ஞாயிறு, 20 ஜனவரி, 2019

சிலைத் திருடன் - அம்பலமாகும் அட்டூழியங்கள்


சிங்கப்பூரில் வசிக்கும் எஸ்.விஜயகுமார் Vijay Kumarஎழுதியுள்ள இந்த நுாலை, சமீபத்தில் வாசித்தேன். த்ரில்லர் புதினத்திற்கு இணையாக விறுவிறுப்பான நடையில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கோயில்களைப் பாதுகாப்பது குறித்து இந்துக்களுக்குப் பெரிய அளவில் அக்கறைகள் இருப்பதில்லை. ஜாதி சார்ந்த கோயில்கள், தனியாரிடம் இருப்பவை இதில் சேராது. இந்து சமய அறநிலையத் துறை, தொல்லியல் துறை ஆகிய அரசுத் துறைகளின் கீழ் இருக்கும் கோயில்கள் அரசால் மட்டுமின்றி இந்துக்களாலும் கைவிடப்பட்டு ஆண்டுகள் பலவாகின்றன. 


திருப்பணி என்ற பெயரில் சிதைக்கப்பட்டுள்ள நெல்லை காந்திமதி அம்மை கோயில் பிராகாரம்

முறையான கட்டளைகள், திருவிழாக்கள் ஆகியவை நின்று போன கோயில்கள் பல ஆயிரம் இருக்கும். கடந்த 30 ஆண்டுகளில் அரசுத் துறைகள் மீது பொதுமக்களுக்கு ஏற்பட்ட நம்பிக்கையின்மை, இந்து சமய அறநிலையத் துறை மீதும் ஏற்பட்டதன் விளைவோ என்னவோ, நமக்கென்ன என்ற அலட்சியம் இன்றும் தொடர்கிறது. அதன் விளைவு, கோயில்களே காணாமல் போய் விடுகின்றன.
உலோகச் சிலைகள் மட்டுமின்றி, பழைய ஓவியங்கள், தேர் சிற்பங்கள், கற்சிற்பங்கள், பலகை சிற்பங்கள் போன்றவையும் கொள்ளைக்குத் தப்பவில்லை. 
நெல்லை மாவட்டத்தில் பல கோயில்களில் தேர்கள் தெருக்களில் சீரழிந்து ஒவ்வொரு நாளாக அழிந்து கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன். இப்போதும் ராஜவல்லிபுரம் அக்னீஸ்வரர் கோயில் தேர் அழிந்து கொண்டுதான் இருக்கிறது. அதைப் பற்றி யாருக்கு என்ன கவலை? புதிய தேர் ஒன்று செய்து விட்டால் போயிற்று.



ராஜவல்லிபுரம் அக்னீஸ்வரர் கோயில் தேர். படம் உதவி: சங்கர நயினார் பிள்ளையன்
ராஜவல்லிபுரம் அக்னீஸ்வரர் கோயில் தேர். படம் உதவி:  சங்கர நயினார் பிள்ளையன்


செப்பறை நடராஜர் கோயிலில் பழைய தேர் அழியவே புதிதாக செய்யப்பட்ட தேர் 


நாம் வணங்கும் கோயில், நமது தெய்வம், நமது வழிபாடு, நமது அடையாளம் என்ற உறுத்து வேண்டும் என்பார் சைவப் பேரறிஞர் ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளை. அந்த உறுத்து இல்லை என்றால், அடையாளத்தை இழந்து அடிமையாக வேண்டிவரும் .

 ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளை

ஒரோவழி, ஜோதிடர்கள், அவர்கள் சொல்லும் பரிகாரங்களாலும் பிரதோஷம் என்ற வழிபாட்டினாலும் மட்டுமே பல கோயில்கள் பிழைத்துக் கிடக்கின்றன. வரலாற்று உணர்வையும், முறையான சமயக் கல்வியையும் சமூகத்தின் அடிமட்டம் வரை கொண்டு போய்ச் சேர்க்கத் தவறியதன் விளைவு இது.
கடந்த 5 ஆண்டுகளில் சிலைகள் திருட்டு தொடர்பாக தமிழகத்தில் பெரிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தியதில், Vijay Kumarr நிறுவிய India Pride Project பேரியக்கத்திற்கு பெரும் பங்குண்டு. இந்த இயக்கத்தில் உலகளவில் பல்வேறு துறைகளில் பணியாற்றி வரும் இந்திய இளைஞர்கள் பங்கேற்று வருகின்றனர். உலகளவில் கடத்திச் செல்லப்பட்ட இந்திய சிலைகள் குறித்த தொகுக்கப்பட்ட தரவுகள் இந்த இயக்கத்திடம் உள்ளன.

விஜய்குமார் தனது நுாலுடன்


கோயில்களில் உள்ள உலோக மற்றும் கற்சிலைகள் கடந்த 60 ஆண்டுகளாக எவ்வாறு கொள்ளையடிக்கப்படுகின்றன; யாரால் கொள்ளையடிக்கப்படுகின்றன என்பதை கண் முன்னால் திரைப்படம் போல் காட்டுகிறது சிலைத் திருடன் நுால்.
கைவிடப்பட்ட கோயில்கள், அவற்றின் சிலைகளை சர்வதேச கலைப் பொருள் கொள்ளைக் கும்பல் எப்படி அடையாளம் கண்டறிந்து அவற்றை உள்ளூர் சில்லறைத் திருடர்கள் மூலம் கொள்ளையடிக்கின்றன என்பதை ஆதாரங்களுடன் காட்டுகிறது இந்த நுால்.
சிலைத் திருட்டு தொடர்பாக தமிழில் வந்த முதல் நுால் இது. சிலைகள் திருட்டு தொடர்பாக இந்து சமய அறநிலையத் துறை, வருவாய்த் துறை, தொல்லியல் துறை, சிலை கடத்தல் தடுப்பு காவல் பிரிவு போன்றவை எத்தகைய அலட்சியத்துடன் இப்போது வரை செயல்பட்டு வருகின்றன என்பதை அம்பலமாக்குகிறது இந்த நுால்.
அரசுத் துறைகள் மட்டுமின்றி, பிரபலமான வரலாற்று அறிஞர்களும் எப்படி மனசாட்சியின்றி இந்தக் கொள்ளைக்கு உடந்தையாக இருக்கின்றனர் என்பதையும் தோலுரிக்கிறது இந்த நுால்.
மன்னர்களும், மகான்களும் வழிபட்ட கோயில்களின் சிலைகள், கண்ணாடி அறைகளுக்குள் எப்படி கொண்டு செல்லப்பட்டு விற்பனைப் பொருளாக்கப்படுகின்றன என்பதை அக்கக்காகப் பிரித்து அலசுகிறது இந்த நுால்.
இந்திய, தமிழக அதிகாரிகளை விட, அமெரிக்க அதிகாரி ஒருவருக்கு கொள்ளையடிக்கப்பட்ட சிலைகளை மீட்பதற்கு இருந்த ஆர்வத்தைப் படித்தபோது, உண்மையில் மனம் வெதும்புகிறது.
ஒருபக்கம் நமது ஊர்களின் வரலாறு தொடர்பாக இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு பரவி வருகிறது. கல்வெட்டுகளை படித்தறிய இளம் தலைமுறையினர் ஆர்வத்துடன் முன்வருகின்றனர். பல ஊர்களில் வரலாற்று மையங்கள் புதிதாக உருவெடுக்கின்றன. இன்னொரு பக்கம், ஜோதிடம், பரிகாரம் என்ற பெயரில் கோயில்கள் சிதைக்கப்படுகின்றன. ஆகமம், திருப்பணி என்ற பெயரில் பழைய சிலைகள் துாக்கி வீசப்படுகின்றன. 
2002ல் விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயிலில் திருப்பணிகள் தொடங்கின. கோஷ்டம் ஒன்றில் இருந்த முன் இரு கைகள் உடைந்த அர்த்தநாரீஸ்வரர் சிலை அகற்றப்பட்டுள்ளது. கைகள் உடைந்துள்ளன என்பது மட்டும் தான் அந்த சிலை அகற்றப்பட்டதற்கு ஒரே காரணமாக இருந்திருக்க முடியும் என்பது தெள்ளத் தெளிவு. ஆனால் அந்த சிலை 11ம் நுாற்றாண்டைச் சேர்ந்தது. ஆணும் பெண்ணும் சம உயரத்தில் உள்ள சிலையை செதுக்க சிற்பி எப்படி மெனக்கெடுவார் என்பதை Vijay Kumar ஓரு பக்கத்தில் விளக்குகிறார் இந்த நுாலில். அத்தகைய சிலையை பின்னமானது என்ற ஒரே காரணத்திற்காக பெயர்த்தெறிந்து குப்பையில் போடுகிறது கோயில் நிர்வாகம். 2004ம் ஆண்டில் இந்த சிலை, கோயிலில் இருந்து சத்தமின்றி கடத்தப்பட்டு கடல் கடந்து ஆஸ்திரேலியாவுக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்குள்ள மியூசியத்திற்கு அர்த்தநாரீஸ்வரரை பல கோடி ரூபாய்க்கு விற்றுள்ளார் சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூர். அதையடுத்து திருப்பணியின் போது புதிய அர்த்தநாரீஸ்வரர் சிலை நிறுவப்படுகிறது. 

