வியாழன், 28 மார்ச், 2013

கும்பமேளா பற்றிய எனது செய்திகள் - 6


சமோசா, பூரி, ஜிலேபி, சாப்பாட்டுக்கு பஞ்சமில்லை

(பிப்ரவரி 28, 2013)

அலகாபாத்தில் கும்பமேளாவில் கலந்து கொள்ள, லட்சக்கணக்கான பேர் தினசரி அங்கு கூடும் நிலையில், சாதாரண குடிநீர் பாட்டில் முதல், உணவு வரை அனைத்து பொருட்களும், ஓரளவு நியாயமான விலைக்கே கிடைக்கின்றன.

ஒருவர் ஒருவேளை சாப்பாட்டை, 20 ரூபாயில் முடித்துக் கொண்டு விடலாம் என்பது ஆச்சரியமான செய்தி.

அலகாபாத்தில் கும்பமேளா நடக்கும், கும்ப நகர் பகுதி, கங்கை கரையில் உள்ளது. மொத்தம், 4,900 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பு கொண்டது.

இதில் தான், ஆயிரக்கணக்கான கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

திண்ணைகளில் கடைகள்ஆற்றின் மேற்கு கரையில் தாராகஞ்ச் பகுதி உள்ளது. கும்பமேளாவை ஒட்டி இங்குள்ள வீடுகளின் திண்ணைகள், மேளா நடைபெறும் 55 நாட்களுக்கு தற்காலிக கடைகளாக மாறியுள்ளன. அவற்றுக்கு வாடகை வசூலும் உண்டு.

தாராகஞ்ச் மட்டுமல்லாமல், கும்ப நகர் பகுதியிலும் நிறைய கடைகள் உள்ளன. தாராகஞ்சில், வளையல், "கவரிங்' நகைகள், பூஜை பொருட்கள், அரிசி பொரி மற்றும் உலர் திராட்சை வகைகள், பீடி இலை தூள், குளிருக்கேற்ற ஆடைகள் ஆகியவை விற்கும் கடைகள் ஏராளமாக உள்ளன.

இவை தவிர, குட்கா, பீடா, பூரி, சமோசா ஆகியவை விற்கும் கடைகளும் உள்ளன.

 இவற்றில், குலோப்ஜாமூன், பால்கோவா, பூசணி அல்வா, ஜிலேபி ஆகியவற்றை சுடச்சுட தயாரிக்கும் கடைகள் கணிசமாக அதிகம் உள்ளன.

தாராகஞ்சில் பல வீடுகளின் முன்பகுதிகளே கடைகளாக மாறியுள்ளன.

 டீக் கடைகள் என்றதும், நம்மூர் போல இருக்கும் என நினைக்க வேண்டாம். ஒரு கட்டை பெஞ்சு வீட்டின் முன்னால் போடப்பட்டிருக்கும். வீட்டின் வாசலிலேயே, ஸ்டவ் அடுப்பில், பால் பாத்திரத்துடன் டீ எப்போதும் தயாராக இருக்கும்.

20 ரூபாய்க்கு சாப்பாடு

கும்பமேளாவில் லட்சக்கணக்கான பேர் கூடிய போதும், தரமான டீயின் விலை, 5 ரூபாய் தான். அதேபோல், 10 குட்டி பூரிகள், சப்ஜியோடு 20 ரூபாய் தான். பூரி வேண்டாம் என்றால், சப்ஜியோடு சாதம் 20 ரூபாய்க்கு கிடைக்கிறது.

காலையில், திரிவேணி சங்கமத்தில் குளித்து விட்டு, பசியோடு வருவோருக்காக, அப்பகுதியிலேயே ஏராளமான சமோசா கடைகள் உள்ளன. 10 ரூபாய்க்கு 4 பெரிய சமோசாக்கள், புளிச் சட்னியுடன் கிடைக்கின்றன.

தாராகஞ்சில் மோரி பகுதியில், 10 ரூபாய்க்கு இரண்டு குலோப்ஜாமூனும், 10 ரூபாய்க்கு, 100 கிராம் பால்கோவாவும், 8 ரூபாய்க்கு, 50 கிராம் கேரட் அல்வாவும் கிடைக்கின்றன.

விலை குறைவு:

பூந்தியும், ஜிலேபியும் சுடச்சுட தயாரிக்கப்பட்டு, வாடிக்கையாளர்கள்
முன்னிலையிலேயே விற்கப்படுகின்றன. குளிருக்கு ஏற்ற உணவு வகை என்பதால் அவற்றுக்கு எப்போதுமே கிராக்கி தான்.

இவை தவிர, பேல்பூரி, பானி பூரி போன்றவையும் குறைந்த விலைக்கு கிடைக்கின்றன.

தமிழக உணவான இட்லி, தோசை, சாப்பாடு இல்லை. குட்கா, உணவு தயாரிப்பு உள்ளிட்ட தொழில்களில், பெரும்பாலும் குழந்தை தொழிலாளர்களே ஈடுபடுத்தப்படுகின்றனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Translate