வியாழன், 18 அக்டோபர், 2012

பார்வை அளிக்கும் வெள்ளீச்சரத்து இறைவன்

மயிலாப்பூரில் கபாலீசுவரர் கோயிலுக்கு அடுத்ததாகக்  குறிப்பிட்டுச் சொல்லும்படியான கோயில் என்றால் அது வெள்ளீசுவரர் கோயில் தான்.

வெள்ளி என்பதற்கு சுக்ரன் என்று அர்த்தம். இத்தலம் குருந்த மரங்கள் அடர்ந்த காடாக இருந்ததாக ஐதீகம். அதனால் தலவிருட்சமாக குருந்த மரம் உள்ளது.
.ஸ்ரீசக்ரம்

வாமனாவதார காலத்தில், இழந்த தனது ஒரு கண்ணை சுக்ராச்சாரியார் இங்கு குருந்த மரத்தடியில் இறைவரை வழிபட்டுப் பெற்றார் என்பதால், இறைவனுக்கு அவரது பெயராலேயே வெள்ளீசுவரர் என்ற திருநாமம் வழங்கப்பட்டு வருகிறது.

அம்மை காமாட்சியின் சன்னிதி, தென் திசை நோக்கி இறைவனுக்கு அருகிலேயே அமைந்துள்ளது

 கருவறையில் அம்மையின் பின்புறம் 1974ல் பன்றி மலை சுவாமிகளால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீசக்ர தகடு உள்ளது.

உற்சவ பிரம்மா

புராணங்களின் படி இந்தியாவில் பிரம்மாவுக்கு தனிப்பட்ட கோயில்கள் கிடையாது என்றாலும், பல கோயில்களில் திருவுருவங்கள் உள்ளன

எனினும் அவை பெரும்பான்மையும் கற்சிலைகளாகவே இருக்கின்றன. ஒரு சில கோயில்களில் மட்டும் உற்சவத் திருமேனிகள் உண்டு.

மயிலாப்பூர் வெள்ளீச்சரத்தில் அவருக்கு உற்வசத் திருமேனி உள்ளது. அதோடு மகாபலி சக்ரவர்த்தி, வாமனர், சுக்ரன் ஆகியோருக்கும் உற்சவத் திருமேனிகள் உள்ளன. உற்சவ மூர்த்திகள் அனைத்தும் பிற்காலத்தவை.

மூலவர் கருவறை பின்புறம் உலகளந்த பெருமாள் கல் திருமேனி உள்ளது. சமீபத்தில் தான் இங்கு சரபேஸ்வரர், பிரத்யங்கிரா, சூலினி திருமேனிகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

பெருந்திருவிழா

ஆண்டுதோறும் வைகாசி மாதம வளர்பிறையில் இங்கு பெருந்திருவிழா நடக்கும். அவ்விழாவில், வளர்பிறை பதிமூன்றாம் நாள் பிரதோஷத்தோடு கூடிய நாள் எட்டாம் நாளாக அமையும்

அந்த நாளில், சுக்ரனுக்கு கண் கொடுக்கும் திருவிழா மிகக் கோலாகலமாக நடைபெறும். இந்த விழாவில் தான், பிரம்மா, வாமனர், மகாபலி சக்ரவர்த்தி, சுக்ரன் ஆகியோர் எழுந்தருள்வர்.

கபாலீசுவரர் கோயிலில் நடக்கும் பங்குனிப் பெருவிழாவின் எட்டாம் நாளன்று தான் அங்கம் பூம்பாவையும், அறுபத்து மூவர் விழாவும் நடக்கும் என்பது குறிப்பிடத் தக்கது.

எப்போது உருவானது?

இத்திருக்கோயில் கட்டப்பட்டு 300 ஆண்டு காலம் ஆகியிருக்கலாம். எனினும், காலக் கணிப்புக்கான சரியான ஆதாரங்கள் இல்லை.

அதேநேரம், 1874 முதல் 1995 வரை இக்கோயிலின் அறங்காவலராக இருந்தோரின் பெயர்கள் இங்கு ஒரு கல்வெட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தற்போது கோயில்  உள்ள இடத்தில் ஒரு சிறிய விநாயகர் சன்னிதி  தான் முதலில் இருந்ததாகவும், அதன் பின்தான் கோயில் விரிவாக்கம் செய்யப்பட்டதாகவும் நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

அதை உறுதிப்படுத்தும் விதத்தில், கோயிலின் பிரதான தென் திசை வாசல் வழியாக உள்ளே சென்றால், எதிரில் இருப்பது செல்வ விநாயகர், சித்திபுத்தி உடனுறை விநாயகர் சன்னிதிதான்.

பொலிவான சிற்பங்கள்

கோயில் கொடிமரம் அருகில் உள்ள ஒரு கல் மண்டபத்தில் தான் சில சிற்பங்கள் உள்ளன. ஏகபாத மூர்த்தி, வள்ளலார், குருந்த மரத்தடியில் மணிவாசகருக்கு சிவபிரான் உபதேசம், சுக்ரன் வழிபடுதல், பஞ்ச முக கணபதி, தந்தைக்கு உபதேசம் செய்யும் தகப்பன் சாமி, பட்டினத்தார், பத்திரகிரியார், கஜாரி என அத்தனை சிற்பங்களுமே அழகோடு பொலிகின்றன.

வீரபத்திரரும் தட்சனும்

தட்ச யாக முடிவில், தட்சனின் தலையில் வீரபத்திரர் ஆட்டுத் தலையைப் பொருத்தி மீண்டும் உயிர் கொடுத்தார் என்பது புராணம்.

அந்தக்  காட்சியை இந்த மண்டபத்தில் சிற்பமாக வடித்துள்ளனர். வீரபத்திரரின் அளப்பரிய ஆற்றலைக் காட்டும் வகையில் அவரைப் பெரிய உருவமாகவும், தட்சனை ஆட்டுத் தலையுடன் சிறிய உருவமாகவும் சிற்பி படைத்திருக்கிறார்.

தலபுராணம் என்ன?

திருமறைக்காடு எனும் வேதாரண்யம் தலத்து கோயிலில் ஒரு நாள் பள்ளியறைக்குள், ஒரு எலி நுழைந்தது. அப்போது அங்கிருந்த விளக்கு அணையும் நிலையில் இருந்தது.

விளக்கில் விட்ட நெய் வாசம் எலியின் மூக்கைத் துளைக்கவே, மளமளவென எலி விளக்கில் ஏறி, நெய்யை உண்ணத் துவங்கியது.  அதேநேரம், அதன் மூக்கு சுடரில் பட்டதால், முகத்தை அசைத்தது.

அந்த அசைவில்,திரி துாண்டப்பட்டு சுடர் மேலும் பிரகாசமாக எரிந்தது. இதைப் பார்த்த மறைக்காட்டு ஈசன், அடுத்த பிறவியில் சக்ரவர்த்தியாக பிறக்கும்படி எலிக்கு அருள் செய்தார்.

இந்த புராணச் செய்தியை அப்பர் சுவாமிகள்

நிறைமறைக் காடு தன்னில் நீண்டெரி தீபந் தன்னைக்
கறைநிறத்து எலி தன் மூக்கு சுட்டிடக் கனன்று துாண்ட
நிறைகடல் மண்ணும் விண்ணும் நீண்ட வான் உலகும் எல்லாம்
குறைவறக் கொடுப்பர் போலும் குறுக்கை வீரட்டனாரே

என்ற பாடலில் குறித்துள்ளார்.

இந்த எலிதான் மறுபிறவியில் மகாபலி சக்ரவர்த்தியாக பிறந்தது. பலியிடம் மூன்றடி மண் கேட்டு விஷ்ணு, வாமனராக உருவெடுத்து வந்தார்

அதற்கு சம்மதித்து அவரது கையில் கெண்டி மூலம் நீர் வார்க்க முற்பட்ட போது, அதைத் தடுப்பதற்காக சுக்ரன், ஒரு வண்டு உருவெடுத்து கெண்டிக்குள் நுழைந்து அதன் வாசலை அடைத்துக் கொண்டார்.

கோபம் அடைந்த வாமனர், ஒரு தர்ப்பையால், அந்த வாசலைக் குத்தினார். அது சுக்ரனின் ஒரு கண்ணில் குத்தி, பார்வையைப் பறித்தது. அந்தப் பார்வை பெற்ற தலம் தான் வெள்ளீச்சரம் என்பது இத்தலத்து ஐதீகம்.

கண் பார்வை பெற்ற பக்தர்

திருவெண்காட்டைச் சேர்ந்த ராஜாமணி ஐயர் என்பவர் தனது பார்வைக் குறைபாட்டுக்காக வெள்ளீசுவரரை வழிபட்டார்

இறையருளால் அறுவை சிகிச்சை இன்றியே குறைபாடு குணமாகி, கண் பார்வை மீண்டும் கிடைத்தது. அந்த நன்றிக் கடனுக்காக சுக்கிரேஸ்வரர் என்ற சன்னிதியில் நாலு கால் கல் மண்டபத்தை அந்த பக்தர் 1966ல் கட்டிக் கொடுத்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Translate