நுால்: பகவான் புத்தர்
ஆசிரியர் (மராட்டியில்): தர்மானந்த கோஸம்பி
தமிழில்: கா.ஸ்ரீ.ஸ்ரீ
வெளியீடு: புத்தா வெளியீட்டகம், கோவை
தொடர்புக்கு: 0422 - 2576772, 94434 68758
சங்கரலிங்கம் அண்ணன் அடிக்கடி சொல்லும் வார்த்தைகள் இவை:
நீ ஒரு நல்ல சமணனாக, பவுத்தனாக இல்லாமல் சைவனாக இருக்க முடியாது.அவர் சொன்ன நேரத்தில் இவை எனக்குப் புரியவில்லை. இப்போது லேசாக புரிகிறது.
புத்தரைப் பற்றி நான் விரிவாக படித்ததில்லை. கடந்த நவம்பர் 30ம் தேதி திருவான்மியூர் பனுவல் புத்தக நிலையத்தில், பகவான் புத்தர் என்ற தலைப்பில், தர்மானந்த கோஸம்பி எழுதி, தமிழில் கா.ஸ்ரீ.ஸ்ரீ மொழிபெயர்த்த நுாலை வாங்கினேன்.
தொடர்ந்து படித்ததில், புத்தரைப் பற்றி ஒரு தெளிவு புலப்பட்டது. சைவ புராணங்களில், திரிபுரம் எரித்த கதையில், அசுரர்களை, விஷ்ணு, முதலில் சமண குருவாக வந்து மனம் மாற்ற முயன்றதும், அது தோல்வி அடைந்ததால் பின், அவர் பவுத்த குருவாக வந்து அதில் வெற்றி பெற்றதும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
இந்த கதை தமிழில், பிரமோத்தர காண்டத்தில் உள்ளது என ஞாபகம். ஆசிரியர் ரத்நவேலன் இந்த கதையை, ஊஞ்சல் மண்டபத்தில் புராண வகுப்பு எடுத்த போது சொன்னது நினைவிருக்கிறது.
அந்த அளவுக்கு, பரதகண்டத்தில் உள்ள அனைத்து மதங்களையும், பவுத்தப் புயல் கடுமையாகத் தாக்கியிருக்கிறது.
வழக்கமாக, புத்தர் என்றதும், சித்தார்த்தனாக அவர் இருந்ததும். நரை, திரை, மூப்பு, பிணி, சாக்காடு பற்றி அவர் தினசரி தேரில் போய்த் தெரிந்து கொண்டதும் உள்ளிட்ட கதைகள் நமக்கு நினைவுக்கு வருகின்றன.
ஆனால் இந்த புத்தகத்தில், அவற்றை எல்லாம் அடியோடு மறுக்கிறார் ஆசிரியர்.
கோஸம்பி, பவுத்த பேரறிஞர். புத்தர் பேசிய மொழியான பாலியில் பாண்டியத்யம் உடையவர். அதோடு, சம்ஸ்கிருதமும், ஆங்கிலமும் வல்லவர்.
மூல நுால்களை ஆய்ந்து இந்த நுாலை எழுதியிருக்கிறார். இது முழுக்க முழுக்க புத்தரின் வரலாற்றை, பவுத்த இலக்கியங்களின் அடிப்படையில் எழுதியது.
கோஸம்பியின் வரலாறும் நுாலின் முதலில் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதோடு, காந்தியின் அன்புக்கு பாத்திரரான, காகாசாகேப் காலேல்கர், கோஸம்பியின் நுால்கள் பற்றி எழுதிய சிறு முகவுரையையும் இணைத்திருப்பது, வரவேற்கத்தக்கது.
கோஸம்பியின் வரலாற்றில், நிகழ்ந்த ஒரு சம்பவத்தை நுாலில் இருந்து இங்கு தருகிறேன்.
அவருடைய அச்சமற்ற சீலத்தை எடுத்துக்காட்டும் அழகிய நிகழ்ச்சியொன்று நினைவுறத்தக்கது.
ஒருமுறை தர்மானந்தர், பரோடாவில் சாம்ராட் அசோகனைப் பற்றிப்பேசி ஏற்பாடு ஆகியிருந்தது.
பரோடா மன்னரான ஸ்ரீஸயாஜிராவ் அவர்களே அவைக்குத் தலைமை தாங்குவதாக இருந்தார்.
பேசுவதற்கு முன்பு, தர்மானந்தருக்கு ஒரு செய்தி தெரியவந்தது. சமஸ்தானத்தை சார்ந்த ஒரு பகுதியில், மக்கள், கள்ளுக்கடைகளை மூடிவிட வேண்டுமென்று மன்னரிடம் கோரினார்கள்.
அதற்கு அவர், அந்தக் கடைகளில் இருந்து அரசாங்கத்துக் கிடைக்கும் வருமானத்தை வேறு வகையில் நிறைவேற்றுவதாக இருந்தால் கடைகளை மூடிவிடுவதாகக் கூறினார்.
இந்தச் செய்தியை அறிந்த தர்மானந்தர் தமது பேச்சினிடையே, ``அசோகன் தனது இராச்சியத்தில் மதுவிலக்குச் செய்திருந்தான். மதுவிலக்கினால் நேரும் வருமானக் குறைவை வேறுவகையில் ஈடு செய்தால்தான் மதுவிலக்கு செய்வேன் என்று அவன் சொல்லவில்லை'' என்று பகர்ந்தார்.
அவர் பேச்சு முடிந்ததும் மன்னர்,``தர்மானந்தரே, இன்று நீங்கள் எமக்கு நல்ல பாடம் கற்பித்தீர்கள்'' என்று மட்டும் சொல்லிப் போய்விட்டார்.
மன்னர் சினந்து கொண்டிருக்கிறார், தர்மானந்தருக்குக் கிடைத்து வந்த உதவியை நிறுத்திவிடுவார் என்றே அனைவரும் நினைத்தார்கள்.
ஆனால் பயன் வேறாக இருந்தது. குறிப்பிட்ட பகுதியில் உள்ள கள்ளுக்கடைகளையெல்லாம் மூடிவிட்டதாக, மறுநாளே அறிக்கை வெளிவந்தது.இன்று, தமிழக முதல்வருக்கு அவ்வாறு சொல்ல, ஒரு தர்மானந்தர் இல்லாமல் போய்விட்டார். அப்படி சொன்னாலும் தான் கேட்கப் போகிறார்களா என்ன?
நிற்க.
நுாலில் உள்ள முக்கிய பகுதிகளை கீழே பட்டியலிடுகிறேன்.
- பாபிலோனியாவில் இருந்து ஆரியர்கள், சிந்து பிரதேசம் மீது படையெடுத்தனர்.
- வேதத்தில் வழங்கப்படும் தாச என்ற சொல்லின் வேர், தாஸ், தாச் என்பது, இதற்கு கொடுத்தல் என்பது பொருள். அதாவது, வள்ளல், உயர்குடியினன் என்பது பொருள்.தற்போது தாச என்றால் அடிமை என்று அர்த்தம்.
- ஆரியன் என்ற சொல், ரு என்ற வினைப்பகுதியில் இருந்து வந்தது. சம்ஸ்கிருதத்தில், வெவ்வேறு கணங்களில் வரும் ரு என்ற தாதுவுக்கு நடத்தல் என்று தான் பொருள். அதாவது நாடோடி என்று அர்த்தம்.
- புத்தருக்கு முன்பும் முனிவர்கள் இருந்தனர். அவர்களிடையே, சாதி வேற்றுமை இல்லை.
- புத்தர் காலத்தில், வட இந்தியாவில், 63 சிரமண மதங்கள் இருந்தன.
- இவை, விதவிதமான தவங்களில் தங்களை ஈடுபடுத்தின. அவற்றில் தன் மலத்தை தானே தின்பதும் ஒன்று.
- இந்த நுாலாசிரியர், புத்தரின் பிறந்த ஆண்டாக, கி.பி., 623ஐ ஒப்புக் கொண்டிருக்கிறார். (சமீபத்தில், லும்பினியில் நடந்த அகழ்வாராய்ச்சியில், புத்தர் பிறந்த இடத்தில் ஒரு கோயில் கண்டறியப்பட்டது. அதன்படி அவரது பிறந்த ஆண்டு, கி.பி., 486-87க்கு சரியாகலாம் என, செய்திகள் வெளியாகின.)
- புத்தரின் தந்தை சுத்தோதனன், பேரரசன் அல்லன்; சாதாரண விவசாயி. இனக்குழுத் தலைவன்.
- கபிலவஸ்து அவனது தலைநகர் அல்ல; அங்கு அவன் நீண்ட காலம் இருக்கவும் இல்லை.
- புத்தருக்கு மூன்று அரண்மனைகளை அவன் கட்டிக் கொடுக்கவும் இல்லை.
- புத்தரின் துறவுக்கு, முக்கிய காரணம் மூன்று. 1. அவருடைய சுற்றத்தினர், ரோகிணிஆற்று நீருக்காக அடிக்கடி போரிட்டனர். அதனால் போரின் மீது அவருக்கு வெறுப்பு ஏற்பட்டது. 2. இல்லறம், தொல்லையும் குப்பையுமான இடமாக அவருக்குப் பட்டது. 3.பிறப்பு, முதுமை, சாவு, நோய் ஆகியவற்றால் தாம் கட்டுண்டிருக்கையில், அதேமாதிரியான பொருள்களின் மீது நாம் பற்றுக் கொண்டு வாழக் கூடாது என்று தோன்றியது.
- இந்த காரணங்களை, புத்தரின் உபதேசங்களில் இருந்தே, ஆசிரியர் மேற்கோள் காட்டுவதால், அவற்றுக்கு வலு உண்டாகிறது.
- கடுமையான தவம், இடையிடையே ஹடயோகம் முதலியவற்றை மேற்கொண்ட புத்தர், பின், கடுமையான தவத்தால் முக்தி இன்பம் கிட்டுவதில்லை என்று அறிந்து, தியான வழியை மேற்கொண்டார்.
- அதில் தான் அவர், விடுதலைக்கான வழிகளை அறிந்து கொண்டார்.
- நான்கு ஆரிய சத்தியங்களை அவர் கூறினார்.
- பின்னாளில் அவரது தத்துவத்தை பிரதீத்யஸமுத்பாதம் என்ற பெயரில், சிக்கலாக்கிவிட்டனர். அதைப் படித்தால் அறிவாளிக்கே மூளை குழம்பிவிடும். அதைப் படித்தா, பாமரரர்கள் கூட பவுத்தர்கள் ஆகியிருக்க முடியும்?
- அந்தணர்கள், புத்தரை எதிர்த்ததற்கு முக்கிய காரணம், அவர் யாகத்தில் பசுக் கொலையை எதிர்த்ததுதான்.
- அவர் வேதத்தை நிந்திக்கவில்லை. ஆனால், யாகத்தை வெறுத்தார். சாதிப் பிரிவினையை ஏற்கவில்லை. ஜைன சங்கம், சாதியை ஏற்றுக் கொண்டது.
- சாங்கிய காரிகை, பகவத் கீதை போன்றவை சாதியை ஏற்றுக் கொண்டன. ஆனால் சாதியை மறுத்ததால், புத்தர், வேதத்தை நிந்தித்தார், நாத்திகர் என்ற பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.
- புத்தர் அமைதியை விரும்புபவர். சங்கத்தில் பிட்சுக்களுடன் அவர் இருக்கும் போது கூட, அமைதி நிலவும்.
2014ம் ஆண்டு புத்தக கண்காட்சியில் இந்த புத்தகம் கிடைத்தால் வாங்கி விடுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக