ஞாயிறு, 8 மே, 2011

தேவ குருவும் லோக குருவும்

(கடந்த வியாழக்கிழமை அன்று (5ம் தேதி) வீட்டில் இரண்டு அட்டைப் பெட்டிகளில் இருந்த புத்தகங்களில் முக்கியமானவற்றை வெளியில் எடுத்து வைத்து விட்டு, வெளியில் உள்ள படித்த, இப்போதைக்குப் படிக்க இயலாத புத்தகங்களை பெட்டிகளில் வைக்கலாமே என்று திடீர் ஞானோதயம் உதித்து, அப்படியே செய்தேன்.

 ஒரு பெட்டியில் புத்தகங்களுக்கு இடையில் சிக்கிக் கிடந்த இக்கட்டுரை தற்செயலாக என் கையில் சிக்கியது. இது நான் 2009ல் எழுதியது. அப்போது திருநெல்வேலி தினமலரின் பக்திமலருக்காக சில கட்டுரைகள் எழுதி வந்தேன். இக்கட்டுரையும் அதற்காக எழுதப்பட்டதுதான்.

ஆனால், நான் எழுதியிருந்த விஷயத்துக்காகவே இது பிரசுரம் ஆகாமல் தவிர்க்கப்பட்டது. அவ்வாறு ஆகும் என்பதை நானும் எதிர்பார்த்திருந்தேன். பெட்டியில் எங்கோ ஒரு மூலையில் கிடந்த இக்கட்டுரை, குருப் பெயர்ச்சி நாளான இன்று  எனது வலைப்பூவில் பிரசுரம் ஆக வேண்டும் என்பது அந்தக் குருவின் திருவுள்ளம் போலும்.)

---------------------------------------------------------


ஒன்பது கோள்களில் சூரியனிடம் இருந்து ஐந்தாம் இடத்தில் இருப்பவர் வியாழன். இவர் தேவர்களுக்கு குருவாக விளங்குபவர். அசுரர்களுக்கு சுக்ராச்சாரியார் குரு. 


எனினும், ஒன்பது கோள்களில் குரு என்ற சொல் வியாழனையே குறிக்கும். 


ப்ருஹஸ்பதி, பொன்வண்ணன், மந்திரி, ஆங்கீரசன், வாகீசன், கீஷ்பதி, வேதியன், புனிதன் எனப் பல பெயர்கள் இவருக்கு உண்டு.

குரு எனும் சொல் சம்ஸ்க்ருதத்தில் ஆண்பால்ப் பெயராக (பும்லிங்கம்) வரும்போது ஆசிரியன் என்ற பொருளையும், அஃறிணைப் பெயராக (நபும்சக லிங்கம்) வரும் போது கனமானது, பெரியது என்ற பொருளையும் தரும். ஒன்பது கோள்களிலும் வியாழனே பெரியது.

தங்கமயமான, எட்டு வெண்ணிறக் குதிரைகள் பூட்டிய தேரில் வியாழன் வருவார். இந்த எட்டுக் குதிரைகள் பிரகிருதியின் எட்டு அம்சங்களைக் குறிக்கும் என்பர். 



தூய்மை, அறிவுடைமைக்கு இருப்பிடமான இவர் சாந்தமான பார்வை உடையவர். ருத்ராட்சம் அணிந்தவர். வலக்கையில் வரதமுத்திரையும், இடக்கையில் கமண்டலமும், பின் வலக்கையில் அட்ச மாலையும் (ஜெபமாலை), பின் இடக்கையில் யோகதண்டமும் உடையவர். 

யானை வாகனத்தில் வருபவர். கண்சிமிட்டாமல் இருப்பதனால் இவருக்கு "அநிமிஷாசாரியார்' என்ற பெயரும் உண்டு.

புகழ், வாக்குவன்மை, ஞானம் இவற்றை அருளுபவர். ஜோதிட சாஸ்திரங்கள் இவரை "புத்ர காரகன்' என்று அழைக்கின்றன. 

தனுசு,மீன ராசிகளுக்கு அதிபதியான குருவுக்கு கடகம் உச்சவீடு; மகரம் நீசவீடு; சந்திரன், செவ்வாய், சூரியன் ஆகிய மூவரும் இவருக்கு நண்பர்கள். 

புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய மூன்று நட்சத்திரங்களுக்கும் குருதான் நாயகர்.



குரு பற்றிய புராணச் செய்திகள்: 

நான்முகனிடம் இருந்து தோன்றிய மானச புத்திரர்கள் எழுவரில் அங்கிரா என்ற முனிவருக்கு ஒரு மகன் பிறந்தான். 

"ஆங்கீரசன்' என்ற பெயர் உடைய அவன் தன் தந்தையின் அறிவுரைப்படி காசிக்குச் சென்றான். அங்கு கங்கை நதிக் கரையில் ஒரு லிங்கம் அமைத்து 10,000 தேவ வருடங்கள் தவம் செய்தான்.

அவனது தவத்திற்கு மகிழ்ந்த சிவபிரான், அங்குத் தோன்றி அவனுக்கு அருள் செய்தார். 


"நீ வழிபட்ட இவ்விலிங்கம்  இனி வியாழ லிங்கம் எனப் பெயர் பெறட்டும். இந்த வியாழ லிங்கத்தை வழிபட்டவர்கள் தெளிவுடைய அறிவுடையவராய் இந்த உலகத்தில் சிறந்து விளங்குவர்.

"நல்ல குணங்களை உடையவனாய் இருப்பதனாலும், என் கருணையைப் பெற்றதனாலும் நீ இந்திரனுக்கும் தேவர்களுக்கும் குருவாக இருந்து சிறந்து வாழ்வாய்' என்று அருள் புரிந்தார்.


பிறகு அங்கேயே ஆங்கீரசனுக்கு அழகிய மணிமுடியைச் சூட்டி தேவகுருவாக அனுக்கிரகித்து மறைந்தருளினார். 



அந்தர துந்துபி கறங்கி ஆர்த்தெழப்
பைந்தொடி அரம்பையர் ஆடப் பங்கயன்
இந்திரன் முதலினோர் இனிதின் ஏத்திடச்
சுந்தரச் சுடர்மணி மௌலி சூட்டியே 

என்று இந்நிகழ்ச்சியை அதிவீரராம பாண்டியர் இயற்றிய காசிகாண்டம் எனும் நூல் விவரிக்கின்றது.

* அழகில் சிறந்தவனான சந்திரன், ஒரு முறை பிருஹஸ்பதியின் மனைவி தாராவைக் கவர்ந்து சென்று விட்டான். பிருஹஸ்பதி, தேவர்கள் முதலானோர் எவ்வளவோ எடுத்துக் கூறியும், கோபித்தும் சந்திரன் கேட்கவில்லை. 



பிறகு பிருஹஸ்பதி மனமுருகி சிவபிரானை வேண்ட, அவர் சந்திரனோடு போர்புரியத் தயாரானார். 

இச்செய்தியைக் கேள்விப்பட்ட நான்முகன், சந்திரனுக்குப் புத்திமதி கூறி தாராவை விடுவித்து குருவிடம் சேர்ப்பித்தார். சந்திரனுக்கும் தாராவுக்கும் பிறந்தவனே புதன். இச்செய்தி தேவி பாகவதத்தில் காணப்படுகிறது.

* தேவ குருவான பிருஹஸ்பதியை ஒருமுறை இந்திரன் மரியாதை செய்யாமல் புறக்கணித்து விட்டான். கோபம் கொண்ட குரு, யாருக்கும் புலப்படாதபடி  தன்னை மறைத்துக் கொண்டார். தேவர்கள், குரு இல்லாமல் போனதால், துவஷ்டாவின் மகன், விப்ரசித்தை குருவாக்கினர்.

விப்ரசித்து, தேவர்களையும் அசுரர்களையும் சமமாக நடத்தி, இருவருக்கும் நன்மையைச் செய்தார். அசுரர்களுக்கு அவர் நன்மை செய்வதைப் பொறுக்க இயலாத இந்திரன், தனது வஜ்ராயுதத்தால், விப்ரசித்தைக் கொன்றான்.

இதனால் இந்திரனை பிரம்மஹத்தி தோஷம் பீடித்தது. அவனது வஜ்ராயுதம் செயல் இழந்தது. 

இந்நிலையில், விப்ரசித்தின் முடிவைக் கேள்விப்பட்ட துவஷ்டா, ஒரு யாகம் செய்து, விருத்திராசுரனை உருவாக்கி, இந்திரனைக் கொல்ல அவனை ஏவினார். 



இந்திரன் முனிவர்களின் ஆலோசனைப்படி, ததீசி முனிவரின் முதுகெலும்பினால் செய்யப்பட்ட வஜ்ராயுதத்தால் விருத்திராசுரனைக் கொன்றான். பிறகு மதுரையில் சிவபிரானை வழிபட்டு பிரம்மஹத்தி தோஷம் நீங்கப் பெற்றான். 

நடந்ததை அறிந்த பிருஹஸ்பதி, பிறகு வெளிப்பட்டு இந்திரனுக்கு அருள் செய்தார். குரு பார்வையினால் கோடி நன்மை பெற்று வாழ்ந்தான் இந்திரன்.

* தேவாசுர யுத்தத்தில் தேவர்களின் பக்கம் தோல்வியே கிட்டி வந்தது. அசுரர்கள் எத்தனை முறை இறந்தாலும் மீளவும் உயிர் பெற்றுப் போரிட்டார்கள். 

இதற்கு, சுக்ராச்சாரியார் சிவபிரான் அருளால் பெற்ற "மிருதசஞ்சீவினி' என்னும் மந்திரவித்தையே காரணமாக இருந்தது. 


அதனால் தேவர்கள், பிருஹஸ்பதியின் மகனான கச்சனை சுக்ராச்சாரியாரிடம் அந்த வித்தையைக் கற்று வரும்படி அனுப்பினர். 

அவனும் சுக்ராச்சாரியாரிடம் மாணவனாகச் சேர்ந்து பயின்று வந்தான். அவன் வந்ததன் பின்னணியில் தேவர்களின் சூழ்ச்சி இருப்பதை உணர்ந்த அசுரர்கள் கச்சனைக் கொன்று விட்டனர். 

சுக்ராச்சாரியாரின் மகளான தேவயானியின் வேண்டுகோளின்படி, அவர் கச்சனை உயிர்ப்பித்தார். மகனின் இக்கட்டான நிலையை அறிந்த குரு, திருமாலை வேண்ட, அவர் கச்சனை மீட்டு குருவிடம் அளித்தார். 

இச்செய்தி மதுரைக்கு அருகில் உள்ள குருவித் துறை சித்ரரத வல்லப பெருமாள் கோயில் தலபுராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வரலாற்றுச் செய்திகள்: 

 இந்தியத் தத்துவ மரபில், லோகாயதம் என்று ஒரு தத்துவ மரபு உண்டு. "இவ்வுலகத்தில் உண்டு உடுத்து உறங்கி இன்பம் அனுபவித்து சுகமாக வாழ்வதே வாழ்க்கை. தெய்வம், விதி, வினை, மறுபிறப்பு, பாவ புண்ணியங்கள், வழிபாடுகள் இவை எல்லாம் கட்டுக் கதையே. எனினும் எல்லா  உயிர்களுக்கும் நம்மால் இயன்ற நன்மையைச் செய்ய வேண்டும்' என்பதுதான் லோகாயதக் கொள்கை.

இந்தக் கொள்கையை உருவாக்கி உபதேசித்தவர் தேவகுருவான பிருஹஸ்பதியே. வேதங்களிலும் முற்கால உபநிஷதங்களிலும் "ஸ்வபாவ வாதம்' என்று குறிப்பிடப்பட்டுள்ள இயற்கை தொடர்பான தத்துவமே, லோகாயதம் என்று கூறப்படுகிறது.

சூரபத்மனால் பல்வேறு துன்பங்களுக்கு உள்ளான இந்திரன் மனம் வெறுத்து துறவியாகப் போக எண்ணினான். தேவர்களின் நன்மையை மனதில் கொண்ட பிருஹஸ்பதி லோகாயதக் கொள்கையை அவனுக்கு உபதேசித்து அவன் மனதை மாற்றினார் என்றும், அசுரர்களைக் குழப்புவதற்காக இந்தத் தத்துவத்தை அவர்களுக்கு குரு உபதேசித்தார் என்றும் இருவிதமாகப் புராணங்கள் கூறுகின்றன.

லோகாயதக் கொள்கை பற்றி பிருஹஸ்பதி எழுதிய நூல் "பிருஹஸ்பதி சூத்திரம்' எனப்படுகிறது. 

லோகாயதத் தத்துவத்திற்கு பார்ஹஸ்ப்தயம், சார்வாகம், நாத்திகமதம், விதண்டா வாதம் (நாம் நடைமுறையில் பேசும் விதண்டா வாதம் அல்ல இது; தர்க்க ரீதியில் இதற்கு பொருள் வேறு), பூத வாதம் எனப் பல பெயர்கள் உண்டு. 

பௌத்தப் பேரறிஞர் சந்திரகீர்த்தி எழுதிய "பிரஞ்ஞா சாத்திரம்' எனும் நூலில் லோகாயத சாத்திரமும், யோகாசார பௌத்த மதத்தைச் சேர்ந்த ஆரியதேவர் இயற்றிய "சதசாத்திர'த்தில் பிருஹஸ்பதியின் சூத்திரமும் மேற்கோளாகக் காட்டப் பெற்றுள்ளன என அறிஞர்கள் கூறுகின்றனர்.

மணிமேகலையில் சமயக் கணக்கர்தம் திறம் கேட்ட காதையில்

பாங்குறும் உலோகாயதமே பௌத்தம்
சாங்கியம் நையாயிகம் வைசேடிகம்
மீமாஞ்சகம் ஆம் சமய ஆசிரியர்
தாம் பிருகற்பதி சினனே கபிலன்
அக்கபாதன் கணாதன் சைமினி  (78 - 82) 

என்ற அடிகளில் பிருஹஸ்பதியும் குறிக்கப்படுகிறார்.

சைவ சித்தாந்த சாத்திர நூல்களுள் ஒன்றான சிவஞான சித்தியாரின் பரபக்கத்தில் (பிற மதங்களின் கொள்கைகளை மறுக்கும் பகுதி) லோகாயதக் கொள்கை கூறப்பட்டு மறுக்கப்பட்டுள்ளது. 

அதன் உரையாசிரியர், லோகாயதக் கொள்கையை உருவாக்கியவன் இந்திர புரோகிதன் (பிருஹஸ்பதி) என்றும், "ஆன்மாக்கள் போகம் காரணமாக அவன் எழுதிய நூல்' என்றும் குறிப்பிடுகிறார்.

மேலும், "லோகாயதக் கொள்கை உடையவர்களுக்கு நூல் இன்பசாகர மடல்; தெய்வம் காமன்' என்றும்  குறிப்பிட்டுள்ளார். 

இன்பசாகர மடல் என்பது பிருஹஸ்பதி பெயரால் தமிழில் வழங்கப்பட்ட காமநூலாக இருக்கலாம் என்பது ஆய்வாளர்கள் கருத்து. 

தேவி பாகவத்தில், சந்திரனுக்கும் பிருஹஸ்பதிக்கும் நடந்த வாக்குவாதத்தில், சந்திரன் பிருஹஸ்பதியின் காமநூலை ஆதாரமாகக் காட்டித் தன் செயலை நியாயப்படுத்துவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தட்சிணாமூர்த்தியும் பிருஹஸ்பதியும்: 

சிவாலயங்களில் கருவறையின் தென்புறச் சுவரில் (தட்சிண கோஷ்டம்) வீற்றிருப்பவர் தட்சிணாமூர்த்தி. 

ஆலமர் கடவுள், ஆல் கெழு கடவுள், ஆலமர் செல்வர், தென்முகக் கடவுள் என சங்க இலக்கியங்கள் இவரைப் போற்றுகின்றன. 

சூரபத்மனை அழிக்க குமரக் கடவுள் அவதரிக்கும் முன்பு, சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் எனும் நான்கு முனிவர்களுக்கு வேதங்களின் உட்பொருளை அருளிச் செய்ய சிவபிரான் தட்சிணாமூர்த்தியாக கல்லால மரத்தின் அடியில் எழுந்தருளினார். எனவே இவர் லோக குரு, ஆதி குரு, ஜெகத் குரு என்றெல்லாம் போற்றப்படுகிறார்.

சிவாகமங்களில் தட்சிணாமூர்த்தியின் திருவுருவம் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. 


புலித்தோல் ஆசனத்தில் இடது கால் மடித்து வலது காலைத் தொங்க விட்டிருப்பவர்; மூன்று கண்களும் நான்கு கரங்களும் உடையவர்; வலக்கரத்தில் சின்முத்திரையும், இடக்கரத்தில் வரத முத்திரை அல்லது புத்தகமும், பின் வலக்கையில் அட்ச மாலையும், பின் இடக்கையில் அக்னி அல்லது பாம்பையும் தரித்தவராக இருப்பவர்.

ஸ்படிகத்தை ஒத்த வெண்ணிற மேனியர்; ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவர்; ஜடா மகுடம் உடையவர்; மார்பில் நூல் தரித்தவர்; தூய வெள்ளாடை அல்லது புலித்தோல் அணிந்தவர் என உத்தரகாமிக ஆகமம், அஜித ஆகமம், ரௌரவ ஆகமம், ரௌரவ உத்தர ஆகமம் ஆகியவை தெளிவாக எடுத்து இயம்புகின்றன.

 தட்சிணாமூர்த்தி எல்லா தேவர்களுக்கும், மால் அயன் உருத்திரன் முதலிய மூர்த்திகளுக்கும் மேலானவர் என்பதும், அவரே வீடுபேறு அளிப்பவர் என்பதும் வேத ஆகம புராணங்களின் துணிபு. 

பிருஹஸ்பதி தேவர்களில் ஒருவர் என்பதை இங்கு எண்ணிப் பார்க்க வேண்டும்.

வேதங்களில் ஒவ்வொரு கோளுக்கும் சில ரிக்குகள் (மந்திரங்கள்) சொல்லப்படுகின்றன. கோளுக்கு ஒரு ரிக், அதன் அதிதேவதைக்கு ஒரு ரிக், அதன் பிரத்யதி தேவதைக்கு ஒரு ரிக் என மூன்று ரிக்குகள் வரும். 

அவ்விதம், ரிக்வேதம் 2ம் மண்டலம், 23ம் சூக்தம், 15ம் ரிக்கிலும், யஜூர் வேதம் 8ம் பிரபாடகம், 1ம் காண்டம், 22ம் அனுவாகத்திலும் குருவுக்குரிய அதிதேவதையாக இந்திரனும், பிரத்யதி தேவதையாக பிரம்மாவுமே குறிப்பிடப்படுகின்றனர். தட்சிணாமூர்த்தி குறிப்பிடப்படவில்லை.

அதனால், வியாழனாகிய குருவுக்கு அணிவிக்க வேண்டிய மஞ்சளாடை, கொண்டைக் கடலை மாலை போன்றவற்றை தட்சிணாமூர்த்திக்கு அணிவித்து வழிபடுவது என்பது நமது அறியாமையைத் தான் குறிக்கும்.

"ஒருவன் என்னும் ஒருவன்'; "முதல்வன்'; "முத்தி தர வல்லவன்'; "மேலார்க்கும் மேலார்க்கும் மேலான்' என்று திருமுறைகளும், "ஏகம் ஏவ அத்வீதியம் பிரஹ்ம'; "சிவம் சாந்தம் சதுர்த்தம் அத்வதைம்' என்று வேதங்களும் போற்றும் சிவபிரானை, 


கோள்களில் ஒருவரும், குறிப்பிட்ட அதிகார வரம்புடையவரும், சிவபக்தரும், உயிர்க் குழுவைச் சேர்ந்தவரும் ஆன பிருஹஸ்பதியாக நினைத்து மயங்கி இருவரையும் சமமாக பாவித்து வழிபடுவது மிகப் பெரும் பிழையே.

குரு என்ற சொல் மாத்திரத்தாலேயே இருவரும் ஒருவராகவோ அல்லது சமமானவராகவோ ஆகிவிட மாட்டார்கள். 

தேவ குருவான பிருஹஸ்பதி எந்தெந்தத் தலங்களில் சிவபிரானை வழிபட்டுள்ளார் என்பதும், அவ்விதம் வழிபட்டு அவர் என்னென்ன நன்மைகள் அடைந்தார் என்பதும் புராணங்களிலும் தேவாரம் முதலிய அருள்நூல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளன.

இன்று நாடு முழுவதும் குருப் பெயர்ச்சி என்ற பெயரிலும், குருவுக்குப் பரிகாரம் என்ற பெயரிலும், தட்சிணாமூர்த்தி திருமுன்பு பரிகார யாகங்கள் செய்வதும், அவருக்கு மலை மலையாக மஞ்சளாடை, கொண்டைக் கடலை அணிவிப்பதும் பெருமளவில் நடக்கின்றன.

விவரம் அறிந்த, சாத்திரங்களை ஊன்றிப் பயின்ற சிவாச்சார்யப் பெருமக்களும், ஜோதிடர்களும், சமயச் சான்றோர்களும் இது போன்ற குழப்பகரமான காரியங்களைப் பக்தி என்ற பெயரில் ஊக்குவிப்பதில்லை.

மாறாக, அரைகுறை வேதாந்திகளும், சித்தாந்திகளும், ஜோதிடர்களும், சமயத்தின் உண்மை நோக்கம் அறியாதவர்களுமே நமது சமயத்தைக் குழப்பக் குட்டையாக்கி அதில் பயன் அடைகின்றனர்.

சைவம், வைணவம் இருபிரிவுகளிலும் இன்று இதுபோல் பல குழப்பமான சடங்குகள் மலிந்து கிடக்கின்றன.


 இருபிரிவைச் சேர்ந்த சாத்திர வல்லுனர்கள், ஒரு தெய்வ வழிபாட்டை வலியுறுத்தி தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும்.

இல்லை எனில், சிவாலயங்கள் எல்லாம் பிற்காலத்தில் நவக்கிரகங்களுக்கேயான கோயில்கள் ஆகிவிடக் கூடும். இப்போதே அப்படித் தான் இருக்கின்றன.


 வைணவத் தலங்களும் சமீபகாலமாக இதுபோன்ற கதிக்கு ஆளாகி வருவது வருந்தத் தக்கதே.

ஊடகங்களான பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் இதுபோன்ற சமயம் அல்லது மதம் சார்ந்த விஷயங்களில் கற்றறிந்த சமயச் சான்றோர்களிடம் இருந்து, மரபுக்குப் புறம்பில்லாத ஞானிகள் கூறிய கருத்துக்களைப் பெற்று வெளியிட வேண்டும். 

இல்லை என்றால், ஒட்டு மொத்த இந்து மதத்தில் நாளொரு தெய்வமும் பொழுதொரு சடங்குமாக முளைத்துக் கொண்டே தான் இருக்கும்.

"ஏகம் ஏவ அத்விதீயம் ப்ரஹ்ம' என்ற சாந்தோக்ய உபநிஷதத்தின் பொருளை நாம் உணர முடியாமல் போய்விடும். 

ஸ்படிக  ரஜத வர்ணம் மௌக்திகிம் அக்ஷமாலாம்
அமிர்த கலச வித்யாம் ஞான முத்ராம் கராக்ரே
தததமுரக கட்சியம் சந்த்ரஸூடம் த்ரிநேத்ரம்
விதுருத விவித பூஷம் தக்ஷிணாமூர்த்தி மீடே 
                    - தட்சிணாமூர்த்தி உபநிஷத். 

தேவ குரு வியாழன் பற்றிய விவரங்கள் இவை: 

தந்தை - அங்கீரச முனிவர்; தாய் - ஸ்ரத்தா தேவி; சகோதரன் - உதத்தியன்; சகோதரி -  யோகசித்தி; மனைவி - தாரா; மகன்கள் - பரத்வாஜர், கச்சன், எமகண்டன்; சீடர்கள் - தேவர்கள்; அதிதேவதை - இந்திரன்; பிரத்யதி தேவதை - பிரம்மா; வாகனம் - யானை.
பஞ்சபூதத் தன்மை - ஆகாசம்; அறுசுவைகளில் - இனிப்பு; ஏழு கிழமைகளில் - வியாழன்; திசை - வடகிழக்கு (ஈசான்யம்).

தானியம் - கொண்டைக் கடலை; பூ - முல்லை; ராகம் - அடானா; குணம் - பூரண சுப கிரகம்; சமித்து - அரசு; ஆடையின் நிறம் - மஞ்சள்; மேனி நிறம் - பொன்வண்ணம்; மரம் - சந்தனம்; மூலிகை - பொன் ஆவரை; உலோகம் - தங்கம்.

குருதசை - 16 ஆண்டுகள்; மொழி - சம்ஸ்க்ருதம்; ஜாதி - அந்தணர்; ரத்தினம் - புஷ்பராகம்; உடைமை - புத்ர காரகன்; பலன் - 2,7 ல் சுப பலன்.

உருவம் - நீள் சதுரம்; ஆட்சி வீடு - மீனம்; உச்சவீடு - கடகம்; நீச வீடு - மகரம்; மூலத் திரிகோண வீடு - தனுசு.

2 கருத்துகள்:

  1. முற்றிலும் இது உண்மை.நான் இதை ஆதரிக்கிறேன்.ஆனால் எனது ஆலயத்தில் இதை கடைபிடிக்க முடியவில்லை என்னும்போது வருத்தமே

    பதிலளிநீக்கு

Translate