பேட்டை பால்வண்ணநாதர் கோயிலில், எட்டாம் திருநாள் மாலையில், கங்காளநாதர் வீதியுலா நடந்தது.
கங்காளநாதர், பிட்சாடனர், அந்தகாசுர சம்ஹார மூர்த்தி ஆகிய மூன்று வடிவங்களைப் பற்றியும் குழப்பம் நிலவுகிறது.
உண்மையில் மூன்றும் வேறுவேறு தான். தோற்றத்தில் சில வித்தியாசங்கள் இருக்கின்றன.
இதுகுறித்து மதுரையில் வசிக்கும் என் நண்பர் கார்த்திகேய சிவாச்சாரியரிடம் கேட்ட போது அவர் வித்தியாசங்களை விளக்கினார்.
பிட்சாடனர்: வல மேல் கையில் உடுக்கை; வலது கீழ் கையில், மானுக்கு புல்; இடது மேல் கையில் சூலம்; இடது கீழ் கையில் கபாலம்; ஆடையின்றி இருப்பார்.
கங்காளர்: வல மேல் கை கீழே வரை வந்திருக்கும். அதில் மானுக்கு புல் இருக்கும்; இடது மேல் கையில் சூலம் அல்லது தண்டு; அதில் விஷ்ணுவின் சடலம் தொங்கிக் கொண்டிருக்கும்; வலது கீழ் கையில் உடுக்கைக்குரிய கோலும், இடது கீழ் கையில் உடுக்கையும் இருக்கும். ஆடை உடுத்தியிருப்பார்.
அந்தகாசுர சம்ஹார மூர்த்தி: அருகில் அம்மை இருப்பாள்; காலின் கீழ் அந்தகாசுரன் இருப்பான். வலது கையில் சூலம் ஏந்தியிருப்பார். (சில விக்கிரகங்களில் காலின் கீழ் இருப்பதற்கு பதிலாக, சூலத்தில் அந்தகன் சடலமாக தொங்குவது போல வடிவமைக்கப்பட்டிருக்கும்) இருபின்புறக் கைகளிலும் மான் மழு இருக்கும்.இதற்கு சான்றாக கீழே மூன்று படங்களைத் தருகிறேன்.
பழவேற்காடு அருகில் உள்ள ஞானசம்பந்தர் பாடல் பெற்ற திருப்பாலைவனம் கோயிலில் உள்ள பிட்சாடன மூர்த்தி |
பேட்டை பால்வண்ணநாதர் கோயிலில் உள்ள கங்காள நாதர்
பேட்டை கோயிலில், கங்காள நாதர், எட்டாம் திருநாள் மாலை புறப்பட்டு, கோயில் வீதிகளான இரு வீதிகளை விட்டு விட்டு, ஊரின் மற்ற வீதிகளுக்கு செல்வார். இடையில் கோயில் வீதிகளைத் தொட்டுச் செல்வார்.
அதனாலேயே, அந்த விழா என்றால், சிறுவர்களுக்கு கொண்டாட்டம். சாமி சப்பரம் கூடவே ஊரைச் சுற்றிப் பார்த்த மாதிரி இருக்கும். கொட்டுச் சத்தம் எப்போதும் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கும்.
நான் சிறுவயதில், அதுபோல கங்காள நாதர் வீதியுலாவில் கலந்து கொண்டு ஊரெல்லாம் சுற்றியிருக்கிறேன்.
எட்டாம் திருநாள் மாலை வீதியுலா கட்டளை, பால்வண்ணநாத சுவாமி திருக்கோயில் பக்தர் பேரவையினுடையது. நண்பர்கள் மணி, கண்ணன் உள்ளிட்டோர் சகல ஏற்பாடுகளையும் செய்திருந்தனர்.
கண்ணன், சுவாமிக்கு அலங்காரம் செய்வதில் ஆர்வம் உடையவர். 2003ல் முதல் ஆண்டு கட்டளை எடுத்த போது, கங்காள நாதர் எழுந்தருளும் கேடயத்திற்கு, தனி வகையான துணி எடுத்து, அளவின்படி தைத்தோம். அதையே இந்தாண்டும் சப்பரத்திற்கு போர்த்தினர்.
மாலை 4 மணிக்கு புறப்பட வேண்டிய சுவாமி, 5.45க்குத் தான் புறப்பட்டார். இரவு 9 மணிக்கு சப்பரம் கோயிலில் இறங்கியது. அதன் பின் படித்தரம். வழக்கமான பஞ்சமூர்த்தி வீதியுலா.
பொதுவாக, இதுபோன்ற பெருந்திருவிழாக்களில், திருநெல்வேலிப் பக்கத்தில், ஏழு, எட்டாம் திருநாட்கள், அதிக வேலை பிடிக்கும் நாட்களாக இருக்கும்.
ஏழு இரவில், நடராஜர் சிவப்பு சார்த்தி, எட்டு அதிகாலையில் வெள்ளை சார்த்தி, பின் பச்சை சார்த்தி, அதன் பின் படித்தரம் எனப்படும் பஞ்சமூர்த்திகள் வீதியுலா, கங்காள நாதர் வீதியுலா, அதன் பின் படித்தரம் என, தொடர்ந்து வேலைகள் இருக்கும்.
தனியார் கோயில்கள், அறநிலையத் துறைக்குச் சென்ற பின், காசு வசூலிப்பதில் கவனம் கூடியது. கங்காள நாதர் பிச்சை எடுப்பவர் தானே! அதனால், அவரது சப்பரத்தில் உண்டியலைக் கட்டி தொங்க விடும்படி, கோயில் செயல் அலுவலர் உத்தரவிடுவார். அதை கணக்கப் பிள்ளை நிறைவேற்றுவார்.
சப்பரம் இறங்கிய பின், அதில் உள்ள வசூல், செயல் அலுவலரிடம் ஒப்படைக்கப்படும். அதையும் நான் பார்த்திருக்கிறேன். எந்த அளவுக்கு கோயில் திருவிழாக்களில் வசூலிக்க முடியுமோ அந்த அளவுக்கு அறநிலையத் துறை வசூலித்துக் கொண்டு தான் இருக்கிறது.
ஆனால் கோயில் சொத்துக்கள் பராதீனம் ஆவது பற்றி அது கவலைப்படுவதில்லை.
இந்த முறை திருவிழாவில் நான் கவனித்த வரையில், எங்கள் தெருவிலேயே, சுவாமிக்கு திருக்கண் சார்த்தும் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மகிழ்ச்சி தான்.
கங்காள நாதர் வீதியுலா படங்களைக் கீழே பார்க்கலாம்:
ஸ்நபன கும்பம் தயாராகிறது |
கங்காள நாதர், மோகினி உடன் |
வேள்வித் தீ |
பஞ்சமூர்த்திகள், கங்காள நாதருக்கு நீராட்டு |
கங்காள நாதர் புறப்பாடு |
குடவருவாசல் தீபாராதனை |
பக்தர் பேரவை குழுவினர்- இடமிருந்து உலகநாதன், மாரி, மீனாட்சி சுந்தரம், மணி, மணிகண்டன், அமைப்பாளர் மீனாட்சி சுந்தரம், கண்ணன் |
வாத்தியக் குழுவினர் |
சீர்பாதக் குழுவினர் |
அலங்காரத்தில் கங்காள நாதர் |
சர்க்கரை விநாயகர் கோயிலில் உள்ள கங்காள நாதர், மோகினி |
சர்க்கரை விநாயகர் கோயில் நால்வர் உற்சவ மூர்த்திகள் |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக