புதன், 30 மார்ச், 2011

திருநெல்வேலித்தல தீர்த்த மஹிமை

(இக்கட்டுரை, 2004ல் திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகத்தை ஒட்டி வெளியான "கும்பாபிஷேக மலர்' ஒன்றுக்கு நான் எழுதி வெளிவந்தது. மிக விரிவாக எழுதியிருந்த போதும், இடம் கருதி இக்கட்டுரை அப்போது சுருக்கப்பட்டது. அந்தச் சுருங்கிய வடிவத்தையே இங்கும் தந்திருக்கிறேன். அப்போது எழுதியதில் ஒரு மாற்றமும் செய்யாமல் அப்படியே தந்திருக்கிறேன்.)

தல புராணங்கள்

எங்கும் நிறைந்த இறைவன், நம்மீது வைத்த கருணையினால் தலந்தோறும் விளங்குகின்றான் என்பது நூற்றுணிபு.

அவனுறைவதால் தலமும், பிறவும் புனிதமடைகின்றன. இதனையே நம் முன்னோர் மூர்த்தி தலம் தீர்த்தம் எனக் குறித்தனர்.

இவற்றின் அருமை பெருமைகளை, தமது சந்ததியினரும் அறிந்துய்யும்படி அவ்வத் தலபுராணங்களில் கூறி வைத்தனர் நம் முன்னோர்.

முத்தியடைதலே ஊனடைந்த உடம்பின் நோக்கமாதலின், அதற்கு இறை வழிபாடு அவசியம் வேண்டப்படும்.

அவ்வழிபாட்டின்கண் மனவெழுச்சி உண்டாகும் பொருட்டு, இறைவனை வழிபட்டுப் பயனடைந்தவர்களின் வரலாறுகளைத் தல புராணங்களாகத் தொகுத்து வைத்தனர்.

திருநெல்வேலித் தலபுராணங்கள்

நமதருமை நெல்லையம்பதிக்கு, வேணுவன புராணம், கவிராஜ நெல்லையப்பப் பிள்ளை இயற்றிய திருநெல்வேலித் தலபுராணம் என இருநூல்கள் உள்ளன.

வேணுவன புராணத்தில் தீர்த்தச் சருக்கம் 8-வது சருக்கமாக உள்ளது. இதனுள் பொற்றாமரைத் தீர்த்தமும், சிந்துபூந்துறைத் தீர்த்தமும் மட்டுமே பேசப்படுகின்றன.

பொற்றாமரைத் தீர்த்தம்

முன்னொரு யுகத்தில் இறைவன் பிரம, விஷ்ணுக்களைப் படைத்து, படைப்பு, காப்பு ஆகிய தொழில்களைச் செய்க என ஆணையிட்டு மறைந்தனர்.

அறியாமை மிகுதியால் படைப்புத் தொழில் கைவராத பிரமன், இத்தீர்த்தக் கரையிலிருந்து சிவத்தியானம் புரிந்தனன்.

இறைவன் அழகிய பொன் அன்னமாக உருவெடுத்து வந்து பிரமனுக்கு உபதேசம் செய்தனர். பின்னர் இத்தீர்த்தத்திலேயே நீர் வடிவாகி மறைந்தனர். ஆதலின் இத்தீர்த்தம் ஹேமபுஷ்கரிணி எனப்படுவதாயிற்று.

பொன்னாலான தாமரை பூப்பதால் இது பொற்றாமரைத் தீர்த்தம் எனவும் அழைக்கப்படுவதாயிற்று. பாதாளத்தில் பாயும் பாதலங்கம்பா நதியும் இத்தீர்த்தத்தில் சங்கமித்துளது.




நீராடியோர்
வசிஷ்டர், வாமதேவர், காசியபர், ஜாபாலி, பராசரர், வியாசர், விசுவாமித்திரர், பிங்கிருடி ஆகியோர் எத்திசை போனாலும் இத்தீர்த்தத்தில் நீராடலைக் கைவிடார்.

நீராடுங்காலம்

பௌர்ணமி, அமாவாசை, தக்ஷிணாயனம், உத்தராயனம், விஷுபுண்ய காலம், மாதப் பிறப்பு, வியதீபாதம், சூரிய சந்திர கிரஹணகாலம், மாசி மகம் முதலிய காலங்களில் நீராடி தம்மால் முடிந்த தானம் செய்து, நெல்லையப்பர் காந்திமதி அம்பாளைத் தரிசனம் செய்வோர் பெறும் பலனை கூறிமாளாது.

மாசி மாதம் அதிகாலையில் நீராடுவோர் பிறவிக்கடல் நீந்தி முத்தியினை அடைவர்.

தீர்த்தப்பயன்

இத்தீர்த்தத்தில் நீராடுவோர்

1. தியானம் ஜபம் செய்தால் அவர் சிவமே ஆவார்

2. எல்லாப் பாவமும் நீங்கும், சகல செல்வங்களும் பெறுவர்,
வறுமை தொலையும், நோய்கள் நீங்கும்.

3. ஆயிரம் பசுக்கள் தானமளித்த பலன் பெறுவர்

4. எல்லாத் தீர்த்தங்களிலும் நீராடும் பலனைவிட ஒரு கோடி
மடங்கு பலன் பெறுவர்.

சிந்துபூந்துறைத் தீர்த்தம்

வேய்முத்தர் சந்நிதியின் கீழ்பால் பொருநைமா நதியானது உத்தர வாஹினியாகச் (வடக்கு நோக்கிச்) செல்லும்.

ஒரு காலத்தில் மூன்றரை கோடி தீர்த்தங்கள் மூவுலகத்திலுள்ள பூக்களைக் கொண்டு வந்து பொருநையை அணைந்து அர்ச்சித்துச் சென்றன. ஆதலால் இது சிந்துபூந்துறை எனப்படுவதாயிற்று.

தீர்த்தப் பயன்

இத்தீர்த்தத்தில் நீராடுவோர்

1. திருமகள் கலைமகள் அருளைப் பெறுவர். தாம் நினைந்த பொருள் கைவரப் பெறுவர். தீவினைகள் நீங்கப் பெறுவர். எல்லாச் செல்வங்களும் பெறுவர்.

2. சிந்துபூந்துறை என ஒருமுறை சிந்தித்தாலும் தரிசித்தாலும் அந்நீரினைத் தொட்டாலும் முத்தியடைவர். வினைநீங்கி ஞானம் பெறுவர்.

3. சிவனடியவராயும், வேதம் வல்லவராயும் விளங்குபவர்க்கு, இத்தீர்த்தத்தில் நீராடி, தன்னால் இயன்றதை அளிப்பவன், தனது 21 தலைமுறையுடன் முத்தியடைவான்.

4. பொருநை நதியில் அடிக்கொருதரம் உள்ள தீர்த்தங்கள் எல்லாவற்றினும் மூழ்கிய பலன், சிந்துபூந்துறையில் முழுகினவருக்குக் கிட்டும்.

நீராடுங்காலம்

திருவாதிரை, தை மாதப் பிறப்பு, அமாவாசை, சோமவாரம், கிரஹணகாலம், பிரதோஷம் ஆகிய நாட்களில் நீராடி நெல்லையப்பரைத் தரிசிப்போர் முத்தி சேர்வர்.

கருமாறித் தீர்த்தம்

மணவூரை ஆண்டு வந்த இந்திரத்துய்மன் என்ற மன்னன், துர்வாசமுனிவர் சாபத்தால் யானையாகித் திரிந்தனன். பொதிகைமலையில் அங்ஙனந் திரியுங் காலத்து ஒரு சிம்மம் அவனைத் துரத்திற்று.

அவனது முன்தவப் பயனால் நெல்லைநாதனை நினைந்து கோயிலுக்குள் வந்து, அம்பிகை கோயில் மேற்புறமுள்ள தீர்த்தத்தில் விழவே யானை(கரி) யுருமாறி தேவவுரு பெற்று, கோயிலை வலம் வந்து வேய்முத்தரையும், வடிவன்னையையும் தொழுது பொன் விமானமேறி கயிலையடைந்தான்.



யானை விழுந்து மூழ்கி கதியினைப் பெற்றதால் இத்தீர்த்தம் கரியுருமாறி எனப்படுவதாயிற்று. இக்கதையினைக் கேட்ட வேதியன் இறந்தபின் கயிலை அடைந்தான்.

தீர்த்தச் சருக்கம்

நெல்லையப்பர் திருக்கோயிலைச் சார்ந்த 32 தீர்த்தங்கள் திருநெல்வேலித் தலபுராணத்துள் கூறப்படுகின்றன.

இவற்றுள் 17 தீர்த்தங்கள் திருக்கோயிலுக்குப் புறத்தேயுள்ளன. இரண்டு தீர்த்தங்கள் மேற்கு மதில் சுவருக்கு வெளியே மாடத் தெருவில் இருந்தன.

மீதமுள்ள 13 தீர்த்தங்கள் திருக்கோயிலுக்குள் உள்ளன.

புராணத்துள் கூறப்பட்டுள்ள வரிசைப்படி இத்தீர்த்தங்கள் கீழ்வரும் அட்டவணையில் குறிக்கப்பட்டுள்ளன.

1. சிந்துபூந்துறை - தாமிரவருணியாறு

2. பொற்றாமரைத் தீர்த்தம்- சங்கிலி மண்டபத்திற்குக் கிழக்கில்

3. கௌரி தீர்த்தம் (அ) கருமாறித் தீர்த்தம் - அம்பாள் கோயில் மேலப்பிராகாரம்

4. பாதலங்கம்பை நதி - பாதாளவாஹினி

5. வருணநற்பம்பை தீர்த்தம் - சுவாமிகோயில் உட்பிராகாரத்தில் மடைப்பள்ளிக்கு அருகில்

6.கூபம் (கிணறு) - அம்பாள்கோயில் உட்பிராகாரத்தில் ஈசான திக்கில்

7. ருத்ர தீர்த்தம் கருமாறிகுமாரர் கோயிலுக்கு வடபுறம்

8. சக்கர தீர்த்தம் - பொற்றாமரையில் வாயுமூலையில்

9. அக்னி தீர்த்தம் - சக்கர தீர்த்தத்திற்குத் தென்புறம்

10. இலக்குமி தீர்த்தம் - நால்வர் சந்நிதி பின்புறம்

11. தருமதேவதைத் தீர்த்தம் - ருத்ர தீர்த்தத்திற்கு மேல்புறம், கருமாறிதீர்த்தத்திற்கு வடபுறம்

12. அக்கினி தீர்த்தம் (அ) பிசாசுமோசன தீர்த்தம் - பைரவர் சந்நிதி முன்பு

13. தேவதீர்த்தம் (அ) அமலன் தீர்த்தக் கூவம் - பிசாசு மோசன தீர்த்தத்திற்கு
மேல்பால்

14. குபேர தீர்த்தம் - தேவதீர்த்தத்திற்கு மேல்பால் வாயுமூலையில்

15. வைஷ்ணவதேவ தீர்த்தம் - மேலவாசல் இராமன் கோயில் கருடனுக்குமுன் மாடத்தெருவில்

16. பிரத்யும்ன தீர்த்தம் - மேற்கண்டதற்கு வடக்கு

17. சர்வ தீர்த்தம் - சுவாமி கோயில் அம்பலம் முன்புறம்

18. சந்திர புஷ்கரிணி - வெளித்தெப்பக்குளம்

19. தரும தீர்த்தம் - கரும்பனைவீரன் கோயிலுக்கு ஈசானதிக்கில்

20. பாஸ்கர புஷ்கரிணி - கரியமாணிக்கப் பெருமாள் கோயிலின் தென்கிழக்கில் ஓர் கோயில் முன்னர்

21. பக்த ப்ரிய தீர்த்தம் - தொண்டர்கள் நயினார் கோயில் முன்பு.



                   வெளித் தெப்பக்குளம் எனப்படும் சந்திர புஷ்கரணி 



           குறுக்குத்துறைத் தீர்த்தக் கட்டமும் முருகன் கோயிலும் 


மேற்கண்டவற்றுள், சிந்துபூந்துறை, பொற்றாமரை, கம்பை, கருமாறி, பிசாசுமோசன தீர்த்தங்கள், சந்திரபுஷ்கரணி, குறுக்குத் துறை, துர்கா தீர்த்தம், சர்வ தீர்த்தம் ஆகியவை "நவ தீர்த்தம்' எனப்படும். 

இனிவருவன தீர்த்தக் கட்டங்கள்

22. ருத்ரபாதத் தீர்த்தம் - சிந்துபூந்துறைக்கு வடபால் ஓர் பாறைதனில் பிரமன்
பாதம் பதிந்திருக்கும், அதன் பக்கம்

23. ரிஷி தீர்த்தம் - மேற்கண்டதற்குத் தென்புறம்

24. யக்ஞ தீர்த்தம் - கைலாசநாதர் கோயிலுக்கு வடபுறம்

25. அகத்தியர் தீர்த்தம் - சிந்துபூந்துறைக்குத் தென்புறம்

26. தேவபாண்டிய தீர்த்தம் - மேற்கண்டதற்குத் தென்புறம்

27. சனத்குமார தீர்த்தம் - மேற்கண்டதற்குத் தென்புறம்

28. துர்கா தீர்த்தம் - மேற்கண்டதற்குத் தென்பாலுள்ள துர்கை சந்நிதிக்குக் கீழ்பால்

29. கௌதம தீர்த்தம் - மேற்கண்டதற்குத் தென்பால்

30. குறுக்குத்துறை - தாமிரவருணியாறு

31. அக்கினி தீர்த்தம் - மேலநத்தம் அக்னீசுவரர் கோயில் முன்பு

32. காருண்ய தீர்த்தம் - மேற்கண்டதற்குக் தென்பால் உமைகோயிலுக்கு மேல்புறம்

தாமிரவருணியாற்றிலுள்ள தீர்த்தக் கட்டங்கள்

பொருநையாற்றின் இருகரையிலுமுள்ள அநேக தீர்த்தங்கள், தீர்த்தக்கட்டங்கள் பற்றி தென்மலைத் தாம்பிரபன்னிச் சருக்கம் முதல் சங்கமத் துறைச் சருக்கம் ஈறாக 27 சருக்கங்களை திருநெல்வேலித் தலபுராணம் குறிப்பிடுகின்றது.

தாமிரவருணியின் மகிமையினை தாமிரபன்னிச் சருக்கம் கூறுகின்றது. இதில் 27 தீர்த்தங்கள் உள்ளன.

அவை: 

1. பொதியமலை - ஸ்ரீதர தீர்த்தம் முதல் துர்கா தீர்த்தம் வரை 18 தீர்த்தங்கள்.
2. பாபநாசம் - முக்கூடல் தீர்த்தம்.
3. திருமூல நகரம்(அம்பைமேலப்பாளையம் வட்டாரம், திருமூலநாதர் கோயில்) -   சாலா தீர்த்தம்.
4. காசிபேசுரம் (அம்மைஎரிச்சாவுடையார் கோயில்) -  காசிப தீர்த்தம், தீப தீர்த்தம்.
5. திருக்கோட்டீச்சுரம் - முக்கூடல், கண்ணுவேசர், விசுவ, பிரம, சர்வ, தட்சிண தீர்த்தங்கள்.
6. கரிகாத்தபுரி (அத்தாளநல்லுõர்) -  சித்த, மாண்டவ்ய, பிரமதண்ட தீர்த்தங்கள்.
7. திருப்புடைமருதுõர் -துர்கா தீர்த்தம், ரிஷி தீர்த்தம், விஷ்ணு தீர்த்தம்.
8. பொருநையாற்றின் தென்கரையில் -சோம தீர்த்தம்.
9. உரோமேச்சுரம்- உரோமச தீர்த்தம், மார்க்கண்ட தீர்த்தம்.
10. துருவாச நகரம் (அரியநாயகிபுரம்?) -துருவாச , காந்தர்வ தீர்த்தங்கள், பச்சையாறு, முக்கூடல்.
11. மந்திரேசுரம் (ஓமனுõர்) - தேவதீர்த்தம், ருத்ர தீர்த்தம்.
12. திரு அக்கினீச்சுரம் (தருவை)-  அக்கினீச்சுர தீர்த்தம்.
13. துர்கேசுரம் -துர்கா தீர்த்தம்.
14. சிந்துபூந்துறைத் தீர்த்தம்.
15. சிந்துபூந்துறைக்கு வடபால் -சப்தரிஷி தீர்த்தம்.
16. சிந்துபூந்துறைக்குக் கீழ்பால் -குட்டத் துறைத் தீர்த்தம்.
17. இராமேசநல்லுõர் -ஜடாயு தீர்த்தம்.
18. மணலுõர் (அ) மணவாள நல்லுõர்- மங்கள தீர்த்தம்.
19. அழகர் கோயில் (சீவலப்பேரி?)-  முக்கூடல், பிதிர், கோதண்ட, தட்சிண, வியாக்ரம, வியாச தீர்த்தங்கள்.
20. ஸ்ரீவைகுண்டம்- வைகுந்தத் தீர்த்தம்.
21. காந்தீசுரம் -காந்தீசுரத் தீர்த்தம்.
22. ஆழ்வார் திருநகரியாகிய திருக்குருகூர் -சக்கர, சங்க, பஞ்சகேத்ர தீர்த்தங்கள்.
23. நவலிங்கபுரம் (பொருநைத் தென்கரை) - நவதீர்த்தம்.
24. பிரமேசுரம் (தென்கரை) - பிரம, அக்னி, லட்சுமி, தேவ, சங்க, தாரா, வேத, வாயு, வன்னி, நரசிங்க தீர்த்தங்கள்.
25. சோமேசுரம் (தென்கரை) - சோம தீர்த்தம்.
26. திருச்செந்துõர் -சங்கமுகம்.
27. சங்கமத் துறை -பொருநையாறு கடலில் கலக்குமிடம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Translate