செவ்வாய், 16 அக்டோபர், 2012

காத்திருக்கும் கழுக்குன்றம் கோயில்


தமிழகத்தின் மிகத் தொன்மையான கோயில்களில் ஒன்றான திருக்கழுக்குன்றம், பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்டது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள இத்தலத்தில், மலைக்  கோயில், மலை அடிவாரத்தில் உள்ள கோயில் என இரு கோயில்கள் உள்ளன.


திருப்பணிக்காக காத்திருக்கும் வடக்கு கோபுரம்


மலையடிவாரக் கோயில், தாழக் கோயில் என அழைக்கப்படுகிறது. இது தவிர இக்கோயில்களின் அருகில் நால்வருக்கு எனத் தனியாக ஒரு கோயில் உள்ளது.

தாழக் கோயிலும், மலைக் கோயிலும் பல்லவர் காலத்தவை என்பதைப் பார்த்தாலே தெரிந்து கொள்ள முடியும்.

மலைக் கோயில்

தாழக் கோயிலில் உள்ள இரு கருவறைகளிலும் அதற்கான அடையாளங்கள் உள்ளன.

 தாழக்  கோயிலில் ஒரு காலத்தில் அம்மை கருவறையாக இருந்ததாகக் கூறப்படும், கருவறை, வெளிப்புறச் சுவரில் கண்ணையும் கருத்தையும் கவரும் வகையில், தட்சிணாமூர்த்தி, திருமால், பிரம்மா, துர்க்கை ஆகிய சிற்பங்கள் உள்ளன.

தட்சிணாமூர்த்தி


திருமால்


பிரம்மா


பிரயோக சக்கரத்துடன் துர்க்கை

இவை மூன்றுமே பல்லவர் காலத்தைச் சேர்ந்தவை. பல்லவர் காலச் சிற்பங்களுக்கே  உரிய இயல்பான தன்மை, எளிமையான வேலைப்பாடுகள் இவற்றிலும் காணக் கிடைக்கின்றன.

இம்மூன்று சிற்பங்களில் துர்க்கையின் சிற்பத்தில் பின்கரத்தில் உள்ள பிரயோக சக்கரம் குறிப்பிடத் தக்கது.

அதோடு மகிடன் தலை மீது நின்றிருந்தாலும், சாந்த சொரூபமாகவே அம்மை காட்சி தருகிறாள்.

இங்குள்ள தட்சிணாமூர்த்தி காலில் யோகபட்டம் அணிந்து பின் கைகளில் ஜபமாலையும், உடுக்கும் ஏந்தியபடி சின்முத்திரையுடன் அமைதியான தோற்றத்துடன் உள்ளார். பின்புறத்தில் ஒரு சூலம் உள்ளது. மிகவும் வித்தியாசமான சிற்பம் இது.

சமீபத்தில் மலைக்  கோயிலில் கும்பாபிஷேகம் முடிந்த நிலையில், தாழக் கோயிலில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் திருப்பணிகள் ஆமை வேகத்தில் நடந்து கொண்டே இருக்கின்றன.

தடை செய்யப்பட்ட `சாண்ட் பிளாஸ்டிங்' நடக்கிறது


கோபுரங்களுக்கு சாரம் கட்டுவதற்காக கம்புகளை நட்டு வைத்துள்ளனர். அவற்றில் ஓலைகளைக் கூட வேயவில்லை. திருப்பணிகள் பொது நன்கொடையில் செய்யப்படுவதால் தான், இத்தனை தாமதமாக நடப்பதாக அங்குள்ளோர் தெரிவித்தனர்.

அதேநேரம் திருப்பணி என்ற பெயரில், பழமையான மர வேலைப்பாடு கொண்ட பெரிய திருவாசிகள் கேட்பாரற்று வெயிலில் காய்ந்து கொண்டிருக்கின்றன.

தெப்பக்குளக் கரையில் நானும் என் நண்பர் சிவஞானமும்


இக்காலத்தில் அவற்றைப் போல செய்வது சாதாரணம் அல்ல என்பது சாமானியனுக்கும் தெரியும்.

பணிகள் தாமதம் அடைவதால், இரு ஆண்டுகளாக தாழக் கோயிலில் உள்ள பக்தவத்சலேஸ்வரர் திருவிழாவே பார்க்காமல் இருக்கிறார்.

எப்போது திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேகம் நடக்கும் என, ஊர் மக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Translate