திங்கள், 11 ஏப்ரல், 2011

வைதிக சைவர்கள் அநேக ஈச்சுர வாதிகளா? - 2 (இந்து சாதனப் பிரசுரம்)

(இப்பகுதியில், நாட்டுப்புறத் தெய்வங்களைப் பற்றி சில கருத்துக்களைக் கூறுகிறார் கட்டுரை ஆசிரியர். இக்கருத்துக்கள் ஆறுமுக நாவலர் அவர்களால் முன்னெடுக்கப்பட்டவை என்பது குறிப்பிடத் தக்கது.


கடந்த 100 ஆண்டுகளில் உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பப் புரட்சி, அதனால் விளைந்துள்ள பொருளாதார முன்னேற்றம் இவற்றின் அடிப்படையில் உலக மக்கள் சமுதாயத்திலும் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

முந்தைய வரலாற்றை எந்தக் கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும் என்பதிலும் சில மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

கட்டுரை எழுதப்பட்ட காலகட்டத்தில் - 100 ஆண்டுகளுக்கு முன்பு -  இலங்கையில் மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த இந்தியாவிலும் சாதி இறுக்கம் மிக அதிகளவில் இருந்தது. இன்று போல் பல வகைகளிலும் சாதிக் கட்டுமானம் நெகிழ்ச்சியாக இருக்க அக்காலத்தில் வாய்ப்பில்லை தான்.

அதனால், இக்கட்டுரை ஆசிரியர், சிறுதெய்வங்கள் அல்லது நாட்டுப்புறத் தெய்வங்கள் பற்றி, கொஞ்சம் கடுமையாகவே தனது கருத்துக்களை முன்வைக்கிறார்.

இன்றைய நிலையில் அத்தெய்வங்கள் பற்றிய கண்ணோட்டம் பெருமளவு மாறிவிட்டது. அக்கண்ணோட்டத்தின் ஒரு பார்வையை http://www.tamilhindu.com/2010/09/stalapuranam-a-treasure-6/ என்ற சுட்டியில் காணலாம்.

அதேபோல், அக்காலத்தில் உயர் சாதிகள் தங்கள் சமய ஒழுக்கங்களை விட்டு விலகிச் செல்வதும், படிநிலையில் அவர்களுக்கு கீழுள்ள சாதிகள், சமய ஒழுக்கங்களை பேணுவதும் நடக்கிறது.  கட்டுரை ஆசிரியர் இச்சம்பவங்களை நேரில் கண்டு அவற்றை இங்குப் பதிவும் செய்கிறார்.

இதற்கு சமீப கால உதாரணங்களும் உள்ளன. மதுரைக்குத் தென்பகுதியிலுள்ள மாவட்டங்களில், காலம் காலமாக உணவிலும் மதத்திலும் சைவத்தைப் பேணி வந்த வேளாளரில் கணிசமான பேர் கொஞ்சம் கொஞ்சமாக அதில் இருந்து விலகி, மது மாமிசம் உண்ணல், சமயத்தைப் பற்றிய பொது அறிவைக் கூட வளர்த்துக் கொள்ளாது இருத்தல் என்று தங்கள் போக்கை மாற்றிக் கொண்டு வருகின்றனர்.

இந்தப் போக்கு தான் மதமாற்றத்திற்கு முக்கிய காரணமாக அமைகிறது. இப்படிப்பட்ட போக்கினாலேயே என் நண்பர்கள் சிலர், எனக்குத் தெரிந்த குடும்பத்தார் சிலர் மதமாறியுள்ளதையும் நான் கண்டிருக்கிறேன்.

அதேநேரம்,  பிற்படுத்தப்பட்ட இன மக்களில் ஒரு பகுதியினர், தங்களை முழுக்க முழுக்க உணவு மற்றும் மத ரீதியில் சைவர்களாக மாற்றிக் கொண்டு வருகின்றனர். இது தமிழகத்தின் வடபகுதியிலும் நடந்து கொண்டிருக்கக் கூடும். அதுபற்றி நான் அறியேன்.

மதமாற்றத்திற்கான பல்வேறு காரணங்களுள், தனது சமயத்தை அல்லது மதத்தைப் பற்றிய அடிப்படை அறிவு கூட இல்லாது இருத்தலும் ஒன்று. அதையும் சுட்டிக் காட்டி வருத்தம் கொள்கிறார் ஆசிரியர். மற்ற மதத்தவர்கள் தங்கள் மதத்தைப் பற்றிய அறிவை எவ்விதம் பேணிக் கொள்கின்றனர் என்பதையும் காட்டுகிறார்.

ஆனால் இச்சம்பவங்களில் இருந்து, சைவம் சாதி சார்ந்தது அல்ல என்பது மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்து மதத்தில், ஆன்ம ஈடேற்றத்திற்கு சாதி ஒரு தடையாகாது என்பதையும் இச்சம்பவங்கள் காட்டுகின்றன.

இதேபோன்ற சம்பவங்கள் கட்டுரை ஆசிரியர் காலத்திலும் நடந்ததனால் தான், பிற்படுத்தப்பட்ட சாதியினர் சமய ஒழுக்கங்களை கைக்கொண்டு முன்னேறும் போது, காலம் காலமாக சமய ஒழுக்கங்களைப் பேணி வந்த சாதியினர் அவற்றைக் கைவிட்டு வருகின்றனரே என்ற ஆதங்கம் கட்டுரை ஆசிரியரின் எழுத்தில் தொனிக்கிறது.

இன்றைய காலகட்டத்தில் "சாதி' என்ற சொல்லே மிகவும் சர்ச்சைக்குரியதாகிவிட்ட நிலையில், மேற்கண்ட கருத்துக்களை நான் எவ்வித உள்நோக்கத்துடனும் சொல்லவில்லை என்பதை இங்கு சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

தொடர்ந்து, ஆங்கிலம் படித்த அக்காலத் தமிழரின் நிலையையும், அவர்கள் தம் சமயத்தைப் பேணுவதைக் கைவிட்டதையும், தேவகோட்டைச் செட்டிமார்கள் சைவத்தைப் பேணியதையும் கட்டுரை ஆசிரியர் குறிப்பிடுகிறார். அவரது கூற்றில் இன்றும் பெருமளவில் மாற்றம் எதுவும் ஏற்படவில்லை.

தேவகோட்டையை மையமாகக் கொண்டு, சைவ நூல்கள் அச்சேறி அதன் வழியாக சைவப் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது குறித்து தனி ஓர் ஆய்வே மேற்கொள்ளலாம்.)

----------------------------------------

இன்னும் சைவருள் சிலர், உயிர்ப்பலி ஏற்கின்ற துட்ட தேவதைகளாகிய காத்தவராயன், மதுரைவீரன், காடன், மாடன், காட்டேறி, சங்கிலிக் கறுப்பன், பதினெட்டாம்படிக் கறுப்பன், முனியாண்டி, பேச்சி, பிடாரி, கூளி, நாச்சிமார்,அண்ணமார், நிச்சிங்கமல்லர், புறக்கடைமுனி, சடாமுனி முதலியவைகளை வணங்கி வருவதும், முகம்மதியருடைய பள்ளிகளுக்கு நேர்த்தி செலுத்துவதும், மாதா கோயிலுக்கு காணிக்கை செலுத்துவதும், என்னையோ எனின்?

அந்தோ! அந்தோ! இத்தகைய பதிதர்கள் ஒருபோதும் சைவர் ஆகமாட்டார்கள்! இவர்களுடைய சைவ வேடம் கூத்தாடிகளுடைய வேடத்தை நிகர்க்கும்; இவர்கள் தங்கள் சமய உண்மைகளை அணுத் துணையும் அறியமாட்டார்கள்.

இவர்களிடத்தில், நீவிர் எச்சமயத்தவர் என ஒருவர் வினவினால், நாங்கள் தமிழ்ச் சமயத்தவர் என விடை இறுப்பார்கள்.

இவர்களுடைய சைவ சமயப் பொலிவு விபூதி தரிப்பதின் மாத்திரமே தங்கி நிற்கின்றது. இவர்களிடத்தில் மதுபானம் மாமிசபட்சணம் முதலிய பஞ்சபாதகங்களும் குடிகொண்டிருக்கும். மற்றைய ஆசார ஒழுக்கங்களைப் பற்றிக் கேட்க வேண்டுமா?

இவர்கள் பிறருடைய குற்றங்களை ஆராய்ந்து பார்ப்பதில் இந்திரனைப் போல இருப்பார்கள். தங்களுடைய குற்றங்களைப் பார்ப்பதிலோ திருதராட்டிரன் போல இருப்பார்கள். இவர்களிலும் பார்க்கத் தற்காலம் பள்ளர், பறையர் முதலியவர்கள் உள்ளே அநேகம் சைவ ஆசார ஒழுக்கமும் சமய அபிமானமும் உடையவர்களாகக் காணப்படுகிறார்கள்.

மேல் வருணத்தவருள்ளே, அந்தக்கலம் பூச்சியமாயிருத்தல் வெட்கம்! வெட்கம்! இவர்கள் மாட்டு நமது சைவ சித்தாந்த சாஸ்திர உணர்ச்சி இல்லாமையே, இத்தீமைகள் அனைத்திற்கும் காரணமாகும்.

பைபிலைக் கல்லாதவன் கிறிஸ்தவன் ஆவானா? கோரானை அறியாதவன் முஸ்லீம் ஆவானா? பிடக ஆகமத்தைப் படியாதவன் புத்த சமயத்தவன் ஆவானா? அதுபோலச் சைவ சமயத்துக்குரிய சித்தாந்த நுõல்களைக் கல்லாதவனைச் சைவன் என்று எப்படிக் கூறலாம்?

ஐயையோ! அன்பர்களே! நமது சைவ சமயிகள் உள்ளே தமிழ்க் கல்வியில் பாண்டித்தியம் உடையவர்கள், நுõற்றுக்கு ஐந்து பேர் தானும் தெளிவது சந்தேகம். ஏனையோர் சீவிய காலம் முழுவதும் ஆங்கில கல்வியையே கற்றுத் தமிழ்ப் பாஷையைச் சுத்தமாய்ப் பேசவும் முடியாமல் பறங்கித் தமிழ் பேசுகின்றார்கள்.

நமது தாய்ப் பாஷையாகிய தமிழையும், சமய நூல்களாகிய சித்தாந்த சாத்திரங்களையும் கல்லாமையினால் அன்றோ நம்மவருள் அனேகர் புறச்சமயத்தவருடைய மாய வலையில் சிக்கி எரிவாய் நரகத்துக்கு ஆளாகின்றார்கள்.

சைவக் கோயில் மானேசர்களே! சைவவித்தியாசாலைக்கு அதிபர்களே! சைவப் பிரபுக்களே! குடியிருந்த வீடு கொள்ளை போகும் போது, துõங்குமூஞ்சிகளாய் கிடக்கலாமா?

இங்ஙனம் நாளடைவில் எல்லாரும் புறச்சமயப் படுகுழியில் வீழ்ந்து விடுவார்களாயின் உங்கள் கோயில்களால் யாது பிரயோசனம்? "இந்து வாலிப சங்கம்' முதலிய சங்கங்களினால் யாது பிரயோசனம்? நீங்கள் இயற்றி வரும் குருபூசை அன்னதானம் முதலியவைகளினால் யாது பிரயோசனம்? எல்லாம் கபாடபந்தனம் செய்ய வேண்டிவரும் அன்றோ?

கோயில் மானேசர்களே! இந்த விஷயத்தில் நீங்களே பெரிதும் கவனம் செலுத்த வேண்டியவர்கள். துõண்டிற்காரனைப் போல எப்போதும் மிதப்பிலே கண்ணாய் இருக்கலாமா? சுவர் இருந்தால் அன்றோ சித்திரம் எழுதலாம்? வாழையடி வாழையாக உங்கள் பணிவிடை நடந்து வர வேண்டாமா?

கண்கெட்டபின் சூரிய நமஸ்காரம் செய்யப் பிரயத்தனப்படாமல், தேவகோட்டை, ஸ்ரீமான் மெ.அரு.நா.இராமநாதம் செட்டியார் அவர்கள், சித்தாந்த சாத்திர வித்தியாசாலை ஒன்று தாபித்து நடத்தி வருவது போல, யாழ்ப்பாணத்தில் உள்ள ஒவ்வொரு பெரிய கோயில் மானேசர்களும் அப்படி வித்தியாசலைகளைத் தாபித்து, அவைகளில் சித்தாந்த சாத்திரத்தில் பாண்டித்தியம் உள்ள போதக ஆசிரியர்களை நியமித்துப் பலரும் ஈடேறும் வண்ணம் இலவசமாகக் கற்பியுங்கள்.

இன்னும் பல கலைகளினும் வல்ல மேதாவியர்களைக் கொண்டு ஊர்கள் தோறும் சித்தாந்தசாரப் பிரசங்கங்கள் செய்வியுங்கள். ஈட்டிய பொருளைச் சிவபுண்ணியங்களில் செலவு செய்யாது தேனீ போலச் சேமித்து வைப்பீரானால், ஒளவைப் பிராட்டியார்,

நம்பன் அடியவர்க்கு நல்காத் திரவியங்கள்
பம்புக்காம் பேய்க்காம் பரத்தையர்க்காம்
கொள்ளைக்காம் கள்ளுக்காம் நோவுக்காம் சாவுக்காம்
கள்ளர்க்காம் தீக்காகும் காண்

என்று கூறியவாறு தீயவழியில் செலவாகும் என்பது திண்ணம். ஆதலால் சிவத் திரவியத்தை மேற்காட்டிய உத்தமவழியில் செலவு செய்து வருவீர்களாயின் நமது "வைதிக சைவம்' சுக்கிலபட்சத்து அம்புலி போல் வளருவதோடு, இம்மையில் என்றும் அழியாத கீர்த்தியையும், மறுமையில் நித்தியானந்தமாகிய பேரின்ப வாழ்வையும் அடையப் பெறுவீர்கள்.

இங்ஙனம்

க. வைத்தியலிங்க பிள்ளை
வண்ணை நகர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Translate