தற்போது நான் எனது சொந்த ஊரான பேட்டையில் இருக்கிறேன். பால்வண்ணநாத சுவாமி கோயிலில், திருவாதிரைத் திருவிழா தொடங்கி நடந்து வருகிறது.
நேற்று ஆறாம் திருநாள். யானை வாகனம். அதோடு, ஞானசம்பந்தருக்கு ஞானப்பால் கொடுக்கும் விழாவும், சமணரைக் கழுவேற்றும் விழாவும்.
நேற்று மாலை, கோயிலுக்குச் சென்றிருந்தேன். மீனாட்சி சுந்தரம் அண்ணனும் நானும் பேசிக் கொண்டிருந்தபோது, 2001ல் திருவிழாவை தொடக்குவதற்கான முயற்சிகளில் நாங்கள் ஈடுபட்டதை நினைவு கூர்ந்தார்.
சர்க்கரை விநாயகர் கோயிலில், 2000ல் நடந்த திருவாதிரை விழாவைப் பார்த்துவிட்டு, பால்வண்ணநாதர் கோயிலுக்கு வந்தால், கோயிலே வெறிச்சோடிக் கிடந்தது. அப்போதுதான் 2001ல் மிகச் சிறிய அளவிலாவது திருவிழாவை நடத்திவிட வேண்டும் என, நினைத்தோம்.
அதன்படி நடந்தது. இன்று 12 ஆண்டுகள் கடந்து விட்டன. 12 ஆண்டுகளாக பால்வண்ணநாதர் கோயிலில், திருவிழா தடையின்றி நடந்து வருவது மகிழ்ச்சி தான். அதற்காக, பலர் பாடுபடுகின்றனர்.
ஆறாம் திருநாளுக்கு வீதியுலா வரும் யானை வாகனம் மிகவும் சேதம் அடைந்திருந்தது. பின், ஒரு நன்கொடையாளர் மூலம், அதை சீர் செய்தோம்.
பால்வண்ணநாதர் கோயில் திருவிழாக்களில், மூன்று பெரியவை. புரட்டாசி மாதத்தில் வரும், நவராத்திரி, அதன் பத்தாம் நாளன்று நடக்கும் பாரிவேட்டை.
இரண்டாவது, ஐப்பசி மாதம் நடக்கும் தவசுத் திருவிழாவும், திருக்கல்யாணமும்.
மூன்றாவது, மார்கழி திருவாதிரை திருவிழா. இது ஒன்று தான் கொடியேற்றி நடக்கும் விழா. பெருந்திருவிழா.
ஐப்பசி திருக்கல்யாணம், நெல்லையப்பர் கோயில் ஐப்பசி திருவிழா அன்று நடக்கும்.
நான் தற்போது குடியிருக்கும் வீட்டின் எதிர்ப்புறம் ஒரு கல் மண்டபம் உள்ளது. அது கடந்த 50 ஆண்டுகளாக, இஸ்லாமியர் ஒருவரிடம் வாடகைக்கு விடப்பட்டுள்ளது.
அந்த மண்டபத்தில் தான் தவசுக் காட்சியும், திருக்கல்யாணமும் நடக்கும். நெல்லையப்பர் கோயில் ஐப்பசி விழாவில், காந்திமதி அம்மனுக்கு நெல்லையப்பர் காட்சி அளித்து விட்டு, ஆச்சியும் ஐயருமாக திரும்பும்போது, திருஞானசம்பந்தர் கோயில் அருகில், ஞானசம்பந்தருக்கு ஞானப்பால் அளிக்கும் விழா நடக்கும்.
அதையொட்டியே பேட்டையிலும், தவசு மண்டபத்தின் அருகில், ஞானப்பால் கொடுக்கும் விழாவும், அதையடுத்து சமணரைக் கழுவேற்றிய சம்பவமும் நடக்கும்.
கடந்த, 60 ஆண்டுகளாக இந்த விழா நின்று போய்விட்டதால், அதை, மார்கழி திருவாதிரைத் திருவிழாவில் எப்படியோ இணைத்து விட்டனர்.
மார்கழி விழாவில், ஆறாம் திருநாளன்று, மண்டபத்தின் வெளிப்பக்கம், தார்சாலையில் வைத்து சம்பிரதாயத்திற்கு ஞானப்பால் விழாவும், கழுவேற்றமும் தற்போது நடந்து வருகிறது.
மாணிக்கவாசகருக்காக நடக்கும் விழாவில், தேவாரத்தை கடைக்காப்பு செய்து விட்டு, திருவெம்பாவை மட்டுமே ஓதப்பட வேண்டிய விழாவில், எப்படி ஞானப்பால் விழாவும், கழுவேற்றமும் நடக்க முடியும்?
இதை நேற்று என்னிடம் சிலர் கேட்டபோது, மேற்கண்ட விளக்கத்தை அளித்தேன். வரும் ஆண்டுகளில், திருக்கல்யாண விழாவிற்கு ஏற்பாடு செய்ய வேண்டி இருக்கிறது.
திருவிழாக்களில், குழந்தைகளுக்கும் சிறுவர்களுக்கும் சந்தோஷமடைய ஏகப்பட்ட விஷயங்கள் இருக்கின்றன.
எனது சிறியவயதில், பால்வண்ணநாதர் கோயில் திருவிழாவின் போது, மரச்சகடையில், சப்பரம் வரும். நாங்கள் நான்கைந்து பேர் ஒன்று கூடி சப்பரத்தை தள்ளிவிடுவோம். அது வேகமாக செல்லும் போது, சகடையின் பின்புறம் உட்கார்ந்து கொள்வோம்.
அந்தப் பயணம், அப்போது உலகின் ஒப்பற்ற சந்தோஷங்களுள் ஒன்றாக இருந்தது. நேற்றும் அதுபோல் சிறுவர்கள் சிலர், இரும்புச் சகடையின் பின்புறம் உட்கார்ந்து சென்ற போது எனக்கு, என் சிறிய வயது ஞாபகம் வந்தது.
கீழே உள்ள படங்களில், திருவிழாக்களின் சில காட்சிகளை பார்க்கலாம்.
சோமவார மண்டபத்தில் பஞ்சமூர்த்திகள் |
பஞ்சமூர்த்தி தீபாராதனைக்காக பக்தர்கள் காத்திருக்கின்றனர் |
சம்பந்தர் சப்பரத்தில்... |
யானை வாகனத்தில் பிரியாவிடையுடன் பால்வண்ணநாதர் |
பால்வண்ணநாதர் |
நாங்கள் சீர் செய்த யானை வாகனம் |
மூஞ்சூறு வாகனத்தில் விநாயகர் |
ஒரே வண்டியில், சம்பந்தரும், விநாயகரும் |
வீதியுலா |
வீதியுலா |
சிம்ம வாகனத்தில் ஒப்பனாம்பிகை |
கழுவேற்றத்திற்கு காத்திருக்கும் கூட்டம் |
சம்பந்தருக்கு தீபாராதனை |
சமணர் கழுவேற்றம் (எரித்தால் தான்) |
கும்மாளத்தில் சிறுவர்கள் |
ஏத்தியாச்சா? |
எரிச்சாச்சு... |
நல்லா வேணும் உனக்கு... சிறுவனின் வலிப்பு காட்டல் |
ஞானப்பால் பிரசாத வினியோகம் |
சகடையில் உட்கார்ந்து செல்லும் சுகமே தனி |
உழவாரப் பணியில் பளிச்சிடும் காளை வாகனம் |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக