சனி, 30 ஏப்ரல், 2011

பெரியபுராணமும் சாதியும் - 1 - காருடை சு.சூரியமூர்த்தி பிள்ளை

பண்டிதர் பேருரை  கட்டுரையின் இறுதிப் பகுதிக்காக, தரமணி ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்திற்குச் சென்று, பழைய "சித்தாந்தம்' இதழ்களைப் பார்த்துக் கொண்டிருந்த போது கிடைத்த கட்டுரை இது.


1931, ஜூலை மாத வெளியீட்டில் இக்கட்டுரை இடம் பெற்றுள்ளது. இதனை இங்குப் பதிவிடுவதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன.

ஒன்று: கட்டுரை எழுதியவர், திருநெல்வேலி, ராஜவல்லிபுரத்தைச் சேர்ந்தவர். அவ்வூரில் அக்காலகட்டத்தில், சைவத் திறம் பொருந்திய கார்காத்த வேளாளர்கள் பலர் வாழ்ந்து வந்தனர். (இன்றும் சிலர் உள்ளனர்).

ராஜவல்லிபுரத்தில் இருந்து நடந்தே செல்லக் கூடிய தொலைவில், தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள செப்பறை அழகியகூத்தர் திருக்கோயிலில், பிரமசூத்திரத்திற்கு சிவாத்வைத பாஷ்யம் செய்த ஸ்ரீநீலகண்ட சிவாசாரிய சுவாமிகளின் கல்திருமேனி உள்ளது.

இத்திருவுருவச் சிலையை அக்கோயிலில் பிரதிஷ்டை செய்வதா கூடாதா என்பது பற்றி அக்காலகட்டத்தில் ஒரு தத்துவ விவாதமே நடந்துள்ளது.

அவ்விவாதத்தை விரைவில் பதிவிடுகிறேன். அவ்விவாதத்தில் பங்கேற்ற இருவரில் ஒருவர் இக்கட்டுரை ஆசிரியர்.

இரண்டு: இந்து மதத்தில் சாதி இறுக்கத்தை எதிர்த்துப் போராடிய மகான்களைப் பற்றிச் சொல்ல வரும் போதெல்லாம், வைணவ சமயத்தை மட்டுமே சுட்டிக் காட்டும் போக்கு கடந்த பல ஆண்டுகளில் அதிகரித்திருக்கிறது.

அவ்வாறு எழுதுபவர்கள், பேசுபவர்கள் மருந்துக்குக் கூட சைவ சமய வரலாறுகளை முன்வைப்பதில்லை. இதனால் சைவத்தில் சாதி பேணப்பட்டதாகவும் வைணவம் சாதி கடந்த சமயமாகப் பரிணமித்தது என்றும் ஒரு கருத்து மாயை நிலவுகிறது.

இதுபற்றி விரிவாக எழுதலாம் எனினும், அதற்கு இங்கு இப்போது இடமில்லை. இக்கட்டுரையும், இதற்கு முன் பதிவிடப்பட்ட, தூத்துக்குடி விழாத் தலைமைப் பேருரை  கட்டுரையும் சாதியைப் பற்றிய சைவத்தின் கோட்பாடுகளைத் தெள்ளத் தெளிவாக நம்முன் வைக்கின்றன.

அதனாலேயே இவை போன்ற கட்டுரைகளை மீண்டும் இப்போது பதிவிடுகின்றேன். )

-----------------------------------------


உலகெலாம் உணர்ந்தோதற் கரியவன்
நில வுலாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத் தாடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்


மண் உலக முறையும், மாந்தர் இயல்பும் மாறுவன, கெடுவன, திருந்துவன, சிறந்து பெருகுவன. இம்முறையைக் கொள்ளாத நாடும் மனிதரும், எங்கும் என்றும் இலர்.

நமது நாட்டிலும் இவ்வாறு நான்கு முறைகளும் நிகழ்ந்தன என்பதை, ஆகமங்கள் எல்லாமும் ஒருங்கே அறிந்த நந்தி எம் குருத் தலைவரே அவற்றில் ஐயுற்றார்;பின் தெளிந்தார் எனக் கூறும் அறிவு நூல் வரலாறும், பிருகு முதலிய அறநிலை நின்றார் பதிநிலை மயங்கி முத்தொழில் கடவுளரைச் சோதித்தார் என்று கூறும் பாகவதப் போக்கும், அறிவு நூலைக் குழப்பம் நீக்கிக் கோவை செய்ய வியாதன் பிறந்தான் எனக் கூறும் பாரதக் கதையும், அத்துவித (ஒன்றெனத் தோன்றும் கலப்பு) மொழிக்கு ஆக்கப் பொருள் கூறுவான் வந்த நீலகண்டர், சங்கரர், இராமாநுஜர், மாத்துவர், மெய்கண்டார் இவர்களுடைய வாழ்க்கைக் குறிப்புகளும் சைவ நாயன்மாரில் சிலரும், திருமால் அடியார்களான ஆழ்வார்களில் பலரும், உலகம் மயங்கிய காலத்தில் தான் அதை நல் நெறிப்படுத்தத் தோன்றினார் என்று கூறும் சைவ வைணவ நூல்களும் வெள்ளிடை மலையாக விளக்குவன.

உலகம் நல் நிலை பிறழ்ந்த ஒரு காலத்து, இவ்வாறே பெரியபுராணமும் தோன்றிற்று என்ப. பெரியபுராணத்து, செந்நெறி உணர்ந்த நல் நிலைப் பெரியர் வாழ்ந்த முறை நன்கு பேசப்படுகிறது. பெரியோர் வழிச் செல்லுதல் அறிவுக்குரிய தொழில்.

நமது நாடு சாதிப் பிரிவால் தயங்குகிறது என்றும் சாதியால் மக்களுக்குள் ஒற்றுமை உண்டாக இடமிலது என்றும் நம்மவரும் பிறரும் பேசக் கேட்கிறோம்; எழுதப் பார்க்கிறோம்.

இச்சமயம், பெரியபுராணமானது சாதியை எவ்வாறு போற்றுகிறது என்பதை அறிவதே எடுத்துக் கொண்ட ஆராய்ச்சியாகும். அறிந்த பின் அறிந்தாங்கு ஒழுகுதல் அறிவு கொண்ட பயனாகும்.

உணவிலும், வணங்கும் இடம் வரையறுத்து நிற்பதிலும், மணம் கொள்ளலிலும், பொதுப் பெயர் கூறலிலும், இவற்றோடு ஒத்தவைகளிலும் நம் நாட்டு மக்கள் சாதி கொண்டு வாழ்கிறோம். இதற்கு முன்னவர் இட்ட வரம்பு அறிவுப் பொருத்தமாயின் கொள்ளற்கு உரியதாகும்.

நம் நாட்டுள் தொன்று தொட்டோ இடையிட்டோ எவையும் வடமொழிக் கண் காணப்பட வேண்டும் என்னும் கொள்கை நிலவுகிறது.

அவ்வாறு பெரியபுராணமானது வடமொழி நூல் வந்தது என்னின் வடமொழிச் சாதி ஒழுக்கமும் பெயரும் கொள்ளற்கு உரியன.

வடமொழியில் பெரியபுராணக் கதைகளை விரிக்கும் நூல்கள் கந்தமாபுராணத்துள்ள அகத்திய, உபமன்னிய பக்த விலாசங்கள் என்ப.

நூல் வந்தவழி கூறப் புகுந்த பெரியபுராணம், திருமலைச் சிறப்பு 38,39ம் செய்யுள்களில்:

மற்றிதற்குப் பதிகம் வன்தொண்டர்தாம்
புற்றிடத் தெம்புராணர் அருளினால்
சொற்றமெய்த் திருத்தொண்டத் தொகையெனப்
பெற்றநற் பதிகம்தொழப் பெற்றதால்


அந்தமெய்த் திருப்பதிகத் தடியார்களை
நந்தம் நாதனாம் நம்பியாண்டார் நம்பி
புந்தியாரப் புகன்ற வகையினால்
வந்தவாறு வழாமல் இயம்புவாம்

என்று காட்டிக் கந்தமா புராண இரு பக்த விலாசங்களும் (வடமொழி நூல்கள்) தனக்குரிய முன் நூல்கள் அல்ல என்றும்; நம்பி ஆரூரர் செய்த திருத்தொண்டத் தொகையும், நம்பியாண்டார் நம்பி செய்த திருத்தொண்டர் அந்தாதியுமே தனக்கு முன் நூல்கள் என்றும் வெளியாக்கி, அவைகளில் குறித்தவைகளைத் தழுவி (வழாமல்) உரைப்பதாகவும் கூறுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Translate