சிவபிரானின் 64 வடிவங்களில் முக்கியமானது அரியர்த்தர் எனப்படும் சங்கரநாராயண திருக்கோலம்.
நெல்லை மாவட்டம் சங்கரன் கோயிலில் சங்கரநாராயணருக்கு தனி சன்னிதி உள்ளது.
இது தவிர, பல கோயில்களில் அத்திருக்கோலம் கற்சிற்பமாகவும் காணப்படுகிறது.
சென்னை, சோழிங்கநல்லுாரிலும் ஒரு சங்கரநாராயணர் கோயில் உள்ளது. ஆனால், இங்கு சங்கரநாராயணர் திருக்கோலம் இல்லை.
மாறாக, சங்கரனும் நாராயணனும் தனி சன்னிதிகளில் அடுத்தடுத்து எழுந்தருளியுள்ளனர். இந்த காரணத்தால் தான் இக்கோயில், சங்கரநாராயணர் கோயில் என அழைக்கப்படுகிறது.
சோழிங்கநல்லூர் சங்கரநாராயணர் கோவில் தோற்றம் |
சோழிங்கநல்லுாரின் கிராம தேவதைகளாக, பொன்னியம்மன், துலுக்காணத்தம்மன், பழண்டி அம்மன் ஆகியோர் எழுந்தருளியுள்ளனர்.
வரலாற்றுக் காலத்தில்...
சோழர்கள் ஆட்சிக் காலத்தில் சோழகங்க நல்லுார் என, அழைக்கப்பட்ட பகுதிதான் தற்போதைய சோழிங்க நல்லுார் என, மருவியுள்ளது. இதற்கு சான்றாக, இப்பகுதி அருகில் உள்ள சில இடங்களின் பெயர்கள் சுட்டிக் காட்டப்படுகின்றன.
சோழர்கள் இங்கு யானைப் படையை வைத்து பராமரித்த பகுதி யானைக்கேணி எனவும், கப்பல் கட்டிய இடம் மரக்காமேடு (மரக்கலன்மேடு) எனவும் அழைக்கப்படுகின்றன.
மேலும், இப்பகுதியில் ஒரு சிவன் கோயிலும், பெருமாள் கோயிலும் பெரிய அளவில் இருந்து அழிந்திருக்க வேண்டும் என்பது, தற்போதைய சங்கரநாராயணர் கோயில் உருவானதன் பின்னணியை சுட்டிக் காட்டுகிறது.
கோயிலை ஒட்டிய பகுதியில் அகழாய்வு நடத்தினால், மேலும் பல ஆதாரங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.
600 ஆண்டுகளுக்கு முன்...
பெருமாளின் திருவுருவம், மிக அழகாக பல்வேறு அணிகலன்களுடன், அபய மற்றும் ஊரு ஹஸ்தங்களுடன் பின்னிரு கரங்களும், சங்கு சக்கரங்களை ஏந்தி அருள் பாலிக்கிறது. முகம் தீர்க்கமாக பொலிவுடன் திகழ்கிறது.
பெருமாள் சந்நிதி |
இத்திருமேனி குறைந்தது, 600 ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்க வாய்ப்புள்ளது. அம்பிகை திருமேனியும் அதே காலத்தைச் சேர்ந்ததாக கருதலாம்.
இவற்றில், விஜயநகர காலத்து கலைப்பாணிகள் தென்படுகின்றன. சிவலிங்கத் திருமேனியில், ஆவுடையார் வட்டமாக காணப்படுகிறது. லிங்க பாணம் நடுத்தர உயரத்துடன் உள்ளது.
சிவ சந்நிதி |
ஆண்டுக்கு ஒருமுறை மகா சிவராத்திரி அன்று, சூரிய ஒளி மிகச் சரியாக சிவலிங்கத் திருமேனியில் விழும், அரியகாட்சியை இங்கு காணலாம். தற்போது, இக்கோயிலில் சிறிது சிறிதாக திருப்பணிகள் நடந்து வருகின்றன.
எப்படி தோன்றியது?
கடந்த 1970களில், கோயில் இருந்த இடத்தில் உழவு நடந்த போது, ஒரு சிவலிங்கம், அம்பிகை, விஷ்ணு, சேதம் அடைந்த தாயார் கல் திருமேனிகள் கிடைத்தன.
அப்போதைக்கு அந்த இடத்திலேயே ஒரு கூடாரம் போடப்பட்டு, திருமேனிகள் வழிபாட்டில் வைக்கப்பட்டன.
இதையடுத்து, இரு சன்னிதிகளுக்குமான உற்சவ மூர்த்திகள் செய்யப்பட்டு சிவராத்திரி,பிரதோஷம், ஏகாதசி உள்ளிட்ட பல்வேறு விழாக்கள் நடந்து வருகின்றன.
சிறப்பான கோவில்... விளக்கம் அருமை...
பதிலளிநீக்குபலமுறை சென்றதுண்டு... நன்றி...