மக்கள் வெள்ளத்தில் மூழ்கியது கங்கை கரை
இரண்டு நாட்களில் 1 கோடி பேர் வருகை
(பிப்ரவரி 09, 2013)
கும்பமேளாவின் உச்சகட்ட தினமான, தை அமாவாசை நீராடலில் பங்கேற்பதற்காக, கடந்த இரண்டு நாட்களில் மட்டும், அலகாபாத்திற்கு, ஒரு கோடி பேர் வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
உ.பி., மாநிலம் அலகாபாத் பிரயாகையில், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் கும்பமேளா, இந்தாண்டு, ஜன., 15ம் தேதி துவங்கி நடந்து வருகிறது.
இதன் உச்சக்கட்ட தினமான, தை அமாவாசை இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. இது வட மாநிலங்களில் மவுனி அமாவாசை என அழைக்கப்படுகிறது.
இந்த நாளில் கங்கையில் நீராடினால், அனைத்து பாவங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை. மவுன அமாவாசையை முன்னிட்டு அலகாபாத் பிரயாகைக்கு, கடந்த இரண்டு நாட்களில் மட்டும், ஒரு கோடி பேர் வந்து கும்பமேளா ஏற்பாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர். இன்று மேலும், 2 கோடி பேர் வருவர் என, எதிர்பார்க்கப்படுகிறது.
தை அமாவாசையான இன்று அதிகாலை, 5:15 மணிக்கு துறவிகளின் நீராடலான, "ஷாகி ஸ்னான்' எனப்படும் ராஜ குளியல் துவங்குகிறது.
துறவிகளின் அமைப்பான அகாடாக்கள் வரிசையாக நீராடலை மேற்கொள்கின்றனர்.
மரபுப்படி, சைவ அகாடாக்கள் முதலிலும், வைணவ பிரிவை சேர்ந்த வைராகி அகாடாக்கள் இரண்டாவதாகவும் நீராடுகின்றனர். சைவ அகாடாக்களில், மகா நிர்வாணி, அடல், நிரஞ்சனி மற்றும் ஆனந்தா அகாடாக்கள் முதலில் நீராடுகின்றனர். நான்காவதாக ஜுனா, ஆவாகன் மற்றும் பஞ்ச கிரி அகாடா துறவிகள் நீராடுகின்றனர்.
இவர்களையடுத்து வைராகி பிரிவை சேர்ந்த நிர்மோகி, திகம்பர், நிர்வாணி அகாடாக்களும், உதாசீன பிரிவை சேர்ந்த நயா பஞ்சாயதி, படா பஞ்சாயதி, நிர்மல் அகாடாக்களும் நீராடுகின்றனர்.
நீராடலுக்கு செல்வதற்காக, அகாடா துறவிகள், தங்கள் அமைப்பின் தலைவரான மகாமண்டலேசுவரர் என்ற மூத்த துறவியின் தலைமையில், மேளதாளங்களோடு, அணிவகுப்பு நடத்தி செல்லும் நிகழ்ச்சி இன்று அதிகாலை 1:00 மணிக்கே துவங்கி விடும். துறவிகள் அனைவரும், "செக்டார் 3' என்ற பகுதியிலும், பொதுமக்கள், "செக்டார் 2' என்ற பகுதியிலும் நீராடுகின்றனர்.
இந்த மவுன அமாவாசை நீராடல், இன்று அதிகாலை, 5:15 மணி முதல், மாலை 5:30 மணி வரை நடக்கும். தை அமாவாசை நீராடலுக்காக கோடிக்கணக்கான மக்கள் பிரயாகையில் குவிந்து வருவதை அடுத்து, சி.ஆர்.பி.எப்., எல்லை பாதுகாப்பு படையினர், மாநில போலீசார், ராணுவத்தினர் என, மொத்தம் 30,000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பிரயாகை பகுதியில் மொத்தம், 20 மருத்துவமனைகள், 30 போலீஸ் நிலையங்கள், தீயணைப்பு நிலையங்கள், நடமாடும் ஏ.டி.எம்., மையங்கள், தபால் நிலையம், வெளிநாட்டு கரன்சி மாற்றும் நிலையங்கள், பத்திரிகையாளர்களுக்கு தனியாக தங்கும் இடங்கள் என, பல்வேறு ஏற்பாடுகளை, உ.பி., மாநில அரசு செய்துள்ளது.
இத்தனை மக்கள் கூட்டம் என்றால்... இவ்வளவு பாதுகாப்பு தேவை தான்...
பதிலளிநீக்குதொடர்கிறேன்... நன்றி...