வெள்ளி, 1 ஏப்ரல், 2011

கார்த்திகை தீபமும் கணம்புல்ல நாயனாரும்

ளியைத் தெய்வமாக வழிபடுவது இவ்வுலகம் முழுவதும் இருந்த - இருக்கின்ற வழக்கம். கண்முன்னே தெரிகின்ற ஒளியே கணந்தோறும் தன் வாழ்வுக்கு ஆதாரம் என்பதை உணர்ந்த மனிதகுலம் அதைத் தொழுவதில் வியப்பில்லை.


திராவிட, ஆரிய, எகிப்திய, மய, பகனிய, ரோம, கிரேக்கப் பண்பாடுகளில் ஒளி வழிபாட்டுக்கு முக்கியத்துவம் உண்டு.

தமிழகத்தில் சிவபெருமானை ஒளிவடிவத்தில் - சோதியனாக வழிபடுவது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேல் நிலவி வருகிறது.

ஒளியின் நிறம் சிவப்பு; அதனடியாகப் பிறந்த "சிவம்' எனும் பொருள் நிறைந்த -  செம்மையான - சொல்லை இறைவனுக்கு இட்டுப் போற்றினர் முன்னோர்.
"சிவன் எனும் நாமம் தனக்கே உடைய செம்மேனி எம்மான்' என சிலாகிப்பார் அப்பரடிகள்.

இறைவன் ஒளிமயமானவன் என்பதை நினைவில் இருத்திக் கொள்ளத்தான், திருக்கார்த்திகைத் திருவிழா நடக்கிறது.

சங்ககாலம் தொட்டு தமிழகத்தில் சிறப்புற நடந்து வரும் விழாக்களில் "கார்த்திகை விளக்கீட்டு'த் திருவிழாவும் ஒன்று. இதனைத் திருஞானசம்பந்த நாயனார்,

"தொல் கார்த்திகை நாள்....தையலார் கொண்டாடும் விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்' என்று திருமயிலைத் திருப்பதிகத்தில் அருளினார்.



11 பாடல்களில் பல்வேறு விழாக்களைச் சுட்டும் நாயனார், கார்த்திகை நாளுக்கு மட்டும் "தொன்மையான' எனப் பொருள்படும் "தொல்' என்ற அடைமொழியைச் சேர்த்து சிறப்பித்துள்ளார். இதிலிருந்து திருக்கார்த்திகை விழாவின் காலப் பழமையை நாம் உணரலாம்.

ளிதரும் சுடரைத் தாங்கும் பொருளுக்கு விளக்கு என்று பெயர். விளக்கால் தாங்கப்பட்டு, இருளையும் விளக்கி ஓட்டுவதால் சுடருக்கும் விளக்கு என்ற சொல் ஆகுபெயராக வந்தது.

எப்படி ஒளிவழிபாடு உலகம் முழுவதும் பரவியிருந்ததோ, அப்படியே அந்த ஒளியை அறிவாக - ஞானமாக - தெளிவாக - உயர் ஆன்ம அறிவின் வடிவாகக் கருதியது மனிதகுலம்.

மனிதன் மனிதனாக வாழ சில வழிமுறைகளைச் சடங்குகளில் பொதிந்து வைத்தனர் நம் முன்னோர்.

அறிவுதான் மனிதனது துன்பத்தை எந்நிலையிலும் எவ்விடத்திலும் நீக்கும் பெரிய ஆயுதம்.

வள்ளுவரும் "அறிவு அற்றம் காக்கும் கருவி' என்றார். அந்த அறிவு தெளிவானால் மனித வாழ்க்கையின் மர்ம முடிச்சு அவிழும்.

ஆக, தெளிந்த அறிவு - ஞானம் - நமக்கு இருக்குமானால் உறுதியான மனம் வாய்க்கும். வாய்த்தால் இவ்வுலகில் நம்மைத் தாக்க வரும் எந்தப் பிரச்னையும் பொடிப்பொடியாகி விடும்.

எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை
அதிர வருவதோர் நோய்

என்பார் வள்ளுவர்.

பிரச்சினைகளை எப்படி எதிர்கொள்வது என்பது நமக்கு விளங்கி விடும். "அறிவுடையார் ஆவது அறிவார்'.

நமது குறிக்கோள் தெளிந்த அறிவு. அது கிடைக்க நம் முன்னோர் ஏற்பாடு செய்த சில வழிமுறைகளில் ஒன்றுதான் ஒளிவழிபாடு.

தினந்தோறும் வீட்டில் விளக்கு ஏற்றி வழிபடுவதன் உட்பொருள் இதுதான்.

"விளக்கினை ஏற்றி வெளியினை அறிமின்
விளக்கினின் முன்னே வேதனை மாறும்'


என்பது தவராஜ சிங்கம் திருமூல நாயனார் திருவாக்கு.

ப்படி, விளக்கினை ஏற்றிப் பிறவி வேதனையை அறுத்தவர்தான் கணம்புல்ல நாயனார்.

வடவெள்ளாற்றின் தென்கரையில் இருந்தது இருக்குவேளூர் என்ற ஊர். அவ்வூரில் ஒரு சிவனடியார் இருந்தார். பெரிய பணக்காரரான அவர் குணத்திலும் சிறந்து விளங்கினார்.

சிவபெருமானே உண்மையான பொருள் என்று உணர்ந்து சிவன் கோயில்களில் விளக்குகள் ஏற்றுவதையே தமது தலையாயக் கடமையாக செய்து வந்தார்.

நாளடைவில் வறுமையின் வாய்ப்பட்ட அவர், தம்மூரை விட்டு நீங்கி தில்லை எனப்படும் சிதம்பரம் சென்று, அங்குள்ள திருப்புலீச்சரம் கோயிலுக்கு அருகில் குடிபுகுந்தார். தமது வீட்டுப் பொருட்களை எல்லாம் விற்றும் கூட விளக்கேற்றுவதைத் தவறாமல் செய்து வந்தார்.

இனி விற்பதற்கு ஒன்றுமில்லை என்ற நிலையும் வந்தது, "ஏற்பது இகழ்ச்சி' என்பதால், வீடுகளில் கூரை போடுவதற்கு உதவக் கூடிய கணம்புல் என்ற புல்லை அறுத்து விற்றார். அதில் வந்த பணத்தில் விளக்குகள் ஏற்றி இறைவனை வழிபட்டார்.

ஒரு நாள் அவரது கையில் இருந்த கணம்புல் எதுவும் விற்பனையாகவில்லை. அதனால், அந்தப் புற்களைக் கொண்டே விளக்குகள் ஏற்றினார். எனினும் அவை கொஞ்ச நேரத்துக்குக் கூட எரியவில்லை.


சற்றும் யோசிக்காமல், விளக்குகள் அணைந்து விடக் கூடாதே என்ற பதற்றத்தால், இறைவன் மீது கொண்ட பேரன்பினால், தனது தலைமுடியை அவிழ்த்து விட்டு எரிக்கலானார்.

கணம்புல் அறுத்து விளக்கெரித்தும் இறுதியில் தன் தலைமுடியையே எரிக்கத் துணிந்த கணம்புல்ல நாயனாரின் அன்புக்குக் கட்டுப்பட்ட இறைவன், அவருக்குக் காட்சியளித்து அருள் புரிந்தான்.

பெரும் செல்வரான கணம்புல்லர், தலைமுடியை எரித்தது சாஸ்திரப்படி குற்றம்தான். கோயிலில் நம் தலையை அவிழ்த்து முடிப்பதே சாஸ்திரப்படி குற்றம் என்றால், தலைமுடியை எரிப்பது குற்றம்தானே!

ஊர்க்குத் தலைவராக விளங்கிய கணம்புல்லர்க்கு, செல்வம் ஈட்டி அதைப் பிறருக்கு அளித்து மகிழ்ந்தவருக்கு, தலைமுடியை எரிப்பது குற்றம் என்பது தெரியாதா?

வறுமை வந்தாலும் அந்தப் பணியை செய்துதான் ஆக வேண்டுமா? வீட்டுப் பொருட்களை விற்றும் கூட விளக்கெரிக்கத்தான் வேண்டுமா?

இந்தக் கேள்விகளில் நியாயம் இருக்கத்தான் செய்கிறது.

முன்னமே சொன்னபடி அறிவிலே தெளிவும், அதனால் ஆவது அறியும் வல்லமையும், அதனால் அதனால் எத்துன்பம் வந்தாலும் எதிர்கொள்ளும் திறனும் உடையவர்களாகத் தான் 63 நாயன்மார்களும் விளங்குகின்றனர்.

நமக்கு சௌகரியப் பட்டபோது, பிறருக்கு உதவி செய்வதுதான் நம் வழக்கம். தனக்கு எந்தத் துன்பம் வந்தாலும் கடமையை விடாது செய்தலே நாயன்மார் பண்பு.

கடமையைக் கூட சாக்கு போக்கு சொல்லிக் கழிப்பது நம் நிலை. கடமைக்கு அப்பால், ஏற்றுக் கொண்ட செயலை இறுதி வரை செய்தே தீருவேன் என்பதுதான் நாயன்மாரின் உயர்நிலை.

இன்று நம்மிடம் காசில்லை என்றால், வழக்கமாக தட்சிணாமூர்த்தி சந்நிதியில் போடும் நெய்விளக்கை நிறுத்தி விடுவோம். அடுத்த வாரம் சேர்த்துப் போட்டுக் கொள்ளலாம்; அதற்கு ஒரு மன்னிப்பும் கேட்டுக் கொள்ளலாம் என்பது நம் குணம்.

இறைவனே வந்து தடுத்தாலும் சொன்ன சொல் தவறாது, மேற்கொண்ட திருப்பணியை முடிப்பதில் இன்பம் காண்பதுதான் நாயன்மார்களின் மனம்.

மொத்தத்தில் விவேகானந்தர் மொழியில் சொன்னால், "உலக விஷயங்களுக்காக இறைவனைப் பயன்படுத்திக் கொள்பவர்கள் நாம்; இறைவனை அடைவதற்காக உலகைப் பயன்படுத்துபவர்கள் ஞானிகள்'.

நமக்குத் தேவை "அறிவிலே தெளிவு; நெஞ்சிலே உறுதி; அகத்திலே அன்பினோர் வெள்ளம்'. இவற்றைப் பெறுவதற்கு ஒளிவடிவான சிவமூர்த்தியையும், விளக்கையேற்றி வெளியை அறிந்த கணம்புல்லரையும் வழிபடுவோம்.

"விளக்கிட்டார் பேறு சொல்லின் மெய்ந்நெறி ஞானமாகும்'.

(இக்கட்டுரை, தெய்வீகக் கலாச்சாரம் மாத இதழில் 2009, டிசம்பரில் வெளிவந்தது)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Translate