சனி, 2 ஏப்ரல், 2011

தாமிரவருணி


(இக்கட்டுரை, திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோயில் கும்பாபிஷேகத்திற்காக 2004ல் நான் எழுதிய "தீர்த்த மகிமை' கட்டுரையின் ஒரு பகுதி. நடைமுறையில் தாமிரபரணி என்றுதான் கூறுவர். ஆனால் இக்கட்டுரையில், திருநெல்வேலித் தலபுராணத்தில் பயின்று வரும் "தாமிரவருணி' என்ற சொல்லையே பயன்படுத்தியுள்ளேன்.)

நித்ய மங்கல சுமங்கலி மலையத்தில் நிலவும்
உத்தமி யசை மருத்துடன் உதித்த நாயகியே
சத்திபால் வந்த தாம்பிர பன்னியே தாயே
புத்தமுத வானதி எனும் பொருநையே சரணம்.

கதியை நல்குதென் கங்கையே காரணி கவுரி
நதியின் மிக்குயர் சங்கரி புனித நாரணியே
அதிகமெய்க் கயிலா யத்தில் இருந்தும் அன்புடனே
பொதியமேவி வாழ்பூரணி பொருநையே சரணம்.
                                                -  திருநெல்வேலித் தலபுராணம்.


பாரத தேசத்தில் தொன்மையும் பெருமையும் வாய்ந்த நதிகளுள் தாமிரவருணியும் ஒன்று.

ஒரு சமயம், பார்வதி தேவியார் விளையாட்டாகப் பரமேசுவரனின் கண்களைத் தமது கைகளால் பொத்தினார். அதனால் உலகம் எல்லாம் இருண்டு விடவே இறைவன் தமது நெற்றிக் கண்ணைத் திறந்து உலகிற்கு ஒளி ஈந்தார். அப்போது ஏற்பட்ட வெம்மையின் காரணமாக அம்மையின் கைவிரல் இடுக்குகளினின்றும் தோன்றிய நதியே தாமிரவருணி.

கயிலைமலையில் இருந்த பொருநையானவள், அகத்தியர் இறைவனிடம் வேண்டியபடி அவர் தென்திசைக்குச் செல்லும் போது அவருடன் சென்றாள். அவர் அவளை, பொதியமலையில் இருந்து பூமி செழிக்கும்படி பாயவிட்டார். இது திருநெல்வேலித் தலபுராணம் கூறுவது.

ஆங்கிரச முனிவர் - ஸ்ரத்தை தம்பதியரின் பெண் குழந்தை ரிஷிகுல்யா. அவள் வளர்ந்து ஆளானவுடன், தானும் கங்கையைப் போல் புனிதமாக வேண்டும் என்று மும்மூர்த்திகளையும் வேண்டினாள்.

அவர்களும் அவளுக்குத் திருமணம் செய்து வைக்க அகத்திய முனிவருடன் அவளை அனுப்பி மலைய பர்வத ராஜனிடம் ஒப்படைக்கும்படி கூறினர்.

அகத்தியரிடம் இருந்து ரிஷிகுல்யாவை ஏற்றுக் கொண்ட பர்வத ராஜன் அவளைத் தன் மகளாகவே போற்றி, சக்ரபுரம் என்ற பட்டணத்தில் சகல தேவர்கள் முன்னிலையில் சமுத்திரராஜனுக்குத் திருமணம் செய்வித்தான்.

திருமணம் முடிந்தவுடன், விஸ்வகர்மா உருவாக்கி இருந்த சக்ரஸரஸ் என்ற குகைக்குள் புகுந்து ரிஷிகுல்யா நீர் வடிவமாகி "தாமிரவருணி' எனும் பெயரைப் பெற்றுப் பெருகினாள். கங்கை முதலான புண்ணிய நதிகளும் அவளுடன் குகைக்குள் சென்று கலந்தனர். தாமிரவருணியின் கரையில் 149 தீர்த்தக் கட்டங்கள் உள்ளன.

இவ்வாறு தாம்ரபர்ணி மாஹாத்மியம் கூறுவதாக, தாமிரபரணி பற்றிய ஆராய்ச்சிக்காகவே தம் வாழ்நாளை அர்ப்பணித்தவரும், சுத்தமல்லியில் வசிப்பவருமான ராமசுப்பிரமணிய ஐயர் குறிப்பிடுகின்றார்.

மேற்கண்ட ஸ்ரீதாம்ப்ரபர்ணி மாஹாத்மியம் எனும் நுõலை திருவனந்தபுரம் ஏ.ஆர்.கணபதி சாஸ்திரிகள் வடமொழியினின்றும் தமிழாக்கி 1905ல் அச்சிட்டார். அந்நுõல் இப்போது கிடைப்பதில்லை.

இலக்கியங்களில் தாமிரவருணி:

மகாகவி காளிதாசர் தாம் இயற்றிய ரகுவம்சத்தில் நான்காம் சருக்கத்தில் "தாம்ர பரணீ ஸமேதஸ்ய முக்தாசாரம் மகோததே' எனத் தாமிரவருணியைக் குறிப்பிடுகிறார்.

மகா இதிகாசங்களாகிய ராமாயணம், மகாபாரதம் இரண்டிலும் தாமிரவருணி குறிக்கப்பட்டிருக்கின்றது.

தாமியற்றிய ராமகாதையுள் நாடவிட்ட படலம் 31 வதுபாடலில் "பொன்திணிந்த புனல் பெருகும் பொருநை எனும் திருநதி' எனக் கம்பர் குறிப்பிடுகின்றார்.

மகாபாரதத்தில், வனபர்வம்  தீர்த்த யாத்ரா பர்வத்தில் 86 வது அத்யாயத்தில் தென்திசையில் உள்ள நதிகளைப் பற்றி தௌம்ய ரிஷி, யுதிஷ்டிரனுக்குக் கூறுகிறார். அதில் "தாம்ரபர்ணி' நதியையும் குறிப்பிடுகிறார்.

இத்துணைப் பழமையான இத்திருநதியினைப் பற்றி சங்க இலக்கியங்கள் குறிப்பிடாதது விந்தையே. புறநானுõறு முதலியவற்றில் குறிக்கப்படும் பொருநை சேரநாட்டு ஆன் பொருநை நதியாம்.

கி.பி.,7ம் நுõற்றாண்டில் அவதரித்திருந்த திருஞானசம்பந்த சுவாமிகள், தமது திருநெல்வேலி பதிகத்தில், முதல் பாடலில் மூன்றாம் அடியில், "பொருந்து தண் புறவினிற் கொன்றை பொன் சொரிதர' எனக் குறிப்பிடுகின்றார்.

"பொருந்துதண்' என்பதனை முன்பின்னாகத் தொக்கத் தொகை எனக் கொண்டால், "தண்பொருந்தம்'  எனத் தாமிரவருணியைக் குறிக்கும்.

கி.பி.,8ம் நுõற்றாண்டில் வாழ்ந்திருந்த நம்மாழ்வார், "பொருநல் வடகரை வண் தொலைவில்லி மங்கலம்' எனப் பொருநையை "பொருநல்' என்கிறார்.

"அழகர் கருணை போல் பொருநை பெருகி வரும் அழகைப் பாரும் பள்ளீரே' என்று முக்கூடற்பள்ளு கூறும்.

"தண்பொருந்தப் புனல்நாடு' என்றார் சேக்கிழாரும்.

கி.பி., 13ம் நுõற்றாண்டில் வாழ்ந்த வேதாந்த தேசிகர்,"தாரா பூர்ணாம் திவமிவ ததஸ் தாம்ர பர்ணீம் பஜேதா' என ராமனே பொருநையைப் பாராட்டுவது போல ஹம்ச சந்தேகத்தில் அமைத்துள்ளார்.

இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் (கி.பி., 12381255), திருநெல்வேலித் திருக்கோயிலில் அமைத்த இரண்டுக் கல்வெட்டுக்கள், பொருநையை "தண்பொருந்தம்' என்றே குறிப்பிடுகின்றன.

திருவிளையாடற் புராணம் அர்ச்சனைப் படலத்துள் "நிறவான் முத்தும் வயிடூய நிரையும் பொன்னும் விளை பொருநைத், துறைவாய்ப் பிறவாக் கடவுள் வேய் வயிற்றிற் பிறந்த தொன்னகரும்' எனப் பொருநை நதி குறிப்பிடப்படுகின்றது.

தீர்த்தப் பயன்:

இந்நதியின் அடிதோறும் தீர்த்தம் உளது. பொருநையை நினைந்து எத்தீர்த்தத்தில் ஆடினும் பலன்கள் எய்தும். பொருநை நதி நீரை அருந்தினால் வினை அழியும். அந்நீரினால் விளையும் நெல் முதலிய பொருட்களை உண்போர் சிவலோகம் பெறுவர்.

இந்நதியில் படிந்தோர்க்கு எல்லாம் பிறவியில்லை. இந்நதியைத் தரிசிப்போர்க்கு செல்வங்கள் பெருகும். தன்னில் நீராடினோர்க்கு எல்லாம் கர்மங்களைத் தீர்த்த முத்தியளித்தலினாலே பொருநை மிக்க புனிதம் உடையதாகும்.


அதனால் இது "பாவநாசினி' எனப்படும். இந்நதியின் பெருமை தங்கிய கதையைப் படிப்பவர் தாமும் குலத்தோடும் கோத்திரத்தோடும் இனிது வாழ்ந்து, பின் முத்தி எய்தி இன்புற்று வாழ்வர். குழந்தைப் பேறில்லார் கேட்டால் அப்பேறு பெறுவர். கன்னியர் கேட்டால் நல்ல கணவனைப் பெறுவர். நோய் உடையோர் கேட்கின் நோய் நீங்கிச் சுகமுறுவர்.

பொருநையின் பெருமையை முற்றும் கேட்ட சுகர் தம் தந்தை வியாசரைப் போற்றி அவரோடும், அந்நதி உற்பத்தி ஸ்தானத்தில் இருந்து சங்கமத் துறை வரையிலும் சேவித்தார்.

பரகதி உதவும் தாமிரவருணியில் மூழ்கி இக்கதையைக் கேட்டு நெல்லைப் பதிக்கு வந்து நெல்லை நாதன் மலரடி வணங்குவோர் இருவினை தொலைந்து முத்தியை அடைவர்.

இவ்வாறு தாமிரவருணியின் பெருமைத் திருநெல்வேலித் தலபுராணத்துள் கூறப்பட்டது.

தீர்த்தமாடும் முறைமை:

தீர்த்தமானது முறையாய் நீராடுவோர்க்கும் பக்குவம் உடையோர்க்கும் மாத்திரமே பயனளிக்க வல்லதாம். மேலும், இன்ன அறம் செய்வேன், இன்ன பாவம் ஒழிப்பேன் எனத் தத்தம் ஆற்றுலுக்கு ஏற்ப வரைந்து கொள்வதாகிய விரத ஒழுக்கங்களுள் தீர்த்த யாத்திரையும் ஒன்றாம். இதனை, "துறந்தார் படிவத்தராகி' எனும் குறளுக்கு பரிமேலழகர் எழுதிய உரையில் காணலாம்.

ஆகையினால் தீர்த்தங்களின் மகிமை கூறிய சருக்கத்தின் இறுதியில், எவ்விதம் தீர்த்தமாட வேண்டும் என்பதனையும் தலபுராணம் வலியுறுத்திக் கூறுகின்றது.

ஒரு பகல் பொழுது உணவு நீக்கி, விநாயகரைத் துதித்து இருந்து, மறுநாள் விரதத்தை முடித்து பின் தீர்த்தமாட வேண்டும். அவ்விதம் தீர்த்தமாடி பூதானம், கோதானம், சொர்ண தானம் முதலியன நல்கி பிராமணர்க்கு அன்னம் வழங்க வேண்டும்.

ஒருவனைத் தீர்த்தமாட்ட வேண்டுமானால் தருப்பையால் அவன் உடம்பை வகுத்துப் பின் குளிர்புனலாட்ட வேண்டும். உண்டி நீத்து மயிர் குறைத்து நீராடில் பிறவிகள் தோறும் செய்த தீவினை அனைத்தும் நீங்கி சிவனடிக் கமலம் சேர்வர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Translate