ஞாயிறு, 10 ஏப்ரல், 2011

வைதிக சைவர்கள் அநேக ஈச்சுர வாதிகளா? - 1 (இந்துசாதனப் பிரசுரம்)

(இலங்கையில் இருந்து வெளிவரும் "இந்து சாதனம்' என்ற இதழில்,  19ம் நுõற்றாண்டின் இறுதியில் அல்லது 20ம் நுõற்றாண்டின் ஆரம்பத்தில் (ஆண்டு சரியாகத் தெரியவில்லை) வெளிவந்த கட்டுரை இது.  அக்காலத்தில் சென்னையில் இருந்து வெளிவந்த "சைவம்' இதழில் மீண்டும் இது மறுபிரசுரம் செய்யப்பட்டது.


"இந்து சாதனம்' இதழ் 1889ம் ஆண்டு முதல் இன்று வரை வெளிவந்து கொண்டிருக்கிறது. யாழ்ப்பாணத்தில் சைவம் நின்று நிலைத்ததற்கு அதன் பணிகள் குறிப்பிடத் தகுந்தவை. "இந்து சாதனம்' பற்றி http://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%௮                                                                        என்ற "விக்கிபீடியா' முகவரியில் விரிவாகத் தெரிந்து கொள்ளலாம்.

கட்டுரை வெளிவந்த காலத்தில், யாழ்ப்பாணத்தில் கிறிஸ்தவ மதமாற்றப் பிரச்சாரம் கடுமையாக இருந்திருக்கும் போலும். வழக்கம் போல் கிறிஸ்தவர்கள் தரப்பில் இந்து மதத்தைக் (யாழ்ப்பாணத்தைப் பொருத்தவரை இந்து மதம் என்பது சைவம் தான்) கடுமையாகத் தாக்கி அறிக்கைகள் வெளியாகியிருக்க வேண்டும்.

அந்த அறிக்கைகளில் இந்துக்கள் பல தெய்வங்களை வழிபடுபவர்கள் என்ற குற்றச்சாட்டு பலமாகக் கூறப்பட்டிருந்திருக்க வேண்டும்.

அக்குற்றச்சாட்டுக்குப் பதிலளிக்கும் விதமாக, வண்ணை நகரைச் (வண்ணார் பண்ணை?) சேர்ந்த வைத்தியலிங்கம் பிள்ளை என்பவர் எழுதிய கட்டுரைதான் இது.

நுõறு ஆண்டுகளுக்கு முன் எழுதிய இக்கட்டுரை இப்போது நமக்கு எதற்கு என்கிறீர்களா? இப்போதும் நமக்குத் தேவையான பதில்கள் இக்கட்டுரையில் இருக்கின்றன.

இந்து மதம் என்பது, இந்தியாவைப் பொருத்தமட்டில், (இலங்கையையும் சேர்த்து) சைவம், வைணவம், சாக்தம் என்ற மூன்று பெரும் பிரிவுகளை உள்ளடக்கியது.

இம்மூன்று பிரிவுகளும், ஒரு கடவுள் கொள்கையையே வலியுறுத்துகின்றன. இவற்றைப் பின்பற்றுவோர் தத்துவ அடிப்படையில் ஒரு கடவுளையே வழிபடுகின்றனர்.

மேலோட்டமாகப் பார்க்கும் போது, இம்மூன்று பிரிவினரும் வேறு சில சிறுபான்மைப் பிரிவினரும் அடங்கிய இந்து மதத்தில் பல தெய்வ வழிபாடு இருப்பது போலத் தோன்றினாலும், தத்துவ அடிப்படையில் ஒரு கடவுள் கொள்கைதான் நின்று நிலவுகிறது.

இக்கட்டுரையைப் பொருத்த மட்டில் சைவர்கள், பல தெய்வ வழிபாட்டாளர் அல்லர்; ஒரு கடவுள் கொள்கையினர் தாம் என்பது அழுத்தம் திருத்தமாகக் கூறப்படுகிறது.

சைவ சித்தாந்தத்தைப் பயில நினைப்போர், இந்திய தத்துவ ஞான மரபு பற்றி அறிய நினைப்போருக்கு இவை போன்ற கட்டுரைகள் அடிப்படைத் தெளிவை உண்டுபண்ணும் என்பதில் ஐயமில்லை.

இங்கு, கட்டுரையின் முதல் பகுதி தரப்படுகிறது. இதில், சைவ சித்தாந்தத்தின் படி சிவம் என்பது எது என்ற விளக்கமும், சைவர்கள் விஷ்ணுவை வழிபடுவதற்கான காரணமும் தெளிவாகத் தரப்பட்டுள்ளது.

சம்பு பட்சம், அணு பட்சம் என்றால் என்ன என்பதை http://www.tamilhindu.com/2010/01/lingodbhava-a-saiva-siddhanta-view/ என்ற கட்டுரையில் விரிவாகவும் தெளிவாகவும் படித்து அறிந்து கொள்ளலாம்.

கட்டுரை இறுதியில் அருஞ்சொற்பொருளும் இணைக்கப்பட்டுள்ளது. )

------------------------------------

நமது வைதிக சைவத்தை விளக்கும் சித்தாந்த சாஸ்திர ஆராய்ச்சி எள்துணையும் அற்ற சில புறச் சமயிகள், "சைவர்கள் பல தெய்வங்களை வழிபாடு செய்யும் அநேக ஈச்சுர வாதிகள்' என்று கண்டனம் எழுதித் தங்கள் வெள்ளறிவை விளக்கிக் காட்டுகின்றார்கள்.

அந்தோ! இவர்கள் மதிக்கு எதனை ஒப்பிடலாம்! நமது வேத ஆகமாதி புராணங்கள் பிரதிபாதிக்கும் தெய்வம் ஒன்றே; அதுவே சிவம். அச்சிவத்தினை மெய்யன்போடு வழிபடுவார்களே சைவர்கள் எனப்படுவார்கள்.

சிவமோ மும்மூர்த்திகளையும் கடந்து நான்காவதாய் உள்ளது. அது ஊரும் பெயரும் உருவும் கடந்தது ஆயினும், உயிர்கள் மாட்டு வைத்த பெருங்கருணையினால், ஊரும் பெயரும் உருவும் கொண்டு, மனதினாலே தியானித்தற்கு ஏற்ற அருள் வடிவங்கள் கொண்டு அருளும்.

அவ்வடிவங்கள் சம்பு பட்சம் எனவும், அணு பட்சம் எனவும் இருவகைப்படும்.

அவற்றுள், தமது அருள்சத்தியின் இடமாகக் கொண்ட வடிவத்தினையே வைதிக சைவர்கள் "பதி' என்றும், "சிவபெருமான்' என்றும் கூறுகின்றார்கள்.

அச்சிவபெருமான், ஈசுவரர்களுக்கு எல்லாம் தலைவராய் இருப்பதினால், "மகேஸ்வரர்' என்றும், தேவர்களுக்கு எல்லாம் தேவனாய் இருப்பதினால் "மகாதேவன்' என்றும், "தேவதேவன்' என்றும், பரமாய் உள்ளவர்களுக்கு எல்லாம் மேலான பரமாய் இருப்பதினால் "பராபரன்' என்றும், தான் ஒருவரே பதியும், ஏனையோர் எல்லாம் பசுக்களாயும் இருத்தலினால் "பசுபதி' என்றும் துதிக்கப்படுகிறார்.

இத்திருநாமங்களைப் புறச்சமயத்தவர் திருடி, "கள்ளித் தடிக்கு வெள்ளிப் பூண் இட்டது போலவும்', "சிட்டுக் குருவியின் தலையில் பனங்காயைச் சுமத்தியது' போலவும் தங்கள் போலிக் கடவுளருக்குச் சூட்டி மகிழ்கின்றார்கள்.

இன்னும் அச்சிவத்தைப் பற்றிச் "சுவேதாசுவதரம்' முதலிய வேதங்களில், சிவத்தைத் தவிர இரண்டாவது தலைவர் யாரும் இல்லை என்றும், சிருட்டிக்குப் பூர்வ காலத்தில் சர்வகாரணராகிய சிவபெருமான் ஒருவரே இருந்தார் என்றும், சமஸ்தமான தேவர்களும் பசுக்கள் ஆவார்கள் என்றும், அப்பசுக்களுக்குப் பதியும், சர்வத்துக்கும் சாட்சியாய் இருப்பவரும் சிவபெருமானே என்றும், அவருக்கு உயர்வாகவேனும், ஒப்பாகவேனும் இன்னொருவரைச் சிந்தித்து வழிபடுதல் கொடிய சிவத் துரோகம் எனறும் கூறப்பட்டிருக்கிறது.

இன்னும் எவன் அந்நிய தெய்வங்களோடு மகாதேவரைச் சமானமாக வைத்து, ஒரு வார்த்தையாவது கூறுவானோ, அவனே பரம சண்டாளன் என்று அழைக்கப்படுவான் என்று சைவபுராணத்தில் கூறப்பட்டிருக்கின்றது.

இதுபற்றியே,

புற்றில் வாழ் அரவும் அஞ்சேன் பொய்யர் தம் மெய்யும் அஞ்சேன்
கற்றைவார் சடையெம் அண்ணல் கண்ணுதல் பாதம் நண்ணி
மற்றுமோர் தெய்வம் தன்னை உண்டென நினைந்து எம்பெம்மாற்
கற்றிலாதவரைக் கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறே

என்று ஸ்ரீமன் மாணிக்கவாசக சுவாமிகளும்,

மூவா முதலா முதல்வனையும் மூவுலகில்
சாவார் பிறப்பார்கள் தங்களையும் - தேவாக
ஒக்க  நினைவாருக்கு அல்லவோ ஓர் ஏழு
மிக்க நரகம் விதித்தது காண்

என்று சைவ "இரட்டையரும்' கூறி அருளினார்கள்.

இந்த நியாயங்களினால், வைதிக சைவர்கள் வணங்கும் தெய்வம் ஒன்று என்பதும், அதுவே சிவம் என்பதும் வெள்ளிடை மலைபோல் நாட்டப்பட்டமை காண்க.

வைதிக சைவர்கள் ஏக ஈச்சுரவாதிகள் ஆயின் விஷ்ணு மூர்த்தியை வணங்குவது என்னை? எனின் கூறுதும்; 

அவ்விஷ்ணுமூர்த்தி சிவபெருமானுக்குப் பாணமாகவும், அவர் ஏறும் இடபமாகவும், அவரைப் பூசிக்கும் அர்ச்சகனாகவும், அவருடைய பாரியாகவும், அவருடைய நிருத்தத்தில் மத்தளசேவை செய்வோனாகவும், அன்பு செலுத்தி உய்ந்த சிவனடியார் எனவும் துதித்து, வைதிக சைவர்கள் வணங்கி வருகின்றார்கள்.

இக்கருத்துப் பற்றியே, "அரியலால் தேவியில்லை ஐயன் ஐயாறனார்க்கே' என்று ஸ்ரீவாகீசப் பெருந்தகையாரும், "திருமாலுக்கு அடிமை செய்' என்று ஒளவைப் பிராட்டியாரும்,

கடம்பவனச் சொக்கருக்குக் கண்ணன் தான் வேறோ
இடம்பெரிய கண் ஒன்றை ஈந்தான் - உடம்பதனில்
செம்பாதி ஆனான் சுமக்க எருது ஆனான்
அம்பானான் தேவியும் ஆனான்

என்றும்,

காலால் படியளக்கும் கண் இடந்து பூசிக்கும்
சேலாம் கமடமாம் சிங்கமாம் - பாலாகும்
ஆழி அப்பிலே துயிலும் ஐவர்க்கும் துõதாகும்
வீழி அப்பர் ஏறும் விடை

என்றும்,

பார்அளக்கும் துõதுசெல்லும் பையரவின் மேல்நடிக்கும்
சீர்அகலி சாபத்தைத் தீர்க்குமே - ஊர் அதனில்
சண்டச் சகடு உதைக்கும் தையலாய் கார்நீல
கண்டத்து ஆரூரன் கழல்

என்றும் வைணவ மதத்தை விடுத்துச் சைவ சமயத்தைக் கைக் கொண்ட காளமேகப் புலவரும் கூறி அருளினார்கள்.

(அருஞ்சொ ற்பொருள்:  அநேக ஈச்சுர வாதிகள் - பல  தெய்வக் கோட்பாட்டாளர்; வைதிக சைவம் - வேதங்கள், சிவாகமங்கள், புராணங்கள், இதிகாசங்களைப் பிரமாண நூல்களாக ஏற்றுக் கொண்டுள்ள சைவம்; எள்துணை - மிகச் சிறிய அளவு கூட; வெள்ளறிவு - அறியாமை; பிரதிபாதித்தல் - விளக்கிச் சொல்லுதல்; பரம் - மேலான தன்மை; சுவேதாசுவதரம் - ஓர் உபநிஷத்; சிருட்டிக்குப் பூர்வ காலத்தில் - படைப்புக்கு முந்திய காலத்தில்; சமஸ்தம் - அனைத்து; சண்டாளன் - குணத்தால் இழிந்தவன்; துரோகி; ஏக ஈச்சுர வாதிகள் - ஒரு தெய்வக் கோட்பாட்டாளர்; பாணம் - அம்பு; இடபம் - காளை; பாரி  - மனைவி)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Translate