ஞாயிறு, 24 ஏப்ரல், 2011

தூத்துக்குடி விழாத் தலைமைப் பேருரை - 2

(தொடர்ச்சி...)

இனி இந்தச் சைவமானது எங்கே இருக்கின்றது என்று சில பேசுவோம். சைவம் என்பது ஒரு சாதிப் பெயராக அநேகர் எண்ணி வழங்குகிறார். 


உலக வழக்கில் அது சாதிப் பெயராய் வழங்கி வருதலும் உண்மையே. ஆனால் அதனைச் சமயக் கொள்கையின் பெயராகவே மேலே விவரணத்தில் எடுத்துக் கூறினோம். சாதிச் சைவம் வேறு; சமயச் சைவம் வேறு.



சாதிச் சைவத்திலே சமயச் சைவம் ஏக தேசத்திலே தான் காணப்படும். சமயச் சைவத்திலே சைவச் சாதி ஒழுக்கமும் அப்படியேதான். இவ்வேற்றுமை உணராதார் இதனால் பெருங்கலகம் விளைத்துக் கொள்வர். 


பெருங்கலகத்துக்கு நிலைக்களன் ஆதலின் இதனைப் பற்றிச் சில உதாரணங்களால் விளக்குதல் அவசியம் ஆகும்.


மனிதர் என்பவர் எல்லாரும் மனிதர் என்ற சொல்லுக்கு இலக்காகார். மனிதர் உள்ளே மனிதர் அல்லாதவரும் அநேகர் உளர். 


மனிதர் உள்ளே பாம்பு உண்டு, புலி உண்டு, கரடி உண்டு என்ற ஒரு பாட்டுக்கூட ஒரு புலவர் பாடியுள்ளார். இவ்வகை பாம்பு மனிதர், புலி மனிதர், கரடி மனிதர்களை எவ்வாறு தெரிவது என்றால், "காமம் என்கிற கதுவு வெந்தீயும் கடுஞ்சினம் எனப்படு புலியும்' என்று சிவப்பிரகாச சுவாமிகள் திருவாக்கை ஒட்டிக் கண்டு கொள்ளலாம்.


மனிதர்க்குள்ளே புலி மனிதர், கரடி மனிதர் இருப்பது போலவே சைவர்க்குள்ளேயும் சைவர் அல்லாத சமணர், கிறித்தவர், புத்தர் முதலியோர் உளர். இவ்வாறு நான் சொல்வது புதிதாகத் தோற்றும்.


புலால் உண்ணாதவனாய்க் கொண்டும் கொடுத்தும் உள்ள குடிப்பிறப்பினால் மட்டும் சைவனாய் நிற்பான் ஒரு சாதிச் சைவன். 


அவன் சமயச் சைவனாலே ஆசாரியராய் வழிபடப் பெறும் திருஞான சம்பந்தப் பெருமானைப் பற்றி,"இவர் சுமார்த்தப் பற்றுடையார்,  சைவ சமய பற்றை விட இவருக்குத் தமது சுயசாதிப் பற்றே மிக்கது' என்றாவது, அல்லது


"ஐயோ! சமணர்கள் பழந்தமிழர், கொல்லா நோன்புடையர், இவர்களைப் பற்றி நம்மை ஏமாற்றி இவர் சமணர்களைக் கொலை புரிவித்தார், கொலைக் குற்றம் உடையார்' என்றாவது சொல்வானானால் அந்தச் சாதிச் சைவனை நாம் சமயச் சைவன் என்போமா? 


இவன் சாதிச் சைவன் ஆயினும், சமயச் சமணனாம் என்று பிரித்து உணர்ந்து ஒழுக வேண்டுவதுதானே முறை. இதுபோலவே பிறவும் கண்டு கொள்ளலாம். 


சைவம் என்பது ஒரு சாதியையோ அல்லது ஒரு மொழியையோ பற்றியதல்ல என்பது உறுதி. சிலர் இதைச் சைவம் சாதியையே பிடித்தது என்றும் தமிழ் என்றும் இவ்வாறு எல்லாம் எண்ணுதலில் சைவத்துக்கு வரும் இடர்ப்பாடுகள் பல. 


சைவம் உலகம் எல்லாம் பரந்து ஓங்கியது. தமிழ்நாடும் தமிழரும் மட்டும் சைவத்திற்கு இலக்கானவர் என்பது தவறு. 


"உலகெங்கும் நிரம்பிய சைவம் உயர்ந்து மன்ன' எனவும் "முதற் சைவம்' எனவும் "பொருட்சமய முதற் சைவ நெறி' எனவும் வரும் திருவாக்குகள் என் கொள்கையை நிறுத்துவனவாம். 


அப்பாலும் அடிச்சார்ந்தார் புராணத்திலே ஸ்ரீசேக்கிழார் சுவாமிகள், 


மூவேந்தர் தமிழ்வழங்கு நாட்டுக்கப்பால்
    முதல்வனார் அடிச்சார்ந்த முறைமையோரும்
நாவேய்ந்த திருத்தொண்டத் தொகையில் கூறு
    நற்றொண்டர் காலத்து முன்னும் பின்னும்
பூவேய்ந்த நெடுஞ்சடைமேல் அடம்பு தும்பை
    புதியமதி நதியிதழி பொருந்த வைத்த
சேவேந்து வெல்கொடியான் அடிச்சார்ந்தார்கள்
    செப்பிய அப்பாலுமடிச் சார்ந்தார் தாமே


என்று அருளினமையால் இனிது விளங்கும். 


இஃது இப்படியாகத் தெலுங்கச் சைவர், கன்னடச் சைவர், வடமொழிச் சைவர், ஆங்கிலச் சைவர் முதலியோரை நாம் எவ்வாறு ஒதுக்கிச் சைவத்தைக் கணக்கிடக் கூடும்?


மேலே காட்டிய அடையாள வகையிலே எங்கும் பரந்த சைவம் காலத்தையும் இடத்தையும் பிற கட்டுப்பாடுகளையும் கடந்து நிற்பது என்பது விளங்கும். 


வடமொழி, தமிழ் என்ற கேள்வி இப்போது நமக்குள் புகுந்து கொண்டு நம்மை அளவுக்கு மீறி அலைக்கிறது.


சிவ என்னும் மொழி வடமொழியிலே ஒளி என்னும் பொருள் கொண்ட சிவ என்பதன் எழுத்து நிலை மாறிய பகுதியில் பிறந்த சொல்லோ , அன்றி (எல்லாவற்றினும்) நிற்பது கிடப்பது என்னும் பொருள் கொண்ட சிவ என்னும் பகுதி கொண்ட சொல்லோ, அல்லது சிவப்பு என்ற தமிழ்ப் பகுதியில் பிறந்ததோ என்பது பெருஞ்சண்டை. 


அரசாங்க உத்தியோகப் பற்றுக்களிலேயும், இந்நாள் உலக வியாபாரங்களிலும் உழலும் ஆசிரியர்களுக்கும் பிறர்க்கும் சண்டையும் இகலும் உளதாயின் அது அவர்கள் உயர்வாய்க் கொள்ளும் மொழியாகிய வடமொழியையும் அதிற்கண்ட நூல்களையும் பற்றியது. 


இவர்களைப் பற்றிய குரோதம், ஆடும் ஓநாயும் கொண்ட கதைபோல இவர்களின் முன்னோர்களையும் பிடித்து அவ்விரோதம் காரணமாக சச்சரவுகளுக்கு இடம் உண்டாக்கி விட்டது நமது துர்பாக்கியம்.


வடமொழி என்ற வாடை தானும் பலர்க்குத் துவேஷமாயிற்று. நேற்று வந்த ஆங்கிலத்தைக் கைக்கொண்டு பயன்பெற முயலும் இந்நாள் மக்கள், பல்லாயிரம் ஆண்டுகளாய்த் தமிழகத்திலே உடன் பயின்று நமக்குப் பல ஞானங்களை உதவிய வடமொழியை வெறுப்பானேன்?


அப்படி வெறுப்போமானால் அவ்வடமொழியையும் நூல்களையும் நூன்முடிவு முதலியவற்றையும் கைக்கொண்டு ஒழுகி நம்மையும் படைத்து நமக்கு அளவில்லாத தமிழ்ப்பண்டாரங்களைத் தேடி வைத்த நமது தமிழ் மூதறிஞர்களையும் கூட அன்றோ வெறுத்து ஒதுக்குதல் வேண்டும்!


அப்படியானால், ஐயோ! தொல்காப்பியர், சைவ சமாயாசாரியர்கள், புராணிகர்கள், தாயுமானார், குமரகுருபரர், சிவஞான முனிவர் முதலிய ஒருவரும் தப்பி நமக்கு எஞ்சி நிற்கமாட்டார்களே! 


வடமொழியைப் பார்ப்பனருக்கு ஒதுக்கித் தருவானேன்? காளிதாசரும் பிறரும் பார்ப்பன ஆரியரா? தமிழ்ப் பெரியார்களில் பார்ப்பனரை எவ்வாறு ஒதுக்குவது? 


பம்பாய் மாகாணத்திலே உள்ள காம்பீலியில் வாழ்ந்த நேச நாயனார் நமது நாயன்மார்களில் ஒருவர். கௌதம சாக்கிய முனி கைக்கொண்ட சாக்கிய சமயத்தவரான சாக்கிய நாயனார் அச்சமயச் சார்பாகிய ஒழுக்கத்தில் இருந்து வேறுபடாமல் சிவவழிபாடாற்றிய வகையிலே சாக்கியத்துக்குள்ளே சைவம் புகுந்து கொண்டது.


கொலையும் புலால் மறுத்தலுமே சைவத்திற்கு அடிப்படை என்ற நிலைதானும், கண்ணப்ப சுவாமிகள் சரித்திரத்திலே வேறுபிரித்து உணர வேண்டியிருக்கிறது.


இவற்றை எல்லாம் கண்டேனும் சாதிச் சைவம் வேறு, சமயச் சைவம் வேறு என்று கண்டு அந்நிலையிலே நாம் ஒழுக முற்படுவோமானால் நமக்குள் வரும் பல சண்டைகள் ஒழியும்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Translate