தமிழ்நாட்டில் சைவாதீனங்கள் பல. அவ்வாதீன கர்த்தரனைவரும் என் வணக்கத்திற் குரியவர். நான் அவர்களை வணங்குகிறேன். அவர்கள்பாற் குறைகாணும் உரிமை எனக்கில்லை. ஆயினும் சைவ சமூகத்தின் இக்கால நிலையை எண்ணும்போது அக்கர்த்தர்களின் திருவடிகளுக்கு விண்ணப்பிக்கு முறையில் சில சொல்ல வேண்டியது அவசியமாகிறது. அவர்கள் என்னை மன்னித்தருள்க.
‘ஒரு தலைமுறைக்கு மேலாக தமிழகத்தில் துவேஷத்தை பரப்புவதையே பொழுதுபோக்காகக் கொண்ட ஒரு கன்னடிகர் உழைத்து வருவதை நாடறியும்‘ (தினமணி 1-5-1962) என்பது ஆசிரியப் பகுதி.
அக்கன்னடிகர் தெய்வநிந்தையே வாழ்வின் பயனாகக் கொண்டவர். தம் கன்னடப் பிரதேசத்தில் யார்க்கேனும் அவர் அறிமுகமானவரா? ஆனால் அவர் தமிழகத்திற் சஞ்சரித்துத் தமிழருள் எத்தனையோ பேரைத் தமிழரல்லாத யாராகவோ ஆக்கி வருகிறார். அவரைத் தமக்குத் தலையாகவோ துணையாகவோ கொண்டார் அம்மடபதி. அதனால் அவர் பிரசங்கிப்பதையே இவரும் பிரசங்கித்து வருகிறார். இவர் பேச்சால் சைவ சமயமும் சைவ சமூகமும் உருப்படுமா?
இன்னும் சில சைவாதீனங்கள் திருப்பாவையை ஆயிரமாயிரமாக அச்சிட்டு வழங்கி வருகின்றன. வைணவ நூல்களை அச்சிட்டு வழங்க வைணவ மடங்க ளில்லையா? வைணவப் பிரபுக்க ளிலரா? வைணவக் கோவில்களிலவா?
மற்றொரு சைவாதீனம் அறப்பணிக்கென ஏறக்குறைய எழுபது லட்ச ரூபா ஒதுக்கியுள்ளது. அதில் சைவ சித்தாந்தத்தைப் பரப்புதற்கென ஒதுக்கப்பட்டது 44 இல் ஒரு பங்கு எனத்தெரிகிறது.
லோக சபை சபாநாயகர் கூறியது இங்கே கவனிக்கத் தக்கது.
‘ஆலய நிதிகளை இந்துமத வளர்ச்சிக்குப் பயன்படுத்த வேண்டும்—ஸ்ரீஅனந்த சயனம் வலியுறுத்தல். கல்வி வளர்ச்சிக்கு சர்க்கார் நிதியுதவி இருக்கிறதே என்றார்.—திருப்பதி போன்ற தேவஸ்தானத்தின் திரண்ட செல்வத்தை சர்வ கலாசாலைகள், கல்லூரிகளுக்குச் செலவிடுவதைக் காட்டிலும், இந்துமத வளர்ச்சிக்காகவே பயன்படுத்த வேண்டும் என்றும் லோக சபை சபாநாயகர்—கூறினார். —நாடெங்கிலும் புறக்கணிக்கப்பட்டு க்ஷீணிக்கும் நிலையில் உள்ள கோயில்களை புதுப்பிக்க வேண்டும் என்றார். மேலும் கல்விக்கென நிதியை சர்க்காரிடமிருந்து பெறலாமே ஒழிய இந்து அறநிலயங்களிலிருந்து பெறக்கூடாது என்றும் கூறினார்.—சமீபத்தில் டில்லியில் ஆரம்பிக்கப்பட்ட வெங்கடேஸ்வரா கல்லூரி பற்றி குறிப்பிடும் பொழுது இப்பணத்தை ஒரு கோயிலுக்கு செலவழிப்பதை தான் விரும்புவதாக தெரிவித்தார்’ (தினமணி 1-1-1962) என்பதது.
சைவாலயங்களின் சொத்துக்கள் போல் சைவாதீனங்களின் சொத்துக்களும் சைவசமய வளர்ச்சி யொன்றற்கே யுரியன. அந்தப் பிரதானத்துக்கு அனுகூலமல்லாத, பிரதிகூலமாக்கூடிய வழியில் அச்செல்வங்க செலவாகலாமா?
அக்குருமார்களுக்கு இத்தமிழ் நாட்டில் லட்சக்கணக்கில் சீட ரிருந்து வருகின்றனர். அவரை அவர்கள் சிறிதேனுங் கருதுகின்றார்களா? பொருட் படுத்துகின்றார்களா? குருசிஷ்ய முறையில் ஆவன செய்து ஆதரிக்கின்றார்களா? குருசிஷ்ய பாரம்பரியத் தொடர்பைப் பாதுகாத்து வருகின்றார்களா? அவர் அவர்களை விட்டுச் சன்னஞ் சன்னமாக விலகிப் போகவில்லையா? குருமார்கள் கைவிட்ட அவரிடம் சைவசமய வாழ்க்கை குலைந்திடாதா? அப்படிச் சீடரை யெல்லாம் இழந்து விட்ட பிறகு அவர்கள் குருமார்களாதல் யாங்ஙனம்? அவ்வாதீனங்கள் எதிர்கால நிலைதான் யாதாவது? அவற்றின் தாபகர்களாகிய சைவஞான பானுக்களின் உள்ளந்தான் மகிழுமா?
‘சர்க்கார் ஜமீந்தார் ஒழிப்பு சட்டம் கொண்டு வந்து ஜமீந்தார்களை ஒழித்து சமஸ்தானங்களையும் கைப்பற்றினார்கள். இப்போது மடாதிபதிகள் ஜமீன்தார் போல இருந்து வருகிறார்கள். இந்த மடாதிபதிகள் தேவையா? இல்லை. ஜமீன்தார் ஒழிப்புபோல மடாதிபதி ஒழிப்பும் வேண்டும். இது பற்றி முதன்மந்திரி காமராஜரிடம் கூறியிருக்கிறேன். திரு காமராஜரும் பொறுத்து ஆவன செய்வதாக கூறியுள்ளார்’ (தினமலர் 9-8-1962) என ஒருவர் கூறிய செய்தியை அக்குருமார்கள் பார்த்திருக்கலாம்.
அவ்வொழிப்பு நடைபெறுமோ? பெறாதோ? அது வேறு விஷயம். ஆயினும் அப்படிப் பேசினாரவர். அத்துணிவுக்கு காரண மென்ன? அவர் சைவப்பிரசாரமே செய்பவரா யிருந்திடுக. ஆனால் அம்மடங்களைத் தம் குருபரம்பரையென அவர் கொள்ளார். அவர் போல இன்னும் அநேக ருளர்.
அம்மடங்கள் சைவத்தை மாத்திரமா வளர்த்தன? தமிழையும் புலவர் பெருமக்கள் அதிசயிக்கும்படி வளப்படுத்தின. அந்நன்றிதானும் அவருள்ளத்திலிருந்து விடைபெற்று விட்டது. எல்லாவற்றிற்கு மேலாக அத்துணிவுப் பேச்சைக் கேட்டு நெஞ்சு கலங்குஞ் சீடர் அம்மடங்களுக்கு இலரென அவர் எண்ணியிருக்கலாம். அவ்வளவுக்கு அம்மடங்கள் தம் சீடவர்க்கத்தை உதாசீனம் பண்ணித் தனித்தன. அதனாலன்றோ அச்செய்தியிற் பேசியவர் மனம் போனபடி அம்மடங்களைக் குறைபேசலாயினர்.
சனங்களைப் பொருட்படுத்தாத சர்க்கார் என்ன ஆகும்? அது போல் சீடரைக் கைவிட்ட மடங்களும் ஆகுமன்றோ? மாயாவாத வைணவ முதலிய அந்நிய சமய மடங்களில் அக்குருமார்களின் வாத்ஸல்யமும் சீடவர்க்கத்தின் பக்தி விசுவாசமும் சொல்லுந் தரத்தன வல்ல. அவை எடுத்துக்காட்டாயிருக்குந் தகையன. அம்மடங்களின் ஆக்கத்திற்கு அங்ஙனமாய குருசிஷ்யத் தொடர்பு ஒரு முக்கிய காரணமாகும்.
சைவ சமூகம் சித்தாந்த சைவத்தை அயர்த்துக் கொண்டு வருகிறது. தலைவனில்லாப் படைபோலும், மேய்ப்பனில்லா மந்தைபோலும், அரசனில்லாச் சனம் போலும் அது ஆசான்மாரின் பிடிப்பின்றிக் கட்டவிழ்ந்து தட்டழிந்து சிதறுண்டு சமயத் துறையில் தவிக்கின்றது. அதற்கு யாரெல்லாமோ கடவுள், குரு, எவையெல்லாமோ நூல்கள், கொள்கைகள், ஆசாரங்கள், அனுட்டானங்கள். அம்மட்டோ? சைவ சமயத்துக்கே பகைவரா யிருக்குஞ் சைவர் தான் சிலரா? இப்போதுள்ள நிலை யிது. இது வேற்றுச் சமயங்களின் விளம்பரத்துக்கு ஏற்புடையதாயிற்று.
அந்நிய சமய குருமார் இந்நாடெங்கும் யாத்திரை செய்கின்றனர். வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் தம் சமயங்களைப் பிரசாரஞ் செய்து வருகின்றனர். அவருள் ஸ்ரீ சங்கராசாரியாரும் ஒருவர். ஆண்டு தோறும் அக்கூட்டு மகாநாட்டுக்கு ( பாவை மாநாடு) அவர் ஆஞ்ஞை பிறப்பித்து வருகிறார். சைவரிடமும் அவ்வாஞ்ஞை பலிதமாகி வருகிறது.
அங்ஙனம் தம் சீடரையெல்லாம் அன்னிய சமய குருபாதங்களில் வீழ்த்தி விட்டுச் சைவகுருமார்கள் தமிழ் நாட்டுக்கு வெளியே யாத்திரை போவதும் வருவதுமாயிருக்கிறார்கள். அதனை அவர்கள் ஒன்றிரண்டளவில் நிறுத்திக் கொள்ளலாம். அவர்களுக்குச் சீடத்துவம் பூண்ட சைவ சமூகம் தமிழ் நாட்டிற்றா னுண்டு.
ஆகலின் அவர்கள் தமக்குரிய ஆசாரிய வைபவத்தோடு இங்கேயே பலமுறை யாத்திரை செய்தருள்க; ஆங்காங்குள்ள இலட்சக் கணக்கான சீடரைச் சைவாசார அனுட்டான பரராக்கியருள்க; சைவசமய வரம்பை யுணர்ந்து போற்றி வருமாறு செய்தருள்க. அப்பரிபாலனம் நிகழுமாயின், முகிலைக் கண்ட மயில் போல், தாயைக் கண்ட சேய் போல், காந்தனைக் கண்ட கற்பரசி போல் அவர்களின் விஜயத்தைக் கண்டு சைவவுலகம் பூரிக்கும். ஆனால் அவ்விஜயம் இப்போது பஞ்சமாயிற்று. அஃதேனோ?
இனியாயினும் அக்குருசிஷ்ய சம்பந்தத்தில் திருவுள்ளம் வைக்குமாறு அக்குருமார்களின் திருவடிகளைச் சிக்கெனப் பிடித்து அவர்களை நான் வேண்டிக் கொள்கிறேன்.
- சித்தாந்த பண்டித பூஷணம் திருநெல்வேலிப் பேட்டை ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளை (சைவ வைணவப் பாவைகள் ஆராய்ச்சி - நூலில் இருந்து)
2021, ஜூலை 1 ம் தேதி Nellai Chokkar முகநுால் பக்கத்தில் பதிவிடப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக