்படுவதற்குத் துணையாக மற்றொரு காரணமும், காரியப்படுத்தும் வினை முதலாக நிமித்தமாகிய காரணம் ஒன்றும் என மூன்று காரணங்கள் வேண்டப்படும்.
இவ்வாறு இவ்வுலகமாகிய காரியத்தைக் கண்டு இதற்கு ஒருதலையாய் அறிவுடைய நிமித்த காரணம் ஒன்று வேண்டப்படும் என்று துணிந்த வழி, சீர்கொள் இறை ஒன்றுண்டு என நிர்ணயிக்க முடிகிறது. இதனைத் திருக்குறளின் "முதற்றே உலகு' என்ற தொடர் தெரிவிக்கிறது. பரிமேலழகரும் "காணப்பட்ட உலகத்தாற் காணப்படாத கடவுட்கு உண்மை கூற வேண்டுதலின், ஆதிபகவன் முதற்றே உலகு என உலகின் மேல்வைத்துக் கூறினார். கூறினாரேனும் உலகிற்கு முதல் ஆதிபகவன் என்பது கருத்தாகக் கொள்க' 5 என்றுரைத்ததும், சிவஞானபோதம் முதற்சூத்திரம் பாடியவுரைக் கண் மாதவச் சிவஞானயோகிகளும் 6 காணப்பட்ட உலகத்தாற் காணப்படாத கடவுட்கு உண்மை கூற வேண்டுதலின், தோற்றிய திதியே ஒடுங்கியுளதாம் என உலகின் மேல் வைத்துக் கூறினார்' என்றுரைத்தலும் இங்குப் புடைபட வைத்துக் காணத் தக்கன. காணப்படும் புகையைக் கொண்டு காணப்படாத நெருப்பு உண்டு என்ற அநுமானப் பிரமாணங் கொண்டு காணப்படும் உலகத்தைக் கொண்டு அதற்கு நிமித்த காரணமாகிய கடவுள் ஒருவர் உண்டென்று கொள்க.
இவ்வாறு காரியமாகிய உலகைக் கொண்டு நிமித்த காரணமாகிய முதற்பொருள் உண்டு என நிச்சயித்த பின்னர், அக்குறளில் அப்பொருள் சிவனே என அறியத் துணை செய்வன ஒப்பு, சோர்விலடை ஆகிய இரண்டும் ஆம். ஒப்பாவது உவமை. இக்குறளில் அகர முதலவெழுத்தெல்லாம் என்பது அவ்வுவமை. அகரம் எழுத்துக்களிலெல்லாம் வியாபித்து அவைகளுக்குத் தலைமையாய் நிற்கும். அது போல நிகர் இல்லாத சிவபிரானே உயிர், உலகம் என்னும் அனைத்தினும் பூரணமாய் வியாபித்துத் தலைமை எய்தி நிற்பார். சிவபிரான் வியாபகரும் தலைவரும் ஆவார். குறளில் சிவபிரான் என்ற பெயரே இல்லை. அப்படியிருக்க இவ்வுவமையை அவர் மேல் பொருத்துவது எவ்வாறு எனின் கூறுதும். "அகரம் எல்லாச் சொற்களுக்கும் மூலமாதலாலும், பிரம்மம் எல்லாப் பொருளுக்கும் மூலமாதலாலும் அ என்று பரப்பிரம்மத்திற்கும் பெயர்' என்பது வாமன புராண வாக்கு;7 பிரம்மமாவது யாது எனின் "எங்கிருந்து இவ்வுயிர்கள் எல்லாம் தோன்றினவோ, தோன்றி எதனால் வாழ்கின்றனவோ, பிரிந்து எதன்கண் ஒடுங்குமோ அதனை அறிய விரும்பு, அது பிரம்மம். (தைத்திரீயம் 3.1) 8 என்ற சுருதியால் பிரம்மமானது இது என்பது புலனாயிற்று. உயிர்கள் எதன்கண் தோன்றி ஒடுங்குகின்றனவோ அது பிரம்மம் என்பதும் வெளிப்பட்டது. இனி, "இரண்டற்றதாயும் சிவமாயும் உலகம் ஒடுங்குமிடமாயும் வழங்க முடியாததாயும் உள்ள நான்காவது பொருள் அளவில்லாதது.9 இங்ஙனம் ஓங்காரம் பரம ஆன்மாவே. எவன் எவன் இங்ஙனம் அறிகிறானோ அவனவன் திருவருளால் பரமான்மாவை அடைகிறான்' 10 என்பது மாண்டூக்கிய உபநிடதத்தின் 12 ஆம் மந்திரம். எனவே அ பிரம்மம்; பிரம்மம் = சிவன் என்பது ஆயிற்று. அதனைத் திருக்குறள் பகவன் என்ற பெயரால் கூறிற்று. பகவன் என்ற பெயர் சிவபிரானுக்கே உரியது என்பதனைச் "சுருதி சூக்தி மாலை' என்ற வடமொழி நூலுடையார் தம் நூலில் நன்கு நிறுவியுள்ளார். திருக்குறள் ஆசிரியர் பகவன் என வாளா கூறாது ஆதி என்ற சோர்விலடையால் கூறினார்.
"ஐசுவரியம், வீரியம், புகழ், திரு,ஞானம், வைராக்கியம் என்னுமாறுக்கும் பகமென்னும் பெயருண்மையால், பகமென்பதற்கு இவ்வாறு குணங்களையுமுடையவனென்பது பொருள் என்றார் யாழ்ப்பாணத்து நல்லுõர் ஆறுமுக நாவலர் அவர்கள்.10. ஆதிபகவன், என்ற தொடரிலுள்ள ஆதியென்பது இறைமைக் குணங்கள் இலராய பிற சமயத்துக் கடவுளர் தொகுதியை விலக்கவந்த அடை. அவ்வாதிபகவன் சிவபிரானே என்பதை வேதம்,
"சங்கரோ பகவா நாத்யோ ரரக்ஷ ஸகலா: பிரஜா' என்றும்
"மஹேசோ நாதி பகவான் தேவ:' என்றும்
கூறி வலியுறுத்துகிறது. 11
மாதவச் சிவஞான முனிவரர் திருவாக்கு இவ்வுண்மைகள் அனைத்தையும் ஒரு வெண்பாவில் விளக்கி நிற்கிறது. இனி இச்சிவபிரான் ஒருவனே என்பதை முனிவரர் பெருமான்
"ஒன்றுவிட் டொன்றினைப் பற்றவல் லாருக்கு'
(திருவேகம்பர் ஆனந்தக் களிப்பு 1)
என்று கூறி ஒன்று என்பதால் சிவன் ஏகனே என்று அருளிச் செய்திருத்தல் காண்க. இவ் ஏக சப்தத்தோடு சிவபிரானைக் கூறும் வேதவாக்கியங்கள் பலவுள.
அவ்வொருவன் எத்தன்மையன்? என அடுத்த வினா நிகழ்வுழி அவனது இருநிலைகளைச் சைவ சித்தாந்தம் கூறும். ஒன்று அவனது சொரூப நிலை. மற்றது தடத்தம். சொரூப நிலையைச் சிறப்பியல்பு என்றும் தடத்த நிலையைப் பொதுவியல்பு என்றும் கூறுவர்.
குறிப்புகள்
5. திருக்குறள், நாவலர் பதிப்பு, ப.8
6. சிவஞானபோதமும் பாடியமும், கழகப்பதிப்பு, ப.66
7. திருக்குறள், வை.மு.கோபாலகிருஷ்ணமாசாரியார் பதிப்பு, ப.7
8. சிவஞான பாடியத் திறவு, ப. 8
9. மேலது, ப. 27
10. திருக்குறள், நாவலர் பதிப்பு, அடிக்குறிப்பு, ப. 3
11. திருக்குறள் பொதுநூலா?, ப.18
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக