செவ்வாய், 19 ஏப்ரல், 2011

சைவ மகிமை - 4

(இறுதிப் பகுதி)

அன்புடையீர்! காட்டேரி, மாரி முதலியவற்றைக் கும்பிடாதீர்கள். அதனால் உங்கள் பத்தி கெடும். அத்தேவதைகளே வந்து கேட்டால் உணவு கொடுங்கள். நீங்களாக வரவழையாதீர்கள்.


நீங்கள் வணங்கற்கு உரிய ஏக மூர்த்தியை முற்றிலும் நம்புங்கள். வினைவழி துன்பம் வரும். வந்தாலும் அம்மூர்த்தி வழிபாட்டில் நழுவாதீர்கள். வீடுவாசல் போகத்தான் வேண்டும்.

வானம் இடிந்து தலையில் விழும்படி வம்பு வந்தாலும் என்னை அந்தக்
கானமயில் முருகையன் திருவருள் கைவிட மாட்டாதே

என்னும் உறுதிப்பாட்டை உய்த்து உணருங்கள்.

(இது சுவாமிகள் அருளிச் செய்த திருவலங்கல் திரட்டில் உள்ள சமாதான சங்கீதத்தின் சரணங்களில் ஒன்று)

தன்னுயிர் போம் அளவும் இயேசுநாதர் கடவுளை விடவில்லையே! கருதுங்கள். பல தெய்வ வழிபாடு உடையான் ஒருவனை நோக்கி,"நீ யாருடைய பத்தன்' என மற்றொருவன் வினவின், அவன் என்ன சொல்லுவான்? பசபச என விழிப்பான் அன்றே! "ஆண்டவன் பத்தன்' என்னலில் சாரம் இல்லை. அன்னாற்குச் சிவ சந்நிதியில் பாத்தியம் இல்லை.

இந்நாட்டில் எழுந்த அநந்த நூல்களில் சிவனே பிரபல மூர்த்தியாய் உள்ளார். அவருக்குப் பல வடிவம் உண்டு. மண்டை மாலையும் கோர ரூபமும் உள்ளனவே என்னில், அக்கோலம் சங்கார கிருத்திய மூர்த்தியாகிய ஒரு மூர்த்திக்குத் தான் உண்டு.

சிவன் நிரம்ப அழகிய மூர்த்தி. இரு கரங்களோடும் கூட வருவார். இயமனுக்குக் கூட இச்சத்தி உள்ளது. இராமர் ரிஷி பத்தர் ஆதலால், அவர் கடைசிக் காலத்தில் இயமன் ரிஷியாய் வந்தான். இயமனுக்குள்ள இச்சத்தி சிவனுக்கா இராது?

சிவனுக்குத் தன் உபாசகர் வேண்டும் உருவம் எல்லாம் எடுக்கும் ஆற்றல் உண்டு. எப்போதுமே மண்டை மாலை உடையவர் என்று எண்ணற்க.

எப்போதும் அவர் கொண்டுள்ள வடிவம் மகரிஷி வடிவம். ரிஷிகளால் வேண்டப்பட்டு அவர்கட்கு நாயகமாய்ச் சிவனார் விளங்குவர். ரிஷிகளை அரசர் வணங்குவர்."திருவுடை மன்னரைக் காணில் திருமாலைக் கண்டேனே' என்று புகழப்படும் தன்மை உடையரே எனினும், அரசரை ரிஷிகள் வணங்கார்.

இப்பெருமை உடைய ரிஷிகளும் தேவர்களும் மனிதர்களும் வணங்கும் மகரிஷி சிவன் என்று உணர்மின். ஆதலின் அவரை வணங்குவோரே மோட்சம் பெறுவர். பிற தேவர் எவரும் தம் உபாசகர் மனிதராய் வந்த பிறகுதான் தம் கதி கொடுப்பர்.

ஆனால் கதி நாயகரான சிவனாரோ அஃறிணை உயிர்ப் பொருள்கட்கும் பரகதி கொடுத்துள்ளார். குரங்கு, கரிக் குருவி, பைஞ்ஞீலி வாழை முதலியவற்றிற்கும் முத்தி நல்கிய செய்தி கருதுக.

இதுகாறும் விரித்தவாற்றால், சைவர்க்கு வாய்த்த சிவமாம் தெய்வமும், சிவமந்திரமும், உபகரணமும் பெரும் சிறப்புடையன என்பது போதரும். இப்பெரும் ஆதிக்கியத்தைக் கைவிட்டு சைவர் ஏன் விலக வேண்டும்?

கிறித்துவர், முகம்மதியர், புத்தர் முதலிய மதத்தினர் தத்தம் நிலை நல்லது என்று கொண்டு அதன் நெறியில் செல்லா நிற்க, சைவர் மட்டும் ஏன் தங்கள் பெரும் பாக்கியத்தை உதைத்துத் தள்ள வேண்டும்? அது பெரும் பாவம் ஆகும் அன்றோ?

இங்கு ஓர் மறைபொருளாய் உள்ள உண்மையை விளக்குவல்:

திரிகால ஞானம் உடையாரை அது கொண்டே ஞானி என்னல் கூடுமோ என்பது விடயம்.

சிவஞானம் கொண்டு பார்த்தால் திரிகால ஞானம் மட்டுமல்ல, பதி ஞானமும் உண்டாம். இப்பதி ஞானத்தால் பார்ப்போர்க்கு உலகம் தோன்றாது.

வெளியே பன்னிரண்டங்குலம் ஓடும் வாயுவை ஆறு அங்குலத்தில் அடக்கும்போது, திரிகால ஞானம் உதிக்கும். அந்நிலையிலும் ஆன்ம தரிசனம் வாய்ப்பதில்லை. மனம் பக்குவப்பட்டு நிற்பதே கிட்டிய பயன். அது ஆத்ம சக்தி; சிவ சத்தியன்று.

அது உட்கண்; மன நிரோதத்தில் திறக்கும். அதுவே சிவ< ஞானம் அன்று, சிவ ஞானத்திற்கு மிகவும் தாழ்ந்தது.

சிவனை விட்ட எந்த ஞானமும் பிரயோஜனப்படாது. உட்கண் திறக்கப் பெற்றான் ஒருவன் சிவனது உருவத்தைப் பார்க்கவும் கூடும். எனினும் அதனாலேயே அம்மூர்த்தியின் சிநேக பாத்தியம் கிடைத்து விடாது. அப்பாத்தியத்தைச் சம்பாதிக்க வேண்டும்.

சிவனடியவன் என்னும் தன்மைக்கு இந்தத் திரிகால ஞானமும் குறைந்ததே.

இனிச் சிவனுடைய எட்டு மூர்த்தங்கள் ஆவன: ஐந்து பூதங்கள், சூரிய சந்திரர்கள், ஆன்மா என்பன. சித்து, அசித்து, சிதசித்து எல்லாம் இவற்றில் உண்டு.

அநுக்கிரகார்த்தமாக அவர் கரசரணாதிகளோடு தோன்றி அருளுவர். ஆன்மாவில் அவர் அந்தரியாமியாய் இருத்தலால் அவரைப் பற்றிப் பிடிக்கும் ஆற்றலில் மனிதர் வேறுபாடு உடையராய் உள்ளார்கள்.சைவர் சிவன் என்னும் மூர்த்தியைச் செவ்வனே பற்றி வழிபடக் கடவர். இன்றேல் உயர்கதி வாய்க்காது. பலதெய்வ வழிபாடு வியபிசாரம் போன்றது.

வெளிப்பூசைகளினும் உட்பூசைகளே சிறந்தவை.

யதா சர்ம வதாகாசம் வேஷ்ட யிஷ்யந்தி மாநவா:
ததா சிவமவிஜ் ஞாயது: கஸ்யாந்தே பவிஷ்யதி

என்ற சுவேதாசுவதரச் சுருதியைக் கருதுக.

(இதன் பொருள்: எப்பொழுது மனிதர்கள் ஆகாயத்தைச் சர்மமாக எடுத்துப் போர்த்துக் கொள்வார்களோ, அப்பொழுதுதான் சிவ சேவையின்றித் துக்கமற்ற மோட்சத்தை அடைவார்கள்.)

சிவ சேவை இல்வழி எந்த ஞானமும் கீழ்ப்பட்டதே.

சிவனை அறிந்தன்றி மிருத்தியுவைத் தாண்ட இயலாது என்றும் பிரபல சுருதி முழங்கும்; ஆனால்,"காண்பார் ஆர் கண்ணுதலாய்க் காட்டக்காலே' என்பதையும் மறக்க இயலாது. காணும் வேட்கை தேவை. பாவியாயினும் சிவ சப்தத்தால் சைவனாக வேண்டும்.

யானும் அறுமுகச் சிவனை வணங்கும் ஒரு சைவனே. யான் பிரப்பன் வலசைக் காட்டில் நிட்டை கூடியிருந்த காலத்து, ஒருநாள் விடியுங்காலம் சுமார் 3 மணி வேளையில்,"நிட்டையில் இருந்து எழுந்து விடு' என்னும் ஒரு சப்தம் எனக்குக் கேட்டது.

எழேன் என்று இருந்த இடத்து இருந்தேன். "நீ எழுந்து விட வேண்டும்' என்று முன்னிலும் பெருத்ததோர் தொனி உண்டாயது. அதற்கும் யான் அசையவில்லை.

"ஏகாதச ருத்திரர் வருகின்றனர் எழுந்திரு' என்னும் ஆணை பிறந்தது.

"முருகவேள் ஆணை வரின் அல்லது எழுந்திரேன்' என்று எனக்குள் விடை இறுத்தேன்.

பின்பு "முருகனே இக்கட்டளை இடுபவன்' என்று உணர்த்தப்பட்ட அளவில் வணங்கி எழுந்தேன்.

இதுபோன்றதோர் உறுதியோடு நின்றால் அன்றி எப்பெரும் பேற்றையும் அடைய இயலாது. ஆதலின் நன்னெறியில் இயன்ற மட்டும் உறுதியோடு நின்மின்கள்.

வெளிப்பூசைகளில் மாகேச்சுர பூசை சிறந்தது. சிவனடியார்க்குத் திருவமுது செய்விப்பது மாகேச்சுர பூசை. மெய்யடியாரைக் கண்டுபிடித்தல் அருமையாதலின், அப்பூசையைப் பொதுவாகச் செய்க. இதற்கு உபகாரமாக வேறு எதைச் சேர்க்கினும் சேர்க்க. ஆனால் இதைக் கைவிடற்க.

உட்பூசை செய்யும் வழிகளைப் பற்றிப் பலர் பல கூறுப. விளக்குப் போல் பாவனை செய் என்பாரும், சூரியனைப் போல் பாவனை செய் என்பாரும், காதில் கேட்கும் ஓசையில் கருத்தை நாட்டுக என்பாரும் இவை போல் வேறு பல விளம்புவாரும் உளர்.

ஆனால் இறைவனைக் கரசரணாதி அவயவங்களோடு தியானிக்க என்றே யான் கூறுவேன். இரவு பகலாய் இந்நாட்டம் உங்களிடம் பெருகினால் நீங்கள் பரம யோகிகள் ஆவீர்கள்.அநவரதமும் முடியாவிடினும், உண்ணுமுன் மூன்று வேளையாவது சிவனைச் சிந்தை செய்மின்.

நாள்தோறும் விடியற்காலையில் கைகால் சுத்தி செய்து, அரைமணி நேரமேனும் அம்மூர்த்தியை முறைப்படி நினைமின். அதனால் எல்லா நன்மையும் உண்டாம்.

இவ்விருவகைப் பூசைகளையும் டம்பத்திற்காகச் செய்யன்மின். உள்ளும் புறமும் ஒத்த உண்மை அன்போடு செய்மின்.

முருகவேள் உங்கள் எல்லோர்க்கும் தன் இன்னருளை வழங்குமாக!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Translate