திருப்பணிக்குப் பின் வைக்கப்பட்ட புதிய சிலை

பழைய சிலையும் புதிய சிலையும்

இதைப் படித்த போது, எனக்கு நெல்லையப்பர் கோயிலில், ஆயிரம் ஆண்டு தொன்மையான நெல்லையப்பர் உற்சவர் மாற்றப்பட்டு, புதிய உற்சவர் நிறுவப்பட்ட சம்பவம் தான் நினைவுக்கு வந்தது.

நெல்லையப்பர் பழைய உற்சவரும் புதிய உற்சவரும்

இன்றைய உடனடித் தேவை, இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள கோயில்களில் பணிபுரியும் இணை, துணை ஆணையர் முதற்கொண்டு, பாராக்காரர் வரை அனைவருக்கும் வரலாறும், கோயில்களின் தொன்மையும் கற்பிக்கப்பட வேண்டும். நம் பொக்கிஷங்கள் ஏன் காக்கப்பட வேண்டும் என்பதைை இந்த நுால் அழுத்தம் திருத்தமாக வலியுறுத்துகிறது.
குறிப்பாக, ஆகம வல்லுநர்களான சிவாச்சார்யர்களுக்கு அவசியம் தமிழக கலை வரலாற்றையும் கற்பிக்க வேண்டும் என்றே நான் கூறுவேன். அவர்களுக்கு ஒவ்வொன்றும் சாதாரண சிலையாக இருக்கலாம் ஆகமப்படி. ஆனால், அது தமிழகத்தின் கடந்த கால வரலாறு. தமிழ்க் கலையின் அடையாளம். 
அதேபோல், தமிழகத்தில் உள்ள திருமடங்களின் நிர்வாகத்தில் உள்ள கோயில்கள் குறித்து மடாதிபதிகளுக்கும் மடத்து நிர்வாகிகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். சமயத்தில், மடாதிபதிகளுக்கே இதுபற்றிய ஓர்மை இருப்பதில்லை. இந்த சிலை போனால் வேறொன்று என்ற அலட்சியம் அவர்கள் மத்தியிலும் இருக்கிறது.
தனது பணியைப் பார்த்துக் கொண்டு, சர்வதேச அளவிலான கொள்ளைக் கும்பலின் செயல்பாடுகளையும் கவனித்துக் கொண்டு, இந்திய மற்றும் தமிழக அரசுகளின் அதிகாரவர்க்கத்தோடு போராடிக் கொண்டு களவாடப்பட்ட சிலைகள் மீட்பதற்கு இப்போது வரை அயராமல், மனம் தளராமல், சலியாமல் உழைத்துக் கொண்டிருக்கும் Vijay Kumarபாராட்டப்பட வேண்டியவர் மட்டுமல்ல தேசத்தின்உயரிய விருதுகளுக்கு உரியவர். பாஜகவினர் இவரைப் பற்றி மத்திய அரசிடம் எடுத்துக் கூறி இவரது முயற்சிகளுக்கு இந்நேரம் சகல ஆதரவுகளையும் தெரிவித்திருக்க வேண்டும். நடந்ததா எனத் தெரியவில்லை.
இந்த நுாலைப் படிக்கும் பொதுமக்கள் ஒவ்வொருவரும், அவரவர் ஊர்களில் உள்ள கோயில்களையும் அவற்றில் உள்ள கலைப் பொக்கிஷங்களையும் காப்பதற்காக இனியாவது முன்வர வேண்டும்.
இந்த நுாலைப் படிக்கும் அரசியல்வாதிகள், இந்திய கலைப் பொருள் சட்டம் மற்றும் தமிழக சட்டங்களில் இடம் பெற வேண்டிய திருத்தங்களை விரைந்து கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Vijay Kumar சொன்னது போல், நமது சிலைகள் வெறும் கலைப் பொருட்கள் மட்டுமல்ல; அவை தெய்வத்தின் திருவுருவங்கள்; அவை வழிபாட்டில் இருக்க வேண்டியவை; கண்ணாடிக் கூண்டுக்குள் அல்ல என்ற உறுதியான எண்ணம் எப்போது நமக்கு வருகிறேதா அப்போது சிலைத் திருட்டுகள் அறவே நிற்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Translate