வியாழன், 16 ஏப்ரல், 2009

பன்னூல் திரட்டு தந்த பாண்டித்துரைத் தேவர் – 2


ன்னூல் திரட்டு ‘கடவுள் வாழ்த்து’ முதலாக ‘கற்பனை’ ஈறாக 54 அதிகாரங்கள் உடையது. இவ்வதிகாரங்களில் பெரும்பாலன திருக்குறள், நாலடியார் போன்ற நீதிநூல்களில் உள்ளன போல வழக்கமானவையே. கடவுள் வாழ்த்து, பெரியோர் இயல்பு, கல்வி, மானம், அறம், இல்லறம் போன்ற வழக்கமான அதிகாரங்களுக்கிடையே பெற்றோர்ப் பேணல், மனம், அடைந்தோர்ப் புரத்தல், காமக்கேடு, செல்வச்செருக்கு, அருமை, கற்பனை ஆகிய புதிய தலைப்பிலான அதிகாரங்களையும் தேவர் வைத்துள்ளார்.


தேவர் தமது காலத்தில் கிடைத்த நூல்களைப் பயன்படுத்தியுள்ளார். அவர் காலத்தில் சங்க இலக்கியங்களுள் புறநானூறு தவிர பிற அச்சாகாமையால் அவற்றிலிருந்து பாடல்களை நாம் காண இயலாது. எனவே பெரும்பான்மையும் பதினெண் கீழ்க் கணக்கு நூல்களிலிருந்தும் தலபுராணங்களிலிருந்தும் அரிய பாடல்களைத் தொகுத்துள்ளார்.

புராணங்களில் கந்தபுராணம், விநாயக புராணம், சேது புராணம்,
காஞ்சிப் புராணம், கூர்ம புராணம், காசிகண்டம், காசி ரகசியம், திருக்குற்றாலப் புராணம், திருப்பரங்கிரிப் புராணம், பேரூர்ப் புராணம், திருக்கூவப் புராணம், சீகாளத்திப் புராணம், பிரமோத்தர காண்டம், உபதேச காண்டம், இலிங்க புராணம், தணிகைப் புராணம், செவ்வந்திப் புராணம், திருவிளையாடற் புராணம், திருக்குடந்தைப் புராணம், கருவூர்ப் புராணம், திருப்பெருந்துறைப் புராணம், திருவாப்பனூர்ப் புராணம், பாகவதம், மாயூரப் புராணம், திருக்கழுக்குன்ற புராணம், உறையூர்ப் புராணம், திருப்பூவணப் புராணம் ஆகியவற்றைப் பயன்படுத்தியுள்ளார்.

கம்ப ராமாயணம், பெருந்தேவனார் பாரதம், வில்லிபாரதம், நளவெண்பா, நைடதம் ஆகிய இதிகாசங்களிலிருந்து தொகுத்துள்ளார்.

சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி, மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சூளாமணி, யசோதர காவியம் ஆகிய காப்பியங்களிலிருந்தும்,

மேருமந்தர புராணம், சாந்தி புராணம் ஆகிய சமண புராணங்களிலிருந்தும் பாடல்களை எடுத்துள்ளார்.

பதினெண் கீழ்க் கணக்கு நூல்களுள் பெரும்பாலானவற்றிலிருந்து செய்யுட்களைத் தொகுத்துள்ளார்.

தத்துவ நூல்களில் சூதசங்கிதை, பிரபோத சந்திரோதயம், ஞானவாசிட்டம், ஒழிவிலொடுக்கம், பகவற்கீதை, சிவதருமோத்தரம், ஞானாமிர்தம், பதிபசுபாச விளக்கம், சிவஞான தீபம், வைராக்கிய சதகம் ஆகிய நூல்களில் இருந்து எடுத்தாண்டுள்ளார்.

திருமுறைகளில் அப்பர் தேவாரம், திருவாசகம், திருமந்திரம், பெரியபுராணம் ஆகியவற்றிலிருந்து தொகுத்துள்ளார்.

துறையூர் சிவப்பிரகாச சுவாமிகள் அருளிச் செய்த பெருந்திரட்டு, குறுந்திரட்டு தொகுப்புகளிலிருந்தும் பிரபு லிங்க லீலையிலிருந்தும் பல பாடல்களைப் பயன்படுத்தியுள்ளார்.

இது போக, அரிச்சந்திர புராணம், சிதம்பர மும்மணிக்கோவை, நாரத சரிதை, பெரும் பொருள் விளக்கம், புறப்பொருள் வெண்பா மாலை, தாயுமானவர் பாடல்கள், ஸ்ரீ சிவஞான சுவாமிகளின் சோமேசர் முதுமொழி வெண்பா, அமுதாம்பிகை பிள்ளைத் தமிழ், குளத்தூர்ப் பதிற்றுப் பத்தந்தாதி ஆகியவற்றின் செய்யுட்களையும் தொகுத்துத் தந்துள்ளார்.

தனிப்பாடல்களிலிருந்தும் பல பாடல்களை இந்நூலில் தந்துள்ளார்.

தனி நபர் ஒருவர் இத்துணை நூல்களிலும் பயிற்சி பெற்றிருத்தல் என்பது இன்று நம்மால் நினைத்துக்கூட பார்க்க இயலாத அருஞ்செயலாகும்.

2009 ஜனவரி, சென்னையில் நடந்த புத்தகக் கண்காட்சியில் சில நூல்களை வாங்கினேன். காவ்யா பதிப்பகக் கடைக்குச் சென்றபோது ‘பாண்டித்துரைத் தேவரின் சங்கத் தமிழ்க் களஞ்சியம்’ எனும் தலைப்பில் ஒரு நூலைக் கண்டேன். புறத்தோற்றத்தில் அந்நூல் மிகச் சிறப்பாக காட்சி தந்து கொண்டிருந்தது. நூலின் பின்புறம் ‘இதில் தேவரின் சங்கத் தமிழ்த் தொண்டையும் பன்னூல் திரட்டையும் காணலாம்’ என்ற குறிப்பு இருந்தது. யோசிக்காமல் வாங்கிவிட்டேன்.

நான்காம் தமிழ்ச் சங்கம் கண்ட வள்ளல் தொகுத்த ’பன்னூல் திரட்டு’ எனும் அரிய நூலை 78 வருடங்களுக்குப் பிறகு மீளவும் அச்சேற்றி உலாவரச் செய்த காவ்யா பதிப்பகத்திற்குத் தமிழ்கூறு நல்லுலகம் நன்றி கூறக் கடமைப் பட்டிருக்கிறது.

அதே சமயத்தில் இத்தகைய அரிய நூலை வெளிக்கொணரும்போது ஏனோதானோவென்று வெளியிடுவது வருந்தத் தக்கது.

தேவரின் வரலாற்றில் ஒழுங்கின்மை, பக்கந்தோறும் பிழைகள், சொன்னவற்றையே திரும்பச் சொல்லல், பாராக்களில் பல வரிகள் விடுபட்டிருப்பது, பன்னூல் திரட்டில் பயன்படுத்தப்பட்ட நூல்களின் அகராதி இன்மை, செய்யுள் முதற்குறிப்பு அகராதி இன்மை எனப் பல குறைபாடுகள் இந்நூல் முழுதும் காணப்படுகின்றன.

இவர்கள் அச்சிட்ட பன்னூல் திரட்டு, 3 ஆம் பதிப்பினை அனுசரித்து வெளிவந்துள்ளது. காவ்யாவின் பன்னூல் திரட்டில் இன்பச் சிறப்பு அதிகாரம் இல்லை. இந்தத் தகவலும் பன்னூல் திரட்டு பற்றிய கட்டுரையில் கொடுக்கப்படவில்லை.

ஞானவாசிட்டம் ஞானவாசீட்டமாகவும், சிறுபஞ்ச மூலம் சிறுபஞ்ச லமாகவும், சோமேசர் முதுமொழி வெண்பா சோமேசர் துமொழி வெண்பாவாகவும், மேருமந்தர புராணம் மேருமந்தா புராணமாகவும், யசோதர காவியம் யசோதா காவியமாகவும், சூத சங்கிதை சூத சங்கீதையாகவும், ஞானாமிர்தம் ஞானாமீர்தமாகவும், தத்துவரத்நாவளி தத்துவாத்நாவளியாகவும் அச்சாகியுள்ளன. இவை வாசிப்பவருக்கு எரிச்சலைத் தரும்.

இன்றைய காலத்தில் பதிப்புலகில் பல சிக்கல்கள் உண்டுதான். அதற்காக ஒரு நூலை – அதுவும் தமிழுக்காகவே உழைத்தவரின் நூலை – அச்சுப் பிழையும் ஒழுங்கின்மையும் மலிந்ததாக வெளியிடுவது எவ்வகையில் நியாயம்?

பன்னூல் திரட்டுக்குத் தேவர் இரண்டு முகவுரைகள் எழுதியுள்ளார். இவ்விரண்டையும் கலந்து முதற்பதிப்பு முகவுரையாக காவ்யா தந்துள்ளது. தமிழ் ஆராய்ச்சியாளர்களுக்கு இந்நூல் எவ்வகையில் பயன்படும்?

அச்சிடுதல் ஆரம்ப கட்டத்திலிருந்த போதே ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர், சி.வை. தாமோதரம் பிள்ளை, உ.வே.சா. போன்றோர் பிழைகளற்ற உயர்தரப் பதிப்புக்களை நமக்களித்துள்ளனர். அதனால்தான் இன்று வரையிலும் அவர்களது பதிப்புகள் ஆராய்ச்சிகளுக்குப் பயன்படுத்தப்படும் உன்னத நிலையில் இருக்கின்றன.

தொழில்நுட்ப முன்னேற்றம் ஏற்பட்ட பின்பு அச்சிடுதலில் அவசரம்தான் கூடியிருக்கின்றதே தவிர அக்கறை காணாமல் போய்விட்டது.

மொத்தத்தில் காவ்யாவின் பதிப்பு பற்றி அதிகமாகக் கூற ஒன்றுமில்லை. அப்பதிப்பில் பக்கம் 72ல் உள்ளபடி,

“தேவர் பிழைகளற்ற தமிழையே பெரிதும் விரும்பினார். பிழை மலிந்த நூற்பதிப்புக்களைப் பெரிதும் வெறுத்தார். தமிழ்ச் சங்க வெளியீடுகள் செம்பதிப்புகளாக வெளிவந்தன”

எனும் வார்த்தைகளை மனத்தில் இருத்தினால் நன்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Translate