நேற்று அலுவலகத்திற்கு சென்று சில வேலைகளை முடித்துவிட்டு, மீண்டும் புத்தக கண்காட்சிக்கு நண்பர் கார்த்தியுடன் புறப்பட்டேன்.
இந்த முறை வாங்க வேண்டும் என, துணை ஆசிரியரிடம் நான் பரிந்துரைத்தது, எட்கர் தர்ஸ்டனுடைய தென்னிந்தியக் குலங்களும் குடிகளும், ஏழு தொகுதிகள்.
தென்னிந்தியாவில், பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இருந்த அத்தனை ஜாதிகளையும், அவர்களது பழக்க வழக்கங்களையும் அவர், பல தொகுப்புகளாக பதிவு செய்திருந்தார்.
அவற்றில், தமிழில் வெறும் ஏழு தொகுதிகள் மட்டுமே வெளிவந்துள்ளன. தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள அவற்றை, துணை ஆசிரியருக்கு வாங்குவதற்காகத் தான் சென்றேன்.
பிற்பகல் 3 மணி என்பதால், கூட்டம் அவ்வளவாக இல்லை. அப்போது தான் பலர், குளித்து முடித்து, பொலிவாக வந்து கொண்டிருந்தனர்.
தமிழ்ப் பல்கலைக்கழக அரங்கில் சென்று கேட்டால், கொண்டு வந்த அத்தனை தொகுதிகளும் விற்றுத் தீர்ந்து விட்டதாகச் சொன்னார்கள். என்னால் நம்ப முடியவில்லை, நம்ம நாட்டிலேயா இப்படி என.
ஆராய்ச்சி புத்தகங்கள் விற்றுத் தீர்கின்றன என்றால் நம்மவர்களுக்கு ஏதோ ஆகி விட்டது என்று தானே அர்த்தம்?
தொடர்ந்து, அரங்கில் பார்வையிட்ட போது, தஞ்சைப் பெரிய கோயிலில் உள்ள சேரர் காலத்து ஓவியங்கள் பற்றிய நுால் ஒன்றைப் பார்த்தேன். அது பாலித்தீன் தாளால் மூடப்பட்டிருந்தது. அதைப் பிரிக்க முடியாது.
`ஏங்க! இதப் பிரிச்சுப் பார்க்கலாமா?'
`கூடாது'
`ஏன்?'
`ஏன்னா... அது அப்படித் தான். காத்துப் பட்டால், புத்தகத்தில் உள்ள ஓவியங்கள் எல்லாம் கருத்துரும் (?)'
`பெறவு எப்படிங்க...புத்தகம் நல்லா இருக்கா இல்லியான்னு நாங்க தெரிஞ்சுக்கிறது?'
பதில் இல்லை. புத்தகத்தை அப்படியே வைத்து விட்டு திரும்பி விட்டேன்.
நான்காவது முறையாக எனது பட்டியல்:
- தாது மணல் கொள்ளையால் காணாமல் போகும் கடலோரக் கிராமங்கள் - கப்பிகுளம் ஜெ.பிரபாகர்
- மழைக்காடுகளின் மரணம் - நக்கீரன்
- அணுஉலை மீதான மெளனத்தைக் கலையுங்கள் - ஏ.கோபாலகிருஷ்ணன் - தமிழில்: சங்கர், காஞ்சனை மணி
- ஸ்டெர்லைட் - பி.மி.தமிழ்மாந்தன் உள்ளிட்ட நான்கு பேர்
- எது சிறந்த உணவு - மருத்துவர் கு. சிவராமன்
- காந்தியும் தமிழ்ச் சனாதனிகளும் - அ.மார்க்ஸ் - எதிர் வெளியீடு - ரூ.80
- இசுலாமின் வரலாற்றுப் பாத்திரம் - எம்.என்.ராய் - தமிழில்: வெ.கோவிந்தசாமி - பாரதி புத்தகாலயம் - ரூ.50
- சூபி: விளிம்பின் குரல் - ஹெச்.ஜி.ரசூல் - பாரதி புத்தகாலயம் - ரூ. 45
- காந்திஜியின் இறுதி 200 நாட்கள் - வி.ராமமூர்த்தி - தமிழில்: கி.இலக்குவன் - ரூ. 350
- தாய்மைப் பொருளாதாரம் - ஜே.சி.குமரப்பா கட்டுரைகள் - தமிழில்: மருத்துவர் ஜீவா - பனுவல் சோலை - ரூ.150
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக