பேட்டை பால்வண்ணநாத சுவாமி கோயிலில், நேற்று ஏழாம் திருநாள். காலை வழக்கம் போல், பூங்கோயில் வாகனங்களில், பஞ்சமூர்த்தி வீதியுலா.
மாலையில், சிவப்பு சார்த்தி கோலத்தில் நடராஜர் வீதியுலா. பால்வண்ணநாதர் கோயிலில் உள்ள கற்சிலைகளும், செம்புச் சிலைகளும் கண்ணைக் கவரும் அழகுடன் திகழ்பவை. ஒன்றுக்கொன்று சோடை போகாதவை.
கற்சிலைகளில், வாயு மூலை சுப்பிரமணியரும், சனீஸ்வரரும் முதலிடத்தில் இருக்கின்றனர். துரதிர்ஷ்டவசமாக கடந்த ஒரு ஆண்டுக்கு முன், சுப்பிரமணியருக்கு சாதாரண நீராட்டு நடந்த போது, சொம்போ குடமோ நழுவி விழுந்து, ஒரு கை உடைந்து விட்டதாக கேள்விப்பட்டேன்.
என்ன செய்ய? கலையை உணர்ந்தவருக்கன்றோ கலை வெளிப்படும் இடங்களை ரசிக்க முடியும்? சுப்பிரமணியர் கற்சிலை கைவிடப்பட்டு, அதற்குப் பதிலாக, கலை என்பதற்கு சம்பந்தமே இல்லாமல் ஒரு சிலை நிறுவப்பட்டு விட்டது.
நேற்று முதல்நாள், பழைய சுப்பிரமணியர் கற்சிலை எங்கே என ஒவ்வொருவரிடமும் கேட்டபோதுதான், அதைப் பற்றி யாரும் கவலைப்படவில்லை என, தெரியவந்தது.
நேற்று இரவு யதேச்சையாக பெரிய வாசலில், தேர்சக்கரம் அருகில் பார்த்த போது அங்கு அவரை கிடத்தி போட்டிருந்தனர். மனம் வலித்தது.
இன்று அதிகாலை, பஜனை முடிந்த உடன், முதல் வேலையாக நான், மீனாட்சிசுந்தரம், மாரிமுத்து, ஆறுமுகம், உலகநாதன் ஆகியோர், அவரைத் துாக்கி சென்று, கிணற்றடித் தோட்டத்தில் வைத்து, நீராட்டி, இரண்டு பூக்களைச் சாத்தி, மனம் அமைதி அடைந்தோம்.
நிற்க. நேற்று ஏழாம் திருநாள் இரவில், சிவப்புச் சார்த்தியில், நடராஜர் வீதியுலா.
சைவத் திருமுறைகளிலும், சாத்திரங்களிலும் சொல்லப்பட்டக் கருத்துகளில் முக்கியமானது, சிவனே, முத்தொழிலும் செய்பவன் என்பது.
படைப்பாய் காப்பாய் துடைப்பாய் போற்றி
இடரைக் களையும் எந்தாய் போற்றிஎன்பது திருவாசகம். இதைப் போல தேவாரங்களில் பல இடங்களில் காணலாம்.
இதைத் தான் நம் முன்னோர், திருவிழாவில் வைத்துக் காண்பித்தனர்.
பாண்டிய நாட்டில் உள்ள கோயில்களில், ஏழு, எட்டாம் திருநாட்களில், நடராஜர் எழுந்தருள்வார்.
ஏழாம் திருநாள் மாலையில், சிவப்பு சார்த்தி. அது, சம்ஹாரத்தைக் குறிக்கும். அன்று தான் கிருஷ்ண கந்தம் எனப்படும் கருப்பு மையும் சார்த்தி புறப்படுவார்.
எட்டாம் திருநாள், சூரியோதயத்திற்கு முன், வெள்ளை சார்த்தியில் நடராஜர் வீதியுலா. அது படைப்பைக் குறிக்கும். அன்று மதியம், பச்சை சார்த்தி. இது காத்தலைக் குறிக்கும்.
திருச்செந்துார் பச்சை சார்த்தி, உலகப் பிரசித்தம். இது சிவாலயங்களில் மட்டுமே ஆகமங்களில் சொல்லப்பட்டபடி நடக்கும் திருவிழா.
சிவஞானபோத முதற்சூத்திரமே, எவன் சம்ஹாரம் செய்கிறானோ அவனிடம் உலகம் ஒடுங்கும் எனக் கூறி, அவனே உலக முதல்வன் என்றும் உறுதி செய்கிறது.
அந்தத் தத்துவத்தைத் தான், இந்த மூன்று நிறங்களிலும் நடராஜர் எழுந்தருள்வது காட்டுகிறது.
பால்வண்ணநாதர் கோயிலில், என்னைக் கவர்ந்திழுத்த மூர்த்தி நடராஜர் தான். மிகச் சிறிய உருவம் என்றாலும், அழகிய முகம். அமைதியான தோற்றம். அற்புதமான வடிவு.
நேற்றும், இன்றும் நடராஜர் வீதியுலா வந்ததை கீழே படங்களில் காணலாம்.
கேடயத்தில் சிவப்பு சார்த்தி அலங்காரத்தில் நடராஜர் |
நடராஜர் |
கிருஷ்ண கந்தம் (கறுப்பு மை) தயாராகிறது |
நடராஜருக்கு மை சார்த்தல் |
புறப்பாடு |
திருவெம்பாவை ஓதல் |
அதிகாலையில் வெள்ளை சார்த்தி வீதியுலா |
பச்சை சார்த்தியில் நடராஜர் |
திருவாதிரை மண்டபத்தில் நடராஜர் |
அங்கும் திருவாதிரைத் திருவிழா நடந்து வருகிறது. ஆனால், ஒன்று, நான்கு, பத்தாம் நாட்கள் மட்டும் தான் வீதியுலா.
ஏழாம் திருநாள் அன்று, அங்கு சிவப்பு சார்த்தியில் நடராஜர் அலங்காரத்தைக் கீழே பார்க்கலாம்.
சர்க்கரை விநாயகர் கோயிலில் உள்ள, உற்சவ மூர்த்தி பேரழகு வாய்ந்தவர். ஆறுமுக நயினாரை அப்படிச் சொல்ல முடியாவிட்டாலும், பெரிய மூர்த்தி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக