ஞாயிறு, 1 மே, 2011

பெரியபுராணமும் சாதியும் - 3

(இறுதிப்பகுதி...)

                                                 வணக்கம்

இவ்வாறு குறிப்பதுடன், திருநாளைப் போவாரை (பறையரை)த் தில்லை அந்தணரும், சம்பந்தரை, நீலநக்கரை அப்பரும், நீலகண்டப் பாணரைச் சம்பந்தரும் வணங்கிய தன்மையைக் கூறிய பெரியபுராணம், அடியவர் போல் தோன்றிய ஏகாலியரைச் சேரமான் பெருமாள் படியுற வணங்கிய பரிசும் கூறுகிறது.
                                              கோயில் புகல்

அந்தணச் சம்பந்தருடன் சேர்ந்தும், கோயில்களுள் தனித்தும், சாதியற்ற குலச்சிறையாரும், பாணரும், சாதித் திமிர் கொண்டவர் இக்காலம் போய் வருகிற இடங்களுக்கு எல்லாமும் போய் வணங்கினார் என்பதையும், காரிக்கோவை பாடியவரும் சாதியற்றவருமாகிய காரி நாயனார், கோயில்கள் கட்டி உள் இடம் எவையும் போனார் என்பதையும், தயில வினைஞராகிய கலைய நாயனார் (இக்காலம் திருச்செந்தூரில் கோயிலில் புகாதபடி தடுக்கப்பட்ட தயில வினைஞர் மரபினர்) திருக்கோயில் உள்ளும் புறம்பும் பல விளக்கு ஏற்றினார் என்பதையும் பெரியபுராணம் விளக்குகிறது.

திருவாரூர்க் கோயில் வாயில் நின்று நீலகண்ட யாழ்ப்பாணர் பாடிய பொழுது பக்கம் வந்து பாடும்படி வடபுறம் வாயில் வகுப்ப, அதன் வழிப்புக்குக் கடவுள் குறியை நெருங்கி நின்று அவர் வணங்கினதாகத் திருநீலகண்டர் வாழ்வு யாழ்ப்பாணர் எட்டாவது செய்யுள் கூறுகிறது.

                                                   சாதிப் பெயர்

பெரியபுராணம் பாடிய காலத்து உயர்தரப் பட்டமாக இருந்த தொண்டைமான் என்பது சேக்கிழார் தம்பி பாலறாவாயர்க்கும், இக்காலம் புதுக்கோட்டை மன்னருக்கும், சுண்ண வினைஞர், சுண்ணம் விற்போருக்கும் பொதுவாயிற்று.

பாண்டியர் பெயரோ, மறவர்க்கும், நாயக்கருக்கும் பாண்டி நாட்டுக் குறு மன்னவர்க்கும் உரித்தாயிற்று.

"கோன்' பெயரோ அப்பர், சுந்தரர், சம்பந்தர், கலிக்காமர், ஐயடிகள் இவர்களுக்கும் காடவ மன்னருக்கும், பொதுவர்க்கும் இணங்குகிறது.

தேவர் பெயரோ, கடவுளருக்கும், அருள் நிலைத் தலைவர்க்கும், மறவர்க்கும் இசைந்து நிற்கிறது.

"ஐயர்' என்ற பெயரோ, தில்லை அந்தணரால் திருநாளைப் போவார்க்கும் (திருநாளைப் போவார் - 30), ஞான சம்பந்தரால் நீலகண்டப் பாணருக்கும் (ஞான - 133 - 176), இக்காலம் பார்ப்பனரில் ஒரு பிரிவினர்க்கும், கிறித்துமதப் போதகர்க்கும் பறையர் வீட்டில் தந்தைகட்கும் வழங்குவதாயிற்று.

திருநெல்வேலிச் சீர்மைத் திருப்புடைமருதூர்ச் செப்புப் பட்டயத்தில் மறவரும் பிள்ளையும் முதலியும் ஐயராயினர்.

                                                       மணம்

வேளாளக் கோட்புலி நாயனார் தம்மகள் வனப்பகை சிங்கடியார் இருவரையும் ஆதிசைவச் சுந்தரமூர்த்தியாரை மணக்கும்படி விரும்பினர் என்றும், சிவநேசச் செட்டியார் தம்மகள் பூம்பாவையாரை, மறைக்குல ஞான சம்பந்தர் மணக்கும்படி வைத்திருந்தார் என்றும் பெரியபுராணம் முழங்குகிறது.

அருள்நிலையும், பெருவளனும் கொண்ட கோட்புலியாரும், சிவநேசரும் அடாதன செய்திரார். ஆதலால் அக்கால (பெரியபுராண நாயன்மார் வாழ்க்கைக் கால) வழக்கில் குலங்குறியாது, குணமும் நலனும் குறித்தே, மணம் நிகழ்ந்தது என்பது திண்ணம்.

அதுபற்றியன்றே அப்பரின் ஆசிரிய அக்காளை மகட் கொடை வேண்டிக் கலிப்பகையார் அனுப்பிய அறிஞரிடம் புகழனார் "குணம் பேசிக் குலம் பேசினார்' என அப்பர் வாழ்வு 24 வது செய்யுள் தெளிவிக்கிறது.

மேலும் வணிகக் குலச் சங்கிலியாரையும், உருத்திர கணிகைக் (கோயில் தாசிக்) குலப் பரவையாரையும், ஆதிசைவச் சுந்தரர் மணந்ததும், அவர் ஆக்கிய அடிசில் உண்டதும், பேரரசராகிய சேரமான் பெருமாளும் பரவையார் வீட்டில் உண்டதும் பெரியபுராணம் பேசிய நிகழ்ச்சிகளாம்.

                                                     தொழில்

வில்வாள் கற்பிக்கும் தகுதியை இதிகாசங்கள் மறையவர்க்கு உரித்தாக்கவும், பெரியபுராணம் ஏனாதிநாயனார் வாழ்வு 27ம் செய்யுளில்

தான்ஆள் விருத்திகெடத் தங்கள் குலத் தாயத்தின்
ஆனாதசெய் தொழிலாம் ஆசிரியத் தொன்மைவளம்
மேல்நாளும் தான்குறைந்து மற்றவர்க்கே மேம்படலால்
ஏனாதிநாதர் திறத்து ஏலாஇகல் புரிந்தான்

என்று சான்றோர்க்கு உரித்தாக்குகின்றது.

இவ்வாறு இருப்பவும், சான்றோர் குலத்தை "ஈழக் குலம்' என்பதாகச் சேக்கிழார் பாடினார் என்பதுவும் அறிஞர் ஆராய்ச்சிக்கு உரியதுவே.

ஒருவழி "ஈழ'ச் சொல் யாழ்ப்பாணத்தையோ பொன்னையோ குறிக்கும் என்பார் போலும்.

உணவிலும், மணத்திலும், உடன் உறைவதிலும், வணக்கத்திலும், கோயில் புகுவதிலும், தொழில் முறையிலும், குலப் பெயரிலும் மக்களுள் வேற்றுமை காட்டாத பெரியபுராணத்தைப் போற்றும் சைவர்களே!

உங்கள் குடிப் பிறப்பு,"மழவிடையாற்கு வழி வழி ஆளாய் மணஞ் செய் குடி'ப் பிறப்பு அன்றோ? உங்கள் பெண்மணிகள், சிவக் கடவுளே! உன் அடியவராகிய "அன்னவரே எங்கணவர் ஆவார், அவர் உகந்து சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணி செய்வோம்' என்றும், "எங்கொங்கை நின் அன்பர் அல்லாதார் தோள் சேரற்க, எங்கை உனக்கல்லாது எப்பணியும் செய்யற்க' என்றும் கூறிச் செய்து வந்த சிவ மணிகள் அல்லரோ?

உங்களது ஆண் இளஞ் சிங்கங்கள் உங்கள் பெண்மணிகட்கு ஏற்ற முறையில் அமைந்தவர்கள் அல்லரோ? உங்கள் திருமுறை ஆணை,

மிண்டு மனத்தவர் போமின்கள் மெய்யடியார்கள் விரைந்து வம்மின்
கொண்டும் கொடுத்தும் குடிகுடி ஈசற்கு ஆட்செய்மின்

என்பதன்றோ?

உங்கள் அருள்மணி வாக்கு, "நள்ளேன் நினது அடியாரோடு அல்லால்' என்பதன்றோ? உங்கள் அறிவு நூல் பழகச் சொல்வது, இழிபுறச் சமயக் கொள்கையாகிய மிருதி வழி உழலாமை அன்றோ?

ஆதலால் அண்டம் கடந்த பொருள், அளவில்லதோர் ஆனந்த வெள்ளப் பொருள், பண்டும் இன்றும் என்றும் உள்ள பொருளாகிய சிவக் கடவுளைப் போற்றிச் செந்நெறி ஒழுகிப் பிறரையும் சேரவாரும் ஜெகத்தீரே என்றும் "நற்றாங்கதி அடைவோம் என்னில் கெடுவீர் ஓடி வம்மின்' என்றும் "சாதிகுலம் பிறப்பு' என்னும் தடஞ்சுழியில் தடுமாறாதீர் என்றும் உம்முடன் சேர்த்து உய்வீராக.

ஓம் சிவம்

என்றும் இன்பம் பெருகும் இயல்பினால்
ஒன்று காதலித்து உள்ளமும் ஓங்கிட
மன்றுளார் அடியார் அவர் வான்புகழ்
நின்ற தெங்கும் நிலவி உலகெலாம்

"லோகோபகாரி'

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Translate