2. அநேகன்
"ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க' என்று மணிவாசகப் பெருமான் அருளியதனை அறியார் இரார். ஏகன் போலவே அநேகன் என்பதும் இறைவன் பெயர் மாத்திரையாய் அவ்வடியில் வருகின்றது. ஏகன் என்பதற்கு எதிர்ப்பதமே அநேகன் என்பதாகும். சொல்லால் ஒருமையாய் நிற்பதால் அஃது இறைவனுக்கு ஆயிற்று.
திருவேகம்பரந்தாதி 59 ஆம் செய்யுள் "அனேக' என்ற விளியாலேயே தொடங்குகிறது. அதன் உரைக் குறிப்பில் "அனேகன் அவன், அவள், அது என்று பலவாய் நிற்கத் தக்கவன்' என்று காணப்படுகிறது. அதனால் இறைவனது வியாபகத் தன்மை வெளியாகிறது. உலகம் அவன் அவள் அது என்ற அவயவப் பகுப்புடையது என்பதும் புலப்படுகிறது. திருவருட்பயன் ஆசிரியர் அநேகன் என்பதனைப் பலவாகிய உயிர்கள் என்ற பொருளில் ஆள்கிறார். உயிரே இல்லை என்பர் ஒரு சாரார். கடவுள் தான் உயிர் என்று பேசுவர் பிறிதொரு சாரார். அவ்விரு கோள்களும் சித்தாந்த சைவத்திற்கு உடன்பாடல்ல. உயிர்கள் பல. அவை இறைவன் போல் தாமே அறியும் இயல்பின அல்ல. குறைபட்ட அறிவுடையன. அதற்குக் காரணம் அவற்றினறிவைப் பூரணமாக மறைத்து நிற்கும் ஆணவக் குற்றம். அவ்வாணவம் உயிரை இருள் சேர்ந்த விழிபோலாக்குவிக்கும் என்னும் சித்தாந்த உண்மைகளை,
"எண்ணுதற் கரிய வான
வசைபெற்ற யோநிபே தங்களும் மவைதம்மின்
மருவுமுயிர் யாவும்' (செப்பறை பதிக.6)
"நீயுள்ள தென்றன்று நானுமுளன்' (செப்பறை பதிக. 7)
"வல்லின மென்றாலும் முரையேற விட்ட முதலாகுமோ
வெனைச் சித்தென் றுரைக்கி லென்னாம்' (சுவாமிகள் தனிப்பாடல் )
"விகலனையென் னுண்ட முறைகம்பனே' (கம்பரந் 25)
(விகலன் அறிவுக் குறைபாடுடையோன்)
"அநாதிமல மூழ்கியிருள் சேருமலர் விழியென் னவே' (செப்பறை 4)
எனச் சுவாமிகள் சிற்றிலக்கியங்களில் அமைத்துக் காட்டுகிறார்கள்.
இனியொன்று, உயிர் தானே அறியுந் தன்மையுடையதன்று. அறிவித்தால் அறியும் இயல்பினது. இதனை ஓர் உவமை வாயிலாகச் சுவாமிகள் வைத்துணர்த்துகிறார்கள்.
"நின்னடி யார்க்கடியே
னாயா திருக்கச் சிவமென்ப
தென்றதை யாய்ந்து' (கம்பரந் 39)
என்ற செய்யுளில் (நாயினேன்) உமது தொண்டர்க்குத் தொண்டனேன் ஆகி, ஆன்மாவானது கண்ணும், அகரம் போன்ற சிவமானது சூரியனும் ஆம் எனச் சிவாகமங்களில் கூறும் அந்த ஞான பாதப் பொருளை ஆராய்ச்சி செய்து, என்று அவ்வுவமை கூறப்பட்டுள்ளது. கண் போன்ற உயிர், சூரியன் போன்ற சிவன் சகாயமின்றி எதுவும் அறியாது என்பது இதனால் பெறப்பட்டுகின்றது. கண் காணும் தன்மையுடையது எனினும் ஒளியின் துணை வேண்டும். விளக்கொளி போன்றன சிறிதளவே இருள்நீக்கிப் பொருள்களை விளக்கும். சூரியன் ஒளியோ இருளை முழுக்க நீக்கிப் பூரண ஒளி தந்து பொருள்களைக் காட்டி உதவும். அவ்வாறே இருள் மலத்தால் அறியாமையில் மூழ்கிய உயிரைச் சிவப்பிரகாசம் ஒன்றே அறிவு விளக்கம் பெறச் செய்யும் என்று தெற்றென அமைத்துக் காட்டுகிறார்கள் சுவாமிகள்.
இதனை,
"ய கண் தக தான் பானுவா நின்று' (செ. 24) எனப் பிறிதோரிடத்திலும் காட்டுகிறார்கள்.
"மலர்தலை யுலகின் மாயிரு டுமியப்
பலர்புகழ் ஞாயிறு படரி னல்லதைக்
காண்டல் செல்லாக் கண்போ லீண்டிய
பெரும்பெயர்க் கடவுளிற் கண்டுகண் ணிருடீர்ந்
தருந்துயர்க் குரம்பையி னான்மா நாடி'
என்று சிவஞானபோதச் சிறப்புப் பாயிர அடிகளும் இவ்வுண்மையை விளக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக