ஞாயிறு, 14 அக்டோபர், 2012

இசைப்பவர்கள் இல்லாததால் முகவீணை அழிகிறது

மறைந்து வரும் இசைக் கருவிகளின் பட்டியலில் தற்போது முகவீணையும் இடம் பெற்றுள்ளது.

இன்று இதனை இசைப்பவர்கள் குறைந்து வருவதால், இதுவும் அருங்காட்சியகத்தில் இடம் பெற்றுவிடுமோ என, இசை ஆர்வலர்களிடையே கலக்கம் ஏற்பட்டுள்ளது.

18 வகை இசைக் கருவிகள்

 தமிழகத்தின் தொன்மையான துளைக் கருவிகளில் (காற்றுக் கருவிகள்) ஒன்று முகவீணை (சிறிய நாகசுரம்). இது பழமையான கருவி.

கோவில்களில் 18 வகையான வாத்தியங்கள் இசைக்கப்பட்டன. அவற்றில் துளைக் கருவிகளும், தோல் கருவிகளும் இடம் பெற்றன. முகவீணை, கெத்து என்ற ஜல்லரி, திருச்சின்னம், பஞ்ச முக வாத்தியம் போன்றவை இவற்றில் குறிப்பிடத் தக்கவை.

பாதை மாறிய பயணம்

 இதுபோன்ற, இசைக் கருவிகளை வாசிப்போரின் குடும்பங்களில் அடுத்தடுத்த தலைமுறையினர் இந்த கலையில் இருந்து விலகி செல்லத் துவங்கினர். முறையாக இசைப்பதற்கு யாரும் இல்லாததால், பல இசைக் கருவிகள் புழக்கத்தில் இருந்து மறையத் துவங்கின.

அந்த வரிசையில் தற்போது இடம் பெறுவது முகவீணை.

நாகசுர வகையைச் சேர்ந்தது. ஒன்றரை அடி உயரம் மட்டுமே உள்ளது. அதிக சுதி கொண்டது. இதற்கடுத்த நிலையில் இருந்ததுதான் திமிரி நாயனம். இந்த இரண்டுக்கும் இடையிலான உயரம் உள்ளது ஷெனாய் வாத்தியம்.

திமிரி நாயனத்தின் நீளத்தை கொஞ்சம் கூட்டி சுதியைக் குறைத்து திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை உருவாக்கியதுதான் பாரி நாயனம். இதுவே, இன்று புழக்கத்தில் இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஒரு சில கோவில்களில்...

முகவீணை சுதி அதிகம் என்பதால் அதை வாசிப்பது மிகவும் கடினம். இன்றைய நிலையில், நெல்லை மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவில், திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவில் உள்ளிட்ட கோவில்களில் மட்டுமே முகவீணை புழக்கத்தில் இருக்கிறது.

இது சிறிய மேளம் என்று அழைக்கப்படுகிறது. தவிலுடன் கூடிய நாகசுரம் பெரிய மேளம் எனக் குறிப்பிடப்படுகிறது.

மயிலாப்பூரில்...

மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் கலியபெருமாள் என்ற இசைக் கலைஞர் முகவீணையை வாசித்து வருகிறார்.

முகவீணை வாசிக்கும் கலியபெருமாள் 

திருமெய்ஞானம் சண்முகசுந்தரம் பிள்ளை என்பவரிடம் 10 ஆண்டுகள் இசைப் பயிற்சி பெற்ற இவர், மயிலாப்பூரில் பங்குனிப் பெருவிழாவின் இறுதி நாளன்றும், சித்திரையில் நடக்கும் வசந்த விழாவிலும் முகவீணை வாசிக்கிறார்.

இரு விழாக்களில்...

 பங்குனிப் பெருவிழாவின் இறுதி நாளில் கொடியிறக்கத்திற்கு முன்பாக ராவணேஸ்வர வாகனத்தில் சுவாமியும், அம்மனும் வீதியுலா நடக்கும். இது ஆகமங்களில் மவுனோற்சவம் எனக் குறிப்பிடப்படுகிறது. அதாவது இந்த வீதியுலாவில், நாகசுரம், தவில் என எந்த வாத்தியமும் இடம் பெறாது.

இவற்றிற்குப் பதிலாக முகவீணை மட்டும் வாசிக்கப்படும். வசந்த விழாவில், கோவிலுக்குள் செயற்கையாக அமைக்கப்படும் சிறிய குளத்தை சுவாமியும், அம்மனும் வலம் வருவர். மொத்தம் 5 சுற்று வலங்களில் ஒரு சுற்றில் முகவீணை வாசிக்கப்படும்.

தெருக்கூத்தில் முகவீணை

சில இடங்களில், துக்க வீடுகளில் முகவீணை வாசிக்கப்படுகிறது. தமிழகத்தின் பிரபல கலையான தெருக்கூத்தில் முகவீணைக்கு இன்றும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

முகவீணை போன்று மறையத் துவங்கியுள்ள இசைக்கருவிகள் புத்துயிர் பெற வேண்டும் என்றால் இவற்றை இசைக்கும் கலைஞர்களுக்கு அரசு ஊக்கமளிக்க வேண்டும். அப்போது எஞ்சியிருக்கும் பழமையான வாத்தியங்களை காப்பாற்ற முடியும்.

2 கருத்துகள்:

  1. முகவீணை மற்றும் சின்ன நாயனம் இரண்டும் ஒன்றா திருநெல்வேலி நெல்லையப்பர் ஆலயத்தில் குறிப்பிட்ட காலங்களில் சின்ன நாயணம் வாசிக்க பட்டதாக கூறுவார்கள்

    பதிலளிநீக்கு

Translate