பெரியாழ்வார் பாடிய, செங்கீரைப் பருவத்தின் சந்தமே, குழந்தை ஆடுவது போன்ற சந்தம் தான்.
பெருமாளின் துாக்கம், நம்போலிகளின் துாக்கம் அல்ல; அது யோக துாக்கம் என்பதை, ‘பைய யோகு துயில் கொண்ட பரம்பரன்’ என்று விளக்கி விடுகிறார்.
செங்கமலக் கழலிற் சிற்றிதழ் போல் விரலிற்
சேர் திகழ் ஆழிகளும் கிண்கிணியும் அரையிற்
தங்கிய பொன்வடமும் தாள நன் மாதுளையின்
பூவொடு பொன்மணியும் மோதிரமும் கிறியும்
மங்கல ஐம்படையும் தோள்வளையும் குழையும்
மகரமும் வாளிகளும் சுட்டியும் ஒத்து இலக
எங்கள் குடிக்கு அரசே ஆடுக செங்கீரை
ஏழ் உலகும் உடையாய் ஆடுக ஆடுகவே
இந்த பாடல், ஆடும் கண்ணனை நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்தி விடுகிறது.
‘சலார் பிலார்’ என்ற ஆரவார சொல் மூலம், கண்ணனின் தளர்நடையை வர்ணிக்கிறார் ஆழ்வார். ஒரு யானை நடப்பதையும், கண்ணன் நடப்பதையும் ஒப்பிட்டு, ‘தொடர் சங்கிலி கை’ பாடலில் காட்டுகிறார்.
கன்னற் குடம் திறந்தால் ஒத்து ஊறிக்
கணகண சிரித்து உவந்து
முன் வந்து நின்று முத்தம் தரும் என்
முகில்வண்ணன் திருமார்வன்
தன்னைப் பெற்றேற்குத் தன்வாய் அமுதம்
தந்து என்னைத் தளிர்ப்பிக்கின்றான்
தன் எற்று மாற்றலர் தலைகள் மீதே
தளர்நடை நடவானோ
முன் நல் ஓர் வெள்ளிப் பெருமலைக் குட்டன்
மொடுமொடு விரைந்து ஓடப்
பின்னைத் தொடர்ந்தது ஓர் கருமலைக் குட்டன்
பெயர்ந்து அடியிடுவது போல்
பன்னி உலகம் பரவி ஓவாப் புகழ்ப்
பலதேவன் என்னும்
தன் நம்பி ஒடப் பின் கூடச் செல்வான்
தளர்நடை நடவானோ
ஒரு காலிற் சங்கு ஒரு காலிற் சக்கரம்
உள்ளடி பொறித்து அமைந்த
இரு காலுங் கொண்டு அங்கு அங்கு எழுதினாற்போல்
இலச்சினை பட நடந்து
பெருகாநின்ற இன்ப-வெள்ளத்தின்மேல்
பின்னையும் பெய்து பெய்து
தரு கார்க் கடல்வண்ணன் காமர் தாதை
தளர்நடை நடவானோ
பாடல்கள், படிக்க படிக்க உவகை தான்.
பிள்ளைத் தமிழில் இடம் பெறாத, புது கற்பனையான புறம் புல்கல் பாசுரத்தில்,
பொத்த உரலைக் கவிழ்த்து அதன்மேல் ஏறி
தித்தித்த பாலும் தடாவினில் வெண்ணெயும்
மெத்தத் திருவயிறு ஆர விழுங்கிய
அத்தன் வந்து என்னைப் புறம்புல்குவான்
ஆழியான் என்னைப் புறம்புல்குவான்
என்ற பாடலுக்குத் தான் இணை ஏது?
அம்மம் உண்ண அழைத்தல் பாசுரத்திற்கு ஈடு இணை கிடையாது. ஒரு தாயின் உணர்வுகளை அந்த பாசுரத்தில் பெரியாழ்வார், அதி அற்புதமாக தந்திருக்கிறார்.
மின் அனைய நுண் இடையார்
விரி குழல்மேல் நுழைந்த வண்டு
இன் இசைக்கும் வில்லிபுத்தூர்
இனிது அமர்ந்தாய் உன்னைக் கண்டார்
என்ன நோன்பு நோற்றாள் கொலோ
இவனைப் பெற்ற வயிறு உடையாள்
என்னும் வார்த்தை எய்துவித்த
இருடிகேசா முலை உணாயே
இரு மலை போல் எதிர்ந்த மல்லர்
இருவர் அங்கம் எரிசெய்தாய் உன்
திரு மலிந்து திகழு மார்வு
தேக்க வந்து என் அல்குல் ஏறி
ஒரு முலையை வாய்மடுத்து
ஒரு முலையை நெருடிக்கொண்டு
இரு முலையும் முறை முறையாய்
ஏங்கி ஏங்கி இருந்து உணாயே
இந்த இரு பாடல்கள் போதும்.
ஒரு தாய், தன் பிள்ளை என்னதான் சேட்டைகள் செய்தாலும், ஊரார் மத்தியில் அவனை விட்டுக் கொடாமல், ஊர் பிள்ளைகள் மீது குற்றம் சுமத்துவது அன்று தொட்டே இருந்து வருகிறது.
அதனை,
பல்லாயிரவர் இவ் ஊரில்
பிள்ளைகள் தீமைகள் செய்வார்
எல்லாம் உன்மேல் அன்றிப் போகாது
எம்பிரான் நீ இங்கே வாராய்
நல்லார்கள் வெள்ளறை நின்றாய்
ஞானச் சுடரே உன்மேனி
சொல் ஆர வாழ்த்தி நின்று ஏத்திச்
சொப்படக் காப்பிட வாராய்
என்ற பாடலில், காட்டுகிறார் ஆழ்வார்.
பாலைக் கறந்து அடுப்பு ஏற வைத்துப்
பல்வளையாள் என்மகள் இருப்ப
மேலை அகத்தே நெருப்பு வேண்டிச்
சென்று இறைப்பொழுது அங்கே பேசி நின்றேன்
சாளக்கிராமம் உடைய நம்பி
சாய்த்துப் பருகிட்டுப் போந்து நின்றான்
ஆலைக் கரும்பின் மொழி அனைய
அசோதை நங்காய் உன்மகனைக் கூவாய்
இதில் ஒரு நாடகமே நடத்தி காட்டுகிறார்.
உள்ளங்கவர் பெரியாழ்வார் - 2
உள்ளங்கவர் பெரியாழ்வார் - 1
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக